கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலை சென்றிருந்தேன் என்னை எதிர்பாராத விதமாக சந்தித்த ஷநீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் ஆசிரியர் எஸ்.ஆர் தனபாலசிங்கம் ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளராகிய நந்தினி சேவியரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நந்தினி சேவியரின் சிறுகதைகளை, கட்டுரைகளை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரே வாசித்திருக்கின்றேன். அவரது எழுத்தில் முனைப்புற்றிருந்த சத்திய வேட்கையும் உண்மைத்தேடலும் இயல்பாகவே அவரது எழுத்தின் மீதான தொற்றை ஏற்படுத்தியிருந்தன.
எதிர்பாராதவிதமான சந்திப்பாக இருந்தாலும் கூட எமது உரையாடல்கள் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருவனவாய் அமைந்திருந்தன. தமிழ் இலக்கியத்தின் இன்றைய செல்நெறி, அதன் வளர்ச்சி, தொய்வு அது குறித்தும்; இன்றைய இடதுசாரி இயக்கத்தின் போக்குகள் எதிர்காலத்தில் செய்ய கூடியவை- செய்ய வேண்டியவை என பலவாறாக எமது உரையாடல்கள் பரந்து சென்றன.
ஒரு உண்மைக் கலைஞனுக்கு இருக்கக் கூடிய மனிதாபிமானத்தைப் பெற்றவர். இளம் எழுத்தாளர்கள் பால் மிகுந்த அன்பும், பரிவும் கொண்டு, அவர்களது ஆக்கங்களைப் படித்து முன்னேற ஊக்கமளிக்கின்ற உயரிய தார்மீகத்தை அவரிடத்தே அவதானிக்க முடிந்தது.
இத்தகைய தன்னலமற்ற தொண்டின் விளைவாக, திருக்கோணமலை பிரதேசத்தில் பல அருமையான இளம் எழுத்தாளர்கள் உருவாகிவந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. வளரும் முற்போக்கு இலக்கியத்திற்கு நந்தினி சேவியர் ஆற்றி வரும் தலைசிறந்த பணிகளில் இதுவும் ஒன்றாகும். இவையாவும் விவரித்து விளக்கப்பட வேண்டியதொன்று என்ற போதிலும் இந்த சந்தர்ப்பம் அதற்கு ஏற்றதன்று.
சந்திப்பு ஏற்படுத்திய உந்துதல் மீண்டும் நந்தினி சேவியரின் கதைகளை வாசிக்க வேண்டும் என்ற அவாவை ஏற்படுததியிருந்தது. மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவரது அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சிறுகதையை தேடிப் பெற்றேன். அத்தொகுப்பை மீண்டுமொரு முறை வாசித்த போது ஏற்பட்ட வாசக அனுபவத்தை உந்துதலை இங்கு பதிவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகின்றது.
நந்தினிசேவியர் தமது இளமைப்பருவ முதலே தமது சிந்தனை செயற்பாடு, நடைமுறை என்பவற்றை பொதுவுடமை இயக்கத்துடன் இணைந்துக் கொண்டவர். அந்தவகையில் அத்தகைய இயக்கத்தின் பின்னனியிலிருந்த தமது படைப்புகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்;.
இவ்வம்சம் இவ்வாறிருக்க நந்தினி சேவியரின் படைப்புகள் தெளிவான பார்வையுடன் இன்;னும் சரியாக மதிப்பிடப்படவில்லை என்றே தோன்றுகின்றது. அதற்கு அண்ணாரின் எழுத்துக்கள் யாவும் முழுமையாக தொகுக்கப்படாமையும் ஒரு காரணமாகும். குறுக்கு வழி திறனாய்வு முறையும் ஆழ்ந்த தேடலின்மையும் இந்நிலையை மேலும் வலுவாக்கியுள்ளது.
இன்னொரு புறத்தில் குழு நிலைப்பட்ட இலக்கியகாரர்களின் இழிபறி நிலைகளும் நந்தினி சேவியரின் கலைப்படைப்பின் பெறுமானத்தை புரிந்துக் கொண்டு தொடரத் தெரியாமையை தோற்றுவித்திருக்கின்றது. இந்நிலையில் நந்தினி சேவியரின் கலைப்படைப்பின் ஆளுமையை நேர்மையை இன்றைய விமர்சகர்கள் முழுமையாக வெளிக்கொணரத் தவறிவிட்டனர்.
இவ்வாறானதோர் சூழலில் நந்தினி சேவியரின் அயல் கிராமத்தைரச் சேர்ந்தவர்கள் என்ற சிறுகதை தெகுப்பின் ஊடாக அவரது கலை – அனுபவம் – நேர்வை குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு பிறிதொரு காரணமும் முக்கியமானதொன்றாகின்றது. தமிழ் இலக்கிய உலகில் நந்தினி சேவியர் கட்டுரையாளர், நாவலாசிரியர், கவிஞர் என வேறுப்பல ஆளுமைகளை தம் எழுத்தின் ஊடாக வெளிக்கொணர்ந்த போதும் சிறுகதைகளே அவரை கணிப்புக்குரியவராக்கியது.
நிலவுடமை சமூகமைப்பு சிதைவுண்டு முதலாளித்துவ சமூகவமைப்பு தோற்றம் பெற்றது. இந்த சூழலில் நிலபிரபுத்துவத்தின் உண்மை முகம் எப்படியிருக்கின்றது என்பதை, அதன் கொடுரத்தை எடுத்துக் கூறுவதற்காக தோற்றம் பெற்ற இலக்கிய வடிவமே நாவலாகும். அவ்வாறே, முதலாளித்துவ சமூகவமைப்பில் அது தோற்றுவிக்க கூடிய தனிமனித அவலங்கள்; நெரிசல்கள், சலனங்கள் என்பனவற்றினை வெளிப்படுத்தக் கூடிய இலக்கிய வடிவமாக சிறுகதை தோற்றம் பெற்றது. நாவல் வாழ்க்கையை எடுத்துக் காட்ட சிறுகதை அதன் மறக்க முடியாத பாத்திரங்களை நிகழ்வுகளை எடுத்துக் காட்டுகின்றது. நாவலுக்கும் சிறுகதைக்கும் இடையிலான பாரிய வேறுபாடு இதுவாகும்.
அந்தவகையில் சிறுகதை சமூகவுறவுகளில் வெளிப்படும் மனித நிலைகளை பின்புல உறைப்புடன் எடுத்துக் காட்டுகின்றது. இன்றைய உலகில் சிறுகதைப் பற்றிய சிந்தனைகளும் போக்குகளும் பல புதிய பரிமாணங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. தமிழ் சிறுகதை வரலாற்றிலும் இதன் பாதிப்பு நிகழாமல் இல்லை. வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரத்தில் ஆரம்பித்து நமது யுகத்து ஆற்றல் மிக்க சிறுகதையாசிரியரான நீர்வைப் பொன்னயனின் காலவெள்ளம் சிறுகதை தொகுப்பு வரை பலரும் பலவகைகளில் சோதனைகள் செய்து பார்த்து இந்த புதிய திசை வழியை கண்டடைந்துள்ளனர். புதி திசை வழி என்பதன் அர்த்தம் மக்களால் மக்களுக்கான இலக்கியம் என்ற அம்சத்தை சுட்டி நிற்கின்றது. பல ஆண்டுகளாக வளர்ந்த இயக்கம், போராட்டம் செயல் என்பனவற்றின் ஊடாக வளர்ந்து வந்ததொரு இக்கிய செல்நெறியாகும்.
இந்த பின்னணியில் சிறுகதை பற்றி நோக்ககின்ற போது அது வாழ்க்கையின் அவலங்களை துன்பங்களை எடுத்துக் காட்டுகின்றது. தனி மனித வாழ்வில் ஏற்படும் அவலங்கள் துன்பங்கள் வெளிக்கொணரப்படாவிட்டால் அவற்றினை அழித்து விடவும் முடியாது. எனவே சிறுகதை மக்களின் வாழ்க்கை அவலங்களை துன்பங்களை மட்டும் சித்திரிப்பதாக அன்று அதனை தீர்ப்பதற்காக உந்துதலையும் வழங்குகின்றது என்பதை சிறுகதை வரலாற்றினை ஊன்றிக் கவணிப்பவர்களால் உணர முடியும்.
நந்தினி சேவியர் தமது இளமைக் காலத்தில் யாழ். கிராம சூழலில் சந்திக்க நேர்ந்த சமூகப் பிரச்சினைகள் தொடக்கம் பின்னாட்களில் இடதுசாரி சிந்தனையாளராக செயற்பாட்டாளராக வளந்த காலத்தில் தாம் சந்தித்த அனைத்து சமூகப் பிரச்சினைகளும் சிறுகதைகளாக்கியுள்ளார்.
இத்தொகுப்பில் இடம்பெறுகின்ற வேட்டை என்ற கதை தம்பர் என்ற முதியவர்க்கும் அவர் வளர்க்கும் வெள்ளயன் என்ற நாய்க்கும் இடையிலான உறவுக் குறித்து சித்திரிக்கின்றது. இது தொடர்பில் நந்தினி சேவியரின் உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றது.
‘தம்பரும் நாயும் ஒரே மாதிரி. அந்த நாய்க்கும் வயது கடந்து விட்டது. மெலிந்து எலும்புகள் உடலைப் புடைத்துக் கொண்டு வெளியில் தெரிய, முன்னங்கால் ஒரு பக்கம் சாய்ந்து தம்பரைப் போலக் கம்பீரமாக நடக்கும் ஒரு அலாதி…. நாய்தான் தம்பர்…தம்பர்தான் நாய்’
என தம்பருக்கும் நாய்க்கும் இடையிலான உறவை காட்டும் நந்தினிசேவியர் ஒரு படி மேலே சென்று நாயினை இழந்த போது தம்பர் அடைந்த வேதனையை அவர் இவ்வாறு தீட்டுகின்றார்.
‘தம்பர் கதறினார். அவரது தாயும் தகப்பனும் இறந்த போதும், மனைவி மக்கள் வீடு விழுந்து மடிந்த போதும் எப்படி அழுதாரோ அதேபோல…இது அவரது கடைசி நஷ்டம். அவரது உணவுக்கு வழி செய்யும் அந்த உயின் நாடித் துடிப்பு மெதுவாக அடங்கிக் கொண்டிருக்கின்றது.’
மானுட நேயம் என்பது பலம் வாய்ந்தாக மாறுகின்றபோது, இந்த நேயம் சக மனிதனில் மட்டுமல்ல தனக்கு பிரியமான விலங்குகள், பறவைகள் மரங்கள் மீதாகவும் படர்ந்து விரிகின்றது. இந்த நாகரிகத்தின் பின்னணியில் தான் பாரதியும் காக்கை குருவி எங்கள் ஜாதி எனவும் வாலைக் குழைத்து வரும் நாய்தான் -அது மனிதனுக்கு நல்ல தோழனடி பாப்பா என்றும் பாடினார். பாரதி வழி வந்த நந்தினி சேவியரிலும் இந்த நாகரிகம் துளிர்விட்டு கிளைப்பரப்புகின்றது. கிராம வாழ்க்கையின் உன்னதங்களை அழகுற எடுத்துக்காட்டிய சிறுகதையாசிரியர், தன் கண் எதிரே உறுத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் குரூரங்களையும் அவலங்களையும் மனதை பிழியும் துன்பக் காட்சிகளையும் கண்டு தூரவிலகி நின்று ஆண் பெண் காமவேட்டையிலும் இருபாலரின் சதைப் பசியையும் இலக்கிமாக்கி அதனூடே தமது வயிற்றுப் பிழைப்பிற்க்கும் கம்பீரத்திரத்திற்கும் வழித் தேடிக் கொணடவாகள்; மத்தியில் அத்தகைய வாழ்க்கைக்குள்; காணப்படுகின்ற இன்னல்கள் முரண்பாடுகள் மோதல்கள் என்பனவற்றினையும்; எடுத்துக் காட்டத் தவறவில்லை. அவரது தொகுப்பில் அடங்கியுள்ள அனைத்து கதைகளிலும் வேட்டையாடுதல், மில்லில் வேலை செய்தல், கிணறுவெட்டுதல், கல்லூடைத்தல், சைக்கில் ஓட்டுதல் பட்டறையில் உழியும் கையுமாக இருக்கும் கொல்லர், என பல கிராம தொழில்களின் மேன்மையை காட்டுகின்ற ஆசிரியர் அதன் பின்னணியில் உள்ள இன்னல்களையும் காட்டுகின்றார்.
நந்தினி சேவியரின் தனித்துவங்களில் ஒன்று தான் கட்சி இலக்கியம் குறித்த அவரது படைப்புகளாகும். கட்சி இலக்கியம் என்பது மனிதனை அவனது ஆக்கப்பூர்வமான செயலுக்கு இட்டுச் செல்லக் கூடியது. மனிதர் உணவை மனிதர் பறிக்கும் சமூதாயத்தை மாற்றுவதற்கான இயக்கமொன்றினை அடிப்படையாக கொண்டு படைக்கப்படும் இலக்கியமாகும். அவ்விலக்கியமானது மக்களை அமைப்பாக்கம் செய்வதுடன் அது சமூகமாற்றப் போராட்டத்திற்கான ஸ்தாபன மயப்படுத்தப்படட போராட்டங்களையும் வலியுறுத்தி நிற்கின்றது.
இதற்கு மாறாக கட்சியை உச்சமாக கொண்டு கட்சி உறுப்பினர்களை புனிதர்களாக காட்டுவது அல்ல. அவ்வாறே கட்சிக்குள் நடைப்பெறக் கூடிய விவாதங்களையெல்லாம் வெகுசன தளத்திற்கு கொண்டு வந்து அவ் அமைப்பின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதும் கட்சி இலக்கியமாகா. அது எதிர்புரட்சிகரமான செயலாகும். மாஓ கட்சி உறுப்பினர்களிடையேயான முரண்பாடுகள் குறித்தும் மக்கள் மத்தியிலான முரண்பாடுகள் குறித்தும தெளிவானதோர் நிலைப்பாட்டினை முன்வைத்தார். தமிழ் சூழலில் கட்சி இலக்கியம் என்பது தமது அமைப்பு சார்ந்தவர்களை உச்சமாக காட்டுவதற்கும் தமது அமைப்பு சாராதவர்களை எல்லாம் எதிரியாக காட்ட முனைகின்ற ஒரு போக்காகவே வளந்துள்ளதை காணலாம். பலர் புனைப்பெயர்களை தமக்கு சாதமான வகையில் பயன்படுத்திக் கொள்கின்றனர். புரட்சிகரமான சமூதாய மாற்றங்களை விரும்பும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் இந்த அறிவு ஜீவிகள் குழப்பவும் செயலற்றவர்களாக காட்டவும் முனைகின்றனர்.
மாக்சியர் என்ற வகையில் நோக்குகின்ற போது அவர்கள் இரு விதங்களில் தமது நிறுவன எதிர்பாளர்களாகவும் சமூக செயற்பாட்டாளர்களாகவும் காணப்படுகின்றனர். ஒன்று கட்சி அமைப்பை சார்ந்த மாக்சியர்கள் அமைப்பு சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களாக காணப்படுவர். அமைப்பு சாராத மாக்சியர்கள் மக்களை விழிப்படைய செய்வதுடன் அவர்களை ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போர்க்குணம் கொண்டவர்களாக மாற்றுவர்.
சீன இலக்கிய முன்னோடி லூசுன் இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும். நமது சூழலில் சிலர் தமது தத்துவ தெளிவி;னனை காரணமாக இதனைக் கண்டுக் கொள்ள தவறியுள்ளனர். நந்தினி சேவியரின் நீண்ட இரவுக்கு பின், மத்தியானத்திற்கு பிறகு, ஆண்டவனுடைய சித்தம் ஆகிய சிறுகதைகள் இதற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும். அவரது கட்சி இலக்கிய படைப்புத்திறனுக்கு உதாரணமாக நீண்ட இரவுக்கு பின் என்ற கதையில் வரும் பின்வரும் பந்தி அதனை சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது.
… மச்சான் பாத்தியே ரத்தினபாலாவைப் போலையும் உன்னைப் போலையும் எத்தினை தமிழ் சிங்களச் சீவன்கள் கஷ்டப்பட்டு வந்ததோ தெரியாது, நாங்கள் கதைச்சதாலை எங்களுக்குப் பிரச்சினை விளங்கிச்சுது… மற்றதுகள்?
ஷஷகுலம் உத்தியோகம் கிடைக்காது என்கிறதாலை மட்டும் நான் இந்த முடிவுக்கு வரயில்லை. நீங்கள் படுகிற கஷ்டத்தைப்பார்த்த பிறகும் இந்த நாட்டிலை இருக்கிற பிரச்சினையைத் தீர்க்கிறதுக்கு
நீங்கள் சொல்கிற மார்க்கந்தான் சரி எண்டு எனக்கு விளங்கி விட்டது. நானும் வரதனோடை சேர்ந்து உழைக்க வேணும். இண்டைய நிலையில அது கூடக் கிடைக்குமோ தெரியாது. ஷரத்தினபாலா| போல நானும் லிடவுக்கான மார்க்கத்தைக் காண உழைக்கப்போகிறேன். அந்த நிலை வந்தால்தான் விடிவும் இந்த நிலைக்கு முடிவும் வரும். என்னை நம்பு நான் திருந்தியிட்டன்.’
அந்தவகையில் நந்தினிசேவியரின் ககைளில் இனம் மதம் மொழி சாதி கடந்த மானுட விடுதலைக்கானச் சிந்தனையும் அதனை அடைவதற்கான அமைப்பாக்க சிந்தனையும் முனைப்படைந்திருப்பதைக் காணலாம். இவ்வுறவுகள் கோட்பாடாக விவரிக்கப்படாமல் பாத்திர படைப்புகளின் ஊடாக அதன் அழகியல் அம்சம் குன்றாத நிலையில் சித்தரித்துள்ளமை அவரது தனித்துவமாகும்.
பிரான்சு புரட்சிக்காரர்களை அரசு கில்லட்டனில் வைத்து ஈவிரக்கமற்ற நிலையில் கொண்டு குவித்ததை பார்த்து பார்த்து மரத்து போன மனித உள்ளங்கள், சில வேலைகளில் அதனைப்பார்த்துக் கொண்டே பெண்கள் எம்பிராய்ட் செய்தார்களாம். இன்று எமது சூழலிலும் நகர வாழ்க்கையில் அவலங்களையும் இன்னல்களையும் பார்த்து பார்த்து மரத்துப் போன மக்கள் எவருக்காகவும் உதவ முன்வராத பண்பு வளர்ந்து வருவதை காணலாம். இதன் தாக்கம் கிராம புறங்களையும் பாதிக்கத்தறவில்லை என்ற போதிலும் ஆங்காங்கே மனித நேயம் குடிக் கொண்டிருப்பதை அவரது ‘ஒரு பகற் பொழுது’ என்ற சிறுகதை சித்திரிக்கின்றது.
இந்நாட்டிலே இனவாதம் குமிழ்லிட்டு மேற்கிளம்பிய போது அது தோற்றுவிக்க கூடிய பரிமாணங்கள், வாழ்க்கை கோலங்கள் சமூதாய அவலங்கள் அதன் பின்னணில் காணாமல் போகும் மனிதர்கள் பற்றி கூறுவதாக ‘காணாமல் போனவர்கள’; என்ற சிறுகதை சித்திரிக்கின்றது. இக் கதை இன்றுவரைக் காணாமல் போனவர்களை ஞாபகப்படுத்துகின்றது.
இவ்விடத்தில் முக்கியமானதொரு விடயம் பற்றிய தெளிவும் அவசியமாதாகும். அதாவது நந்தினி சேவியர் இலக்கிய உலகில் காலடி வைத்த காலத்தில் தான் இலங்கையின் வடக்கில் சாதிய எதிர்ப்பு போராட்டம் துளிர் விட்டு உச்சத்தை அடைந்திருந்தது. டானியல் இப்போராட்டம் சார்ந்த இயக்கத்திலும் போராட்டங்களிலும் பங்கு பற்றிய காலங்களில் எழுதிய சிறுகதைகளில் சாதியம் கடந்த வர்க்க உணர்வே முனைப்புற்றிருந்தது. இடதசாரி கட்சியிலிருந்தும் இப் போராட்டங்களிலிருந்தும் அவர் தூர விலகிய பின்னர் சாதி தீவிரமே அவரது படைப்புகளில் முதன்மைப்படுத்தப்பட்டது. ஒருவகையில் டானியல் ஊடாக தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வும் போராட்ட உணர்வுகளும் வெளிக்கொணரப்பட்ட போதினும் மக்கள் இயக்கங்களையும் இலக்கியங்களை தாக்குவதற்கும் தகர்த்தவதற்கும் கூட அத்தகைய படைப்புகள் காரணமாக அமைந்தன. இந்தவகையில் நந்தினி சேவியரின் படைப்புகளை நோக்குகின்ற போது தேசிய ஜனநாயக சக்திகளின் குரலாகவே அவரது படைப்புகள் அமைந்துக் காணப்படுகின்றன. இறுதி வரை நந்தினி சேவியர் இத்தகைய இயக்கத்தோடு இணைந்திருந்தமையும் இதற்கான காரணமாக அமையலாம்.
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகளை ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது முக்கியமானதொரு விடயம் பற்றிய கவனம் செலுத்துதல் அவசியமானதாகும். அதாவது நமது சிறுகதை எழுத்தாளர்கள் படைப்பாளிகள் திரும்பத் திரும்பத் ஒன்றையே கூறுவதற்கான காரணம் அவர்களது சமூக தரிசனம் பற்றிய தெளிவின்மையாகும். நமது சிறுகதைப் படைப்பாளர்கள் சிலர் தத்துவார்த்த தெளிவு அல்லது அறிவுப் பெற்றிருப்பினும் அவர் அதனை கதை நிகழ் சூழலுக்கேற்ப தமிழ் மரபிற்கேற்ப பொருத்தி பார்ப்பதில் இடருகின்றனர். இந்த சமூக அனுபவம் விஸ்தரிக்கப்படாமையால் கலைப்படைப்புகளில் காலத்திற்கேற்ற உள்ளடக்கத்தினை அதன் வடிவம் சிதையாதவகையில் வெளிக் கொணரத் தவறிவிட்டனர்.
அந்தவகையில் நந்தினி சேவியரின் கதைகள் மனிதாபிமானமள்ளவர்களின் இதயத்தை நெருடும் சக்தியாக பொழிந்துக் கிடக்கின்றது. கதையில் வரும் பாத்திரங்கள் உயிருள்ள ஜீவன்களாக இருக்கின்றன.
தேசியம், மண்வாசனை என்ற கோட்பாட்டு போராட்டங்கள் இயக்க ரீதியாக முன்னெடுக்கப்பட்ட போது மக்களின் சமகால வாழ்க்கை இலக்கியமாக்கப்பட்டன. பிரதேசம் சார்ந்த மொழிநடை பழக்கவழக்கங்கள் புதிய அழுத்தங்களுடன் இலக்கிய உலகில் சஞ்சரித்தன. இந்த இலக்கிய போக்கினை நந்தினி சேவியர் கடைப்பிடித்திருந்தார் என்பதை இத் தொகுப்பில் அடங்கியிருக்கின்ற சிறுகதைகள் எடுத்துக் காட்டுகின்றன.
அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தொகுப்பு சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தார் தேசிய கலைஇலக்கிய பேரவையுன் இணைந்து வெளியிட்டுள்ளனர்(1993).
விலை- 12 ரூ. (இந்திய விலை)
(அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பினை ஆதாரமாகக் கொண்ட மதிப்பீடு)
தொடர்ந்தும் இவ்வாறான விமர்சனங்கள எதிர்பார்க்கின்றோம்.அஜித்தின் பிறந்த நாள் விஜயின் அரசியல் பிரவேசம் எனும் நாட்டின் முக்கிய பிரச்சனைகளீல் மூழ்கிக் கிடக்கும் நமக்கு காலை நேரத்தில் அடிக்கும் அலாம் போல இக்கட்டுரைகள் விழிப்பை அவ்வப்போது ஏற்படுத்தக் கூடியன.தமிழ்க் கவுன்சிலருக்கும் தமிழ்த் தொண்டருக்குமான கீரியும் பாம்புச் சண்டையில் தமிழன் தலைகுனிய வேண்டி இருக்கிறது இந்தக் கிரகங்கள் ஒழுங்காய் வேலை செய்து எப்போது நாம் இப்படி இலக்கியம் பேசப் போகிறோம்.அடி மனது ஆசைகள் கமலின் புதியபடக் கனவு போல………………………………………………………………………………………………….
ஒரு உண்மைக் கலைஞனுக்கு இருக்கக் கூடிய மனிதாபிமானத்தைப் பெற்றவர். இளம் எழுத்தாளர்கள் பால் மிகுந்த அன்பும்இ பரிவும் கொண்டுஇ அவர்களது ஆக்கங்களைப் படித்து முன்னேற ஊக்கமளிக்கின்ற உயரிய தார்மீகத்தை அவரிடத்தே அவதானிக்க முடிந்தது.இத்தகைய தன்னலமற்ற தொண்டின் விளைவாகஇ திருக்கோணமலை பிரதேசத்தில் பல அருமையான இளம் எழுத்தாளர்கள் உருவாகிவந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. வளரும் முற்போக்கு இலக்கியத்திற்கு நந்தினி சேவியர் ஆற்றி வரும் தலைசிறந்த பணிகளில் இதுவும் ஒன்றாகும்.
என்னுடைய ஆசானை பற்றிய மகிழ்சி சரியான மதீப்பீடு இது
அவருடைய கைகளில் செதுக்கப்பட்டவன் நான் என்ற வகையில் என்னடைய ஆசானுக்கு என்றம நன்றியுடையவன்
எனது அன்புக்கு உரியவர்
அவரை நன்றியுடன் மதிக்கிறன்.
நந்தினி சேவியாரின் ஆளுமையை ஓரளவு வெளிக்கொணர்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். தற்காலத்தில் தமிழ் எழுத்தாளா்கள் பலாரின் பல்துறைச் சார்ந்த வெளிக் கொணரும் வகையிலாக அவா் பதித்த இலக்கிய தடம் குறித்த ஆய்வுகள் வெளிவரவேண்டியது காலத்தின் தேவையாகும்.
சு. உலகேஸ்பரா, முச்சந்தி இலக்கிய வட்டம்.
நந்தினி சேவியர் பற்றிய அவரது இலக்கிய ஆளுமை, மனிதாபிமானம், படைப்புலகம் உங்கள் கட்டுரை மிகவும் நேர்த்தியானது.
பருத்தி்துறையில் இருந்த காலத்தில் நேரடி நட்புணர்வுடன் பழகிகியுள்ளோம்.
அவசர இலக்கிய உலகம் அவரையும் மறந்து விடும் நிலையில் மிக முக்யிமான கட்டுரை.
மிக்க நன்றி.
எங்கள் ஈழத்து இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இளையவர்கள் அறிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக லெனின் மதிவானம் அவர்களது கட்டுரை அமைந்துள்ளது. அவரது ‘அயற்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ சிறுகதைத்தொகுப்பை ஆதாரமாகக் கொண்ட மதிப்பீடு என குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் சேவியரின் இன்னொரு தொகுப்பு வரவுள்ளதாக அறியமுடிந்தது. அது அவரது கதைகள் பற்றிய மதிப்பீட்டை புதியவர்கள் அறிந்து கொள்ளவும் வழிவகுக்கும் என நினைக்கிறேன். இவ்வாறான மூத்தவர்களின் படைப்புக்கள்> அவை பற்றிய மதிப்பீடுகள்> எதிர்வினைகள் முன்வைக்கப்படவேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான கருத்துக்கள் உருவாகும்.
நந்தினிசேவியர் பற்றியநல்ல பார்வை.வடமராட்சியின் ‘ உயிர்ப்புகள்’
சிறுகதை தொகுப்பில் இவரது கதையை சேர்ப்பதற்கு புத்திசாலித்தனமா
க மறந்துவிட்டார்கள்.vathiry s.raveendran
இளம் எழுத்தாளர்களை வளர்ப்பதிலும் வளப்படுத்துவதிலும் நந்தினிசேவியர் ஒரு தனி ரகம். விழுது விட்டு கிளைபரப்பி இலக்கிய உலகில் ஆழமாக வேரூன்றியிருக்கும் நந்தினி சேவியர் பற்றியதான பதிவுகள் இதைவிட அதிகமாக வெளிக்கொணரப்பட வேண்டும்
நந்தினி சேவியர் ஈழத்தின் ஆற்றல் மிக்க படைப்பாளி. அவர் பற்றிய முழுமையான மதிப்பீடுகள் இன்னும் இடம்பெறவில்லையென்ற மதிவாணனின் ஆதங்கம் எனக்கும் உண்டு. எனது இளவயதுக்காலத்தில் தனது எழுத்தினாலும் வசீகரமிக்க பேச்சினாலும் என்னை ஆகர்சித்த படைப்பாளி. அவராலேயே நல்ல இலக்கியங்களை தேடி வாசிக்க முடிந்தது. ஒருவகையில் எனக்கு குரு போன்றவர். சிந்தனைத்தெளிவுடன் சமூகத்தைக் கூர்மையாகப் பார்க்ககும் திறன் அவரின் சிறப்பு. வேறு எவருக்கும் வாய்க்காத கதை சொல்லும் நேர்த்தியும் சொல்லாட்சியும் அவரிடம் உண்டு. ஈழததின் உமா வரதராஜன் றஞசகுமார் போன்றவர்களின் வரிசையில் நோக்க வேண்டியவர். அவர் தொடர்ந்தும் எழுதவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அவர் பற்றிய பார்வையை தொடக்கிவைத்த லெனின் மதிவாணனுக்கு எனது பாராட்டுக்கள்.