நீண்டகால போராட்ட வரலாறைக் கொண்ட இந்திய நக்சல்பாரி இயக்கம்தான் ஒருங்கிணைந்த மாவோயிஸ்ட் அமைப்பாக பழங்குடி மக்களுக்காக போராடி வருகிறது.தெலுங்கானா விவசாயிகள் கலத்தை அடக்கி விட்டதாக இதே காங்கிரஸ் அரசு அறிவித்த பின்னர் முன்னரை விட பல மடங்கு வலுவாக மத்திய இந்தியாவில் உயிர்தெழுந்துள்ளது மாவோயிஸ்ட் இயக்கம். மத்திய இந்தியாவின் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பழங்குடி மக்களையும், அவர்களுக்காக போராடி வரும் மாவோயிஸ்டுகளையும், ஒடுக்க கூட்டு இராணுவப் போரை இந்தியா நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் கமிட்டிக் கூட்டம் வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சிதம்பரம் மேலும் கூறியதாவது: நக்ஸல் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை மூலம் தீர்வு காணப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என அரசுக்கு நம்பிக்கை உள்ளது. நக்ஸல் பாதித்த மாநிலங்களுடன் மத்திய அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டதைத் தொடர்ந்து இரண்டு செயல்திட்டங்களை செயல்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. நக்ஸல் பாதித்த மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. துணை ராணுவப் படைகளை ஈடுபடுத்துவது, உளவுத் துறை தகவல்களை அளிப்பது, வளர்ச்சிப் பணிகள் மற்றும் பாதுகாப்பு செலவினங்களுக்கு நிதி ஒதுக்குதல் என நக்ஸல் பாதித்த மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துவருகிறது. நக்ஸல்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மேற்கு வங்கம், ஒரிஸô, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் கூட்டுப் படை அமைக்கப்படும். மத்திய அரசின் பங்காக மேற்கண்ட மாநிலங்களுக்கு கூடுதல் உதவியாக ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து தேவைகளுக்கான நிதியை ஒதுக்குவது, 400 போலீஸ் நிலையங்களை மேம்படுத்துவது, புதிதாக சிறப்பு போலீஸ் அதிகாரிகளை நியமிப்பது ஆகியவற்றுக்கு மத்திய அரசு உதவி செய்யும். திட்டக் கமிஷனின் உறுப்பினர் செயலர் தலைமையில் அதிகாரக் குழு அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நக்ஸல் பாதித்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இக்குழு மறுஆய்வு செய்யும். அதன்படி சாலை இணைப்பு, ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதி ஆகிய திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவது குறித்து இக்குழு ஆலோசனை தெரிவிக்கும் என்றார்.