தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்துணைத் தோழி என வர்ணிக்கப்பட்ட சசிகலா அவரது கணவர், உட்பட மேலும் பன்னிருவர் அதிமுகவிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பதிவியிலிருந்த சசிகலா உட்பட, மற்றும் முக்கிய பொறுப்புக்களில் இருந்த பலர் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கபட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது; தமிழக முதல்வரின் நெருங்கிய தோழியும், அக்கட்சியின் சக்தி வாய்ந்த உறுப்பினருமாகச் செய்ற்பட்டு வந்த சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மேலும் அவரது உறவினர்கள் எனப் பலரையும் உள்ளடக்கிய பதின்மரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளமை தமிழக அரசியற் களத்தில் பலத்த அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நீக்கம் தொடர்பாக அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலிலதா விடுத்துள்ள அறிக்கையில்; அதிமுக தலைமைக் கழக செயலாளர் சசிகலா, சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் , வி.என்.சுதாகரன் , வி.என். திவாகரன் , டிடிவி தினகரன் , பாஸ்கரன் , டாக்டர் வெங்கடேஷ், ராவணன், அடையார் மோகன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
இவர்கள் யாரோடும் கட்சியினர் எந்த நிலையிலும் எந்தவிதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இவ்வாறு நீக்கபட்டவர்கள் அனைவரும் சசிகலா குடும்பத்து உறவினர்கள் என்பதுடன், கட்சியிலும், ஜெயலலிதாவின் வீட்டிலும் அலுவலகத்திலும் கூட முக்கியமாகச் செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக அதிமுகவில் கடந்த 25 வருடங்களாகச் செல்வாக்குச் செலுத்தி வந்த சசிகலா, மற்றும் செல்வாக்குடைய ராவணன், டாக்டர் வெங்கடேஷ், என்பவர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள்.
கட்சி நடவடிக்கைகளிலும், அரச நடவடிக்கைகளிலும், தவறாகச் செயற்பட்டார்கள் என்ற காரணத்தினாலேயே அவர்கள் விலக்கப்பட்டதாக தகவல்கள் சில வெளிவந்துள்ள போதம், இது தொடர்பான விரிவான விளக்கங்களும், இந்த நடவடிக்கையின் தாக்கங்கள் கட்சியியைப் பாதிக்குமா என்பது போன்ற விபரங்கள் அடுத்த சிலநாட்களில் கூடவிருக்கும் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தின் போதே தெரியவரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சசி நீக்கம் ஏன்., ? பரபரப்பு தகவல்
சென்னை: சசியை கட்சியில் இருந்து நீக்க ஜெ., எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பல பின்னணி தகவல்கள் இருந்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு: சசிகலா மற்றும் அவரது வட்டாரத்தினர் கட்சியை தங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். அதாவது பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஜெ.,வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இதில் அவருக்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அவர் ஜெயிலுக்கு செல்ல நேரிட்டால் அந்நேரத்தில் என்ன செய்வது என பெரும் ஆலோசனை நடத்தியது சசி கூட்டம். இதன் ஒரு கட்டமாக நடராஜன் அ.தி.மு,.க.,வை தங்கள் வசம் கொண்டு வர தங்களுக்கு வேண்டிய கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசில் அதிகாரிகள் என பலரை தங்கள் இஷ்டம் போல் பொறுப்பில் கொண்டு வரதிட்டமிட்டார். இதற்கு சசியும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் இந்த உள்ளடி வேலை நடந்த போது தொலைபேசி உரையாடல் தமிழக உளவுத்துறைக்கு கிடைத்தது. இந்த தகவலை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட ஜெ., இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு
முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா.