தன் இறுதிக்காலத்தில் மட்டுமல்லாது பொது வாழ்வு முழுக்க வலதுசாரி அரசியலை எதிர்த்து வந்த தோழர். தா.பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்.
சிறு நீரகக் கோளாரால் அவதிப்பட்டு வந்த தா.பாண்டியன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
துவக்கம் முதலே இடதுசாரி இயக்கத்தின் மீது திவீர பற்றுக் கொண்ட தா.பாண்டியன் அவர்களிடம் திராவிட இயக்க ஒவ்வாமை இருந்தது. காங்கிரஸ் பேரியக்கத்தின் மீதும் ராஜீவ்காந்தி மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்த தா.பாண்டியன் ராஜீவ் காந்தியின் தமிழக உரைகளை மொழி பெயர்க்கும் வாய்ப்பையும் பெற்றார். 1991-ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி ஸ்ரீ பெரும்புதூரில் கொல்லப்படுவதற்கு முந்தைய உரையையும் அவரே மொழியாக்கம் செய்ய இருந்தார். அப்போது நடந்த குண்டு வெடிப்பில் காயமடைந்த தா.பாண்டியன் திவீர புலி எதிர்ப்பாளராகவும், ஈழ எதிர்ப்பாளராகவும் மாறினார்.
அவரது ஆங்கில,. தமிழ் புலமைகள் அவரை வெவ்வேறு மொழி பெயர்ப்புகளையும் செய்ய வைத்தது. ஜெயலலிதாவுக்கும் நெருக்கமான அரசியல் நண்பர்காக இருந்த தா.பாண்டியன் துவக்கத்தில் இலங்கை தேசிய பிரச்சனையையும் ஈழ மக்களின் போராட்டங்களையும் சரியாக புரிந்து கொள்ளவே இல்லை. ஆனால், 2009 ஈழப் போரின் போது தமிழகத்தில் முதன் முதலாக போருக்கு எதிரான போராட்டத்தையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் நடத்தியது. 2008 அக்டோபரில் தா.பாண்டியன் தலைமையில் நடந்த அந்த போராட்டத்தின் பின்னர்தான் ஈழப் போர் எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகத்தில் திவிரம் பெற்றன.
இறுதிப் போரின் போது நெடுமாறன் உள்ளிட்டோருடன் போருக்கு எதிராக பணி செய்த தா.பாண்டியன் உள்ளிட்டோர் அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு சில கடிதங்களை எழுதியதாகவும் நம்பப்படுகிறது.
ஜனசக்தி ஆசிரியராகவும், இரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவராகவும் செயல்பட்ட தா.பாண்டியன் அவர்கள் இழப்பு இடது சாரி இயக்கங்களுக்கு பேரிழப்புதான்!