இந்தியாவில் பாஜகவின் வலதுசாரி ஆட்சிமுறையை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வரும் நிலையில் அது தோல்விகளில் இருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொண்டது என்ற கேள்வியும் எழுகிறது.
கடந்த இரு முறை நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் அதிக தொகுதிகளைப் பெற்று தானும் தோற்று திமுகவின் தோல்விக்கும் காரணமானது. 2011 தேர்தலில் 62 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளில் தோற்றது. 2016 தேர்தலில் 42 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் அதில் 6 தொகுதிகள் அளவுக்கே வென்றது. திமுக தலைவராக கருணாநிதி இருந்தவரை அவரை டெல்லி காங்கிரஸ் தலைமை ஏதாவது சொல்லி சொல்லி இந்த தொகுதிகளை பெற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால், திமுக தலைவராக ஸ்டாலின் வந்த பிறகு கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் கறார் காட்டினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெல்லும் தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினார். ஆனாலும் திமுக கூட்டணி ஒரு தொகுதியில் தோற்க காங்கிரஸ் கட்சியே காரணம். தேனி தொகுதியில் சம்பந்தமே இல்லாத ஈவிகே எஸ் இளங்கோவனை நிறுத்தி ஓபிஎஸ் மகன் வெற்றிக்கு காரணமானது காங்கிரஸ்.
பீகார் தேர்தலில் 70 தொகுதிகளைப் பெற்று தானும் வெற்றி பெறாமல் தேஜஸ்வியின் தோல்விக்கும் காரணமானது காங்கிரஸ். இதை முன் கூட்டியே கணித்து விட்ட திமுக இம்முறை காங்கிரஸ் கட்சியை மிக மிக கவனமாக கையாள்கிறது. இம்முறை சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக பட்சம் 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்றது திமுக. ஆனால், காங்கிரஸ் கட்சியோ நாற்பது தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என அடம் பிடிக்க திமுக இறங்கி வருவதாகத் தெரியவில்லை. தவிறவும் “நீங்கள் வெல்லும் தொகுதிகளின் பட்டியலை கொடுங்கள் பார்த்து விட்டுச் சொல்கிறோம்” என்று சொல்கிறது திமுக.
30 தொகுதிகளாவது வேண்டும் என காங்கிரஸ் பேசி வரும் நிலையில் திமுகவின் மூத்த தலைவர்களோ நாம் காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டு விட்டு அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும். அதிருப்தி அடைந்திருக்கும் கட்சியினரையும் சமாதானம் செய்ய முடியும். காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளையும் கொடுத்து அவர்களுக்காக நாமே வேலையும் பார்க்க வேண்டும். ஆனால்,. அவர்கள் நமக்காக வேலை செய்ய மாட்டார்கள். இந்த அனுபவத்தைத்தான் கடந்த பல தேர்தலில் நாம் பார்த்து வருகிறோம். அதனால் 20 தொகுதிகள் கொடுப்போம் வேண்டாம் என்றால் போகட்டும் என்பதுதான் திமுகவின் முடிவு. இப்போது கடைசியாக வெளியாகியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் , மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தலா ஒரு சீட் குறைவாக 5 தொகுதிகள் வழங்கப்படும் என்றும். இரு கம்யூனிஸ் கட்சிகளுக்கும் 14 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொ.ம.தே.க. 2, தமிழக வாழ்வுரிமை 1 தொகுதியில் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்பும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை மட்டுமே ஒதுக்கும்.