12 ஜனவரி, 2007 ம் ஆண்டு, ஏதென்சில், கிறீஸ் நாட்டுக்கான அமெரிக்க தூதுவரின் வாசஸ்தலத்தின் மீது, ராக்கெட் லோன்ஜெர் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது குளியலறை சேதமடைந்தது. “புரட்சிகர யுத்தம்” என்ற இயக்கம் அனுப்பிய ஊடகங்களுக்கான அறிக்கையில்: “ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பரிசு.” என்று உரிமை கோரியது. 2003 ம் ஆண்டில் இருந்து, ஏதென்ஸ் நகரம் பல குண்டுவெடிப்புகளால் அதிர்ந்தது. ஒரு பொலிஸ் நிலையம், பொலிஸ் வாகனம், ஒரு நீதிமன்றம், தொழில் அமைச்சு, இவ்வாறான இலக்குகளில், வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதும் மேற்படி இயக்கம் என அறியப்படுகின்றது. இதை தவிர தொழிலாளர் வேலைநிறுத்தம், மாணவர் போராட்டம் என்பன அடிக்கடி நகரங்களை ஸ்தம்பிக்க வைக்கும். பண்டிகை காலங்களுக்காக வியாபாரம் களைகட்டியிருக்கும் இந்த டிசம்பர் மாதத்தில், வங்கிகள், கடைகள், வாகனங்கள் என்பன ஆர்ப்பாட்டக்காரரால் எரிக்கப்பட்டன.
மன்னிக்கவும், இந்த சம்பவங்கள் நடந்தது பாக்தாத்தில் அல்ல. அமைதிப்பூங்கா என்று கருதப்படும் ஐரோப்பாவின் ஒரு பகுதியில், கிறீசின் தலைநகரம் ஏதென்ஸ் கொந்தளிக்கிறது. ஒரு காலத்தில் ஐரோப்பாவுக்கு நாகரீகம், ஜனநாயகம் பற்றி சொல்லிக் கொடுத்த கிரேக்க நாடு அது. இப்போதும் ஐரோப்பிய பாடநூல்கள், கிரேக்கத்தை “ஜனநாயகத்தின் தொட்டில்” என்று பழம்பெருமை பேசுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் துருக்கியில் இருந்து விடுதலை பெற்ற பிறகே, நவீன கிரேக்க குடியரசின் வரலாறு ஆரம்பமாகின்றது. இரண்டாவது உலகப்போர் காலங்களில், நாசி ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போதும், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின்(KKE) கெரில்லா இராணுவம், தனந்தனியாக போராடி தேசத்தை விடுவித்தது. இருப்பினும் நாசிசம் தோற்றுக்கொண்டிருந்த வேளை, பிரித்தானியா கேந்திர முக்கியத்துவம் கருதி கிறீசிற்கு உரிமை கோரியது. பிரிட்டிஷ் “கனவான்களின்” மீது நம்பிக்கை வைத்து ஸ்டாலினும், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆயுத உதவி செய்யவில்லை. விளைவு? கிறீஸ் குடியரசு உருவாகிய பின்னர், பிரிட்டிஷ் இராணுவத்திற்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் இடையில் போர் மூண்டது. இறுதியில் பிரிட்டிஷ் வல்லரசின் கை ஓங்கவே, ஆயிரக்கணக்கான போராளிகளும், அவர்களது குடும்பங்களும், சோஷலிச நாடுகளில் அடைக்கலம் பெற்றனர். தொடர்ந்து கிறீசை “பாதுகாக்கும்” பொறுப்பை, பிரித்தானியா அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டது.
கிரேக்க நாட்டிலிருந்து கம்யூனிஸ்ட்களை அடித்து விரட்டி விட்டாலும், அவர்களுக்கு இருந்த பெரும்பான்மை மக்களின் ஆதரவாலும், சுற்றவர சோஷலிச நாடுகள் இருந்ததாலும், மீண்டும் கம்யூனிச புரட்சி தலையெடுக்கலாம் என்று அமெரிக்கா அஞ்சியது. அதனால் “எப்பாடு பட்டாவது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது தனது கடமை” என்று கருதிய அமெரிக்கா, 1967 ம் ஆண்டு சில வலதுசாரி இராணுவ ஜெனரல்கள் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற உதவியது. “ஜனநாயகத்திற்கும் இராணுவ ஆட்சிக்கும் இடையில் என்ன சம்பந்தம்?” என்று யாரும் அப்பாவித்தனமாக கேட்கக்கூடாது. அது தான் அமெரிக்கா! சி.ஐ.ஏ. ஆசியுடன் இந்த இராணுவ ஜெனரல்களின் கொடுங்கோலாட்சி ஏழு வருடங்கள் (அதாவது 1974 வரை) நீடித்தது. எதிர்த்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், அல்லது தொலைதூர தீவுகளில் சிறைவைக்கப்பட்டனர். அந்தக் காலங்களிலும் கிரேக்க தீவுகளில், பெருவாரியாக தமது விடுமுறைகளை கழிக்க வந்த மேலைத்தேய சுற்றுலா பயணிகளுக்கு வெயில் சுடுவது மட்டும் பெரிய கொடுமையாக தெரிந்திருக்கும்.
கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) சதிப்புரட்சிக்கு முன்னரே தடைசெய்யப்பட்டு விட்டாலும், இராணுவ சர்வாதிகாரத்திற்கு மிகப்பெரிய சவால் மாணவர்கள் மத்தியில் இருந்தே வந்தது. ஏதென்ஸ் நகர மத்தியில் அமைந்திருக்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Polytechnic), அதன் மாணவர்களால் எதிர்ப்பு அரசியல் தளமாக பயன்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீடுகளுக்கு செல்லாமல், பல்கலைக்கழகத்தில் தங்கி மறியல் செய்தனர். சிறிய வானொலி நிலையம் ஒன்றை அமைத்து, அதன் மூலம் மக்களை கிளர்ந்தெழுந்து, இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து, புரட்சி செய்யுமாறு அறைகூவல் விடுத்தனர். அவர்களது போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவு பெருகுவதை காணச் சகியாத இராணுவ அரசு, படையினரை ஏவி விட்டு போராட்டத்தை நசுக்கியது. 1973 ம் ஆண்டு நவம்பர் 17 ம் திகதி, பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்த இராணுவ தாங்கிகள் நசுக்கியத்திலும், சுட்டதிலும், சில மாணவர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். ஆனால் அன்று நிலவிய, கடுமையான தணிக்கை காரணமாக சேதவிபரங்கள் மிகக் குறைவாக காட்டப்பட்டது.
இந்த துயர சம்பவம் நடைபெற்று, ஒரு வருடத்தின் பின்னர் சைப்பிரஸ் பிரச்சினை காரணமாக, அயல்நாடான துருக்கியுடனான மோதலை தவிர்ப்பதற்கு, வேறுவழியில்லாமல் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டு, ஜனநாயக பாராளுமன்றம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கொஞ்சம் பொறுங்கள், இத்துடன் கதை முடியவில்லை. நவம்பர் 17 சம்பவத்திற்கு பழிவாங்கப் போவதாக, சிலர் சபதமெடுத்தனர். நம்பிக்கைக்குரிய, இருபதுக்கும் குறையாத உறுப்பினர்களை கொண்டு, “நவம்பர் 17 இயக்கம்” என்ற தலைமறைவு ஆயுதக்குழு தனது நடவடிக்கைகளை தொடங்கியது. மார்க்ஸிஸத்துடன், அதற்கு முந்திய இடதுசாரி தத்துவமான அனார்கிசத்தையும் கலந்து, அதேநேரம் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் தமது சித்தாந்தமாக பிரகடனப்படுத்தினர். சர்வாதிகார ஆட்சியை நடாத்திய, அல்லது ஆதரித்த இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசதரப்பு வக்கீல்கள், தொழிலதிபர்கள் பலர் அடுத்தடுத்து தீர்த்துக் கட்டப்பட்டனர். ஆதரவு கொடுத்த குற்றத்திற்காக அமெரிக்க அதிகாரிகள் சிலரும் கொலைசெய்யப்பட்டனர். இந்த பழிதீர்க்கும் படலம், 2000 ம் ஆண்டு வரை தொடர்ந்தது.
நீண்ட காலமாக மக்கள் ஆதரவு காரணமாக, எந்த ஒரு கொலையாளியும் கைது செய்யப்படவில்லை. கிறீஸ் அரசாங்கம் தீவிரவாதிகள் மீது மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இறுதியில், ஓரிடத்தில் குண்டு வைக்கப்போய் காயமடைந்த நபர் ஒருவர், போலீசிடம் மாட்டிக் கொண்டதால், நவம்பர் 17 இயக்க உறுப்பினர்கள் அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த “தீவிரவாதிகளை” மக்கள் அடையாளம் கண்டுகொண்ட போது, நாடே அதிர்ச்சியில் உறைந்தது. அனைவரும், ஒரு பல்கலைக்கழக பேராசிரியர், ஒரு பொருளியல் பட்டதாரி, ஒரு இயந்திர பட்டறை வல்லுநர், போன்ற பல சமூக அந்தஸ்து உள்ளவர்கள். அவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. பகலில் தொழிலில் முனைப்புடன் ஈடுபடும் சாதாரண மனிதர்கள், இரவில் வெடிகுண்டு தயாரிக்கும் தீவிரவாதிகள்!
இடதுசாரி தீவிரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது. மக்களும் மேற்கு ஐரோப்பிய வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கின்றனர். அதனால் எந்த குழப்பமும் இல்லாமல் நாடு சுபீட்சமடையும் என்று கிரேக்க அரசாங்கமும், அதற்கு முண்டு கொடுக்கும் அமெரிக்காவும் நம்பின. ஆனால் உலகம் முழுவதும் அப்படி இருந்தால் பரவாயில்லை. பாலஸ்தீன பிரச்சினை, ஈராக் போர் என்பன பெருமளவு கிரேக்க மக்களின் அதிருப்தியை சம்பாதித்திருந்தது. போர் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்தால், ஐரோப்பாவிலேயே அதிக சனம் சேருவது கிறீசாக இருக்கும். அதனால் அரசாங்கமும் அமெரிக்க ஆதரவை அடக்கி வாசிக்க வேண்டிய நிலை. இன்றைய நடைமுறை புரட்சியாளர்கள் பலர் அஹிம்சாவழியில் போராடி வருகின்றனர். இவர்கள் “பாலஸ்தீன ஆதரவு அமைப்பு”, “ஈராக் போருக்கெதிரான அமைப்பு”, போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரிவர். இருப்பினும் எப்போதாவது ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தால், அதிலும் பங்குபற்றுவர். அப்போது பொலிஸ் கண்ணீர்புகை பிரயோகம் செய்து, தடியடி நடத்தும் போது அகப்பட்டு சிறை செல்ல வேண்டியும் நேரிடலாம். இவ்வாறான தொழில்முறை புரட்சியாளர்கள், பல நூற்றுக்கணக்கில் கிறீசில் உள்ளனர்.
வெளிநாட்டு ஊடகங்கள், கிறீஸ் நாட்டை அமைதிப் பூங்காவாக தான் காட்ட விழைகின்றன. அதனால் நான் இங்கே கூறிய பல தகவல்கள் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். கிறீஸ் வருடந்தோறும் பெருமளவு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வருவதால், “எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினையும் இல்லை” என்று அமெரிக்கா உட்பட, பல மேற்கத்திய அரசு அறிக்கைகள், நற்சான்றிதழ் வழங்குகின்றன. இடையில் உலகமயமாக்கலும், நிதிநெருக்கடியும் வந்து பாழ்படுத்தியிராவிட்டால்,அப்படியே இருந்திருக்கும். உலகம் முழுக்க உணவுவிலை ஏறும் போது, விவசாயத்தை கைவிட்டு விட்டு, உல்லாசப்பிரயாண தொழில்துறைக்கு மாறிவிட்ட கிரேக்க பொருளாதாரத்தால் தாக்குப்பிடிக்க முடியுமா?
அதிகரிக்கும் செலவினத்தை ஈடுகட்ட, இடதுசாரி இளைஞர்கள் மாற்றுவழி காட்டினர். பல இடங்களில் பெரிய வர்த்தக ஸ்தாபனங்கள் நடத்தும் பல்பொருள் அங்காடிகள் சூறையாடப்பட்டன. உணவுப்பொருட்களை மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளித்தனர். அண்மையில் போலீசுடன் மோதல் ஏற்பட்டு, கலவரம் வெடித்த போது, பன்னாட்டு வங்கிகள், பல்பொருள் அங்காடிகள் உட்பட ஆடம்பர பொருட்களை விற்கும் வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாகின. இந்த கிளர்ச்சியாளர்கள், சிறுவணிகர்களின் கடைகளை ஒருபோதும் சேதமாக்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் புரட்சியானது, பெரும் மூலதனத்தை குவிக்கும் வர்த்தக கழகங்களை மட்டுமே இல்லாதொழிக்க விரும்புகின்றது
கிளர்ச்சியை புரட்சியாக்குவதிலேயே முழுஜனநாயக வெற்றிகளும் தங்கியிருக்கிறது.
போலீஸ்சுக்கு கல் போத்தல் எறிவது கடைகளைசூறையாடுவது பொதுசொத்துக்களுக்கு
தீமூட்டுவது வங்கிகண்ணாடிகளை அடித்து நெருக்குவது மக்கள் மாணவர்கள் தமது ஆத்திரத்தை கோபத்தை
வெளிப்படுத்தினாலும் இவைகள் பயங்கரவாதச் செயல்களே.
இது விடுதலைஇயக்களுக்கு பின்னடைவை கொடுப்பதுமல்லாமல் பயங்கரவாத இயக்கமாகவும் தடைசெய்யும்
நிலையும் ஏற்படலாம்.போராட்டபாரம்பரியங்களை கொண்ட கிறீஸ்லாந்து உரியகாலத்தில் கிரகித்துகொண்டு
மேலும் முன்னேறும் எனநம்புவோம். நாமும் அதில்லிருந்து பாடங்களை கற்றுக்கொள்வோம்.
தன்னியக்கமான எழுச்சிகள் மாணவஎழுச்சிகள் இறுதியில் தொழிலாளர் அமைப்பிடமே விட்டுச்செல்லும்.
அதுவே வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புரட்ச்சிகரவர்க்கம். எல்லாநாட்டுதொழளலாரும் ஒன்றிணைவதின் மூலமே நாம் இறுதியான வெற்றியை சந்திக்கமுடியும்.
குறுகிய காலத்தில் இன்னும் பலகிறீஸ்லாந்துகளை நாம் சந்திக்கப்போகிறோம்.