வன்னி நிலப்பரப்பில் மீளக்குடியேற்றப்பட்ட மக்களின் அவல நிலை குறித்து கவனத்தில் கொள்ளாத அரசாங்கம் அங்கு இராணுவ முகாம்களையும், பொலிஸ் நிலையங்களையும் அமைப்பதில் பாரிய முனைப்புக்களைக் காட்டி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறுகையில், நிரந்தரமான வீடுகள் அமைத்துக் கொடுக்காததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே நிலைமை குறித்து அரசாங்கத்திற்கு அறிவித்தோம். ஆனால் இவ்விடயத்தில் அரசு அலட்டிக்கொள்ளவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
இதே வேளை மாந்தை மேற்கில் மீள்குடியேற்றப்பட்ட 4,711 குடும்பங்களில் 1102 குடும்பங்களுக்கு இதுவரையில் கூரைத்தகடுகள் வழங்கப்படாததனால் அவர்கள் மழையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10க் கட்டு கிடுகுகளை தொண்டு நிறுவனங்களிடமிருந்து பெற்று வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தத்தினால் மாந்தை மேற்கில் 46 கிராம சேவகர்களின் அலுவலகங்களும் அழிந்துள்ளதனால் அலுவலகங்கள் இன்றியே கிராம சேவகர்கள் பணியாற்ற வேண்டியிருப்பதகாவும் தெரிவிக்கப்படுகிறது. கிராம சேவகர்கள் கூடார வீடுகளில் அல்லது கூரையில்லாத வீடுகளில் அல்லது வெட்ட வெளிகளில் இருந்தே பணியாற்றி வருவதாக அறிய முடிகிறது.
பெய்து வரும் அடை மழையினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் விவசாயச் செய்கையும் போக்குவரத்துச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை வடக்கில் மீள்குடியேற்றத்திற்குப் பொறுப்பான அதிகரியாகச் செயற்படும் வன்னி கட்டளைத் தளபதியான ஜேர் ஜெனரல் கமல் கணரத்ன, மீள்குடியேற்றம் பற்றிக் கருத்து வெளியிட்டுள்ள போது புலிகளின் பிடியிலிருந்து 2,95,000 பேர் வருகை தந்தனர். அவர்களுக்கு சகல வசதிகளும் வழங்கப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் 2,65,000 க்கு மேற்பட்டோர் மிளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். யுத்தம் நடந்த எந்தவொரு நாட்டிலும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபை செயலாளர் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் பணிப்பின் பெயரில் இடைநிறுத்தப்பட்டுள்ளார். பிரதேச செயலாளர் பிரதேச சபை நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் பெயரிலேயே இடைநிறுத்தப்பட்டுளளதாக தொவிக்கப்பட்டுள்ளது.