இலங்கை அரசின் இனப்படுகொலையையும் தொடரும் இனச்சுத்திகரிப்பையும் ஏனைய நாட்டு மக்கள் மத்தியிலும் போராடும் புரட்சிகர இயக்கங்கள் மத்தியிலும் எடுத்துச்செல்லும் செயற்பாடுகளின் முதல் முயற்சியாக சர்வதேச பிரச்சார இயக்கம் ஒன்றை ஒழுங்கு செய்யும் முகமாக லண்டனில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய போருக்கு எதிரான கூட்டமைப்பு, குர்தீஷ் விடுதலை இயக்கங்கள், பலஸ்தீன ஆர்வலர்கள், லத்தீன் அமரிக்கப் போராட்ட அமைப்புக்கள், மற்றும் பல ஜனநாயக அமைப்புக்களின் ஒன்றுகூடலாக இடம் பெறும் இப் பொதுக்கூட்டம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி சனியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அதிகாரத்திலிருப்பவர்கள் மத்தியிலும், மக்களிலிருந்து அன்னியமாக சமூகவிரோதிகள், வாக்குப் பொறுக்கும் அரசியல் வாதிகள் ஆகியோருக்கு மத்தியிலும் அரசியல் இலாபத்திற்காக செயற்பட்ட நிலமை மாற்றமடைய வேண்டும். இலங்கை அரசிற்க்கு எதிராகப் போராடும் உணர்வுகொண்ட அனைவரும் தமது தனிப்பட்ட அரசியல் அடையாளங்களுக்கு அப்பால் இப் பொது நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர். லண்டன் இல் நிகழும் இந்த ஒன்று கூடல் தொடரும் போராட்டத்தை புதிய தளத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.