யேசுவே!
மாரி மழையில்
மாட்டுத் தொழுவத்தில்
மாரியம்மனுக்கு (மாரியாள்)மகனானாய்
உனக்கு
மாட்டுத்தொழுவமாவது இருந்தது
திறந்தவெளித் தெருக்களிலும்
அடர்ந்த புதர்காடுகளிலுமே
எம்பிள்ளைகளின் பிறப்புகள்
கண்ணுக்குத்தெரியா
கணவனல்லாக் காளையன் ஒருவன்
கலவிகொண்டதால் – நீ
கர்த்தரின் குழந்தை
ஈழத்தில் உன்னைப்போல்
எத்தனை குழந்தைகள்
எத்தனை எத்தனையோ யேசுக்கள்- ஆம்
அத்தனையும் உன் சகோதரங்கள்
எண்ணிலடங்கா மாரியம்மன்கள்
உங்களுக்கு உலகெங்கும் ஆராதனை
எம்மக்களுக்கு மட்டுமேன் பெருவேதனை?
மாரியை
மறுமணம் முடிக்க
யோசப்பு
தமிழ்விதவைகளுக்கு…..யாரப்பு?
முற்போக்குவாதிகள்
முந்தானை கேட்கிறார்கள்.
சமூக ஆவலர்கள்
கசமுசா பண்ணுகிறார்கள்.
இசக்காரர்கள்
நிசம் பேசவில்லை.
அரசியல்வாதிகளோ
அடித்தொட்டையால் அகிலம் அளந்து
வோட்டுக் கேட்கிறார்கள்
விபச்சாரிகள் என்று
விலைபேசுகிறார்களே
மகிந்தனின் மைந்தர்கள்.
மாவீரர்களை வணங்கிய மக்கள்கூட
வீரத்தைத் தேடுகிறார்கள்
மாவீரிகளின் மடிகளில் இன்று.
நீ மதத்தினுள் நின்று பேசினாய்
மானிடவிடுதலை
பரிசாகக்கிடைத்தது …..!!!
சவுக்கடி…
தோழில் சிலுவை….
தலையில் முள்முடி….
பிறப்புரிமை விடுதலை
விரும்பிய எமக்கு
கிடைத்த பரிசோ
உன்னைவிட பெரிசே.
வெள்ளையனும்
கொள்ளை அரசியல்வாதிகளும்
எம்மைச் சிங்களவர்களுக்கு
விற்றகாலம் தொட்டு
நாம் சிலுவைகளிலேயே தொங்குகிறோம்
மூன்றாம் நாளில் உனக்கு மோட்சம்
எமக்கு எப்போ….?
சொல்லையா சொல்….?
நீ மேய்ப்பனானாய்
தவறிய ஓராட்டை தேடிப்போனாய்
நாம் தவறவிட்டது எத்தனையோ இலட்சம்
உன்னால் எண்ணித்தான் பார்க்க முடியுமா?
மேய்ப்பன் நீயென்று எண்ணி
புலி சிங்கங்களால் மேய்க்கப்பட்டோம்
முள்ளிவாய்க்கால்வரை.
கொலைவெறியில் தின்றது போக
மீதம் நந்திக்கடலினுள் நாறியபோதும்
உலகிற்கே மணக்கவில்லை ஐயோ!!
உனக்குமா யேசுவே!!!!
ஆயுதங்களுடன் மௌனித்துப் போனது
எம்வார்த்தைகளும்
வாழ்வும்….மானிடமும்
எம்செத்தவீட்டில் உனக்கு
பிறந்ததினவிழாவா?
பாராளுமன்றப்பலிபீடத்தில்
மகிந்தன் முன்னிலையில்
தமிழ் உயிர்கள் பலி
உடல்கள் படையல்கள்
கொல்லாமை கூறிய புத்தனின்
பல்லை பிடுங்கியபின்
வெசாக்விழா கொண்டாடி
நரமாமிசம் படைக்கிறார்களே
புத்தனும் புசிக்கிறானே
நிறைமாமிசம்.
யேசுவே!!
அண்ணன் புத்தனிடம்
நீயும் தோற்றுவிட்டாயா?
உலகெங்கும் விழா உன்பிறப்புக்கு
கலகங்களின் வாழ்வுதானா என் இருப்புக்கு
யேசுவைத் தேடும்
நோர்வே நக்கீரா
24 12 2012
வணக்கம் நக்கீரா,
சரியான நேரத்தில் சரியான படைப்பை தந்துள்ளீர்! ஒரு தேர்ந்த இலக்கியவாதி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றீர். இது சமகாலத்திற்கு அவசியமான அற்புதப்படைப்பு.
இதை ஏன் சொல்கின்றேன் என்றால் அண்மையில் குப்பிளானில் நடைபெற்ற மதக் கலவரத்திற்கு இந்தக் கவிதை நல்ல சாட்டை அடி கொடுத்துள்ளது.
அனால் நோர்வேயில் வாழும் சில தமிழ் விசமிகள் பல வருடங்களாக கிறிதவ மதத்திற்கு எதிராக பல பொய்களை பரப்பி வருகின்ரனர். இது பற்றிய உங்கள் உன்னத கருத்துகளை அரிய ஆவலாக உள்ளது.