தமிழக அரசியலில் சாதிகளின் திரட்சியும் செல்வாக்கும் மிக முக்கியமானது. வன்னியர், தேவர்,நாடார் என எண்ணிக்கையில் பெரிய சாதிகளே தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கின்றன. அதனால் இந்த சாதிகளை சமாளிப்பதும் அவர்களை ஐஸ் வைப்பதும் வாடிக்கையான ஒன்று.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்ற அடைமொழியோடு அறியப்பட்ட முத்துராமலிங்கம் தேவர் சாதியினரின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.எம்.ஜி.ஆர் காலம் முதல் இந்த சாதியினர் அதிமுகவினரின் வாக்கு வங்கியாகவும், அவ்வப்போது திமுக வாக்கு வங்கியாகவும் இருந்து வருகிறார்கள். ஜெயலலிதா இந்த சாதியினரை ஐஸ் வைக்க சென்னை நந்தனத்தில் தேவர் சிலையை திறந்து வைத்தார்.
தேவர் சாதி மக்களும் தலித் மக்களும் எதிரெதிராக நிறுத்தப்பட்டு தேவர் அடையாளமாக முத்துராமலிங்கமும், தலித் அடையாளமாக இமானுவெல் சேகரனும் பார்க்கப்பட்டார்கள். இதில் நடந்த மோதலின் தொடர்ச்சியாக இமானுவெல் சேகரன் கொல்லப்பட இன்று வரை தென் தமிழகத்தை பதட்டமாக்கி வருகிறது இந்த சாதி அரசியல்.
யார் ஆள்கிறார்களோ அவர்களுக்குத்தான் பசும்பொன்னில் முதல் மரியாதை. அந்த வகையில் சென்ற ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினுக்கும் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்ற ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் ஸ்டாலின் சென்று மரியாதை செலுத்தினார். ஆனால், இந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ பசும்பொன் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.
நேற்று சசிகலா அஞ்சலி செலுத்திய நிலையில் இது தொடர்பாக பல செய்திகள் வெளியாகி உள்ளன. வன்னியர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி அறிவிக்க அது ஓபிசி பிரிவில் உள்ள பல சாதியினரையும் பாதித்தது.வன்னியர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்தால் சட்டமன்ற தேர்தலில் வடமாவட்ட தொகுதிகளை வென்று ஆட்சியமைக்கலாம் என்று நினைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அது நடக்கவில்லை. வன்னியர்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கவில்ல. மாறாக தேவர் சாதியினரின் வெறுப்பை எடப்பாடி பழனிசாமி சம்பாதித்துக் கொண்டார்.
இந்நிலையில்தான் இன்று பசும்பொன்னில் நடந்த தேவர் விழாவில் பங்கேற்பதை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருமே தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. அங்கு செல்லும் போது தேவர் சாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்ற அச்சத்தில் இருவரும் அங்கு செல்வதை தவிர்த்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.