மேற்கு ஏகாதிபத்திய நாடுகளில் வறிய மக்களுக்கான சமூக நல உதவித் தொகையை அரசுகள் நிறுத்தி வருகின்றன. சிக்கன நடவடிக்கை என்ற தலையங்கத்தில் வேலையற்றோருக்கான உதவித் தொகை, ஓய்வூதியம், நோயாளர்களுக்கான வசதிகள், உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த உதவிகள் போன்றவற்றை அரசுகள் சிறிது சிறிதாகத் துடைத்தெறிகின்றன. ஐரோப்பாவில் பிரித்தானிய அரசு இதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. மக்களின் வாழ்க்கைத்தரம் வறிய நாடுகளுக்கு ஒப்பானதாகக் தாழ்ந்து வருகிறது.
இதன் மறு பக்கத்தில் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் இலாபம் இரட்டிப்பாகி வருகின்றது. பெரும் பணக்காரர்கள் தமது கையிருப்பைப் பல மடங்காக்கியுள்ளனர். உற்பத்தியையும் அதனூடான வருவாயையும் தங்களது கைகளில் வைத்திருக்கும் இவர்கள் அரசாங்கத்திற்கு வழங்கும் வரிதொகையைக் குறைத்து மக்க்ளிடமிருந்து அதிக பணத்தைப் பறித்துக்கொள்ளும் நோக்கத்துடனேயே சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வருவாயைப் பல மடங்கக அதிகரித்துள்ள பல்தேசிய வியாபாரிகளும், பண முதலைகளும் வரிகொடாமையால் சமூக நல உதவித் தொகையை வழங்க அரசுகளுக்குப் போதுமான பணம் கையிருப்பில் இல்லை.
இதனால் மக்களுக்கான உதவித்தொகையை வழங்கமுடியாத நிலைக்கு அரசுகள் வந்து சேர்ந்துள்ளன.
இதற்கு எதிராகப் போராடும் புதிய தலைமுறை ஒன்று தோன்றியுள்ளது. இலங்கை போன்ற வறிய மூன்றாமுலக நாடுகளைச் சார்ந்தவர்கள், ஏகாதிபத்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் உட்படுத்தப்பட அதன் மறு பக்கத்தில் ஐரோப்பிய நாடுகளின் புதிய தலை முறை ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட முன்வருகிறது.
பிற்போக்கு வாத தலைமைகளை உடைத்துக்கொண்டு மக்கள் மத்தியிலான புதிய போராட்ட அரசியலை முன்வைக்கும் தலைமை உருவாகி வருகின்றது.
கடந்த ஞாயிறு அரசின் சிக்கன நடவடிகைகளுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்டத்தில் 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரையான மக்களே கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிர்ம் பொது மக்கள் கலந்துகொண்டதாகப் போலிஸ் தெரிவித்திருந்தது.
தீவிர வலதுசாரிக் கட்சியான பழமைவாதக் கட்சி கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது. தேர்தலின் பின்னர் பல சிக்கன நடவடிக்கைகளை அறிவித்திருந்தது. தேர்தலின் பின்னான பிரித்தானிய எப்படி அமைந்திருக்கும் என்பதற்கான குறியீடாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்திருந்ததாக பிரித்தானிய அரசியல் தரப்புக்கள் தெரிவித்திருந்தன.
ஆர்ப்பாட்டத்தில் பல்தேசியச் சுரண்டலுக்கு எதிராகவும், முதலாளித்துவப் பொருளாதார அமைப்பிற்கு எதிராகவும் சுலோகங்கள் முன்வைக்கப்பட்டன.