06.12.2008.
“மாநிலங்களின் சம்மேளனமாக’ இலங்கை உருவாகுவதை தான் நியாயப்படுத்துவதாக தெரிவித்திருக்கும் ஐ.தே.க. எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான கே.எம். சொக்ஸி, சம்மேளனம் என்பது ஈழம் அல்ல என்றும் அது பிரிவினைக்கு இட்டுச் செல்லாது என்றும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் அவசர கால நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சொக்ஸி, சர்வதேச பிரதி நிதிகள் குழுவானது தனது கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் “மாநிலங்களின் சம்மேளனத்தை’ அடிப்படையாகக் கொண்ட விதத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் கோட்டுக் கொண்டார்.
தான் குறிப்பிடுபவை தமது தனிப்பட்ட கருத்துகள் என்றும் சொக்ஸி தமதுரையின் இறுதியில் குறிப்பிடத் தவறவில்லை.
சொக்ஸி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
இன்றுடன் 240 ஆவது அவசரசபைச் சட்ட நீடிப்பு விவாதத்தில் நான் கலந்துகொண்டுள்ளேன். துரதிர்ஷ்ட வசமாக இலங்கைக்கு ஒளிக்கீற்று தென்படவில்லை. எந்தவொரு யுத்தத்திலும் எந்ததொரு தரப்பும் வெற்றி காண்பதில்லை. இருதரப்புக்குமே ஆட்கள், உடைமைகள் இழப்புகள் ஏற்படுகின்றன. எஞ்சுவது கசப்புணர்வு மட்டுமே.
“தேசிய பிரச்சினை’க்கு ஒன்றுபட்ட தீர்வு அவசியம். கட்சி அரசியலுக்கு அப்பால் சகல தரப்பினரும் ஒன்றுபட்டு தீர்வு காண வேண்டும்.
தனிநாட்டுக் கோரிக்கையை எமது நாட்டின் பெரும்பான்மை மக்கள் வரவேற்கமாட்டார்கள். ஆனால், உள்மட்ட சுயாட்சி மற்றும் உள்மட்ட சுயநிர்ணயம் என்பவற்றுக்கான விதைகள் ஆழமாக வேரூன்றி விட்டன. இந்தக் கோரிக்கைகளை சகல அரசியல் கட்சிகளும் பிரஜைகள் அமைப்புகளும் தலையாய தேசிய பிரச்சினையாக அங்கீகரித்துத் தீர்வு காண வேண்டும்.
மாகாண முறைமை மற்றும் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் என்பன ஏற்கனவே எம்மிடம் உள்ளன. சில அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஆதலால், சமாதானத்தை வென்றெடுக்க அதிகாரப் பகிர்வு பாதையில் நாடு மேலும் முன்னேறிச் செல்ல முடியும். தீர்வுக்கு “சம்மேளனத்தை’ பயனுள்ளதொன்றாக பரிசீலிக்க முடியும்.
இலங்கையானது சுமார் 200 வருடங்களாக் ஒற்றையாட்சி முறையில் நிர்வகிக்கப்படுகிறது. 1815 ஆம் ஆண்டில் கண்டியை பிரிட்டிஷார் கைப்பற்றி இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த காலம் தொடக்கம் ஒற்?றயாட்சி நடைமுறையிலிருந்து வருகிறது.
1948ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த காலத்திலும் தற்போதும் ஒற்றையாட்சி முறைமையே நடைமுறையிலிருக்கிறது. அதேசமயம், இந்த நாட்டில் மூன்று பிரதான இனங்களும் நான்கு மதங்களும் இருக்கின்றன என்பதையும் நாங்கள் பல்லின, பலமத மக்களும் வாழும் சேதம் என்பதையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு இன, மதக் குழுக்கள் வாழ்கின்றன. தமது வாழ்விடங்களில் தமது தேவைகள் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்வதில் அதிகளவு பாத்தியதையை கொண்டிருப்பது அவர்களின் உரிமையென அவர்கள் கருதுகிறார்கள். உள்மட்ட சுயநிர்ணய உரிமைப் பிரச்சினைக்கு 1978 அரசியலமைப்பால் தீர்வு காணமுடியாது. ஆதலால், மாநிலங்களின் சம்மேளனமாக இலங்கை உருவாவதை நான் நியாயப்படுத்துகிறேன்.
இந்தச் சிந்தனை இலங்கைக்கு புதிய தொன்றல்ல. 1928 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரால் டொனமூர் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டில் சட்ட சபை ஏற்படுத்தப்பட்டது. இலங்கைக்குள் சம்மேளனத்தை உருவாக்குமாறு அச்சமயம் எம்.பி. பானபொக்க, பி.எச். அலுவிகார தலைமையிலான கண்டித் தலைவர்கள் வலியுறுத்தினர். கீழ் நாட்டு சிங்களத் தலைவர்களின் எதிர்ப்பால் அக்கோரிக்கை கைவிடப்பட்டது.