சிறியதொரு இடைவெளியின் பின் இரண்டாவது தடவையாகவும் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு அழிவுகளால் உண்டான பாதிப்புக்கள்; இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இயற்கை அனர்த்தத்தினால் பெரும் அழிவு ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய அனர்த்த நிலையைப் பிரகடனப்படுத்தி சர்வதேச நாடுகளினது உதவிகளைப் பெறுவதற்கு முன்வர வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் புறக்கணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கையை “சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு விடும்” என்ற காரணத்தைக் கூறி ஆளும் தரப்பினர்; ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும்; பாரளுமன்றத்தில் இது குறித்துப் பேசியுள்ளனர்.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதியளவு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகிற போதும் அரசாங்கத் தரப்பினர் அதனை மறுத்து வருகின்றனர். எதிர்க்கட்சியினர் இதுவரை கிடைக்கப் பெற்ற வெளிநாட்டு உதவிகள் மக்களை சென்றடைய வில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கிறார்கள். குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் நடைபெறும் நிவாரணப் பணிகள் பற்றி அதிகம் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.
இதே வேளை இலங்கையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோரின் உடனடி மனிதாபிமான தேவைகளை நிறைவேற்ற 51 மில்லியன் டொலர் நிதியை வழங்குமாறு ஐ.நா. கோரிக்கை விடுத்திருந்த போதும் செவ்வாய்க்கிழமை வரை 8.4 மில்லியன் டொலர்களையே பெற்றிருப்பதாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப 2 மாதங்கள் செல்லும் எனத் தெரிவித்திருப்பதுடன் உதவி வழங்கும் நாடுகளின் உதவிகளுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மீண்டும் கட்டியெழுப்பப் படவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.