தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற பிரசுரத் தலைப்பிடப்பட்டிருந்த துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பிரசுரத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஏழாலை இளைஞரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் யாழ். பொலிஸாரால் ஏழாலை மேற்கைச் சேர்ந்த செல்வராஜா செல்வகிரீஷன் (வயது 31) என்ற இளைஞர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். இரவு 9.30 மணியளவில் வீட்டில் வைத்துக் கைது செய்யப் பட்ட செல்வகிரீஷன் நேற்று யாழ். நீதிமன்றத்தில் பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த இளைஞர் ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலைய நிர்வாகக் குழுவின் செயலாளராவார். தினமும் காலையில் சனசமூக நிலையத்தைத் திறந்து நாளிதழ்களை அங்குள்ள மேசையில் இவர் வைத்து வந்தவர். சில தினங்களுக்கு முன்னர் சனசமூக நிலையத்தைக் காலைவேளை திறந்தபோது குறித்த துண்டு பிரசுரம் உள்ளே கிடந்ததாகவும், அதனை அவர் எடுத்துப் பார்த்தாரே தவிர அதனை அவர் தயாரிக்கவோ பிரசுரிக்கவோ இல்லை என்றும் இளைஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
பிரசுரத்தின் சில பகுதிகள்:
சிங்களப் பயங்கரவாத அரசு மீண்டும் எமது தமிழ் மக்கள் மீது இன அழிப்பை அரங்கேற்றியுள்ளது. கிறீஸ் பூதம் என்ற போர்வையில் தமிழர் பிரதேசமான வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்\ர் கோத்தபாய தலைமையின் கீழ் இயங்கும் சிறீலங்காப் புலனாய்வுப் படையினர் தமிழ் மக்கள் மீது வன்முறை மூலம் இன அழிப்பை நடத்தி வருகிறனர்.
இவர்களுடன் தமிழ்தேச விரோதக் கும்பலான ஈ.பி.டி.பி பக்கதுணையாக இயங்குகிறது. எனவே தமிழீழ மக்களாகிய நீங்கள் விழிப்புடனும் மிகுந்த பாதுகாப்புடனும் இருக்குமாறு வேண்டிக் கொள்கிறோம் என்றுள்ளது.
அதன் கீழ் கிறீஸ் பூதத்துக்கோர் எச்சரிக்கை என்ற தலைப்பில்,
எமது மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் தொடருமாயின் அதற்கெதிராக நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம். நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்? என்று எமக்குத் தெரியும். இத்தோடு உங்கள் தாக்குதல்களை நிறுத்தி ஒதுங்கிக் கொள்ளுங்கள். இல்லையேல் ஒதுக்கி வைப்போம் எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.பிரசுரத்தின் இறுதியில் தமிழ் தேச பற்றுள்ள தேசிய இயக்கம். எனக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரச பயங்கரவாதிகள் தாம் இராணுவ ஆட்சி நிகழ்த்தும் பிரதேசங்களில் கட்டவிழ்த்.துவிட்டுள்ள மர்மமனிதர்களின் பெண்கள் மீதான தாக்குதல்களின் ஊடாக பதற்ற நிலையை உருவாக்கி தமிழ்ப்பேசும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதே பிரதான நோக்கமாக அமைந்திருக்கின்றது. இவ்வாறான கலாச்சாரக் கொலையை நிகழ்த்தும் மகிந்த பாசிச ஆட்சியாளர்களை எதிர்கொள்ள மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் அரசியல் தலைமையே இன்றைய தேவை. சந்தர்ப்பாவத அரசியல் வாதிகள் இவற்றிற்குத் தயாராக இல்லை. மக்கள் சார்ந்த புதிய அரசியல் தலைமை இன்று அவசியமானது. மக்களை அணிதிரட்டி வெகுஜனப் போராட்டங்களை வழி நடத்தும் அரசியல் இஅய்க்கங்கள் மட்டுமே விடுதலையை உறுதிசெய்யும்.