யேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலியின் 30 வருடகால அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தலைநகர் சானாவின் வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் வெற்றிக்கான சமிக்ஞையை வெளிப்படுத்திய அதேவேளை, “வெளியேறு’ என்ற வாசகத்தைக் கொண்ட வெண்ணிறத் துணிகளைத் தலையில் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதிலும் தீவிரமடைந்துவரும் மக்கள் கிளர்ச்சிப் போராட்ட நாடுகளில் யேமனும் ஒன்றாகும்.
கடந்த திங்கட்கிழமை ஐக்கிய அரசாங்கமொன்றை அமைக்கும் திட்டத்தை சாலி முன்வைத்தபோதும் எதிர்க்கட்சி அதனை நிராகரித்துள்ளது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டங்களின் மையமாக விளங்கும் தென்பகுதியின் 5 மாகாணங்களுக்கு சாலி புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்.
இரு வாரங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டிருந்த இடத்தில் மீண்டும் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் வெற்றியை நெருங்கிக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
அத்துடன் எமது இலக்கும் கோரிக்கையும் ஒன்று மட்டுமே அது ஆட்சியை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதே எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பரந்தளவில் இடம்பெற்றுவரும் ஊழல், அதிகாரித்துவரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகள் என்பவற்றுக்கு எதிராகவே இங்கு ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் பெற்றுள்ளன.
இதேவேளை, கடந்த இரு வாரங்களில் ஆர்ப்பாட்டங்களின் போதான மோதல்களில் 24 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.