இலங்கையில் “மதுவுக்கு முற்றுப் புள்ளி’ (மத்தட்ட தித்த) என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி அதனை முன்னெடுக்க படாதபாடுபட்டு வரும் நிலையில் இலங்கை “குடிமகன்’ களின் தாக சாந்திக்காக இறுக்குமதி செயப்பட்ட, உற்பத்தி செய்யப்பட்ட குடிவகைகளின் அளவு வருடத்துக்கு வருடம் அதிகரித்து சென்றமை தெற்காசியாவிலேயே இலங்கை “போதையில் தள்ளாடும்’ நாடு என்ற பெயரைப் பெற்றுத் தந்திருக்கின்றது.
மதுவுக்கு “முற்றுப்புள்ளி’ என்ற திட்டத்தை கடந்த நான்கு வருடங்களாக அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றபோதும் மதுபாவனையின் அளவை கட்டுப்படுத்தவோ, அல்லது அதற்கு முற்றுப் புள்ளி வைக்கவோ முடியவில்லை. மாறாக மதுபாவனை அளவு அதிகரித்து செல்லும் வேகம் அனைவரினதும் தலைகளையும் கிறுகிறுக்க வைக்கின்றது.
யுத்தம் ஏற்படுத்திய அழிவுகள், வடுக்களினால் “கண்ணீரில் மிதந்த இந்த நாடு’ இனிமேல் மதுபாவனையின் மோகத்தினால் “தண்ணீரில் மிதக்கும் தேசமாக’ மாறப்போவதையே மதுபாவனை தொடர்பான அண்மைக்கால அறிக்கைகள், தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மதுவுக்கு முற்றுப்புள்ளித் திட்டத்தின் பின்னர் மதுபாவனையின் அளவு மிகமோசமாக அதிகரித்துள்ளது என்பதை அரசாங்கமே பாராளுமன்றத்தில் ஒத்துக்கொண்டது. மதுவுக்கு முற்றுப் புள்ளியல்ல “கம’ வே போடப்பட்டுள்ளதாக சில அமைச்சர்களே இங்கு கூறிய அதேவேளை மதுவுக்கு முற்றுப்புள்ளிக்கு முற்றுப்புள்ளியை அரசு வைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகளும் சாடின.
மதுவுக்கு முற்றுப்புள்ளி திட்டம் கொண்டுவரப்பட்ட கடந்த நான்கு ஆண்டுகளில் 2005 ஆம் ஆண்டு 288,103, 7000 லீற்றரும் 2006 ஆம் ஆண்டு 315,076, 5000 லீற்றரும், 2007 ஆம் ஆண்டு 403,469,1000 லீற்றரும் 2008 ஆம் ஆண்டு 336,928,7000 லீற்றர் மதுபானங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இம்மதுபான வகைகளுக்காக 2005 ஆம் ஆண்டு 177, 692,496,400 ரூபாவும், 2006 ஆம் ஆண்டு 175,285,761,700 ரூபாவும் 2007 ஆம் ஆண்டு 309,005,937, 300 ரூபாவும், 2008 ஆம் ஆண்டு 245, 751, 763,000 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு குடிவகைகளுக்காக 2005 ஆம் ஆண்டு வரியாக 514,934,481,300 ரூபாவும் 2006 ஆம் ஆண்டு வரியாக 570, 183,390,00 ரூபாவும், 2007 ஆம் ஆண்டு வரியாக 670,985,623,00 ரூபாவும் 2008 ஆம் ஆண்டு வரியாக 685,584, 297,00 ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய 2005 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான 4 வருட காலப்பகுதியில் 134, 357,80000 லீற்றர் வெளிநாட்டு மதுபானம் 907,735,958,400 ரூபா செலவில் இறக்குமதி செயப்பட்டுள்ளது. இதற்காக 707,609,812, 300 ரூபா வரியாக செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மதுபானங்கள் மீது இலங்கையருக்குள்ள மோகம் எந்தளவு பெறுமதியானதென்பதை புரிந்து கொள்ள முடியும்.
இதேவேளை, இந்த நான்கு வருடங்களில் உள்நாட்டு மதுபான உற்பத்திகளும் அதிகரித்தே காணப்பட்டன. 2005 ஆம் ஆண்டு 900, 122, 4232 லீற்றரும் 2006 ஆம் ஆண்டு 917,757,9821 லீற்றரும் 2007 ஆம் ஆண்டு 996,677,5777 லீற்றரும் 2008 ஆம் ஆண்டு 103,375,24614 லீற்றரும் மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த 4 வருடங்களில் 384,831,04444 லீற்றர் குடிவகைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த 4 வருடங்களில் இறக்குமதி செய்யப்பட்ட 134, 357,80000 லீற்றரையும் இந்த 4 வருடங்களில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 384,831,04444 லீற்றரையும் சேர்த்து 519,188,844,44 லீற்றர் குடிவகைகளை இலங்கை குடிமகன்கள் 4 வருடங்களில் குடித்து தமது தாகம் தணித்து நாட்டுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்துள்ளனர்.
இலங்கையில் மிகமோசமாக அதிகரித்து வரும் மதுபாவனையால் சமூகம் சீரழிவது மட்டுமன்றி விபத்துக்கள், குற்றச்செயல்கள், வன்முறைகள் போன்றனவும் அதிகரித்து வருகின்றன. ஒருவருடத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் மூன்று லட்சம் விபத்துக்களில் அதிகமானவை மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட விபத்துக்களாகவே விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதேபோன்று குற்றச் செயல்களில் ஈடுபட்டு அல்லது கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டு நீதிமன்றங்களில் மிகக் கடுமையான தண்டனை பெற்றவர்களில் பெருமளவானோர் மதுபாவனைக்கு அடிமையானவர்களாகவே உள்ளனர். உடல் ரீதியாக, மனரீதியாக ஒரு மனிதனிடம் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மது நாளடைவில் அந்த மனிதன் மூலம் சமூகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
“மது விருந்து’ என்பது தற்போது வயது வேறுபாடின்றி அனைத்து தரப்பினரையும் ஆட்கொண்டுள்ளது. புது ஆடை ஒன்று வாங்கினாலுமே “மது விருந்து’ வைக்குமளவுக்கு இன்றைய இளைய தலைமுறை சீரழிந்து போயுள்ளது. நான்கு நண்பர்கள் சேர்ந்தால் தண்ணி அடித்து விட்டுத்தான் பிரிய வேண்டுமென்பதை ஒரு கலாசாரமாகவே தற்போது கடைப்பிடித்து வருகின்றனர்.
தற்போது திருமண வீடாக இருந்தால் என்ன, மரண வீடாக இருந்தால் என்ன, எந்தவொரு சிறிய நிகழ்வாக, விழாவாக இருந்தால் கூட தண்ணி அடித்து போதையில் கும்மாளமிடுவதையே சமூகப் பெருமையாகக் கருதம் போக்கும் தற்போதைய இளம் சந்ததியிடம் அதிகமாகவுள்ளது. ஒரு நண்பர்கள் குழுவில் ஒருவர் தண்ணி அடிக்காதவராக இருந்தால் கூட அவரை கேலி பண்ணியே மது அருந்த வைத்து தாம் பெற்ற இன்பத்தை அவரையும் அனுபவிக்க வைத்து புளகாங்கிதம் அடைவார்கள்.
மது என்பது தனி மனிதனை மட்டும் பாதிக்கும் விடயமல்ல. மது அருந்தும் ஒருவரினால் அவரின் குடும்பம், அக்குடும்பத்தை சுற்றியுள்ள அயலவர்கள், அதனால் ஒரு சமுதாயம் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். படிக்கும் வயதில் மதுவுக்கு அடிமையானால் தன்னுடைய படிப்பையும் பாழாக்கி சகநண்பர்களின் கல்வியையும் சீரழித்து விடுவார்கள். வேலைசெய்பவர்கள் மதுவுக்கு பழக்கப்பட்டால் வேலையை இழப்பதுடன் தம்முடைய பொருளாதாரத்தையும் இழந்து குடும்பத்தையும் வறுமைக்குள் தள்ளுவதுடன் குடும்ப மகிழ்ச்சி மற்றும் சமூக அந்தஸ்தையும் இழந்து விடுவார்கள்.
சாரதிகள் மதுவுக்கு அடிமையானால் கவனம் சிதறி விபத்துக்களை ஏற்படுத்துவதுடன் சிலவேளைகளில் உயிர்களையும் காவுகொண்டு சில குடும்பங்களின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கி விடுகின்றனர். இலங்கையில் அண்மையில் அதிகமான விபத்துக்கள் இடம்பெறுவதற்கு மதுபாவனையே மிக முக்கிய காரணியாக விளங்குவதாக போக்குவரத்துசேவை பொலிஸார் கூறுகின்றனர்.
மதுவுக்கு அடிமையானவர்கள் சுயத்தை இழந்தவர்களாகவே இருப்பார்கள். சில அற்ப ஆசைகளுக்காக திருடுதல், வழிப்பறிகள், மற்றும் குற்றச் செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றனர். இலங்கையில் இடம்பெறும் பாலியல் வல்லுறவுகள், சிறுவர் துஷ்பிரயோகங்களில் அதிகமானவைக்கு மதுபாவனையே காரணமாகவுள்ளதாக பொலிஸாரும் வைத்தியசாலை வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
காதல் தோல்வி, பரீட்சையில் தோல்வி, குடும்பப்பிரச்சினை, கடன் தொல்லை, மனக்கவலையென ஒவ்வொரு குடிமகன்களும் தாம் குடிப்பதற்கான காரணங்களை முன்வைக்கின்றனர். குழந்தைப்பாக்கியம் இல்லையென்பதற்காக ஒரு ஆண் குடித்தால் அதே கவலையில் அவரின் மனைவியும் மதுகுடிக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும். அல்லது மேற்குறிப்பிட்ட கஷ்டங்கள், கவலைகள் பெண்களுக்கும் ஏற்படக் கூடியவை. அவர்களும் குடிக்க ஆரம்பித்தால் இந்த நாடு குடிகாரர்களின் தேசமாகவே மாறிவிடும்.
கவலைகளை மறக்க மது குடிப்பதாக கூறுவோருக்கு நியூஸிலாந்து ஒக்லாண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மத்யூ தலைமையிலான குழுவினர் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். அதாவது, கஷ்டத்தை மறப்பதற்காக குடிக்கும் மது அளவோடிருக்கவேண்டும். இல்லாதுவிட்டால், எதை மறக்க வேண்டுமென நினைத்து மதுகுடிக்கின்றோமோ அந்த நினைவுகள் திரும்பத்திரும்பத் தோன்றி மனதில் மூர்க்கத்தனத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டத்தகாத விபரீத விளைவுகள் ஏற்படுகின்றன என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நாட்டின் மிகமோசமான பொருளாதார நிலைமைகளால் பலர் குறைந்த செலவில் நிறைந்த போதை தரும் குடிவகைகளை நாடுகின்றனர். இதனால் கள்ளச்சாராயம், கசிப்பு, வடி போன்ற தயாரிப்புகளும் சட்டத்துக்கு முரணான வகையில் மிக அதிகமாக உற்பத்திசெயப்பட்டு வறுமைக் கோட்டில் வாழும் குடிமக்களின் தாகத்தை தீர்த்துவருகின்றன.
அண்மையில் கள்ளச் சாராயத்தினால் பலர் உயிரிழந்த சம்பவத்திலும் வறுமை நிலையிலிருந்த பலர் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போது மூலைக்கு மூலை காணப்படும் மதுபான சாலைகளை ஆக்கிரமித்திருக்கும் இள வயதினரைப் பார்த்தால் இந்நாட்டின் இளைய தலைமுறை எங்கே சென்றுகொண்டிருக்கின்றதென்ற கவலை ஒவ்வொருவருக்கும் ஏற்படுவதை தவிர்க்க முடியாதுள்ளது. அந்தளவுக்கு மிகச் சிறிய வயதிலேயே பெருமளவானவர்கள் மதுவுக்கு அடிமையாகிப் போயுள்ளனர்.
அத்துடன் மதுபான நிலையங்கள் திறப்பதற்கான சில குறிப்பிட்ட இடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பான எந்தவொரு சட்டதிட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாமல் பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், பொதுமக்கள் கூடுமிடங்களென எங்கும் மதுபானசாலைகளே நிறைந்து காணப்படுகின்றன.
போதைக்கு முற்றுப்புள்ளியென்ற திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியுள்ள போதும் மதுபான சாலைகளை திறக்கும் விடயத்தில் அரசியல் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்திவருகின்றது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தன. ஆனால், இதனை அரச தரப்பு மறுத்திருந்தது.
இலங்கையில் 30 வருடங்களாக தொடர்ந்த யுத்தத்தால் நாட்டின் அபிவிருத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டு பொருளாதாரம் சீரழிந்த போதும் தெற்காசியாவில் சிறந்த “குடிமகன்’களைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குவது தொடர்பில் இந்த நாட்டின் ஒவ்வொரு “குடிமகனும்’ பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.
போதையில் தள்ளாடும் இலங்கையின் நிலைமையைப் பார்த்தால் இந்தக் கவலையை போக்குவதற்காகத் தன்னும் தண்ணி அடிக்கத்தான் வேண்டும் போலிருக்கிறது.
மூலம்: Thinakkural.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்