‘கண்ணிவெடிக்குள் இருக்கும் ஈழத்து மக்களும் புலம்பெயர் அறிவுசீவிகளைச் சுற்றியிருக்கும் கண்ணிவெடிகளும்’
ஈழத்து தமிழர் புலம்பெயர்ந்த பின்னர் உருவாகியிருக்கும் இலக்கிய, சிற்றிதழ், அறிவுசீவித் தளங்கள் அனைத்தும் இருபெரும் பிரிவாகக் காணப்படுகின்றன. இது இயல்பாகப் புலம்பெயர்ந்த இடத்தில் உருவான ஒரு சூழல் அல்ல. அந்தத் தளங்களுக்குள் வந்து சேர்ந்தவர்கள் 99 விழுக்காட்டினர் ஈழத் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்திலிருந்து| அதை ஏற்படுத்தத் துணிந்த குழுக்களிலிருந்து வந்தவர்களாக இருக்கின்றனர். இந்தப்பிரிவுக்குள் விரும்பி இடம்பெற்றிருக்கும், விரும்பாமல் சேர்க்கப்பட்டிருக்கும் அறிவுசீவிகளின் தளத்தில் இதுபற்றிய தெளிவான பார்வையற்ற நிலையும் இருக்கிறது.
ஈழத் தமிழ் மக்களுக்கான விடுலைப் போராட்டத்தில் உள்ள மக்களின் தற்போதைய நிலை பரிதாபத்திற்குரியதாக இவ்விரு பிரிவினரிடமும் சிக்கியதால் இன்னும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. பெரும்பாலான அறிவுசீவிகளின் வேலை பொதுப்புத்தி மட்டத்தில் உள்ள மக்களைத் திட்டுவதாகவே உள்ளது. அதனால் எந்தப் பயனும் வருவதில்லை என்பது புரியாததுபோல அவர்கள் செய்யும் மற்றைய செயற்பாடுகள் மக்களை மேலும் துன்பத்துக்கு உள்ளாக்கி வருகின்றன.
புலம்பெயர்ந்த தமிழர்:
1970களுக்கு முன்னர் தமிழர்கள் என்ற பொதுச்சொல் சுட்டிவந்தததெல்லாம் மலேசிய, சிங்கப்பூர், இலங்கை, தமிழகத் தமிழர்களைத்தான். அவர்கள் வசிப்பிட நிலவியல் எல்லை மட்டும் மொழியுடன் சேர்த்த பிற அடையாளத்துக்கான எளிமை அலகாக இருந்தது. இவர்களைத் தவிர, குறிப்பிடத்தக்க அளவில் ஆங்கிலேயர் காலத்தில் இடம்பெயர்ந்து தமிழர்களாக மொரிசியஸ், ரியூனியன், மடகாஸ்கர் போன்ற இடங்களின் புலம்பெயர் தமிழர்கள் இருந்தனர். இன்றோ நிலை விளக்கிச் சொல்லத் தேவையில்லாத அளவிற்கு மாறிவிட்டது.
தமிழர்களின் சிந்தனைத் தளங்கள் கூர்மையாக, குறிப்பான உள்ளார்ந்த ஓட்டம், விரிவு, பரவல் என்பனவற்றை அடையாமல் இருக்கின்றன. புறத்தாக்கங்களை எளிதில் உள்வாங்கிச் செல்வதும் அதற்குரியவகையில் அறிவுச் சோம்பேறித்தனத்தை எமது சிந்தனைமரபு கொண்டிருப்பதும் இதற்குக் காரணம். அல்லது சிந்தனைத் தளங்களினூடு தமிழில் முழுநேரமாக யாரும் நேரத்தைச் செலவிடுவதில்லை என்பதும் தமிழ்ச்சூழலில் அதற்கான வாய்ப்பு, இடம் விடப்படுவதில்லை என்பதும் மற்றையது. தமிழரின் இதுவரைக்குமான சிந்தனை வெளிப்பாட்டு மரபில் எதுவும் அதற்கேயுரித்தான தனித்தவடிவங்களாக, வெளிப்பாட்டுத் தொகுதியாக நிற்கவில்லை. அவை இலக்கிய வடிவங்களாகவும் அல்லது வழிபாட்டு அலகுகளாகவும் இருக்கும் நிலையினை ஏற்றுக்கொண்டுதான், அதனுள் நின்றுதான் தமிழரின் கடந்தகாலச் சிந்தனை வெளிப்பாடுகள் பற்றிப் பார்க்கவேண்டியிருக்கிறது.
தமிழிற்குச் சிந்தனை மரபு தனித்ததாக, தனியொரு பிரிவாக, இருக்கவில்லை. இன்றுவரைக்கும் தமிழரின் சிந்தனைப்போக்கு தனித்த அலகாக அல்லது வெளிப்பாட்டுவடிவம் கொண்டதாக இல்லை. இது தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் பொருந்தும். அறிவுசீவிகள் எனப்பட்டவர்கள் தமிழ்ச் சூழலில் எப்போதும் இலக்கியக்கார்களாயிருந்தனர். அதாவது இலக்கியத்தைப் படைப்போராகவும் படிப்போராகவும் விமர்சிப்போராகவும் இருப்பவர்களே சிந்தனையைத் தீர்மானிக்கும் மட்டத்தினராகவும் இருந்தனர். தமிழின் சிந்தனை வெளிப்பாட்டு மரபும் இலக்கியக் குழுமமும் எப்போதும் ஒன்றாகவே இருந்தன. சங்கம் தொட்டு இப்படித்தான் இருந்து வருகின்றது
இலங்கையின் தமிழ்ச் சிந்தனைத் தளத்தைத் தீர்மானிக்கும் போக்கில் காலனித்துவ காலத்திற்குப்பினாக இடதுசாரிகள் அல்லது பொதுவுடமைவாதிகள் முதன்மை பெறுகின்றனர். ஈழத்தின் பொதுவுடமை முகாமிலிருப்பவர்கள், கைலாசபதி முதற்கொண்ட அனைவரும், தமிழகச் சூழலில் எளிதாக அறிமுகமாகிவிடுகின்றனர். இதற்கு ஏற்கெனவே அறியப்பட்ட பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுடன் இலங்கையில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியில் பங்கேற்குமளவுக்கு முற்பட்டதும் – அப்படியொரு நிலை ஏற்பட்டதும் ஒரு காரணம்.
மற்றையது இடதுசாரிகளின் அணியொன்று இலங்கையில் ஆயுதவழியில் ஆட்சியைப் பிடிக்க முற்பட்டமை. இவை உலக, இந்திய, தமிழக பொதுவுடமைவாதிகளிடையே இலங்கையின் மீதான பார்வையை குறிப்பிடத்தகுந்தளவு திருப்பியிருந்தது. இதன்விளைவு இன்றளவும் தொடர்கின்றது. அதன்விளைவாகவும்கூட, இலங்கை பொதுவுடமைவாதிகளின் முகாமிலுள்ள அறிவுசீவிகள், இலக்கியவாதிகள் தமிழகத்தில் பரவலாகவும் தீவிரமாகவும் அறியப்பட்டார்கள் – விரும்பவும்பட்டார்கள். மத்திய கூட்டாட்சியுடன் சேர்ந்து போகும் பழக்கமுள்ள இந்திய, தமிழக மார்க்சிய – பொதுவுடமைச் சிந்தனை மரபு, பாலிலிருக்கும் தண்ணிக்கு அன்னம் செய்யும் வேலையைப்போல, இலங்கைத் தமிழ்ப் பொதுவுடமைவாதிகளிடமிருந்து தன்னாட்சி குறித்த பகுதிகளை மட்டும் விலக்கிக் கொண்டு அவர்களைப் பற்றிக்கொண்டது.
அதுபோலவே ஈழத்து அல்லது இலங்கைத் தமிழர்களின் சிந்தனையில் தவிர்க்கமுடியாதபடி தமிழகம் தனது தாக்கத்தைச் செலுத்தியபடி இருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டம் முதற்கொண்டு தமிழகத்தின் அரசியற் கட்சிகள், அமைப்புக்கள், தமிழகத்தின் திரைப்படம், தமிழகத்து இலக்கியம், தமிழகததின் பொதுப்புத்தியினர் என அனைத்துத் தளங்களும் தங்கள் பங்களிப்பை இந்தத் தாக்கத்தில் செலுத்தியிருக்கின்றன. இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நிலைப்பெயர்ச்சியும் இந்தச் சிந்தனைப்போக்குகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ரசியக் கனவு சிதைந்ததற்கும் அப்பால், அதுவரைநாளுக்குமான அரசு ஆதரவு நிலைப்பாட்டில் அடிவிழுத்திய தமிழ்த்தேசிய எழுச்சியால் இலங்கையில் இடதுசாரிகள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இருப்பினும் சற்றும் மனம் தளராதநிலையில் இடதுசாரிகள் தங்கள் கூட்டாளிகளாக அமையக்கூடியதாக எதிர்பார்த்த தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு தேடித்தந்த நிலையும் இருந்தது. இவ்வனைத்து நிகழ்வுகளிலும் ஈழத்தின் அறிவுசீவிகள் சீவிதம் செய்துகொண்டிருந்தார்கள்.
ஈழத் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்கள்|:
தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்காகவென ஆயுதவழியில் போராட்டத்தை முன்னெடுத்த பல இயக்கங்கள் ஈழத்தில் தோன்றின. அவற்றுக்கு அந்த நேரத்தில் தூண்டப்பட்டோ தூண்டப்படாமலோ ஈழத்துத் தமிழ் மக்களின் விடுதலை என்பது நோக்காக இருந்தது. இதில் யாருக்கும் அவ்வேளையில் பெரிதாக மாறுபட்ட கருத்தில்லை. அல்லது இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விடுபட்ட ஈழத்துத் தமிழ் மக்களின் இறைமையாக இருந்தது. தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி போன்ற பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கு நோக்கத்தை அடையும் வழிமுறையில், அணுகுமுறையில் வேறுபட்ட கருத்து இருந்திருக்கலாம். ஆனால் உண்மையில் இத்தகைய நிலையை வாக்குவங்கி அரசியலினூடாக வளர்த்தெடுத்தவர்கள் அவர்கள்தான்.
ஈழத் தமிழ் மக்களுக்கு விடுதலை என்பதனை அடையப் பல்வகையான போக்குகளின் அடிப்படையில் களத்தில் குதித்தார்கள் அல்லது தள்ளப்பட்டார்கள் அல்லது தள்ளிவிட்டார்கள். சிந்தனைப்போக்குகளுக்கு தொடர்புடையாதாக அல்லது சிந்தனைத் தளங்களில் இருந்து விரிவதான தேவை ஏதும் அற்றநிலையில், இப்படிக் குதித்தவர்களின் பின்னால், அவர்களின் நடிவடிக்கைகளில், மக்கள் இணைக்கப்பட்டார்கள். எப்போதும்போல பார்வையாளர்காளாய், வாக்காளர்களாய், ரசிகப்பட்டாளங்களாய் மக்கள் இங்கும் இணைக்கப்பட்டார்கள்.
மக்களிடம் எந்த சிந்தனைப்போக்கின் ஆதிக்கமும் முன்நின்று அவர்களை, ஈழத் தமிழ் மக்கள் விடுதலைக்கு – போராட்டக் களத்துக்கு அழைத்துவரவில்லை. பொதுப்புத்தி மட்டம் எப்போதும் போலவே இருக்க அது ஈழத் தமிழ் மக்களுக்கு விடுதலை என்பதில் இணைக்கப்பட்டுவிட்டது. எல்லோரும் கூடி ஒருதிசையில் போனார்கள். இப்படிப்பட்ட அரசியல் நிலைப்பெயர்ச்சியின் தொடக்க நிலையிலேயே களநிலையில் இருந்து தப்புவிக்க தங்கள் தங்கள் உறவுகளை பத்திரமாக வேற்றிடத்துக்கு அனுப்புதல் நடக்கத் தொடங்கியது. முதலில் அது அண்டைத் தமிழகமாக இருந்தது.
தமிழகத்தில் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் நிலையை ஈழத் தமிழ் மக்களுக்கு விடுதலையை அளி(ழி)க்க வந்த குழுக்கள் ஏற்படுத்தத் தொடங்கியதும் பிற வெளிநாடுகளை அதுவும் குறிப்பாக மேற்கு நாடுகளை நோக்கியது இந்தப் புலப்பெயர்வு. சண்டை வலுத்த நிலையில், அந்தந்த நிலவியல் பகுதிகளில் இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் போன்றவற்றின் பாதிப்பு தாங்காத நிலையில், போராடப் புறப்படட்ட குழுக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்ட நிலையில், சண்டையின் விளைவாக எழுந்த பொருளாதார நெருக்கடிகளின் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதாரத் தேடலுக்காக எனப் பலவாறும் பிற்பாடு புலம்பெயர்ந்து இந்த முன்சொன்ன புலம்பெயர் குழுமத்துடன் இணைந்துகொண்டார்கள். அவர்களும் அவர்களது குடும்பங்களும் சுற்றமுமே இன்றைய புலம்பெயர்வு இலக்கியத்தின் பின்புலச் சமூகக் கட்டுமானமாக உள்ளனர். மற்றொருவகையில் சொன்னால் புலம்பெயர் அறிவுசீவிகளின் சமூகப் பின்புலமாக உள்ளனர்.
புலம்பெயர் இலக்கியம் மற்றும் புலம்பெயர் அறிவுசீவிகள்:
தமிழர்களின் சமகால இலக்கியங்களிடை புலம்பெயர் இலக்கியங்கள் குறிப்பிடத் தகுந்தளவு கவனத்தைப் பெற்றருக்கின்றன. இதற்கு இந்த இலக்கியங்கள் உன்னதமானவை என்பது மட்டும் பொருள் அல்ல. விதிவிலக்கான ஓன்றிரண்டு படைப்புக்கள் தவிர்த்து புலம்பெயர்ந்த பொருளாதாரப் பின்னணியினால் மார்க்கட்டில் கவனத்தை எளிதாகப் பெற்றுவிடுவதால் அவை சார்ந்த எழுத்தாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பின்னூட்டமிடுபவர்கள் முன்னணியில் பேசப்படுகிறார்கள், நினைவில் கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்தப் புலம்பெயர் எழுத்துலகத்தினர் செய்யும் நேரடி மற்றும் மறைமுக பொருளாதாரச் செலவினம் மிகவும் அதிகளவானது.
மேற்கு நாடுகளின் ஊராட்சியில் உதவிப்பணம் பெறும் உத்தியாக போட்டோக் காப்பியில் வெளிவந்த, வெளியீடுகள்கூட தமிழகத்திலும் ஈழத்திலும் சிறுபத்திரிக்கை இலக்கிய – அறிவுசீவித்தரம் பெற்றுள்ளன. இந்தநிலை தமிழகத்தில் அல்லது ஈழத்தில் இருந்து வரும் இத்தகைய ஓர் வெளியீட்டுகளுக்கு – சிறுபத்திரிகைக்கு கிடைக்காது, கிடைத்திருக்காது, கிடைத்திருக்கவில்லை.
தமிழகத்திலிருந்து அல்லது ஈழத்திலிருந்து வரும் ஓர் இலக்கியம் கொண்டிருக்கும் வாழ்களனைவிடவும் புலம்பெயர் உலகம் படைக்கும் இலக்கியத்தில் வாழ்களன் மிகவும் சுவாரசியமுடையதாக உள்ளது வெளிப்படை. பெரும்பாலோரின் கனவு கட்டமைப்பக்கள் இந்த வாழ்களனில் காணப்படுகிறது. அவற்றின் அடிப்படையில் எழும் வகைவகையான களன்கள் தரும் எதிர்பார்ப்பும்கூட புலம்பெயர் இலக்கியத்தின் மீதான தனிக்கவனத்திற்கு மற்றொரு காரணம். தனித்த வேறுபாடுகள், வெளியீடுகளைச் செய்யும் அறிவியல் வாய்ப்புக்கள், பொருளாதார பலம் என்பன ஈழத்துப் புலப்பெயர்வின் இலக்கிய வெளிப்பாடுகளுக்குப் பரவலையும் அதனால் தனிக்கவனத்தையும் தேடித் தந்திருக்கிறது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் இருக்கும் இந்த இலக்கியங்கள் வெளிப்படுத்தும் சிந்தனை கூர்ந்த வகையில் எப்போதும் அரசியலைக் கொண்டிருக்கிறது. வெளிப்படையாக இலக்கியங்களில் அரசியல் இருக்கிறது. இலக்கியம் அரசியலாக இருக்கிறது. அரசியலாக மட்டுமே இலக்கியம் இருக்கிறது. அப்பாற்பட்ட சிந்தனை எதுவும் இல்லை.
ஒவ்வொரு படைப்பாளியும் பொதுத்தளம் ஒன்றில் தத்தமக்கான தனித்த பட்டறிவுடன் சேர்ந்த நிலையில் இலக்கியத்தைப் படைக்க முற்படுவர். ஆனால் இலங்கையின் தமிழ்ச் சிந்தனைத்தளம் வெளிப்படும் ஒரேயோரு கூர்த்த பரிமாணமான இலக்கியம் பிளவுபட்டதாக, ஒதுங்கி ஒருமருங்குக் கரையில் சேர்ந்ததாக இருக்கிறது. அரசியலைக் கொண்டு கட்டப்பட்ட ஓர் பொதுத்தளத்தின் பிளவில் இருபக்கமும் அனைவரும் தம்மைப் பொருத்திக் கொண்டுள்ளனர். இலக்கியம் இரண்டாகப் பிளவுபட்ட மனோநிலையின் வெளிப்பாடாக உள்ளது. இதனால் புலம்பெயர் சிந்தனைத் தளத்தின் வெளிப்பாடும் அவ்வாறே என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.
இந்தப் புலம்பெயர் இலக்கியத்தை வெளியில் (தமிழகத்தில்) இருந்து நுணுகிப் படிக்கும், பார்க்கும், நுகரும் ஒருவருக்கு அது காட்டும் உலகம் இந்த பிளவுபட்ட பெரும்பிரிவின் அடுக்குகளோடேயே இருக்கும். இங்கிருக்கும் சிந்தனை வெளிப்பாடு ஏதாவது ஒன்றாக மட்டுமே இருக்கலாம். அதைவிட்டு வேறு ஒன்றும் தற்போது ஈழத்துப் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் இல்லை. அதற்குப் புறம்பாகவோ, கலப்பானதாகவோ, இரண்டிலும் சார்ந்தாகவோ, சேர்ந்ததாகவோ, கலந்ததாகவோ, இவையிரண்டும் தவிர்த்த மூன்றாவது ஒன்றாகவோ அல்லது நான்காவது ஐந்தாவது என்ற ஏதாவது ஒன்றாகவோ இருக்க இடமில்லை அல்லது இல்லை.
எதையும் அவ்வாறே செய்யும் நிலையும் அதனால் அனைத்தையும் பிளவுபட்டு நின்றே பார்க்கும் நிலையுமே புலம்பெயர் உலகில் உள்ளது. இதற்கான தங்களது தனித்தனி அரசிலை இருபிரிவினரும் வைத்திருக்கிறார்கள். ஒன்றில் புலி அல்லது சிங்கம். விரிவாகச் சொன்னால் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்போர் இந்த இருபிரிவே புலம்பெயர் உலகில் உள்ளது. இந்தப் புலிகளை எதிர்ப்போர் இன்று இலங்கை அரசைத் தூக்கிப்பிடிக்கும் பணிகளையே செய்கிறார்கள். அவர்களது இலக்கியமும் அதனால் சிறுபத்தரிக்கைத் தளமும் அதையொட்டிய அறிவுசீவித்தளமும் அவ்வாறே உள்ளது. பல புலம்பெயர் அறிவுசீவிகள் இன்று இலங்கை அரசின் ஆதரவான நிலையில் இருக்கிறார்கள். அதையொட்டிய புதிய நிலைமாற்றமும் உருமாற்றமும் பெற்றிருக்கிறார்கள்.
அண்மையில் கனடாவின் நாளிதழ் ஒன்று பின்வருமாறு எழுதியிருந்தது: புஸ்ஸிடம் உள்ள ஓர் குணம் ராசபக்சேவிடம் உள்ளது. ஒன்றில் ஆதரி அல்லது எதிரி என்பதுதான் அது. இதுதான் இன்றைய புலம்பெயர் தமிழ் இலக்கியம் அல்லது சிந்தனை வெளிப்பாட்டுத் தளத்தின் முகமும்கூட. தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்றைய சிங்கள அரசும் எதுவும் சொல்லாதவிடத்தும் எமது புலம்பெயர் இலக்கிய வெளிப்பாடுகள் இவ்வாறே உள்ளன.
இரண்டு கவலைகள் இந்நிலையை மேலும் அதிகரிக்கின்றன.
ஒன்று புலம்பெயர் தமிழில் தனித்ததான சிந்தனை வெளிப்பாட்டுத் தளம், அல்லது உரையாடல் போக்கு இல்லை. மற்றையது புலம்பெயர் தமிழில் தனித்தான இலக்கிய வெளிப்பாட்டுத் தளம் அல்லது உரையாடல் போக்கு இல்லை.
இதனைச் சற்று வேறு வகையில் பின்வருமாறு சொல்லலாம். ஒருநாள் ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவரும் நானும் ஒரே அறையில் புலப்பெயர்வின் விளையாட்டுக்களின் விளைவாகப் படுத்துறங்குபவர்கள். உரையாடல் போன திசையில் உணர்ச்சி வசப்பட்டவராக கேட்டார் நீர் இவருக்கு ஆதரவா எதிரா… அவரது கையில் ஓர் புத்தகம் இருந்தது. அதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் இருந்தது. எனக்குத் தெரியும். அவர் பிரபாகரனை எதிர்ப்பவர். ஆனால் அவர் விடுதலைப் புலிகளை எதிர்ப்பவரா என்பது தெரியாது.
அவருக்குத் தேவையாயிருந்தது நான் புலியா சிங்கமா என்பதுதான். அல்லது புலியா இல்லையா என்பதுதான். இந்த உரையாடல் நான் புலம்பெயர்ந்த ஓரிரு மாதங்களில் நிகழ்ந்தது. இந்தப் புலம்பெயர் பிளவுபட்ட மனநிலை எனக்கு அவ்வளவாகப் பழக்கமில்லாத நிலை. பலத்த தாக்கத்தைத் தந்தது. இந்நிலை இன்றுவரை, பத்தாண்டுகள் கடந்துவிட்டபின்பும்கூட மாற்றம் பெறவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. உலகத்தில் எல்லாருமே கறுப்பு மற்றும் வெள்ளை என்னும் ஏதாவது ஒன்றில் அடங்கிவிட முடியாது. அவருக்கு ‘ஆம்’ என்று பதில் சொன்னாலும் ‘இல்லை’ என்று சொன்னாலும் அந்தப் பதில் சரியல்ல. இந்த இரண்டு சொல்லுக்கும் அப்பாற்பட்ட பரிமாணங்கள் பல ஒரு சொல்லாடலில் உள்ளன. இந்த இரண்டும் அல்லாத கறுப்பும் வெள்ளையும் மட்டுமல்ல, உலகம், மனிதமனம், சூழல், நான், இதைப்படிக்கும் நீங்கள் அனைத்தும் பலவாக உள்ளன.
எந்த எழுத்தையும் ஒன்று புலிகளைச் சார்ந்தது அல்லது புலிகளின் எதிரிகளைச் சார்ந்தது என்று வகைப்படுத்தும் போக்கு இந்த இரண்டு பக்க முகாம்களினாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. யாருக்கும் உண்மையாக இலக்கியம், படைப்பு பற்றிய கவலை இல்லை. அல்லது அறிவுசீவிகளாக இந்த இடங்களில் இருப்பவர்களுக்கும் கவலை இல்லை. தாங்கள் எழுதுவதில் வெளிப்படையாகவோ உள்ளிடையாகவோ புலிகளை ஆதிரிப்பதில் அல்லது எதிர்ப்பதில் பொடி வைப்பதுதான் ஒவ்வொருவருக்கும் கலையாக இருக்கிறது. படைப்பாளிகள் என்று சொல்லிக் கொள்ளுவோர் அனைவரும் இந்த இரு வகையினாரக இருத்தல் கண்டு வாசகருக்குப் பைத்தியம்தான் மிச்சம்.
இதனைக் காணும் நிலையில் தயாராக அறிவுசீவி மரபு இருக்கவில்லை. அறிசீவிச்சிந்தனை மரபு என்பது தமிழில் கலப்பாக எங்கும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் தடையாகவும் இடறலான நடவடிக்கையாகவும் உள்ளது. அறிவுசீவி மரபு இலக்கிய மரபாகவும் உள்ளது. அறிவுசீவிகளின் தளம் என்பது படைப்புலகம் அல்ல. அல்லது படைப்புலகம் மட்டுமல்ல. இலக்கியத் திறனாய்வாளர் அறிவுசீவியாகத்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாய நிலையும் அல்ல. அறிவுசீவியாக இருப்பவர் படைப்பு வேலைகள் செய்தாகவேண்டும் என்ற எதுவும் கட்டாயம் இல்லை.
தமிழ்த் திரைப்படத்தில் நடன ஆசிரியரோ அல்லது கமெரா இயக்குபவரோ எப்படி கடைசியில் இயக்குனராகி இறுதிப் பிறப்பாக நடிகர் பிறப்பெடுக்கிறார்களோ அதேபோலத்தான் தமிழின் பெருப்பாலான அறிவுசீவிகளின் இருப்புநிலை இருக்கிறது. பெரும்பாலும் படைப்பாளிகள். கவிதையில் வருவார்கள். பின்னர் திறனாய்வாளர். அடுத்தநிலையில் அறிவுசீவிகள். இப்படி ஒரு படிநிலைகூட இருந்துக்கட்டும். இருக்கலாம். எதுவும் நிலைமாற்றத்துக்கான தடையில்லைதான். இருக்கலாம். ஆனால் இவர்களின் முன்னைய நாட்கள் எப்படி இருந்தன. போராளி இயக்கங்களுடன் இருந்த காலத்தில் கவிதைகள் எழுதினார்கள். பின்னர் அவ்வப்போது கதைகள் அல்லது சிறிய நூலறிமுகங்கள் பத்திகள் எழுதினார்கள். இன்று அறிவுசீவிகளாகிவிட்டார்கள் என்ற நிலை.
அவர்கள் எந்தப் போராளியாக இருந்தார்களோ இன்றளவும் அந்தப் போராளியாகவே இருக்கிறார்கள். அவர்களது எழுத்துக்கள், அதனால் வெளிப்படும் அனைத்தும் அந்த இயக்கங்கள், போராளிக் குழுக்களின் பரப்புரையாகவே இன்றளவும் உள்ளன.
புலம்பெயர் தமிழச்சமூகத்தின், சிந்தனை மரபு இதுதான் என்று காட்டும் அடையாளத்தை நாம் இவர்களிடம்தான் தேடவேண்டியிருக்கிறது. எதிர் அணியின் மீதான காழ்ப்புணர்வை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தொடங்கிய இப்படிப்பட்டவர்களின் படைப்பு-எழுத்து அதன் அடுத்த வடிவில் எடுத்து வைத்திருக்கும் அறிவுசீவி வடிவம் என்பன எதைப் பயனுள்ள வடிவில் இந்த சமூகத்துக்கும் மக்களுக்கும் கொண்டுவரும்? சமூகத்தைப் பற்றிய அறிவார்ந்த சிந்தனைகளை எப்படிக் கொண்டுவரும்? புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் இன்றைக்கு சிந்தனை பிளவு பட்டுக்கிடக்கிறது என்பது அதனால்தான். மக்கள், அரசியல் நிலைப்பாடு பிளவு பட்டுக்கிடக்கலாம். இந்த பிளவு பட்ட நிலைக்குள் எவ்வாறு அறிவு சீவிகள் தங்களையும் அடக்கிக்கொள்ளமுடியும்? பொருத்தி அடையாளம் காணமுடியும்?
சிற்றிதழ்கள் அனைத்து மட்டங்களிலும்தான் வருகின்றன. அனைத்து பிரிவினரிடையும்தான் வருகின்றன. தமிழகத்தின் சிற்றிதழ்கள் தொடங்கப்படும்போது அவை இலக்கிய எல்லைக்குள் நின்று தத்தமது சார்பு நிலையைக் காட்டிக் கொண்டிருப்பனவாக இருக்கும். இங்கு புலம்பெயரிடை நிலத்தில் நிலையோ வேறு. சிற்றிதழ்கள் இங்கு முதலில் முதன்மையாக அரசியல் அடையாளத்துடன் கூடிய நோக்கத்தில் நின்றுகொண்டு அதற்குத் துணையாக இலக்கியத்தைப் பற்றிக்கொண்டன. அவை வெளிப்படையாக தமது அரசியலை வெளியாகக் காட்டாதபோதும் அதில் எழுதும் அதை வாசிக்கும் தரப்பினருக்கு அந்தச் சிற்றிதழின் பிண்ணணியோ அல்லது அதையொட்டியவர்களின் அரசியல் உள்நோக்கமோ தெளிவாகத் தெரிந்திருக்கும். அதன் அடிப்படையிலேயே அந்தக்குறித்த இலக்கியப் பணி அதன் அறிவுசீவிப்பணி தொடரும்.
அறிவுசீவிகளின் பணியும் பொறுப்பும்: உரையாடல் தொடரவில்லை
அறிவுசீவிகள் தங்கள் பணிகளை எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்ற கேள்வியிலிருந்தே அறிவுசீவிகளைப் பற்றிய திட்டமான ஓர் பார்வையைப் பெறமுடியும். அறிவுசீவிகள் பொதுமக்கள் பரப்புக்குள் என்னவிதமான தாக்கத்தை உண்டுபண்ணுகிறார்கள்? அறிவுசீவிகள் தங்களது இனம், மதம், மக்கள் போன்றவற்றிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்ற உணர்வால் அறிவார்ந்த காரியங்களில் தூண்டப்படுகிறார்களா? அல்லது பிரபஞ்சம் தழுவிய பகுத்தறிவு சார்ந்த வேறு ஏதேனும் விதிகள் அவர்கள் பேச்சையும் எழுத்தையும் ஆளுகின்றனவா? இங்கே நான் அறிவுசீவிகள் பற்றிய அடிப்படையான கேள்வியினை எழுப்புகின்றேன்.
ஒருவர் உண்மையை எப்படிப் பேசுகிறார்? என்ன உண்மையைப் பேசுகிறார்? எங்கே யாருக்காகப் பேசுகிறார்? போன்ற கேள்விகளை அறிவுசீவிகள் தொடர்பாக செயித் எழுப்புகிறார்.
உண்மையில் அறிவுசீவிகள் செய்வது(செய்யவேண்டியது) தீவிரமான தேடல்மிக்க விவாதமேயாகும். புலம்பெயர்ந்துள்ள இடத்தில் அறிவுசீவிகள் ஏற்படுத்துகின்ற தேடல் அதையொட்டிய விவாதம் என்பவை ஒருபோதும் சுதந்திரமானவையாக இருக்கவில்லை. முன்பேசப்பட்ட, பிளவுபட்டிருக்கும் முகாம் ஏதாவது ஒன்றிற்குள் அறிவுசீவிகளின் சிந்தனை நின்று சுழல்கிறது. அப்படியாயின் அவர்களின் அறிவுசீவிதம் உண்மையில் நிகழ்கிறதா? அல்லது மற்றொன்றால் நிகழ்த்தப்படுகிறதா?
நடுநிலையான அறங்களோ மதிப்பீடுகளோ இல்லாமல் ஏற்கெனவே குழம்பிப்போயிருக்கும் ஒரு காலச்சூழலில் வாழும் அறிவுசீவியானவர் தனது நாட்டின் செயல்களைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது சரியா? என நான் கேட்க விரும்புகின்றேன். தனது நாடு இழைக்கும் குற்றங்களைப் பார்த்துக்கொண்டு ஆமாம் அப்படியெல்லாம் நடப்பது உண்மைதான். உலகம் இன்று இப்படித்தானே இருக்கிறது என்று கேட்பதுதான் அறிவுசீவியின் வேலையா? நாம் சொல்லவருவது ஏராளமான தவறுகள் செய்யும் அரசாங்கத்துக்குச் சேவகம் செய்துகொண்டு அதனால் (அதனில்) பின்னப்பட்டுப் போயிருக்கிற தொழில்துறை நிபுணர்களல்ல அறிவுசீவிகள். மாறாக அதிகாரத்துக்கு நேரே உண்மையைப் பேசுபவர்களே அறிவுசீவிகள்.
1948 இல் ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகளுக்கான ஒப்பந்தம் குறிப்பிடும் கூறுகளைக் கருத்தில் கொள்ளவேண்டும் தெரிந்திருக்கவேண்டும். அவற்றைப்போன்ற பல ஒப்புரவு குறித்தான உலகளாவிய ஒப்பந்தங்கள் உள்ளன. யுத்தவிதிகள் பற்றியும், போர்க் கைதிகளை நடத்தும் முறைகளைப் பற்றியும், தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள், புலம்பெயர்ந்தோர், அகதிகள், முதலானோரின் உரிமைகள் பற்றியும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன… இந்த உரிமைகள் நாள்தோறும் மீறப்படுகின்றன.
இன்றைய சூழலில் அறிவுசீவிகளின் ஒரே நம்பிக்கையாக அதிகமாகப் பேசப்படும் மக்களாட்சி முறைப்படியாவது, யார் அதிகம் இந்த மீறல்களைச் செய்யகிறார்கள் என்று இந்த அறிவு சீவிகள் பார்க்கவேண்டும். திட்டமான அரசியல் நடைமுறைபற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அறிவுசீவிகள் அவர்களது அணுகுமறைப்படியாவது குற்றமிழைப்பதில் யார் பெரும்பான்மையைப் பெறுகிறர்கள் என்ற அறிவையாவது, தரவுகளையாவது அவர்கள் நம்பும் மக்களாட்சி நடைமுறையின்படியாவது பெற்றுக்கொள்தல் வேண்டும். அல்லது அவர்களுக்கு தெரிந்த அறிவை வைத்துக்கொண்டு பொய் பேசாமலிருக்கவேண்டும்.
தாங்கள் கொண்ட ஏதாவது ஓர் நிலைப்பாட்டிற்காகப் பொய்பேசும் நிலைக்கு ஓர் அறிவுசீவி தள்ளப்பட்டிருப்பாராகில் அவர் அறிவுசீவியல்ல. அப்படியாயின் நமது இன்றைய பிளவு பட்டுக்கிடக்கும் இருகூறான இந்தப் புலம்பெயர் அறிவுசீவிகள் குழுக்களில் யார் இதற்குச் சரியாகப் பொருந்துவார்?
எல்லாச் சமயத்திலும் எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்க எவராலும் முடியாது. ஆனால் தனது குடிமக்களுக்கு பதில் சொல்லவேண்டிய ஓர் அரசாங்கமானது அநீதியான யுத்தத்தில் ஈடுபடும்போது அதன் அதிகாரமானது வரம்பின்றிப் பிரயோகிக்கப்படும்போது, அது ஒடுக்குமுறையில், குரூரமான வழிகளில் ஈடுபடும்போது, அது வேண்டுமென்றே பேதம்பாராட்டும்போது அதைக் கேள்விகேட்கவேண்டிய கடமை அறிவுசீவிக்கு இருக்கிறது…|
எழுந்தமானத்துக்கு கதைக்காமல் என்ன நடந்து எது நடந்தது என்று தீர ஆய்ந்து வரலாற்றுப்போக்கில், அவரவர் தேசம் உள்ளிட்ட ஒரு பரந்த பிண்ணனியில் பார்த்து உண்மைகளைக் கண்டறிய அறிவுசீவிகள் முயற்சிக்கவேண்டும். இப்படியாக உண்மைகளைக் கண்டறிந்து அதை நேரியைடாகப் பேசுவதன்மூலம் இருப்பதைவிடவும் மேம்பட்ட ஓர் அவலங்கள் குறைந்த அமைதி நிலவும் சூழலை உருவாக்குவதுதான் அறிவுசீவிகள் செய்துகொடுக்கவேண்டிய பணியாகும். இது அறிவுசீவி தான் சரியானதைச் செய்துகாட்டுகிறேன், சரியாக இருக்கிறேன் என்பதற்காகச் செய்யும் முனைப்புக்களிலிருந்து மாறுபட்டது.
புலம்பெயர் சூழலில் காணப்படும் பிளவுண்ணட குழுக்களான அறிவுசீவிகளை விடுத்து உண்மைகளை உரத்துப்பேச முற்படும் பிறர் யாராயினும் பிற அறிவுசீவிகளாயினும் அறிவுசீவிகள் தங்களை அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள். அது தவிர்க்க முடியாதாகிவிடுகிறது. பிளவுண்டு கிடக்கும் இரண்டு பிரிவினதும் அறிவுசீவிகளும் மற்றையவர்களை தங்களுக்கு எதிரான அணியில் சேர்த்து முத்திரை குத்திவிடுகிறார்கள், விடுவார்கள். அது அவர்களுக்கு எளிதான கைவந்த கலையும்கூட. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தல் அல்லது எதிர்த்தல் என்ற இரு கண்மூடித்தனமான பிளவுபட்ட சிந்தனைப்போக்கிலிருந்து விடுபட்டு கதைக்க வேண்டும் என்ற நிலையெடுக்கும் அறிவுசீவிகளே இன்றைக்குத் தேவை.
அறிவுசீவியின் குரல் அநாதரவாக தனியாக ஒலித்துக்கொண்டிருக்கிற குரல்தான். ஆனால் மக்களின் அபிலாசைகளோடும், இயக்கப்போக்குகளின் யதார்த்தங்களேடும், கூட்டாகப் பகிரந்துகொள்ளப்படும் லட்சியங்களோடும் அந்த அநாதரவான குரல் பெரும் அதிர்வுகளை, எதிரொலிகளை உண்டாக்குவதாயுள்ளது. அறிவுசீவி உண்மையாகச் சிந்தித்தால் பொதுப்புத்தி மட்டத்திலுள்ள மக்களுக்கு அதைச் செய் இதைச் செய் என்ற அறிவுரை கூற விழைய மாட்டார். மக்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களுக்கு நான் சொல்ல முடியாது. அவர்கள் என்ன செய்வார்கள் என்றுதான் நான் கேட்கவேண்டும்.
கவிஞர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ அறிஞர்கள் போன்றோர் … தங்களைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து அதை மற்றவர்களின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும். அதன்மூலம் அவர்களும் சிந்திக்க வகைசெய்யவேண்டும். இதைத்தான் நாங்கள் செய்கிறோமே என்று முகாம்களில் நிற்கும் அறிவுசீவிகள் கூறமுடியாது. அவர்களுக்கு உண்மையில் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய பார்வை இல்லை. இங்கு முன் சுட்டப்பட்டுள்ள பகுதியில் சொன்ன உண்மைகளும் அதிகாரங்களும் வெளிப்படையானவை. அவையே இன்றைக்கான புலம்பெயர் அரசியலினால் பிளவுபட்ட அறிவுசீவிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியவை. ஆனால் அதே அதிகாரத்தை ஃபூக்கோ ஒர் சொல்லாகப் பயன்படுத்துகையில் அதிகாரத்தின் நுண் அலகுகளையே அவர் சுட்டுகிறார்.
உண்மையில் அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுதல் என்பதில் அது நுண்ணதிகாரங்களை நோக்கிய பேச்சாக இருத்தலே சரியானதும் அறிவுசீவியின் பணியானதுமாக இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் இத்தகைய நுட்பமான நுண்ணதிகார வலைப்பின்னலில் இருந்து இந்த புலம்பெயர் அறிவுசீவிகளே தங்களளவில் இன்னும் விடுபடவில்லையென்பதுதான். அவர்கள் அதில் சிச்கிக் கிடப்பதை அறியாத நிலையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானதும் சிங்கள அரசுக்கு ஆதரவானதுமான இருமுகாம்களில் அல்லது இதற்கு மறுதலையான முகாம்களில் இருந்து சிந்திக்கிறார்கள்.
இதன் அடிப்படை எங்கே உருவாகின்றது என்றால் அறிவுசீவியானவர் தனது பணி எது என்பதை உணராத நிலையில் இருப்பதனாலேயே. அறிவுசீவி தன்னைச் சுற்றிலும் இருப்பவைகளைப் பற்றிய தொடர்ந்த அறிவார்த்த கேள்விகளை எழுப்பியவராகவே இருக்க முடியும் என்ற உண்மை மறைந்துபோய் தன்னலங்களின் அடிப்படையிலும் குழு அரசியல் அடிப்படையிலும் முகாம்களில் தஞ்சம் புகுகின்றபோது கேள்விகள் எழுப்புதல் தனது பணி என்பதை அறிவுசீவி மறந்துவிடுகிறார்.
அதனால் எளிதாக குழுக்களில் தஞ்சமடைந்துவிடுகிறார்கள். அதில் தொடர்ந்தும் அவர்களால் செயற்பட முடிகிறது. சமரசங்கள் என்பது மிகவும் எளிதாகின்றது. தாங்கள் செய்வது கண்ணுக்குப் புலப்படாது போகின்றது. ஷஎந்த உண்மையை ஒருவர் ஆதரிப்பது, உயர்த்திப் பிடிப்பது, பிரதிநிதித்துவம் செய்வது? இது அறிவுசீவிகள் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை மதிப்பிடுவதற்கு முக்கியமான கேள்வியாகும். இதன் மூலம்தான் எவ்வளவு மோசமான, அடையாளம் தெரியாதபடி கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பிரதேசம் அவர்களைச் சூழ்ந்துள்ளது என்பதை அவர்கள் அறியமுடியும்.
கேள்விகள் எழுப்பப்படாதபோது அறிவுசீவிகளுக்கு இந்த ஆபத்தான சூழல் காட்சிப்படுத்தப்படுவதில்லை. அறிவுசீவித்தனம் என்பது, உண்மையில், ஓரு சூழலின் அறிவுபூர்வமான அர்த்தத்தை பெறுவதற்கு அறிவுசீவி தொடர்ந்து செய்கின்ற முனைப்பின் அடிப்படையே.|
அறிவிக்கவேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்
அறிவிக்கவேண்டாம் அறிவில் செறிவோர்க்கும்
அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்கத் தம்அறி வாரறி வோரே (திருமந்திரம் 2327)
ஈழத்தில் நடைபெறும் இறுக்கமான கொடிய தற்போதைய நிலைக்குள்ளும் இன்றைய புலம்பெயர் அறிவுசீவிகள் தொடர்ந்தும் தங்கள் அரசு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். நான்கு ஆண்டுகளாக இருந்த போர்நிறுத்தம் ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசினால் முறிக்கப்பட்டு இப்போதைய போர் தொடக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசிடமிருந்து எதோ ஒன்றை அடைய முடியா நிலையிலேயே இந்த அரசியல் நிலைப்பெயர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் இலங்கை அரசை அண்டி நிற்பதால் ஏதும் நடக்கப்போவதில்லை. மக்கள் சீரழிவு தொடரும். மக்கள் நல்ல நிலை பெறவேண்டுமானால் போர்நிறுத்தமும் அரசியல்வழி தீர்வுக்கான பேச்சுவார்த்தையுமே தேவை. அதைநோக்கிய காய்களை பொதுப்போக்கில் நகர்த்துவதை விடுத்து புலம்பெயர் அறிவுசீவிகள் செய்யும் செயற்பாடுகளால் மக்களுக்கு எதுவும் நன்மை விளையப்போவதில்லை.
குறிப்புக்கள்:
1 வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதற்கொண்டு பல ஆவணங்களும் வரலாற்று நிகழ்வுகளும் சான்றாக உள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் ஒருவர் ஆயுத வழிப்போராட்டத்துக்குத் தன் மகனைத் தயார்ப்படுத்தியது அனைவரும் அறிந்ததே.
2. Sri Lanka links conflict to war on terror, http://www.thestar.com/comment/columnists/article/422721, May 08, 2008 (formaly published in Toronto Star. The same article apear in this web.)
3. தோழர், கூட்டாளி போன்றவற்றைவிட நண்பர் என்பது இந்த இடத்திற்குச் சரியாக இருக்கிறது.
4. தற்போதுள்ள சூழலில் ‘புலிகள்’ என்றும் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. பிள்ளையான் என்ற சந்திரகாந்தன் குழுவினரின் அரசியற் கட்சி தற்போது கிழக்கில் சனநாயக ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்களது கட்சியின் பெயரிலும் ‘புலிகள்’ என்ற சொல் இருக்கிறது. அந்தவகையில் ‘புலிகளின்’ முதலமைச்சர்கூட கிழக்கில் உதித்திருக்கிறார். கேணல் கருணாவின் பிரிந்துபோன புலிகள் பிரிவின் அரசியல் அமைப்பே இது.
5. இந்தப் பகுதியில் வரும் கருத்துக்கள் மேற்கோளிற்குள் இருப்பின் அவை அ.இரவிக்குமாரின் ‘உரையாடல் தொடர்கிறது’ என்ற மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் தொகுப்பில் இருந்து பெறப்பட்டவை. பெரும்பாலும் எட்வரட் செயித்தின் கருத்துக்ளும் சில அம்பர்த்தோ இக்கோவின் கருத்துக்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
6.
அ.
அண்மையில் ரொரன்ரோ வந்திருந்த இந்தியாவின் அறிவிசீவிப்பெண் ஒருவரிடம் ரொரன்ரோவின் அறிவுசீவியொருவர் பின்வருமாறு சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். அந்தக் கூட்டத்திலிருந்த அனைவரும் அதைச் செவியுற்றிருக்கின்றனர். விசயம் இதுதான்.
‘இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களைவிட புலியால் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் அதிகம்.’ என்பதைத்தான் அவர் பெருங்குரல் எடுத்துப் பல இடங்களிலும் சொல்லியிருக்கிறார். இதைவிட வராலாற்றுரீதியாக யாரும் பொய் சொல்லமுடியாது என்பது வெள்ளிடை. இதுதான் இன்றைய புலம்பெயர் அறிவுசீவிகள்.
புலிகள் தமிழ் மக்களைக் கொலை செய்யவில்லை என்பதல்ல இங்கு குறிப்பிட விரும்புவது. தமிழ் மக்களை முதலில் கொல்லவெளிக்கிட்டது சாதியம். சாதி வெள்ளாளர்களின் கொடுமையில்தான் தமிழ் மக்கள் தங்களுக்குள் முதலில் கொல்லப்பட்டார்கள். பின்னர் இன்று நாம் தூக்கி கண்ணில் ஒற்றிக்கொள்ளும் சனநாயகத்தை – மக்களாட்சியை கொண்டு வந்து நமக்கு ‘காட்டிய’ வெள்ளைக்காரர்கள் தமிழ் மக்களைக் கொன்றார்கள்.
இன்று இந்த அறிவுசீவிவிகள் கைதூக்கிவிட நினைக்கும் இலங்கை அரசு கொன்றது. இலங்கை அரசை எதிர்த்துப் போராடப் புறப்பட்ட இயக்கங்கள் தங்களுக்குள் தாங்களே கொன்றுகொண்டன. அதில் தலையாய முதலாய கொலையைச் செய்தது? வட்டுக்கோட்டை றாத்தலடிக்கு அருகாமையில் இருக்கும் சுழிபுரத்தில் நடந்து, புளட் கொன்றது தமிழர்களை. அதன்பின்தான் அனைத்து உட்கொலைகளும் தொடர்கிறது. ஈழத்தில் தமிழ் மக்கள் மீதான இலங்கைச் சிங்கள அரசின் படுகொலைகளைப் பற்றிய பட்டியல் சிறிய நூல்வடிவில் கிடைக்கிறது.
இப்படித்தான் அறிவுசீவிகளின் பொய் நிற்கிறது. அறிவுசீவிகள் பொய் சொல்லக்கூடாது.
ஆ.
அண்மையில்தான் – இந்த ஆண்டிலிருந்து புலம்பெயர் அறிவுசீவிகள் தரப்பில் சிலர் தீவிரமாக தலித்தியம் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கும் பல உள்நோக்கங்கள் இருக்கிறதாயினும் இங்கு சொல்லவருவது வேறு. அதில் ஒரு அறிவுசீவி கனடாவில் ஒரு கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குச் சொன்ன பதில் மிகவும் அருவருப்பானது.
‘சாதியை ஒழிப்பதில் தங்கள் ஆளுகைப்பகுதியில் புலிகள் முனைப்பாகச் செயற்படுவதாக தொல் திருமாவளவன், ரவிக்குமார் போன்ற தமிழகத்தின் தலித் தலைவர்கள், ஈழம் சென்று வந்தவர்கள் தாங்கள் பார்த்தாகச் சொல்கிறார்களே!’
‘அவர்கள் (அதாவது தொல் திருமாவளவன், ரவிக்குமார் போன்ற தமிழக தலித் தலைவர்கள்) ஒருவேளை புலிகளிடம் பணம் வாங்கிவிட்டு அப்படிச் சொல்கிறார்களாயிருக்கும்’. தலித் மக்களுக்கு விடுதலைக்காக உழைப்பதாகச் சொல்லும் ஓர் புலம்பெயர் அறிவுசீவித் தலைவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
புலிகள் சாதி ஒழிப்புக்கான அனைத்து நடைமுறைகளையும் மேற்கொள்கிறார்களா என்பது உரையாடலுக்குரியதாயினும் இந்தக் கூற்றில் பொதிந்துள்ள ‘பொய்’ இங்கு முதன்மையாகிறது. இவை அனைத்தையும்விட இவர்களின் பொய்களை விழுங்கிவிட்டு, விமான ரிக்கற்றுக்களுக்காகவும் வெளிநாட்டு பீர்களுக்காகவும் அதே குரலையே பேசும் தமிழகத்தின் சில அறிவு’சீவி’களை நினைத்தால்தான் சிரிப்பாய் இருக்கிறது.
– ரஃபேல்(chantiapillai@gmail.com)
நன்றி : கீற்று http://www.keetru.com/
ரஃபேல், நீங்கள் எழுதிய கட்டுரை புகலிடத்தில் புலம்பெயர் இலக்கியம் மற்றும் புலம்பெயர் “அறிவுசீவிகளின்” மனச்சாட்சியை உறுத்தவேண்டும். புலிகள் ஒருபக்கம் பேரினவாத அரசு ஒருபக்கம்.ஆயத குழுக்கள் இன்னொரு புறம். இவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் புலம்பெயர் இலக்கியம் மற்றும் புலம்பெயர் அறிவுசீவிககூட்டம் இன்னொருபுறம். தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு என்பது கனவுதான்.
அன்புள்ள றபேல் மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் எழுதியுள்ளீர்கள். புலம்பெயர் அரசியல் இலக்கிய போக்குகளை நன்கு படம்பிடித்து காட்டியுள்ளீர்கள். பாராட்டுக்கள். தீவிர அரசாங்க மற்றும் புலனாய்வு ஆதரவு இணையத்தளங்கள் செய்தி ஏடுகளும் தீவிர புலி ஆதரவு ஊடகங்களும் தான் புலம்பெயர் சூழலை நாசமாக்கிக்கொண்டிருக்கிறது என்பதை இங்குள்ள எங்களால் நன்கு அறியமுடிகிறது. நியாயமான கண்ணோட்டம் கொண்ட இணையத் தளங்கள் மீது இந்த இரு குழுவினரும் சேர்ந்து சேறடிப்பதில் ஒன்றாகி விடுகின்றார்கள். இங்கு (இலங்கை) எங்களால் உண்மையான செய்திகளை பெறமுடிவதில்லை. நாங்கள் புகலிட இணையத் தளங்கள் ஊடகவே செய்திகளை அறியவேண்டியுள்ளது. ஆனால் புகலிட இணையத் தளங்கள் அனேகமானவை பொய்களையும் தங்கள் அரசியல் சார்புகளையும் கொண்டு இயங்குவதால் என்னைப்போன்றவர்கள் இவர்களை எண்ணி கவலை கொள்ளவேண்டியுள்ளது. எனினும் நம்பிக்கை தரக்கூடிய இணையத் தளங்களாக பதிவுகள் தேசம் நெற் குளொபல் தமிழ் செய்தி இனியொரு ஊடறு போன்ற சில இணையத்தளங்கள் நம்பிக்கை தருகின்றன. தொடர்ந்து நீங்கள் இவ்வாறான நேரிய பார்வை கொண்ட படைப்புக்களை தரவேண்டும்.
நன்றிகள்.
கெளசிகன்
ரபேல்,
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் நல்ல கட்டுரை ஒன்றை வாசித்ததற்கான திருப்தி.
தெளிவான ஆய்வு keep it up!
உருப்படியான கட்டுரையொன்றை படித்த திருப்தியாக இருக்கிறது. இன்று எஞ்சிப்போய் இருப்பவர்கள் நீங்கள் கூறிய பிளவுண்ட இரு பகுதியினர்தான் என்பதிலும் உடன்பட முடிகிறது. புகலிட இலக்கியமும் அறிவுசீவித்தனமும் பின்னிப்பிணைந்த முறைமைகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
80களின் நடுப்பகுதியிலிருந்தே இயக்க ஆதரவுத் தளங்களினூடு வந்த புகலிட வெளியீடுகளுக்கு வெளியே நீங்கள் கோரும் முன்றாவது நிலையை எடுத்த சஞ்சிகைகள் பல வெளிவந்தன என்பது எனது கணிப்பு. இவர்கள் இலங்கை அரசு, இந்திய இராணுவம், இயக்கங்கள் என்பனமீதான விமர்சனங்களோடு இருந்தனர். இயங்கினர். காலப்போக்கில் இந்த சக்திகளில் பலர் ஒதுங்கிக்கொண்டனர். சிலர் புலிகளின் ஆதரவாளர்களாயினர். எஞ்சியோர் சிலரேயாகினர். இது ஏன் நடைபெற்றது என்பதை உள்ளார்ந்த (சிந்தனை) இயக்கப் போக்கில் நாம் இன்றவரை ஆய்வுசெய்ததாயில்லை.
இவர்கள் கட்டியமைத்த தளங்களில் நின்று புலியெதிர்ப்பாளர்கள் வானொலி, இணையத்தளம் என பெருங்குரலெடுத்தனர். இதைப் பயன்படுத்தப் புறப்பட்ட சிலரும் இதற்குள் புதையுண்டு போயினர். இன்று இந்த நிலை அவர்களையெல்லாம் எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்பதை தெளிவாக நீங்கள் வெளிக்காட்டியுள்ளீர்கள். இன்றைய புகலிட அறிவுசீவித்தனம் கவலைக்கிடமானதுதான். இந்த பிளவுண்ட போக்கு இலங்கை மக்களை ஆட்டிப்படைக்கும் அதிகார சக்திகளுக்கு -எதிரெதிராக நின்று- சேவகம் செய்ய தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது என்பது புகலிட அறிவுசீவித்தனத்தின் இங்கிதத்தை வெளிக்காட்டுகிறது. அதேபோல் இந்த பிளவுண்ட போக்குக்கு வெளியோயன மூன்றாவது பிரிவினர் உதிரிகளாகக் கிடப்பதும்கூட புகலிட அறிவுசீவித்தனத்தின் உள்ளார்த்தம்தான்.
ரவி
“கண்ணிவெடிக்குள் இருக்கும் ஈழத்து மக்களும் புலம்பெயர் அறிவுசீவிகளைச் சுற்றியிருக்கும் கண்ணிவெடிகளும”
அன்புடன் ர/பேல்!
“தெருவில் நிற்கும் தேர்”என்னும் மிக பொருத்தமான தலைப்புடன்-இன்றைய காலத்தின் புலம்பெயர் அரசியலையும் அங்கு மக்களின் அவலங்களையும் ஒரு நீண்ட ஆய்வாகவே வெளியிட்டுள்ளீர்கள்>நன்றி.கடந்த சில வருடங்களாக எம்மைப்போன்றோரின் ஆதங்கங்களை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.
உண்மையில்>புலம்பெயர் அறிவுஜீவிகள் தம்மைச் சுற்றியிருக்கும் கண்ணிவெடிகளுக்கு இசைவாக்கப்பட்டார்களா?
அல்லது>கண்ணிவெடிகளுக்கும் அப்பால் கிடைத்த சலுகைகளை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொண்டு >அங்குகண்ணிவெடிக்குள் இருக்கும் எம் மக்களின் உரிமைகளை அடகு வைத்து அல்லது நிரந்தரமாக விற்று பிழைப்பு நடாத்துகின்றார்களா?
அன்றி> புலியெதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கு அப்பால் மகிந்த சிந்தனையிடம் தமது அரசியலையும் அர்ப்பணித்துவிட்டார்களா?
புலிப்பாசிசத்திற்கெதிராக எழுதிக்கொட்டிய பேனாக்கள் இன்று பிரித்தாளும் தந்திர வலைக்குள் சிக்கி>பிரதேசவாதமாக-குழுவாதமாக-மதவாதமாக-சாதியவாதமாக எமது தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கே உலைவைத்து தம்மை தமதிருப்பை வளம்படுத்திக்கொள்கின்றனர்.
ஒரு பக்கம் புலியெதிர்ப்பான “தேனி இணைய தளம்”-மறுபக்கம் கடும் புலி ஆதரவான “நிதர்சனம்”என என்ற பக்கத்திலா “தேனி” தனது முகத்தை தொலைத்துள்ளது.
தேனி தன்னை ஒரு “லங்கா புவத்”போன்று மாற்றிக்கொண்டதா?அல்லது ரி.எம்.வி.பி யினது அதிகார ஏடாக செயற்படுகின்றதா?
புலிப்பாசிசங்களின் கோரப்பலிகளை அக்குவேறு ஆணிவேறாக அம்பலப்படுத்திய தேனியால் ஏன் இன்று அதிகாரத்தில் இருக்கும்கிழக்கின் நாயகர்களை – இந்த நிமிடம் வரை அங்கு நடந்து கொண்டிருக்கும் அநீதிகளை சுட்டிக்காட்ட முடியாதுள்ளது.
இதன் பத்திரிக்கை தர்மம் எங்கே போய்விட்டது?இதனைத் தான் நாம் ஆதங்கத்துடன் கேட்கின்றோம்>மறுதலையாக “நிதர்சனம்”தரத்திற்கு தரம் தாழ்ந்து விட்டதா என?
“தேனி”யைகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல எதிர்பார்ப்போடு பார்த்த எமக்கு>இன்று தேனியுமா இப்படி என்று ……..
ஆரம்பத்திலேயே பிள்ளையான்-கருணா குழு மோதல்களையும் அதன் விலைபோகும் தன்மைகளையும் சுட்டக்காட்டியிருந்தால் அவர்கள் இப்படி விலைபோயிருப்பார்களா? அப்படி விலை போயிருந்த வேளையிலாவது அவர்களை அம்பலப்படுத்தி திருத்த முனைந்திருக்கலாம். அல்லது மக்களிடமிருந்து தூக்கியெறியப்படுத்ப்பண்ணியிருக்கலாம்….
எப்படியோ ஒரு ஊடகத்தின் வலிமையை விலைபோக விட்டதனால் விலைபோனவர்களை விட அதற்கு உடந்தையானவர்களான உங்களைப் போன்றோர் தான் “தேரை நிரந்தரமாக தெருவில்” விட்டதற்கு வரலாற்றில் பதில் சொல்லப் போகின்றீர்கள்.
(தொடரும்)
வணக்கம்
பின்னூட்டங்களினூடாக வந்த கருத்துக்களிற்கு பதில்சொல்வதல்ல இங்கே நோக்கம். ஒரேயொரு குறிப்பு மட்டும். புகலிடச் சூழலிற்காக..
கட்டுரையை எழுதிய நான் உட்பட அனைவரும் 100 விழுக்காடு புனிதர்களல்ல என்பதில் தெளிவுடன் கட்டுரை யாக்கப்பெற்றது.
இங்கு எதையும் பெயர் குறிப்பிடாமல் ஆட்களைக்குறிப்பிடாமல் எழுதிய பொய் புனைவதற்கல்ல. தனிமனிதர்களைத் தாக்குவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.
தனிப்பட்ட வகையில் என் மின்னஞ்சலுக்கு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது.
அதில் //” சில கருத்துக்களைச் சொல்வதற்காக நான் மிரட்டப்பட்டிருக்கிறேன். வெளிப்படையாக கருத்தை பின்னூட்டமாக எழுதப் பயமாக இருக்கிறது”//
என்று குறிப்பிடப்பட்டிருப்பது புலம்பெயர் தமிழர் -அறிவுசீவிகளின் ‘அறிவு’ நிலைப்பாட்டைக்குறித்த கவலையை ஆழமாக எழுப்புகிறது.
அனைவருக்கும் நன்றி. தொடர்வோம்.
தேரை இழுத்துவந்தவர்களும் அதை நடுத்தெருவில் விட்டவர்ககும்
புலம்பெயர் மக்களைளே இதில் ரபோலுக்கு எந்த சந்தேகமும் இருக்க முடியாது
இந்த தேர் உலகத்தால் மட்டும்மல்லாமல் இந்தியா புலம்பெயர் மக்களாலும் வெகுவாக
விமர்சிக்கப்பட்டிருக்கிறது. மனிதகுலத்திற்கு இலங்கைமக்களுக்கு தமிழ்மக்களுக்கு
எந்தவித தரிசனைத்தையும்அது தரவில்லை.மாறாக தமிழ்மக்களின் அடிப்படை வசதிகளை
கருவறுத்ததுமல்லாமல் அவர்களை இடம்பெயர்ந்து நிர்கதியாக்கியுமுள்ளது.இலங்கைமட்டிலும்
அல்ல உலத்திலே சுகந்திரமாக உலவமுடியாத பயங்கரவாதிகளாக சந்தேகக்கண்கொண்டு
பார்கவைத்துள்ளது.
எந்த மக்களாகிலும் வெகுகாலம் முட்டாள்களாக இருந்திடமுடியாது அது சிங்களமக்களாயினும் சரி தமிழ்மக்களாயினும்சரி. இரண்டு சகாப்தத்திற்கு மேலாக வக்கிரபுத்திக்குள் மூழ்கிக்கிடப்பது மிகவும் கூடுதலனாகாலங்களே.
இனியும் சுயநிலைபெறுவது தவிர்கமுடியாத நியதி.
வாழ்வை மேம்படுத்துவதற்கு தான் நாம் போராடுகிறோம் ஒட்டுமொத்தமாக அழிந்துபோதற்கல்ல. இந்த தேர்ரை இழுத்தந்தவர்களும் நடுத்தெருவில் விட்டவர்களும்
திரும்பதிரும்ப சிந்திக்கவேண்டும் தமிழ்மக்களுக்கு துன்பத்தை தான் கொடுத்தோம் என்று.
நடுத்தெருவில் நிற்கும் தேர் மக்களுக்கு எந்த தரிசனைத்தையோ அருளையோ கொடுக்கப் போவதில்லை. தேர்ரை விட்டு பலமைல் தூரம் விலத்திச் செல்லமக்களுக்கு அறிவுறுத்த
வேண்டிய கடமைப்பாடுகள் எமக்குண்டு ஏனெனில் மக்களின் உயிரை காவுகொள்ளக்கூடிய
வெடிகுண்டுகள் மறைத்துவைக்கப்பட்டுள்ளனா.
தேரைத: தெருவுக்குக் கொண்டு வந்த பொறுப்பு எல்லோருக்கும் தான்.
வடம் பிடித்த ஒரு மடையனுக்குத் தனித்திழுக்கும் ஆசை வந்து அவன் வாழெடுத்து விரட்ட ஓடித் தப்பியவா நாம்.
அவனுக்கும் தன்னால் இழுக்கமுடியாது எனத் உணாத்தப்பட்டாயிற்று.
இந்த வேளையில் ஒருவரை ஒருவா திட்டித் தீர்பதாக எழுதும் எழுத்துக்கள் தனிநபா; தனித்துவம் இயக்கத் தனித்துவத்தை மறந்து ஒன்றுபடுங்கள்.
ஓடியவா;களெல்லாம் வாருங்கள் ஒன்றுபட்டு வடம்பிடிப்போம்
என்ற தேவையை ஒட்டி ஒரு கட்டுரை தான் நாம் றபேல் போன்று சமூகம் வீதிக்கு வந்ததற்காக வேதனைப்படுபவா;களிடம் எதிர்பார்ப்பது.