வன்னிப்போர்க் காலத்தில் புனர்வாழ்வளிப்பதாகக் கூறி முகாம்களில் மக்களை அடைத்துவைத்து சந்தேகத்திற்குரியவர்களைக் கைதுசெய்தும் கொலைசெய்தும் வந்த இலங்கை அரசு இறுதியாக எஞ்சியவர்களை தெருவிற்குத் துரத்தியுள்ளது.
அரச குண்டுத்தாக்குதல்களால் அழிக்க்ப்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்றங்கள் கண்துடைப்புக்காக நடைபெற்ற போதிலும் மக்கள் தெருவோரங்களில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதே வேளை ராஜபக்ச பாசிச அரசு 350 மில்லியன் டொலர் செலவில் கொழும்புத் துறைமுகத்தை விரிவாக்கம் செய்கிறது. உதவி நிறுவனங்கள் வழங்கிய பணம் மக்களைச் சென்றடையவில்லை.
மீள்குடியேற்றப்படாமல் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட எஞ்சிய 300 குடும்பங்கள் முகாம்களிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பாடுள்ளனர்.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரி.எம்.எஸ்.சார்ள்ஸ் மற்றும் மாவட்ட திட்டப் பணிப்பாளர் வா.கிருபாசுதன் ஆகியோர் கையொப்பமிட்டு, மாவட்ட புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புச் செயலகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக கடந்த முதலாம் திகதி அறிவித்தல் ஒன்று நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த நலன்புரி முகாமில் இருந்து வரும் இவர்கள், வவுனியாவிலேயே தமக்குக் காணிகளை வழங்கி வீடு கட்ட உதவி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் 97 ஆம் மற்றும் 99 ஆம் ஆண்டுக் காலப்பகுதி முதல் நடைபெற்ற யுத்த நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து இந்த முகாமில் தங்கியுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே நிவாரண உதவிகள் யாவும் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் உதவிகள் எதுவும் இல்லாத நிலையில், உழைத்துப் பெறும் சிறிதளவு வருமானத்தில் தான் தாம் வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மழை காலமென்பதால் தொழில்வாய்ப்புக்களும் குறைந்து பிள்ளைகள் போதிய உணவு மருத்துவ வசதியின்றி கஷ்டப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமரவேண்டும் என்று அரசாங்கத்தின் கொள்கைக்கமையவே இவர்களை முகாமிலிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.
எனினும், தமக்கு அங்கு சொந்தக் காணிகள் எதுவும் இல்லை என்றும், இப்போது அங்கு மீள்குடியேறச் சென்றால் தமக்கான வசதிகள் உரிய முறையில் செய்துதரப்படுமா என்றும் முகாமில் வசிக்கும் மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
Comments 1