04.11.2008.
ஆஸ்திரேலியா புதிய சுனாமி எச்சரிக்கை அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பிராந்ததியத்தில் உள்ள சுனாமி எச்சரிக்கை வலையமைப்புகளுக்கு, இந்தப் புதிய அமைப்பு ஒரு முக்கிய சேர்மானமாக அமையும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் கரையோரப் பகுதிகளில் பேரழிவை உண்டு பண்ணிய சுனாமி என்கிற ஆழிப் பேரலையை அடுத்து 46 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்தப் புதிய எச்சரிக்கை அமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையம் தற்போது இந்தியாவுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல் வட்டகையில் அமைந்துள்ள 29 நாடுகளுக்கு கண்காணிப்பை வழங்கும்.
இந்தியப் பெருங்கடல் வட்டகையில் ஒன்றோடு ஒன்று முக்கிய அறிவியல் தரவுகளைப் பரிமாறிக்கொள்ளும் மையங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவின் இந்தப் புதிய சுனாமி எச்சரிக்கை அமைப்பு செயல்படும்.
ஆழ்கடலில் நிறுவப்படும் உயர் தொழில்நுட்ப கண்காணிப்புக் கருவிகளின் உதவியோடு இந்த ஆஸ்திரேலிய அமைப்பு செயல்படும். இந்தக் கருவிகளில் ஐந்து ஆஸ்திரேலியாவுக்கு வடமேற்காக இந்தோனேஷியாவுக்கு கீழாக வருவதுபோல் அமைந்துள்ளன. மற்றவை ஆஸ்திரேலியாவுக்கு கிழக்காக பசிஃபிக் கடல்பகுதியில் நிறுவப்பட்டுள்ளன. ஒரு சுனாமி உருவாகிறது என்றால் அதன் அளவு, தன்மை மற்றும் ஆபத்துகள் குறித்து இந்தப் புதிய எச்சரிக்கை அமைப்பு துல்லியமான விபரங்களை வழங்க முடியும் என்கிறார் ஜியோசைன்ஸ் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் பேரி டிரம்மண்ட்.