துருக்கி நாட்டின் மேற்குப் பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் மின் மாற்றி வெடித்துத் தீப்பற்றியதில் 201 தொழிலாளர்கள் உடல் கருகிப் பலியாகினர் என்ற தகவலை துருக்கியின் எரிசக்தி அமைச்சர் டான்ர் யெல்டிஸ் இன்று காலை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 80 பேர் படுகாயமடைந்தனர்.
மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை 360 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
நிலப்பரப்பிற்கு அடியில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மின் மாற்றியில் ஏற்பட்ட வெடிப்பு, அங்கிருந்த மின்சார விநியோகத்தையும் காற்றோட்ட அமைப்புகளையும் செயலிழக்கும் வகையில் பாதித்துள்ளது.
இதனால் வெளிவந்த கார்பன் மோனாக்சைடு நச்சு காற்றை சுவாசித்ததால் அந்த தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விபத்து நடைபெற்ற மனிசா பகுதியின் நகராட்சித் தலைவர் எர்கன் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில் மேலும் 400 பேர் சுரங்கத்துள் சிக்குண்டிருக்கலாம் என்றார். இஸ்தான்புல் நகருக்குத் தெற்கே 250 கிமீ தொலைவில் உள்ள சோமாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் இக் கோர விபத்து ஏற்பட்டது. 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் 262 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகினர். இதன் பின்பும் துருக்கிய அரசு தொழிலாளுக்குத் தகுந்த் பாதுகாப்பளிக்காமல் பலியெடுத்துள்ளது.