நெதர்லாந்தில் ஹேக் நீதிமன்றத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பும் அதனைத் தொடர்ந்து குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலமும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக மக்களிடம் பணம் திரட்டியவர்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரின் மேன் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
இதுவரை நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள்
வெளிப்படையாகவே செயற்பட்டு வந்தனர். அலுவலகங்களை நடத்தி வந்தனர். கடந்த 30 ஆம் திகதி வெளியான தீர்ப்பு திடீர் மாற்றம் ஒன்றைக் காட்டுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகத் தீர்பில் கூறிய ஹேக் நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரையும் புலிகளின் உறுப்பினர்களாக அடையாளப்படுத்தியது.
சட்டவிரோத அமைப்பான புலிகளுக்குப் பணம் வழங்குமாறு நெதர்லாந்தில் வாழும் தமிழர்களை மிரட்டியதால் ஐந்துபேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. மூன்று வருடங்களின் பின்னர் மேன் முறையீடு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் இத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பின்னரும் புலிகள் சார்பாகச் செயற்பட்டதால் செயற்பட்டதைக் கருத்தில் கொண்டு தண்டனை வழங்கப்படுவதாகத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமச்சந்திரன் செல்லையா என்பவருக்கு 6 வருடங்கள் 3 மாதங்களும், ரங்கன் ராமலிங்கம் என்பவருக்கு 4 வருடங்கள் 11 மாதங்களும், ஈஸ்வரன் திருநாவுக்கரசு என்பவருக்கு 2 வருடங்கள் 8 மாதங்களும். ஜேசுரட்ணம் எபவருக்கு 2 வருடங்கள் 3 மாதங்களும், லிங்கம் தம்பையா என்பவருக்கு 19 மாதங்களும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
ரங்கன் ராமலிங்கம் என்பவர் நீதிபதிகளிடம் குறிப்பிட்ட விடையங்கள் மேலும் பல சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன.
அவர் முன்னர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை வழங்கியதாகவும், இப்போது உண்மை கூற விரும்புவதாகவும் கூறினார். தொடர்ந்த அவர் தான் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயிற்றுவிக்கப்பட்டதாகவும் பயிற்சியை முடித்துக்கொண்ட பின்னர் திரு.மணிவண்ணன் அல்லது கஸ்ரோ என்பவரால் நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறினார். நெதர்லாந்தில் புலிகளின் அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கிய பதவியை வகித்ததாகவும் கூறிய அவர், ராமச்சந்திரன் செல்லையா சர்வதேச ஒருங்கிணைப்பாளர் என்று கூறினார். அதேவேளை தான் ஐரோப்பாவில் சேகரிக்கப்படும் பணத்திற்குப் பொறுப்பானவர் என்று கூறி, இளவரசன் திருநாவுக்கரசு தனது உதவியாளர் என்றும் குறிப்பிட்டார்.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் அவர் இவ்வாறு கூறியுள்ளமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய நாடுகளில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்தவகையில் அந்த அமைப்புச் சார்ப்பான நடவடிக்கைகள் சடவிரோதமானவை அல்ல என இவர்கள் வாதிட்டிருக்கலாம் எனினும் அதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. மில்லியன்களை மக்களிடமிருந்து சுருட்டிக்கொண்டவர்கள் அதனைப் பாதுகாப்பதற்காக குறுக்கு வழிகளை நாடுவதாகவே தோன்றுகிறது. இனிவரும் காலங்களில் விடுதலைக்காகப் போராடிய அப்பாவிகளை இவர்கள் காட்டிக்கொடுப்பார்களோ என்ற அச்சமும் எழாமலில்லை.
ராஜபக்சக்களை உருவாக்கிய ஏகாதிபத்திய நாடுகள் தேவை அற்றுப்போன போது சிரிசேனவை ஆட்சியிலமர்த்தின. இன்று அமெரிக்க அரசு இலங்கை அரசுடன் தேனிலவு கொண்டாடுகிறது. புதிய அரசுடன் பேசி தமிழர்கள் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இந்த நிலையில் தாமே உருவாக்கிய புலம்பெயர் அமைப்புக்களை அழிப்பதற்கு ஏகாதிபத்தியங்களும் இலங்கை அரசும் முனையலாம்.
இந்த நிலையில் ரங்கன் ராமலிங்கம் கூறிய விடையங்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதுமுள்ள ரீசி.சி கிளைகள் மீது நடவடிக்கையெடுப்பதற்கு ஐரோப்பிய அரசுகளுக்கு வாய்பைக் கொடுக்கும். இதனால் இலங்கை அரசிடமோ அல்லது ஐரோப்பிய நாடுகளிடமோ சலுகைகளைப் பெற்றுக்கொண்டு ரங்கன் இவ்வாறு குறியிருக்கலாம்.
தவிர, தண்டனை உறுதியானதும், ஐரோப்பிய நாடுகளில் மக்களின் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் ஒருவர் ரங்கன் ராமலிங்கத்தோடு ஒரு உடன்பாட்டிற்கு வந்து அவரை இவ்வாறு கூறுமாறு நிர்பந்தித்திருக்கலாம்.
எது எவ்வாறாயினும், மக்களின் பணம் அவர்களிடமே திரும்ப வழங்கப்படுவதும், போராளிகளைப் பாதுகாப்பதும் இன்று அவசியமானது.
இவர் கூறிய தகவல்கள் உண்மைதானா? நெதர்லாந்து வாசகர்களிற்கு இவரைத் தெரியுமா?