26 செப்டம்பர் 1987 அன்று இராசையா பார்தீபன் என்ற திலீபன் என அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிரிழந்தார். விடுதலைப் புலிகளின் அரசியல் துறையின் பொறுப்பாளராக செயற்பட்டுக்கொண்டிருந்த திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கை ஒன்றை முன்வைத்து புலிகளின் சார்பில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையிலேயே தங்கியிருந்தார். இக் கோரிக்கையை இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படை கண்டுகொள்ளவில்லை. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்து இரண்டு மாதங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை இந்திய இராணுவத்திற்கு தெளிவாக உணர்த்தியது.
யாழ்பாணத்தில் ஊரெழு பகுதில் பிறந்த மத்திய தரவர்க்க இளைஞனான திலீபன், யாழ்பாண இந்து கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு புலிகளின் இணைந்துகொண்டார். 1983 ஆண்டு காலத்தில் விடுதலை இயக்கங்களுக்கன அரசியல் இடைவெளி இடதுசாரி மற்றும் வலதுசாரி என்ற அடிப்படையிலேயே அமைந்திருந்தது. டெலோ மற்றும் தமிழீழ விடுதலப் புலிகள் என்ற இரண்டு அமைப்புக்களும் தம்மை வலது சாரிகள் என வெளிப்படையாகவே அறிவிக்க ஆரம்பித்திருந்தனர்.
நகர்புற இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் வலதுசாரியப் பார்வை கொண்டவர்களாக இருந்தனர். அந்தவகையில் திலீபனும் புலிகளில் இணைந்துகொண்டார். அவர் வாழ்ந்த பகுதியிலிருந்த கிராமங்களில் இடது நிலைப்பாட்டை தமது பார்வை என கூறிக்கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப் எகோபித்த ஆதரவு பெற்றிருந்தது.
திலீபன் மரணித்து சரியாக ஒரு மாதம் முடிவதற்குள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விடுதியில் சிறிய உலங்கு வானூர்திகள் ஊடாக நள்ளிரவிற்கு சற்றுப் பின்னர் இந்திய அதிரடிப்படையினர் தரையிறங்க முற்பட்டனர். பல்கலைக் கழகத்திற்கு அருகாமையில் தலையாளி பகுதியில் தங்கியிருந்த பிரபாகரன் மற்றும் அன்டன் பாலசிங்கம் போன்ற புலிகளின் தலைவர்களைக் கைது செய்வதற்காகவே ஹெலிகொப்டர் ஊடான தரையிறக்கம் இடம்பெற்றது. தரையிறங்கிய அனைத்து இராணுவத்தினரும் புலிகளின் போராட்டத்தில் கொல்லப்பட இராணுவ வாகனங்களில் தலையாளிப் பகுதிக்குள் நுளைந்த இந்திய இராணுவம் அங்கு பொது மக்கள் சிலரைக் கொன்று போட்டுவிட்டு முகாம்களுக்குள் திரும்பிச்சென்றது.
அதனைத் தொடர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் முழுவதையும் இந்திய இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டு தனது தர்ப்பாரை நடத்தியது.
இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவென 70 களின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயங்களான டெலோ,ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகியன ஏகத் தலைமை என்ற கோட்ப்பாட்டில் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. அந்த இயக்கங்களிலிருந்த முற்போக்கு சனநாயக அணிகளும், அறிவார்ந்தவர்களும் புலிகளின் துப்பாக்கிக்கு இரையாக எஞ்சியிருந்த தலைவர்கள் தமது ஆதரவாளர்களோடு இந்திய அரசின் அடிவருடிகளாகினர். எதிர்பார்த்தது போன்றே புலிகளுக்கு எதிராக இந்திய இராணுவத்தால் அந்த இயக்கங்கள் பழி வாங்கும் உணர்வோடு களத்தில் இறங்கினர்.
சந்திகளிலும் சாலைத்திருப்பங்களிலும் சந்தேககிக்கப்பட்ட அத்தனை அப்பாவிகளும் இந்திய இராணுவத்தினதும் அவர்களின் தமிழ்த் துணைக் குழுக்களதும் சித்திரவதைக்கும் துப்பாக்கிகும் இரையாகினர். மருதனாமடம் என்ற பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் கோரமான சித்திரவதைகளுக்குப் பேர்போனது. பல பெண்கள் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இலங்கை இராணுவத்தையும் மீறிய இந்திய ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளில் பகல் கொள்ளையடிதனர். காரணமின்றியே பல அப்பாவிகளைச் சித்திரவதைக்கு உட்படுத்தினர். நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் காரணமின்றியே கொன்று போட்டனர்.
புலிகளின் நிர்வாகக் கட்டமைப்புச் சீர்குலைந்தது. பெரும்பாலான தலைவர்கள் காடுசார்ந்த மறைவிடங்களிலிருந்து இயங்க ஆரம்பித்தனர்,
புலிகள் வீதிகளின் நடந்தும் துவுச்சக்கர வண்டிகளிலும் சென்றதைப் போலவே இந்திய இராணுவம் வீதிகளில் வலம்வந்தது. இந்திய இராணுவத்தின் ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களும், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களோடு முரண்பட்டு விலகியிருந்தவர்களும், இந்திய இராணுவத்தோடு இசைந்து செல்லக்கூடியவர்கள் எனச் சந்தேகத்திற்கு இடமானவர்களும் புலிகளால் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகளை தனி நபர்களாக உலாவிய புலிகளின் தலை மறைவு உறுப்பினர்களே நடந்தினர். இவைகளுக்கு எல்லாம் தலைமை தாங்கியவர் பசீர் காக்கா என்ற புலிகளின் தலைமை குழுவிலிருந்தவர். பசீர் காக்காவின் துப்பாக்கிக்கு மட்டும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பலியாகினர். இன்று தேசியத்திற்காக மேடைகளில் கண்ணீர்வடிக்கும் பசீர் காக்கா தான் தனது சொந்தக் கரங்களால் கொன்று குவித்த அப்பாவிகளுக்காக ஒரு கணமாவது சுய விமர்சனம் செய்துகொண்டதில்லை.
டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களிலிருந்த பெரும்பாலான போராளிகள் அந்த இயக்கங்களிலிருந்து புலிகளின் அழிப்பின் போதே விலகிவிட்டனர். எஞ்சியிருந்த சிறு குழுவினர் மட்டுமே இந்திய இராணுவத்தோடு இலங்கையில் சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட்டனர். இந்த மக்கள் விரோதக் கும்பலுக்கு தலைமை தாங்கியவர் இன்று தேசியம் என்று உணர்ச்சிவயப்படும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று திலீபனின் தியாகம் நினைவு கூரப்படுவது அடிப்படை உரிமை என்றும் கூச்சலிடும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சொந்தக் கரங்களால் அசோக் ஹொட்டேல் என்ற இந்திய இராணுவ முகாமில் நூற்றுக்கணக்கானவர்களை புலிகள் என்ற சந்தேகத்தில் கொலை செய்தார். அவரது கொலைகரங்களால் மாண்டுபோன பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் அப்பாவிகள்.
கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட சுரேஷ் தலைமையிலான குழு தமிழ் தேசிய இராணுவம் என்ற குழுவை இந்திய இராணுவத்தோடு இணைந்து உருவாக்கியது. இளைஞர்கள் தெருக்களில் தனியாகச் செல்லும் போது வாகங்களில் கடத்தப்பட்டு அசோக் ஹொட்டேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மந்தைகள் போல சில நாட்கள் அடைக்கப்பட்டு, பின்னர் சுரேஷ் பிரமச்சந்திரனின் நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த பலர் அந்த இடத்திலேயே சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர். 24 வருடங்களின் பின்னர் ஒரு போர்க்குற்றவாளி தமிழ்த் தேசியத்திற்காக கண்ணீர்வடிக்கும் சாபக்கேட்டிற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அந்தக் காலத்தில் புலி சந்தேக நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கிய சீ.வீ.விக்னேஸ்வான் சுரேஷ் பிரமசந்திரனோடு ஒரே மேடையில் தமிழர்களின் உரிமை குறித்துப் பேச அதற்கு வாக்களிக்கத் தயாராகியிருக்கும் அறிவீலிகள் கூட்டம் ஒன்றை மட்டுமெ இந்த நீண்டகால போராட்டம் உருவாக்கியுள்ளது.
படுகொலைகளுக்கு அப்பால் புலிகள் நடத்திய விட்டுக்கொடுக்காத எதிர்ப்புப் போராட்டம் இந்திய இராணுவத்தை எதிர்ப்பது என்ற தலையங்கத்தில் பிரேமதசவுடன் கைகோர்த்துகொண்ட போது அதன் முழு அர்த்தைத்தையும் இழந்தது.
இந்திய இராணுவம் திருப்பியழைக்கப்பட்ட போது அவர்களோடு இணைந்து வரதராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமசந்திரன் உட்பட்ட தலைவர்களும் தப்பியோடினர்.
இன்று இலங்கை பாசிச அரசு திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடுவதைத் தடை செய்திருப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. காலனியத்திற்கு பிந்திய காலம் முழுவதும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையே இலங்கை அரசின் இருப்பை உறுதிசெய்கிறது. மறுபக்கத்தில் இந்த ஒடுக்குமுறைக்கு எதிரானவர்களாகத் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் சுரேஷ் மற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்களுக்கு இலங்கை அரசுடனோ இந்திய அரசுடனோடு முரண்பாடுகள் இல்லை. ஏனைய இயக்கங்களை அழித்து வலதுசாரிகள் எனத் தம்மை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திய புலிகள் நடத்திய போராட்டத்தை விமர்சன சுய விமர்சன அடிப்படையில் அணுகாமல் துதிபாடும் கும்பல்களுக்கும் இலங்கை இந்திய அரசுகளின் அடிவருடிகளே. இத் தடைகள் அனைத்தையும் கடந்து தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்ப் பேசும் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் சனநாயகக் காற்றைச் சுவாசிக்க முடியும்.