பிரித்தானியாவில் இருந்து கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்ட அகதி விண்ணப்பதாரிகளில் பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்சித் தகவலை வெளியிட்டுள்ளது கார்டியன் பத்திரிகை.
பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். இவர்களில் சுமார் 15 பேர் மீண்டும் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்கள்.
இவர்களுக்கு நடந்த கொடுமைகளைப் பார்த்த அதிகாரிகள், இவர்களுக்கு புகலிடம் வழங்கியுள்ளார்கள் என்றும் அப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. அதில் குறிப்பாக 40 வயதுடைய தமிழ்ப் பெண்மணி ஒருவரை இலங்கை இராணுவத்தினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்கள். அவரிடம் 2 மகன்களும் எங்கே எனக் கேட்டு அவரை சித்திரவதைப் படுத்தியுள்ளனர் இலங்கை இராணுவத்தினர்.
குறிப்பிட்ட பெண்ணின் பிள்ளைகள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கிறார்களா? இல்லையேல் தம்மை இணைத்துக்கொண்டார்களா என விசாரிக்க வந்தவர்களே தம்மை பலாத்காரம் செய்தார்கள் என்று மேற்படி அப் பெண் தெரிவித்துள்ளார்.
அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர், பலாத்காரத்தை உறுதிசெய்ததை அடுத்தே , பிரித்தானியா அவருக்கு புகலிடம் கொடுத்துள்ளது. குறிப்பிட்ட பெண்ணை முதலிலேயே நாடு கடத்தாமல் இருந்திருந்தால், இப் பெண் காப்பாற்றப்பட்டிருப்பார் என , சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலைமை மாறும் வரை தமிழ் அகதிகளை பிரித்தானியா நாடுகடத்தக்கூடாது என்று, பிரித்தானியாவில் இருந்துவெளிவரும் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.