திருநங்கை. பாரதி கண்ணம்மாவை மீண்டும் சந்திப்பேன் என்று நான் நினைக்கவேயில்லை. ஏனெனில் அவர்கள் உலகம் தனி உலகம். அலாதியான உலகம். உண்மையும், மாயையும் போல மாறி மாறி மறுதோன்றலாகத் தோன்றக்கூடியவர்கள். இருளில் இருளாகவும், பகலில் ஒளியாகவும் பதுங்கி அலைபவர்கள். அவர்கள் மனம் வைக்காமல் அவர்களைக் காண முடியாது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவுக்காக விழுப்புரம் சென்றபோதுதான் திருநங்கை. பாரதி கண்ணம்மாவைப் பார்த்தது. அன்று மாலையில் விழுப்புரத்தில் இறங்கியபோது ஊரே கோலாகலமாக மாறியிருந்தது. நகரின் அனைத்து லாட்ஜ்களிலும் அறைகள் நிரம்பி வழிந்தன. கடைசியாக நகர்மன்றத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒருவரைச் சந்தித்து உதவி கேட்டதைத் தொடர்ந்து ஒரு மிகப் பெரிய லாட்ஜில் ஒரு அறை கிடைத்தது. ஊரெல்லாம் இதே பேச்சாக இருந்தாலும், அதில் நக்கலும், கிண்டலும்தான் அதிகம் தொனித்தது. கூவாகத்தில் கலந்துகொள்ள நாடு முழுவதிலுமிருந்தும் அரவாணிகள் வந்திருந்தனர். அவர்களிடம் விபச்சாரத்தில் ஈடுபட சிற்றின்ப லோலர்களும் குவிந்தனர். கூவாகம் திருவிழா முடிந்ததற்கு மறுநாள் ஊர் முழுவதும் ஆணுறைகளாக நிறைந்திருக்கும் என்று கிண்டலாக ஊர் மக்கள் கூறினர்.
நான் ஒவ்வொரு அறையாகச் சென்று அங்கிருந்த அரவாணிகளிடம் பேச்சுக் கொடுத்தேன். மேலும், ஒரு தன்னார்வ அமைப்பு மூலம் குறிப்பிட்ட சிலரைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் இவர்களைப் பற்றி முன்பே அதிகமாக அறிந்திருக்கவில்லை. எனவே, இவர்கள் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த ஒருவரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சில விவரங்கள் சேகரித்தேன். மகாபாரதத்தில் வரும் அரவான் களபலியோடு தொடர்புபடுத்தி அவர் கூறிய தகவல்கள் எனக்கு ஆர்வமூட்டுவதாக இருந்தன. இதைவிட இத்தகவல்களைக் கூறிய அந்த நபர் குறித்து நண்பர்கள் மத்தியில் உலவிய மெல்லிய புன்னகை மேலும் ஆர்வமூட்டக்கூடியதாக இருந்தது. அதோடு அவரது மனைவியின் கடுகடுத்த முகமும் நினைவுக்கு வருகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தது. அவர் ஓரினப் புணர்ச்சியாளரா, அல்லது அரவாணியா என்று எனக்குத் தெளிவாகத் தெரியாது.
எனது சொந்த வாழ்க்கையில் இவர்களைப் பற்றிய அனுபவம் குறிப்பிடத் தகுந்ததாக எதுவும் இல்லை. அவர்களது அன்பு தாங்க முடியாதது என்ற எண்ணம் மட்டும் இருந்தது. அன்பற்ற உலகில் இவர்களது அளவிட முடியாத அன்பும், தொடுதலும் மக்களுக்கு அருவருப்பை ஏற்படுத்துவதில் என்ன வியப்பிருக்க முடியும்! கூவாகம் செல்வதற்காக கூட்டமாக வந்து, சுற்றி நின்று கும்மியடிப்பார்கள். அருகில் விகல்பமில்லாமல் நெருக்கமாக நிற்பார்கள். சில நேரங்களில் சட்டைப்பையில் கைகூட விடுவார்கள். ஆனால் யாருடைய சட்டைப் பையிலிருந்தும் பணத்தை அள்ளிக்கொண்டு ஓடியதாக எந்தத் தகவலும் நான் கேள்விப்பட்டதில்லை. அவர்களது பால்பேதமற்ற இந்த அன்பு எனக்கு வியப்பூட்டுவதாக இருக்கும்.
மற்றபடி அவர்களைப் பற்றி நான் மேலும் எதுவும் அறியாததால் கூவாகம் எனக்கு பெரும் கண்திறப்பாக இருந்தது. உண்மையில் கூவாகம் அனுபவம், விழுப்புரம் நோக்கிய பஸ் பயணத்திலேயே தொடங்கிவிட்டிருந்தது. மிகவும் வறுமை நிலையில் இருந்த ஒரு திருநங்கை அந்தப் பஸ்ஸில் வந்தார். 45, 50 வயது மதிக்கத்தக்க கருப்பு நிறமான அவரது முகம் அகன்று பரந்திருந்தது. வெற்றிலைச் சிவப்பேறிய வாயும், பற்களும் பளிச்செனத் தெரிந்தன. ஓரளவு நீளமான கூந்தலை அள்ளி முடித்திருந்தார். அதன்மீது கதம்பம் செருகப்பட்டிருந்தது. அவர் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு முன்னும் பின்னும் ஒரு கும்பல் உட்கார்ந்துகொண்டு அவரைத் துன்பப்படுத்திக் கொண்டு வந்தது. இதை நான் உட்பட யாருமே கண்டிக்கவில்லை. ஆரம்பத்தில் அந்தக் கும்பலுக்கு ஈடாக அவரும் பேசிக்கொண்டுதான் வந்தார். ஆனால், போகப் போக அந்தக் கும்பல் வரம்பு மீறியது. அசிங்கமான வார்த்தைகள் சரளமாக வெளிவந்தன. பின்னர் உடலைச் சீண்டவும் தொடங்கினார்கள்.
அவரது உடலில் பல கரங்கள் மேய்வது அவரது வயதுக்குப் பெருத்த அவமானமாக இருந்தது. ஆனால், நாங்கள் எல்லோரும் இவர் ஏன்தான் இந்தப் பேருந்தில் ஏறினாரோ என்று நினைத்தோமே தவிர, அவரை மீட்க முயலவில்லை. இந்தச் சித்திரவதையில் இருந்து தப்பிக்க அவர் ஒரு கட்டத்தில் அங்கிருந்து எழுந்து முன் இருக்கைப் பக்கமாக ஓடினார். அந்தக் கும்பலும் அவரை விரட்டியது. கூட்டத்தினரில் ஒருவர் திருநங்கையின் புடவை முந்தானையைப் பிடித்து இழுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த அவர் ஓங்கி அறைந்துவிட்டார். அவ்வளவுதான்; மொத்தக் கும்பலும் அவரைச் சூழ்ந்துகொண்டது. ‘ஒரு பொட்டை நீ, ஆம்பிளையை எப்படி கை நீட்டி அடிப்பே?’ என்று அவரை உண்டு இல்லை என்று பார்த்துவிட்டது. அவரை உடனடியாக பஸ்ஸில் இருந்து இறக்கிவிட வேண்டும் என கலாட்டா செய்ய ஆரம்பித்துவிட்டனர். இவ்வளவு நேரமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நடத்துனர் விசிலடித்து பேருந்தை நிறுத்தினார், பின்பக்க வழியாக இறங்கி, முன்பக்கம் வழியாக ஏறினார்; அவரது கையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கீழே இறக்கிவிட்டு மீண்டும் விசிலடித்தார்.
ஆனால், வண்டி கிளம்புவதற்கு முன் யாரும் எதிர்பாராத வகையில் அவர் வண்டிக்கு முன் பாய்ந்தார். கூந்தலை அவிழ்த்தார். தலைவிரி கோலமாக அழுது அரற்றியபடி மார்பில் அடித்துக்கொண்டார். திடீரென புடவையைத் தூக்கிக் காட்டி கும்மியடித்தபடியே பேருந்தைச் சுற்றி வந்தார். இதனால் நிலைகுலைந்துபோன ஓட்டுநர் அப்படியே உட்கார்ந்துவிட்டார். அந்தத் திருநங்கை கும்மியடித்தபடியே பேருந்தைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தார். இது நடத்துனரையும் பயமுறுத்தியது. ஓட்டுநர் கூப்பாடு போட்டார். “அதுங்க ஏதாவது சாபம் கொடுத்துட்டா வண்டிக்கு ஏதாவது ஆயிரும். முதல்ல அத உள்ள ஏத்து” என்றார். அதன்பிறகு நடத்துனர் கீழேயிறங்கி மீண்டும் அவரைப் பேருந்துக்குள் ஏற்றிக்கொண்டார். அதன் பிறகு பேருந்துக்குள் இறுக்கமும் அமைதியும் சூழ பேருந்து கிளம்பியது. எனக்கு இது ஒரு புதுவகையான போராட்டமாகப்பட்டது.
இதன்பிறகு விழுப்புரம் லாட்ஜில் திருநங்கைகளின் பல்வேறு முகங்களைக் காண நேர்ந்தது. இதுவரை ஆபாசமாகவும், அருவருப்பாகவும் பார்க்கப்பட்டு வந்த மனிதர்கள் இரத்தமும் சதையுமாக உலா வந்தனர். ஒவ்வொருவரின் கதையும் கேட்பதற்கு அவலமாக இருந்தது. ஆனால் அவர்கள் அப்படியிருப்பதில் அவர்களில் யாருக்கும் வருத்தமில்லை. உண்மையில் தங்கள் பிறப்பினைப் பெருமையாக உணர்ந்தவர்களையே என்னால் அதிகம் காண முடிந்தது. தங்கள் உணர்வுகள் நுட்பமானவை என்றனர். இதனை ஆண்களோ, ஏன் பெண்களோகூட உணர்ந்துகொள்ள முடியாது என்று அவர்கள் கூறினர். இரயில் நிலையக் குப்பைமேடுகளில் பாலியல் தொழில் செய்பவர்களில் இருந்து, அலுவலகங்களில் பொறுப்புள்ள பதவி வகிப்பவர்கள் வரை அங்கு வந்திருந்தனர். பாதுகாப்பற்ற சூழலில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதால் இவர்களில் பெரும்பாலோருக்கு எய்ட்ஸ் தொற்று இருந்தது. கிராமங்களிலும், சேரிகளிலும் பிறந்த திருநங்கைகளுக்கே இத்தகைய ஆபத்து அதிகம். வறுமையான குடும்பங்களில் பிறந்த இவர்கள் மேலும் சமூக ஒதுக்கலுக்கு ஆளாகித் தங்களது 15, 16 வயதில் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள்.
இவ்வாறு இந்தியாவின் பல நகரங்களுக்கும் விரட்டப்பட்டு பாலியல் தொழில் தவிர வேறு தொழில்களில் ஈடுபட முடியாததால் முற்றிய எய்ட்ஸ் நோயுடன் சென்னையில் உள்ள ஒரு தன்னார்வ அமைப்பிடம் தஞ்சமடைந்த ஒருவரையும் அங்கு சந்தித்தேன். அவர் இசுலாமிய சமுதாயத்தில் பிறந்தவர். குடும்பத்தில் தனக்கு வைக்கப்பட்ட பெயர் என்னவென்பதையே அவர் அறவே மறந்துவிட்டார். அவர் தனக்குத்தானே மது என்று பெயரிட்டுக்கொண்டார். இவர்கள் இரு பாலுக்கும் பொதுவான பெயரை வைத்துக்கொள்வது அங்குதான் எனக்குத் தெரிய வந்தது. பாரதி, மது, இசக்கி, ரஜினி, மாரி, பேச்சி… என்று ஏராளமான பெயர்கள் இரு பாலருக்கும் பொதுவாக இருப்பது அப்போதுதான் தெரிந்தது. மது வீட்டுக்கு மூத்த பிள்ளை. தம்பி, தங்கைகளைக் கவனிக்க வேண்டியிருந்ததால் பொறுப்பான ஆண் பிள்ளையாக வளர்ந்து வந்தான். 11 வயது வரை எந்தப் பிரச்சனையும் இல்லை என்று மது கூறினார். அதன் பிறகுதான் உடலில் இன்பமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியதாகவும் அவர் கூறினார். முதலில் என்னவென்றே தெரியாத இனம் புரியாத உணர்ச்சிகளாக அவை இருந்ததாகவும், ஆனால் அது மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்ததாகவும் சொன்னார்.
ஆனால், “என்னையத்த வயதுப்பையன்களைப் பார்க்கும்போது எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் எனக்குக் குழப்பமாகத்தான் இருந்தது. எனக்குள் மட்டும் ஏன் இந்த மாற்றம் என நினைப்பேன். இதனால் பையன்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி, பின்னர் முற்றிலுமாக விலகினேன். பொம்பளைப் பிள்ளைகளிடம் நெருக்கமாக இருந்தேன். ஆனால், ஒருத்திகூட என்னை அண்டவிடவில்லை. ஆம்பிளைப் பசங்களும் என்னைக் கிண்டல் பண்ணி விரட்டினர். இதைவிட கொடுமை என் வீட்டிலுள்ளவர்களே என்னை நாளடைவில் வெறுத்தனர். நான் தனியாக இருக்கும்போது நெற்றியில் சாந்துப் பொட்டு வைத்து, கண்மையிட்டுக் கண்ணாடியில் அழகு பார்ப்பது எனக்கு பிடிக்கும். தங்கச்சியின் உள்ளாடைகளை அணிவது பரவசமாக இருக்கும். ஆனால், இதெல்லாம் வீட்டுக்குத் தெரியத் தெரியப் பிரச்சனை பெரிதாகிக்கொண்டே வந்தது. எப்படியாவது இவன் வீட்டை விட்டுத் தொலைந்தால் சரி என நினைத்தனர். அடி உதை தாங்காமல் ஓடிப்போகட்டும் என்றே என்னை ஆளாளுக்கு அடித்து உதைத்தனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடிவந்துவிட்டேன். அப்படி எடுத்துக்கொண்டு வருவதற்கும் எங்கள் வீட்டில் எதுவுமில்லை. கைக்கு அகப்பட்டது அறுபத்தைந்து ரூபாய் பணமும், எனது துணிமணிகளும் மட்டும்தான். சென்னை வரும் இரயிலில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் தவறுதலாக இறங்கிவிட்டேன். எனக்கு ஒரு திசையும் தெரியவில்லை. நான் அங்குமிங்குமாகச் சுற்றிக்கொண்டிருந்தது பல கண்களில் பட்டது. என்னைத் தெரிந்து கொண்டதுபோல ஒருவன் அருகில் வந்தான். இப்போதெல்லாம் ஆம்பிளைங்க மேல எனக்கே ஒரு கவர்ச்சி இருந்தது. இதனால் அவன் யாரென்று எனக்குத் தெரியாதபோதும் அவன் அருகில் இருப்பது எனக்குப் பிடித்திருந்தது. என்னைத் தனது அறைக்கு அழைத்துச் சென்றான். எனக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொன்னான். நல்ல சாப்பாடு வாங்கித் தந்தான். இரவில் பாதி மயக்கத்தில் தூங்கினேன். அவன் அருகில் படுத்திருந்தான். நெருங்கி வந்தான்; என் மேல் கை போட்டான்; நெருக்கி அணைத்தான். எனக்கு அது பிடித்திருந்தது. எல்லோரும் என்னை ஒரு ஆணாகப் பார்த்தனர்.
நானும் ஒரு ஆண்தான் என்றே நான் எண்ண வேண்டுமென வற்புறுத்திக் கொடுமைப்படுத்தினர். ஆனால், இவன் என் பெண்மையை அங்கீகரித்தான். எனக்கு அது பிடித்-திருந்தது. என்னை அவன் முழுமையாக சம்போகம் செய்ய அனுமதித்தேன். உடல் முழுவதும் பரவசத்தில் துடித்தது. அந்தப் பரவசத்திலேயே அசந்து தூங்கினேன். மீண்டும் என் உடலில் ஆணின் கை. ஆனால், இது அவன் கையில்லை. என்னால் அவனிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. தொடர்ந்து 11 பேர் அடுத்தடுத்து என்னைக் கிழித்தனர். உடலெங்கும் ரணம். நகம், பல் போன்றவற்றின் காயங்கள். மரக்கட்டை போல கிடந்தேன். ஆனால், கண்விழித்துப் பார்த்தபோது என் தலைமாட்டில் 11 ஐம்பது ரூபாய் தாள்கள்.
இப்படி தாம் பாலியல் தொழிலாளியான கதையைக் கூறிய மது, தாம் பம்பாய் சென்று தம்மைப் போன்ற திருநங்கைகளோடு சேர்ந்து வாழ்ந்ததாகக் கூறினார். அங்குள்ள ஜமாத்தில் சேர்ந்த பிறகுதான் தன்னைப் போன்ற ஏராளமானவர்கள் இருப்பது அவருக்குத் தெரியவந்தது. அங்குள்ளவர்கள்தான் அவருக்கு மது என்ற பெயரை வைத்துள்ளனர். தாம் முழுமையான திருநங்கை ஆவதற்காகவும், முழுமையாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காகவும் இருமுறை அறுவைசிகிச்சை செய்து கொண்டுள்ளார். இரவில் பாலியல் தொழில்; பகலில் விசேஷ வீடுகளில் கும்மியடித்தல் என்று பொழுது கழிந்ததாகக் கூறினார். ஆனால், தமிழ்நாடு போல வேறு எங்கும் தாம் அவமானப்படுத்தப்படவில்லை என்றார். ரயிலில் செல்லும்போதுகூட கவுரவமாக நடத்தப்பட்டதாகக் கூறினார். கன்னிப் பெண்கள் தங்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை அங்கு உள்ளது. நாங்கள் ஏதாவது கெட்ட சொல் சொல்லிவிட்டால், அது சாபம் போல் அப்படியே பலித்துவிடும் என்ற நம்பிக்கையும் வடக்கத்தி மக்களிடம் இருக்கிறது என்றார்.
மதுவைப் போன்று ஒவ்வொரு திருநங்கையும் அவலங்களையே எதிர்கொண்டு வாழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டிலேயே வாழ விதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை மேலும் சீரழிவானது. இங்கு பிச்சைக்காரர்களைவிடக் கேவலமாக வாழ வேண்டியுள்ளது. இதனால் தங்களை அரவாணிகள் என்று சொல்லாமலேயே ரகசியமாக வாழ்வோரும் உண்டு என்பதும் எனக்குக் கூவாகத்தில்தான் தெரியவந்தது. அப்படியரு திருநங்கைதான் பாரதி கண்ணம்மா. நான் தங்கியிருந்த லாட்ஜில் வசதியான ஏர்கண்டிஷன் அறையில் அவர் தங்கியிருந்தார்.
நான் அறைக்கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தபோது அவர், ஏதோ ஒரு நாடகக் காட்சிக்குத் தயாராவதுபோல காணப்பட்டார். ரோஸ் கலர் பவுடர் பூசி அகலமான பொட்டு வத்திருந்தார். நீண்ட கூந்தல் பின்னப்பட்டிருந்தது. நைட்டி அணிந்திருந்தார். இரு கைகளிலும் தங்க வளையல்கள், கழுத்தில் கனமான தாலிச் சங்கிலி. கைகளில் மருதாணி இடப்பட்டிருந்தது. ‘வாங்க’ என அழைத்து மீண்டும் கட்டிலில் உட்காரும்போது கால்களில் மெட்டி தெரிந்தது. கட்டிலின் மீது பட்டுப் புடவை மற்றும் தேவையான உள்ளாடைகள் மடிப்புக் கலையாமல் கிடந்தன.
அரவாணிகளின் சமூக நிலைமை பற்றித் தெரிந்துகொள்வதற்காக வந்துள்ளதாகக் கூறினேன். அவர் முகத்தில் மிகவும் அழகான புன்னகை தெரிந்தது. கையில் காமிராவைப் பார்த்த அவர், இருங்க என்று கூறிவிட்டுப் பட்டுப் புடவையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தார். திரும்பி வரும்போது முழுமையான அலங்காரத்துடன் இருந்தார். ஒரு மணப்பெண் கணவனுடன் இருந்துவிட்டு வருவதுபோல முகம் வெட்கத்தில் கனிந்திருந்தது. தலை குனிந்தபடி நடந்து வந்தார். அப்போது முன் கொசுவம் விசிறிபோல விரிந்து மடங்கியது. அதற்கேற்ப தனது இரு விரல்களால் கொசுவத் தலைப்பில் மடக்கிப் பிடித்துக் கொண்டார்.
பேச ஆரம்பித்தோம். திருநங்கைகள் உலகு குறித்த ஒவ்வொரு கதவாகத் திறந்துவிட்டார். முதலில் அரவாணிகள் சந்தித்துவரும் சமூகப் பிரச்சனைகள் குறித்துப் பேசினார். கடவுள் இப்படிப் படைத்ததைத் தவிர வேறு எந்தப் பாவமும் இல்லை. ஆனால், தாங்கள் ஏதோ பழி, பாவம் செய்துவிட்டதுபோல பழிவாங்குகிறீர்கள் என்றார். உலகத்துல ஆணும், பெண்ணும் மட்டும் போதுமுன்னு நினைக்கிறீங்க. ஆனால் இப்படி ஒரு பிறப்பும் இருக்கு. பிறந்த குழந்தையோட உணர்ச்சியிலயும், சாகப்போற கிழத்தோட உணர்ச்சியிலயும் ஆண்- பெண்ணுன்னு ஏதாவது பேதம் இருக்கா. அதுபோல நாங்களும் தனி உணர்ச்சியுள்ள பிறவி. இத ஏன் ஏத்துக்க மறுக்கறீங்க. எங்களுக்கு ரேஷன் கார்டுல பேர் இல்ல; வோட்டர் லிஸ்டுல பேர் இல்ல, பாஸ்போர்ட் வாங்க முடியாது. அவரது பேச்சு அவர் ஓரளவு வசதியான உயர் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெளிவாகக் காட்டியது.
அடுத்ததாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசினோம். அவர் தமிழ்நாட்டின் முக்கியமான கோவில் நகரமொன்றில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிறார். அவரது தந்தை ஒரு அரசு உயர் அதிகாரி. இதனால் வசதியான வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் படித்தார். பெற்றோர் வைத்த பெயர் முத்துக்கிருஷ்ணன். முத்துக்கிருஷ்ணனுக்குச் சின்ன வயதிலிருந்தே படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது இலட்சியம். அவனது உயர் மத்தியதர வர்க்க குடும்பச் சூழ்நிலை அதற்கு உதவியது. நல்ல பள்ளிக்கூடம், டியூஷன் போன்ற வசதிகளால் அவன் நன்றாகப் படித்தான். இடையில், உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் அக உலகில் பெரும் புயலை ஏற்படுத்தியது. ஆனால், வெளிநடவடிக்கைகளில் அவன் அதைக் காட்டிக்கொள்ளவில்லை எல்லாவற்றையும் மனசுக்குள்ளேயே பூட்டி வைக்கும் மத்திய தரக் குடும்பங்களின் இரட்டை வாழ்க்கை முறை அவனுக்கு பழகிவிட்டதால் எந்த மாற்றமும் வெளியே தெரியவில்லை.
இருந்தாலும் போகப்போக எல்லாமும் தெரிந்தது. இந்த உலகத்தில் எதைத்தான் மறைக்க முடியும். உலகமே ஒரு நாடக மேடை என்பதால் வெளிப்படையாகத் தெரியும் காட்சிகளைப்போல கண்ணுக்குப் புலனாகாத காட்சிகளும் பிசிறில்லாமல் அரங்கேறி வந்தன. கல்லூரியில் சக மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மெல்லிய புன்னகை என அது தன்னை வெளிக்காட்டியது. ஒரு பக்கம் படிப்பு, வேலை, குடும்பம் என்று முத்துக்கிருஷ்ணனின் கவனம் சென்றாலும், உடலில் ஏற்பட்ட மாற்றங்களும், மெல்லிய புன்னகைகளின் பாதையும் மற்றொரு உலகத்தை அடையாளம் காட்டியது.
எனது உடலுக்குள் ஏற்பட்ட மாற்றங்களும், மன உணர்வுகளும் என்னை வேறொரு உலகுக்கு அழைத்துச் சென்றது என்றார் முத்துக்கிருஷ்ணன். ஒரு பக்கத்தில் குடும்பத்தில் எனக்கு இடப்பட்ட கட்டளைகள், தம்பியின் படிப்பு, தங்கையின் கல்யானம் ஆகிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. மறுபக்கம் ஆண்களும், பெண்களும் கண்களால் என்னைக் கொத்தித் தின்றனர். அவர்களது பார்வைகளின் ஊடாக நான் எதையோ தேடி அலைந்தேன். இப்பயணத்தின் இறுதியில்தான் நான் இசக்கியைச் சந்தித்தேன். அவர்தான், நான் இரு பாலுமற்ற பிறவி என்பதைக் கூறினார். அவர்தான் எனக்கு வேறு ஒரு பெயர் வைத்துக்கொள்ளும்படி கூறினார். எனக்குப் பிடித்த பாரதி கண்ணம்மா என்ற பெயரை எனக்கு நானே வைத்துக்கொண்டேன். எங்களூர் ஜமாத்தின் தலைவராக அவர் இருந்தார். அங்கு என்னைப் போன்ற பலரும் இருந்தனர். ஜமாத் ஒரு குடும்பமாக இருந்தது. இதற்காக ஒரு வீடு இருந்தது. ஜமாத்துக்குள் நாம் எப்படி வேண்டுமானாலும் இருந்துகொள்ளலாம் என்றார்.
ஜமாத்தில் இருக்கும்போது நாங்கள் கண்ணியமாக உணர்ந்தோம். ஆனால் வெளியில் அலி, பொட்டை என்று அவமானமாகப் பேசினர். ஆணின் வலிமையும், பெண்ணின் மென்மையும் கொண்டிருந்த எங்களைக் கழிவுப்பொருள்கள் போலப் பார்த்தனர். இதற்கெல்லாம் வடிகாலாக ஜமாத் இருந்தது. எங்களுக்குள் சாதி, மத வித்தியாசம் இல்லை. பெரும்பாலானவர்கள் தங்கள் குடும்பங்களைவிட்டு வெளியேறியிருக்க நான் மட்டும் பிறந்த குடும்பத்தோடு இருந்ததும்கூட அவர்களுக்குப் பிடித்திருந்தது. நான் வீட்டிலேயே இருந்து தம்பியின் படிப்பு, தங்கையின் திருமணத்துக்கு உதவ வேண்டும் என்றனர். அதன்படியே எனக்கு நல்ல வேலை கிடைத்தது. பிறகு ஜமாத்திலேயே எனக்குக் கலியாணமும் செய்து வைத்தனர். எனது கணவர் பெயர் மருதமுத்து. அவர் கட்டிய தாலிதான் நான் போட்டிருக்கிறேன். எட்டுப் பவுனில் நானே செய்த தாலி இது. அவருக்கு வேலை இல்லை. நான்தான் மாதாமாதம் பணம் தருகிறேன். எங்கள் வீட்டுக்குப் போகும்போது தாலியைக் கழற்றி வைத்துவிடுவேன்.
பிறந்த வீட்டிலும் எனக்குக் கலியாணம் செய்து வைத்தனர். எனது மனைவி பெயர் மீனாகுமாரி. எங்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த உலகத்தில் இருக்கும்போது ஆளே மாறிவிடுவேன். கிராப், மீசை, பேண்ட், சர்ட் என சகஜமாக ஆகிவிடுவேன். இப்படி இரண்டு உலகங்களில் பதுங்கிப் பதுங்கி வாழ்கிறோம். என்னை அலி என்றோ பொட்டை என்றோ அரவாணி என்றோ அழைப்பதை நான் விரும்பவில்லை. அரவாணி என்ற சொல் கவுரவமாக இருந்தாலும் அதுவும் மதம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இரு பால்களையும் குறிக்கும் திரு, நங்கை ஆகிய இரு சொல்களையும் இணைத்து திருநங்கை என்று கூறுவதையே விரும்புகிறேன் என்று பாரதி கண்ணம்மா கூறினார்.
அவரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு திருமண வீட்டில் சந்திப்பேன் என்று நான் நினைக்கவேயில்லை. அவர்தானா என்று எனக்குச் சந்தேகம்தான். தனது மனைவி மக்களுடன் வந்திருந்தார். அவர் தனது அறையில் தனிமையாக இருக்கும்போது அவைரச் சந்தித்து என்னை அறிமுகப்படுத்தினேன். ஆனால் விழுப்புரம் பற்றி எதுவும் கூறவில்லை. அவருக்கு எனது பெயர், அடையாளம் எதுவும் நினைவில்லை. நான் பாரதி கண்ணம்மா என்ற பெயரைக் கூறியதும் அதிர்ந்து நிமிர்ந்தவர் என்னைக் கண்டுகொண்டார். ஓடி வந்து கட்டிக்கொண்டார். கடந்த நேர்காணலின்போது கடைசி வரை அவரைப் புகைப்படம் எடுக்காதது நினைவுக்கு வந்தது.
சகோதரியின் சோகம் கேட்டு விம்மி அழுகிறேன்,ஆனால் அதனை எல்லாம் மறந்து விட்டு சமுக சேவை செய்து வரும் அவர் மிக மிக மிக உயர்ந்தவர்.