திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் கைதிகளாக அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகள் 26 பேர் தங்களை விடுவிக்க கோரி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். சிலர் கடவுச்சீட்டு இன்றி தமிழ் நாட்டிற்குள் வந்ததாகவும், சிலர் அவுஸ்திரேலியாவிற்கிப் படகுகள் மூலம் சென்றதாகவும் கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமக்குத் தொடர்பில்லாத ஈழப் பிரச்சனையைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ள தமிழகத்தின் இனவாத அரசியல்வாதிகள் சீமான, வை.கோ, நெடுமாறன் போன்றோர் இது வரையில் ஈழ அகதிகள் விடையங்களில் தலையிட்டதில்லை. திருச்சி சிறை வளாகத்தில் முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத் தமிழர்கள் அகதிகள் என்ற அடிப்படையில் தமது வாழ்வாதாரத்தை உறுதிசெய்துகொள்ள முயன்றதால் கைதாகியுள்ள்னர். தமிழீழம் பிடித்துத் தருவோம் என அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் தமிழ் நாட்டில் கடந்த நான்கு தசாப்தங்களாக ஈழ அகதிகள் விலங்குகள் போல முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடிப்படை மனித உரிமையை மீறும் வகையில் அடைத்து வைக்கபட்டுள்ள அகதிகள், அங்கிருத்து தப்பி அவுஸ்திரேலியா போன்ற நாடுகளை நோக்கிச் செல்லும் போதே கைதுகள் நடைபெறுகின்றன.
பல முகாம்களில் மூன்றாவது தலைமுறைக் குழந்தைகள் வளர ஆரம்பித்துள்ளனர். தமிழக ஈழ அரசியல் வியாபாரிகளுக்கு போதிய வருமானாம் தராத ஈழ அகதிகள் தொடர்பான மனிதாபிமானப் பிரச்சனைகளில் அவர்கள் தலையிடுவதில்லை. புலம்பெயர் நாடுகளில் ‘சடங்குகள்’ நடத்துவதற்காக குழுக்களை நடத்திவரும் அமைப்புக்கள்கூட அகதிகளைக் கண்டுகொள்வதில்லை.
திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் 26 பேர் தங்களது மீதான வழக்குகளை உடனே விசாரித்து விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து துணை கலெக்டர் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கைதிகளில் இந்த திடீர் போராட்டத்தால் இன்று கோர்ட்டு வளாகத்தில் திடீர் பரபரப்பு நிலவியது.