பதவியேற்ற பின் முதல்வரின் ட்விட்டர் பக்கம் “Belongs to the Dravidian stock ” (திராவிடப் பாசறையைச் சேர்ந்தவன்) என்று அப்டேட் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து டாக்டர். கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் இனம் என்பதை மறைத்துவிட்டுத் திராவிட இனத்தைச் சார்ந்தவன் என அடையாளப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு முதல்வர் விளக்க வேண்டும் என்றும் திராவிடப் பேரினவாதம் தமிழின அடையாள அழிப்பின் துவக்கம் என்றும் கொதித்தெழுந்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா, 1962 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரையில் ” I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian” என்று முழங்கினார். இந்தத் திராவிட உணர்வு பெரியாரின் பாசறையில் உருவானது.
மொழிவாரி மாநிலங்களின் பிரிவுக்கு முன்பு ‘திராவிடம்’ என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்த பெரியார், நான்கு மாநிலமாகப் பிரிந்த பின்பும் அதே சொல்லையே கையாண்டு வந்தார். தமிழர் என்று சொல்லப்போனால் பார்ப்பானும் வந்து புகுந்து கொள்வானே என்று சரியாகவே கணித்திருந்தார். ஆனால் இன்னுமொரு முக்கிய காரணமும் இருந்தது. தமிழரின் விடுதலைக்கு மொழிப் போராட்டம் மட்டும் போதாது. கலாச்சார ரீதியாக, இன ரீதியாகப் போராட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பார்ப்பனர்கள் கலாச்சார ரீதியாக நம்மை அடிமைப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது நமது உணவு, உடை, விழாக்கள், இன்ப நிகழ்வுகள், துன்ப நிகழ்வுகள் அனைத்திலும் பார்ப்பனரின் ஆதிக்கம் ஊடுருவி இருக்கிறது. அதை ஒழித்துக் கட்டுவதற்கு மொழிப்போராட்டம் மட்டும் போதாது. இன உணர்வுடன் போராட வேண்டும் என்கிற புரிதலோடு தான் ‘திராவிடர்’ என்ற சொல்லைப் பெரியார் பயன்படுத்தினார்.
அதேசமயம் அவரது கலாச்சாரப் போராட்டத்தில் மொழிப் போராட்டமும் முக்கிய பங்கு வகித்தது. 1955 ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினையை ஒட்டி பெரியார் வெளியிட்ட அறிக்கையே அதற்கு ஒரு முக்கிய சான்று. ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்ற மூன்று பகுதிகளும் பிரிந்த பின்பு தமிழர் மட்டுமே வாழக்கூடிய ஒரு நிலப்பரப்புக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டாமல் ‘சென்னை நாடு’ என்று டெல்லி அரசு பெயர் சூட்ட இருப்பதை முன்கூட்டியே அறிந்து அந்தக் கண்டன அறிக்கையைப் பெரியார் வெளியிட்டார்.
“நம் நாடு எது? நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால் பிறகு தமிழன் எதற்கு உயிர்வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை” என்று மனம் வெதும்பி சென்னை நாட்டிற்குத் “தமிழ்நாடு” என்றே பெயர் வைக்கவேண்டும் என்று “மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக்” கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சங்கரலிங்கனார், ம.பொ.சி என பல்வேறு தரப்பிலும் இந்தக்குரல் ஒலித்தது. பின்பு 1968 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் மதராஸ் ஸ்டேட் “தமிழ்நாடு” ஆகியது.
இப்படியாக நம் மொழியையும் பண்பாட்டையும் விட்டுக் கொடுக்காமல் தமிழருக்காக, தமிழ்நாட்டுக்காகப் பெரியார் பாடுபட்டுக் கொண்டிருந்தபோது, இன்று ‘தமிழ் இனம்’ என்று மார்தட்டிக் கொள்பவர்கள் எல்லாம் குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வைத்து விளையாடிக்கொண்டு இருந்திருப்பார்கள். அப்படியே விளையாடிய கையோடு அரசியலுக்கு வந்துவிட்டால் எப்படி? இப்போது நூல்களெல்லாம் கிண்டிலில் கூட கிடைக்கின்றன. வரலாற்றைப் படித்துப் பார்க்கலாம் அல்லவா?