சென்னை, செப். 16: திமுகவில் இருந்து தயாநிதி மாறனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதை அடுத்து, அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழு விரைவில் கூடி முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.
.
முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரிக்கும், சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோருக்குமிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, முதலமைச்சர் கருணாநிதியையும், அவரது குடும் பத்தினரையும் சமாதானப்படுத்த மாறன் சகோதரர்கள் முயன்றனர்.
கருணாநிதி குடும்பத்தில் அவரது மகள் செல்வி, அவரது கணவர் செல்வம், மு.க. ஸ்டாலின் ஆகியோர் இந்த சமரசத்துக்கு ஆதரவு தெரிவித்த போதிலும், மு.க. அழகிரி பிடிவாதமாக இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, மாறன் சகோதரர்களின் முயற்சிகள் தோல்வி அடைந்தன.
கருணாநிதி குடும்பத்தினருடன் இனி ஒட்டமுடியாது என்ற நிலைமை ஏற்பட்ட பின்னர், மாறன் சகோதரர் களின் சன் டிவியில் திமுக அரசுக்கு எதிரான செய்திகள் அதிகம் இடம் பெற தொடங்கின.
மேலும் ஒரு காலத்தில் சன் டிவி ஓரங்கட்டி வைத்திருந்த வைகோ, விஜயகாந்த், சரத்குமார் போன்ற தலைவர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பப்படுகிறது.
அந்த தலைவர்களும் சன் டிவிக்கும், அழகிரிக்கும் இடையே நடக்கும் கேபிள் யுத்தத்தில் சன் டிவிக்கு ஆதரவாக அறிக்கைகள் கொடுத்து வருகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக திமுகவின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கைகள் தலைப்பு செய்திகளாக இடம் பெற்று வருகின்றன.
அதிமுகவின் ஜெயா டிவியை விட சன் டிவி அரசுக்கு எதிரான பிரச்சாரத் தை மேற் கொண்டிருப்பதால் ஆவேச மடைந்த திமுகவினர் தயாநிதி மாறனை விலக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். எனினும் கட்சி தலைமை இதுபற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, தேனியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தை சன் டிவி நேரடியாக ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயா டிவியே அவரது பேச்சை நேரடியாக ஒளிபரப்பாத போது, ஒருகாலத்தில் அதிமுக ஆட்சிக்கு எதிராக திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த சன் டிவி, இந்த நடவடிக்கையை மேற்கொண்டது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவின் பேச்சில் கருணாநிதியின் குடும்பத்தினர் சிலரது பெயர்களை அவர் குறிப்பிட்ட போது அதனுடைய ஆடியோ தடை ஏற்பட்டது. அதே போல மாறன் சகோதரர்களை பற்றி அவர் சாட்டிய குற்றச்சாட்டுகளும் பேச்சில் இருந்து நீக்கப்பட்டன. எனினும் கருணாநிதியின் அரசு மீது ஜெயலலிதா தொடுத்த சரமாரியான குற்றச்சாட்டுகளை ஒன்றுவிடாமல் சன் டிவி ஒளிபரப்பியது.
திமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக நேற்று மாலை மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதையும் நேரடியாக சன் டிவி ஒளிபரப்பியது.
இடையில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்ட ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தையும் அந்த டிவி ஒளிபரப்பியது.
இதுபற்றி விசாரித்தபோது அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து தலைவர்களின் பேச்சுக்களையும் இனி ஒளிபரப்ப சன் டிவி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல, தினமலர் நிர்வாகம் தொடர் பான வழக்கில் கருணாநிதியின் மருமகன் செல்வம், சன்டிவியின் சார்பில் தாக்கல் செய்த பதிலும் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.
சன் டிவி நடுநிலையாக செயல்படுவதாக கூறி கொண்ட போதிலும், அரசுக்கு எதிராகவே அது செயல்பட்டு வருவதாக சொல்லி தயாநிதி மாறனை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுகவினர் தலைமையை வற்புறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தயாநிதி மாறன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக நேற்று செய்திகள் பரவின. ஆனால் அந்த செய்திகள் வெறும் வதந்தி என பின்னர் தெரியவந்தது.
சன் டிவிக்கு எதிராக திமுகவினர் கடும் கோபத்தில் இருப்பதால், அவர் நீக்கப்படுவது உறுதி என தெரிகிறது. எனினும் எடுத்தேன், கவிழ்த்தேன் என முடிவெடுக்காமல், விரைவில் கட்சியின் உயர்நிலை செயல்திட்ட கூட்டத்தை கூட்டி விவாதித்து இதுபற்றி முடிவெடுக்கப்படும் என நெருங்கிய கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.