தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டிய நிதியை அரசின் கவர்ச்சித் திட்டங்களுக்கு திசை திருப்பிவிட்டு தவறான கணக்கு காண்பிக்கிறார்கள் என்றும், இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை சமூகப் பொருளாதார வாழ்வில் பிற சமூகங்களுக்கு சமமாக கைதூக்கிவிடப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசினால் கொண்டு வரப்பட்டது சிறப்பு உள்கூறு திட்டமாகும. இத்திட்டம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் 1980ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இத்திட்ட விதிகளின்படி மத்திய, மாநில அரசுகளுடைய நிதிநிலை அறிக்கையில் அந்தந்த மாநிலங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுடைய ஜனத்தொகைக்கு ஒப்ப திட்டச் செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
உதாரணத்திற்கு தமிழ்நாட்டினுடைய மொத்த பட்ஜெட் 60 ஆயிரம் கோடி, அதில் திட்டச் செலவு 20 ஆயிரம் கோடி, இதில் 10 விழுக்காடு அதாவது 3,800 கோடி ரூபாயை தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு பிரத்தியேகமாக செலவு செய்வது மாநில அரசின் கடமையாகும். பாலங்கள் கட்டுவது, சாலைகள் போடுவது, அணைகள் கட்டுவது போன்ற பெரிய திட்டங்கள் இதில் அடங்காது. அரசினுடைய வேறு எந்தப் பொது திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படுத்தக்கூடாது. அரசினுடைய பிற திட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் பயன்பெறுவார்களேயானால் அதுவும் உள்ளடங்காது. தமிழ்நாட்டின் அரசினுடைய கலர் டி.வி. கேஸ் வழங்குதல் போன்ற திட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் பயன் பெற்றிருந்தால் கூட அந்த திட்டத்திற்கு சிறப்பு உள்கூறு திட்ட நிதி பயன்படுத்தக்கூடாது.
தமிழ்நாட்டரசு கடந்த 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சிறப்பு உள்கூறு திட்டத்தின் கீழ் 3,828 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக தெரிவித்தது. சிறப்பு உள்கூறு திட்ட நிதிகளின்படி 3,828 கோடி ரூபாயை முழுக்க முழுக்க தமிழகத்தில் இருக்கக்கூடிய 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், சுகாதார மேம்பாட்டிற்கும், உயர் கல்விக்கும் என முறையாக ஒவ்வொரு துறைக்கும் பங்கிட்டு செலவழித்திருக்க வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகளுக்கு மாறாக தமிழ்நாடரசு செயல்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டிய பிரத்தியேக நிதியை தமிழ்நாட்டிரசின் கவர்ச்சித் திட்டங்களுக்கு திசை திருப்பிவிட்டு தவறான கணக்கு காண்பிக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. மேலும் 2011இல் ஒதுக்கப்பட்ட நிதியில் 720 கோடியை செலவழித்திருப்பதாக சொல்வது முழுக்க முழுக்க தவறான தகவலாகும். இது தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்ற நினைக்கும் செயலாகும். தி.மு.க. அரசு 2006ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த ஐந்தாண்டு காலத்தில் சிறப்பு உள்கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி எவ்வளவு? நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு துறை வாரியாக எவை எவை? என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.