கொழும்பில் இருந்து செயல்படும் நீலகண்டன் மற்றும் நீலகண்டன் என்ற சட்ட நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தலைமை நீதிபதி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தேசிய வளர்ச்சி வங்கியில் மட்டுமே கணக்கை வைத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
தான் செயல்பாட்டில் வைத்திருந்த அனைத்து வங்கிக் கணக்குகள் குறித்த விபரங்களையும் தலைமை நீதிபதி தனது சொத்துக்களின் விபரத்தோடு அரசிடம் கொடுத்திருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வங்கியில் ஷிரானி பண்டாரநாயக்கா பெயரில் பணம் ஏதும் இல்லாத சில பழைய இயங்காத கணக்குகள் இருப்பதாக தேசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதிக்கு முன்னதாக வேறு சில வங்கிகளிலும் செயல்படாத சில வங்கிக் கணக்குகளை தமது வாதி வைத்திருக்கலாம் என்றும் அந்த சட்ட நிறுவனம் கூறியுள்ளது. தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தின் முக்கிய அடிப்படையாக ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இந்த விளக்கம் வந்துள்ளது.
தலைமை நீதிபதியின் சொந்த சகோதரியும் அவரின் கணவரும் ஆஸ்திரேலியாவில் வாழ்வதாகவும் அவர்கள் தமது தேவைக்காக கொழும்பில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை வாங்க தலைமை நீதிபதியின் வங்கிக் கணக்கில் சுமார் 27 மில்லியன் ரூபாய்களை செலுத்தியதாகவும், அதை ஷிரானி பல தவணைகள் மூலம் அந்த குடியிருப்பை கட்டும் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை வங்கி உறுதிப்படுத்தியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதியின் வங்கிக் கணக்குக்கு 34 மில்லியன் ரூபா வந்ததாக தெரிவிக்கும் செய்திகள் அடிப்படையற்றது என்றும் தலைமை நீதிபதி பக்கசார்பின்றி தனது பணிகளை தொடர்ந்து செய்து வருவார் என்றும் அந்த சட்டத்தரணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விமல் வீரவங்ச, ராஜித்த சேனாரத்ன ஆகிய உறுப்பினர்களுக்கு எதிராக தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க கடந்த காலங்களில் தீர்ப்புகளை அளித்துள்ளதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி சந்திரபால இந்த அமைச்சர்கள் அங்கம் வகிக்கும் தெரிவுக்குழு மூலம் நீதியான விசாரணைகள் நடக்குமா என்பது சந்தேகத்துக்கு உரியது என்றும் கூறினார்.
இந்த ஆளுங்கட்சி தெரிவுக்குழு உறுப்பினர்களால் தலைமை நீதியரசர் பழிவாங்கப்படும் அபாயம் இருப்பதாகவும் சட்டத்தரணி சந்திரபால குமாரகே தெரிவித்தார்.
லெமென் பொப் கோமாளி விமல் வீரவங்ச ஏற்கனவே தலைமை நீதிபதி குற்றவாளி என ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே, தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒரு குற்றவாளி என்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் ஏற்கனவே அரச ஊடகங்களில் கருத்துவெளியிட்டுள்ளதாக ஜனநாயகத்தை காப்பதற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் கே.எஸ்.ரத்னவேல் தெரிவித்தார். இவ்வாறான அமைச்சர்கள் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது என்பது கேலிக்கூத்தானது என்றும் சட்டத்தரணி ரத்னவேல் கூறினார்.