மரக்கறி மற்றும் பழவகைகள் பிளாஸ்டிக் கூடைகளிலேயே போக்குவரத்து செய்ய வேண்டுமென அண்மையில் அறிவிக்கப்பட்டதும், இந்த சட்டத்திற்கு விவசாயிகளும் விற்பனையாளர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
எனினும், சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் அறிவித்துள்ளார்.
லான்ட் மாஸ்டர் ட்ரக்டர் மற்றும் முச்சக்கர வண்டிகளில் மட்டும் பிளாஸ்டிக் கூடைகள் இன்றி மரக்கறி வகைகளை போக்குவரத்து செய்ய முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மரக்கறி மற்றும் பழ வகைகளை போக்குவரத்து செய்வது குறித்த சட்டத்திற்கு தம்புள்ள உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தைக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. மெனிங் சந்தை வர்த்தகர்களால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்ரிக் கூடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றிய இவ்வார்ப்பாட்டத்தால் புறக்கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தம்புள்ளையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் – பொதுமக்கள் கல்லெறி
தம்புள்ளை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மரக்கறி வியாபாரிகள் சிலர் மீது சற்று நேரத்திற்கு முன்னர் பொலிஸார் கண்ணீ்ர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தம்புள்ளை நகரில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தற்போது அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்களும் பொலிஸாரை நோக்கி கற்களால் எறிந்து தாக்குதல் நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தினால் தம்புள்ளை வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைதியற்ற முறையில் செயற்படும் குழுவினர், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.