மட்டக்களப்பு மாவட்டம் கிரான் மற்றும் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக எல்லைக்குள் மாற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தமிழ் அரசியல்வாதிகளிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தான் ஜனாதிபதிக்கும் தொலைநகல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்,
“வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புனானை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களும் மாங்கேணி தெற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காரமுனை, காரச்சேனை, மதுரங்கேணிக்குளம் எல்லை,ஆனைசுட்டகட்டு ஆகிய கிராமங்களையும் கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாகனேரி, புனானை மேற்கு,வடமுனை மற்றும் ஊற்றுச்சேனை ஆகிய தமிழ்க் கிராமங்களையும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ் மக்களின் அனுமதியில்லாமல், அவர்களது ஆலோசனையின்றி மேற்கொள்ளப்பட்டுவரும் இந்நடவடிக்கை காரணமாக அப்பிரதேசத்திலுள்ள தமிழ் மக்கள் அதிருப்தியும் விரக்தியும் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் காணி சுவீகரிப்புக்கு ஒப்பான இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்கு அமைச்சர்கள், முதலமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.