இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடம் பெற்றுவரும் பேச்சுக்கள் தொடர்பாகவும் கடந்த திங்களன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அலட்சியப்படுத்தி விடக்கூடியவை அல்ல.
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களின் உரிமைக்கோரிக்கைகளைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் அம் முயற்சிகளை குழப்பும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் டக்ளஸ். அதன் தொடர்ச்சியாக இப்போதும் தமிழ் மக்களின் நலன்களைப் பேணுதல் என்ற போர்வையின் கீழ் நின்று அரசின் அடக்கு முறை நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையிலும் தமிழ்த் தேசியக்ககூட்டமைப்பின் முயற்சிகளை மலினப்படுத்தும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ்க்கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு ஒரு ஒத்தகருத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்வைக்க வேண்டும் என்ற அவரின் கருத்து கேட்பதற்கு அழகானது என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே அரசுக்கு ஆதரவு கொடுத்த சில தமிழ்க் கட்சிகள் உட்பட பல தமிழ்க்கட்சிகள் தற்சமயம் தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளன என்பது ஒருபுறமிருக்க, எந்த அடிப்படையில் தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்பதை அவர் குறிப்பிட வேண்டும். அவர் அடிக்கடி சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கிறது எனக் குற்றஞ்சாட்டி வருகிறார் அப்படியானால் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய கோரிக்கைகளை முன்வைப்பதற்கு தமிழ்க்கட்சிகள் ஐக்கியப்பட வேண்டுமா?
இவ்வாறு கேள்வி கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் யாழ்.மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பங்குகொள்வது தொடர்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெளிவான கொள்கைகளை முன்வைத்துள்ளது. அதாவது இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அரசும் த.தே.கூட்டமைப்பும் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்தபின்பு அந்த இணக்கப்பாட்டை முன்வைத்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்து கொள்வது என்பது தான் வடக்குக் கிழக்கு இணைப்பு. வடக்கு கிழக்கு இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரம் என்பன தொடர்பாக பேச்சுக்களில் ஒரு இணக்கப்பாடு எட்டப்படவில்லை. அதேவேளையில் பேச்சு தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. அமைச்சரவை முடிவுகள் என்ற பேரில் சில கருத்துக்கள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவால் வெளியிடப்பட்டன.
ஆனால் அவை இன்னும் பேச்சு மேசையில் முன்வைக்கப்படவில்லை, விவாதிக்கப்படவுமில்லை. அப்படியான ஒரு நிலையில் நாடளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்து கொள்வதானால் அமைச்சரவையின் முடிவுகளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுவிட்டது என்று தானே அர்த்தம்? இதிலிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து எவ்வளவு நச்சுத்தன்மை வாய்ந்ததும் நரிநோக்கம் கொண்டதும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அதிலும் எல்லா தமிழ்க்கட்சிகளும் ஒன்றுபட்டு ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களை விற்க வேண்டும் என விரும்புகிறார் அவர்.
கூட்டமைப்பினர் 15 சுற்றுப் பேச்சுக்களை நடத்திய போதும் அரசின் மீது நம்பிக்கை வைக்கவில்லை எனவும் நம்பிக்கை வைத்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நம்பிக்கை என்பது கண்மூடித்தனமாக வைக்கப்பட முடியாதது. எமக்கு அரசின் மேல் நம்பிக்கை உண்டாக்குவது அரசின் நடைமுறைகளே. பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொண்ட விடயங்களையே நிறைவேற்றாத ஒரு தரப்பை எப்படிக் கண்மூடித்தனமாக நம்பமுடியும்?
தொடர்ந்து அவைகளை நிறைவேற்றி வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் தானே த.தே.கூட்டமைப்பு தொடர்ந்து அரசுடன் பேசிவருகிறது. நம்பிக்கை என்பது வேறு; அடி வருடித்தனத்தை நம்பிக்கை எனக்கூறுவது வேறு என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் இப்போது எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்திருக்கும் என அமைச்சர் தெரிவித்த கருத்து எவ்வளவு உண்மைக்குப் புறம்பானது என்பதைக் கடந்த காலமே சொல்லும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று மாகாண சபையில் முதலமைச்சர் பதவி வகித்த வரதராஜப்பெருமாள் ஒரு சிற்றூழியரைக் கூட நியமிக்க அதிகாரமற்ற முதலமைச்சர் பதவி எனக் கூறி தமிழீழ பிரகடனம் செய்தது வரலாறு.
இப்படியான இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வைத்து தமிழ் மக்கள் உரிமைகளைப் பெற்றுவிட முடியும் என்பது அப்பட்டமான ஏமாற்றல்லவா?
இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம் எல்லாம் இப்போது பறிக்கப்பட்டுவிட்டனவே! இப்படிப் பறித்துப் பறித்தா தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அமைச்சர் கனிந்து வரும் சந்தர்ப்பத்தைத் தவற விடக்கூடாது என்று கூட்டமைப்புக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
எது கனிந்து வரும் சந்தர்ப்பம் என்பதைத் தான் எம்மால் புரிந்து கொள்ளமுடியவில்லை?
வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட, காணி, பொலிஸ் அதிகாரமற்ற ஓர் அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொள்வதா?
அடிப்படையில் அப்படியொரு சந்தர்ப்பம் கனிந்துவருமானால் உறுதியாகத் தடம்புரளாமல் நின்று எமது உரிமைகளை வென்றெடுப்பது தான் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்துவதாகும். மாறாக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து அடிமையாவது அல்ல!
அப்படியிருந்த போதிலும் இலங்கை அரசு மேற்கொண்ட எத்தனையோ இழுத்தடிப்புகள், திசை திருப்பல்கள் மத்தியிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடு காரணமாக பேச்சுகள் ஒரு முக்கிய கட்டத்தை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில் இப்பேச்சுகள் முறிவடையும் நிலை ஏற்பட்டால் அதற்கான பழியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையில் போட முயற்சிக்கும் சதியின் ஒரு பகுதியாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்களை நோக்க வேண்டி உள்ளது. ஆனால் தமிழ் மக்கள் எப்போதுமே இப்படியான நடவடிக்கைகளைக் கண்டு ஏமாந்தது கிடையாது என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றுள்ளது.
வணக்கம் எம் பி,
டக்ளசுவுக்கு எதிராக தமிழ் மக்கள் போராட வேண்டும் என்பது உண்மையே. ஆனா நீங்கள் அல்ல. உங்களுக்கும் டக்களசுவுக்கும் உள்ளது யாவரப் பிரச்சனை. எம்பி, யாழ்ப்பாணத்தில் அரைவாசி கவுர்மேந்து புரஜக்டை செய்வது நீங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். வேணுமென்றால் விலாவாரியாச் சொல்லுறன்..