பிரித்தானிய தமிழர் பேரவை அண்மையில் இலங்கையில் நடைபெறும் நிலப்பறிப்பிற்கு எதிராகக் கூட்டம் ஒன்றை நடத்தியது. உலகம் முழுவதும் நிலப்பறிப்பிற்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். பலர் வெற்றிபெறுகிறார்கள். இந்த நிலையில் உலக பல்தேசிய நிறுவனங்களின் காவல் படை போல மாறிவரும் இலங்கை இராணுவத்தால் தமிழர் பிரதேசங்களில் நடத்தப்படும் நிலப்பறிப்பிற்கு எதிரான கூட்டத்தில் பிழைப்புவாதிகளும் வாக்குப் பொறுக்கிகளும் கலந்துகொண்டனர். இவர்களுள் இன்னொரு இளைஞன் பலரது கவனத்தையும் ஈர்த்தார். 22 வயதான இவர் பரபப்பை எப்படி ஏற்படுத்துவது என்று நன்கு தெரிந்துவைத்திருப்பவர். அரசியல் திட்டங்கள் எதுவுமற்ற பரபரப்பையே தமது வாழ்வாகக் கொண்ட பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் இவர் ஒட்டிக்கொண்டதில் எந்த வியப்பும் கிடையாது. இலங்கையில் கைது செய்யப்பட்டதாக இவர் நடத்திய நாடகம் சவுக்கு இணையத்தில் வெளியானது. மக்களின் கண்ணீரும் அவலமும் பிழைப்பு வாதிகளின் பணப்பையை நிரப்புகின்ற அவலம் இன்னும் தொடர்கிறது.வன்னிப் போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை இச் சிறுவன் ஒத்துக்கொண்டதாக புலம் பெயர் கோமாளி ஊடகங்கள் அனைத்தும் இன்று அதிரடிச் செய்திகளை வெளியிட்டுள்ளன.
வன்னிப் படுகொலைகளின் போது இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதில் எந்தச் சந்தேகமும் இல்லை ஆனால் அந்தக் கோர நிகழ்வை பிழைப்பிற்காகப் பயன்படுத்திக்கொள்வதும் கொலைக்கு நிகரான குற்றமே.
சவுக்கு இணையத்தின் கட்டுரை:
கா தமிழ்ப் பிரபாகரன் என்ற இளைஞன், இலங்கை சென்று, அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டதும், சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சவுக்கு தளத்திலும், மகா தமிழ்ப் பிரபாகரன் பணியாற்றிய விகடன் குழும நிறுவனங்களின் ஊடகங்கள் எதிலும் இந்தக்கைது நடவடிக்கை குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பது குறித்து எழுதப்பட்டிருந்தது. இணைப்பு
இந்த நிலையில், அந்தக் கட்டுரை வெளிவந்ததும், ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சல் அப்படியே தரப்படுகிறது.
“என் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. இப்போதைக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனால் மகா தமிழ் பிரபாகரன் இலங்கை சென்றுள்ளார் கைதாகிவிட்டார் என்று எல்லோருமே செய்திகள் போடுகிறார்கள்.ஆனால் தமிழ் பிரபாகரனின் உண்மை முகம் உங்களுக்கு தெரியாது. இளமை காலத்தில் அவருக்கு ஈழ உணர்வு இருந்தது உண்மை தான். ஆனால் போகப்போக அதை வைத்து பிரபலமாக வேண்டும் என்று செயல்பட ஆரம்பித்தார். கிட்டத்தட்ட இன்றைக்கு வைகோவும், சீமானும் என்ன செய்கிறார்களோ அதை தான் அவரும் செய்யஆசைப்படுகிறார். நார்வேயைச் சேர்ந்த ஒரு ஈழத்தமிழர் வாழ்கிறார். மென்பொருள் பொறியாளர்.அவருக்கு ஈழ உணர்வு அதிகம். மகா தமிழ்பிரபாகரனின் கட்டுரைகளை இணையத்தில் படித்துவிட்டு முகபுத்தகத்தில் அவருடன் நண்பரானார். அப்போது தனக்கு ஒரு தமிழ் பல்சுவை இணையத்தளம் ஆரம்பிக்க விருப்பம் என்று தமிழ் பிரபாகரனிடம் அந்த நார்வே ஈழத்தமிழர் சுபாஷ் கூறினார். உடனே தமிழ் பிரபாகரனும் அதற்கு சம்மதம் தெர்வித்தார். உடனே அலுவலகத்திற்காக சென்னை அண்ணா நகர் மேற்கு தென்றல் காலனியில் 60000 முன் தொகை கொடுத்து ஒரு வீட்டை வாடகை எடுத்தார் தமிழ் பிரபாகரன் . அந்த 60000 நார்வே ஈழத்தமிழர் கொடுத்தது. பிறகு இணைய இணைப்பு வேண்டும் என்று கணிசமான தொகையையும் நார்வே ஈழத்தமிழர் கொடுத்தார். ஈழம் செல்ல வேண்டும் (புலித்தடம் தேடி தொடருக்காக சென்றது தான்) என்று பணம் வாங்கினார். தவிர ஆப்பிள் லேப்டாப் போன்றவை வேண்டும் என்றார். ‘அ’னா என்று அந்த இணையத்தளத்திற்கு பெயர் வைத்தார்கள். முதலில் முகபுத்தகத்தில் முன்னோட்டம் விடப்பட்டது. சுபாஷ் இணையத்தளம் தொடங்குவதற்காக நிறைய பணம் கொடுத்தார். தமிழ் பிரபாகரன் நார்வே சென்று வேலை செய்வதாகவும், பிரபாகரனின் இரண்டு நண்பர்கள் (பத்திரிகையாளர்கள்) அ’னாவை தமிழ் நாட்டில் இருந்து பார்த்து கொள்வதாகவும்முடிவு. மேலும் அந்த அண்ணா நகர் அலுவலகத்தில் இரண்டு நண்பர்களுடன் தங்கினார் தமிழ் பிரபாகரன். வாடகை நார்வே ஈழத்தமிழர் கொடுத்தார். ஆனால் தமிழ் பிரபாகரனோ அந்த நண்பர்களிடம் தனியாக இரண்டாயிரத்தை வாடகையாக வாங்கினார். பின்னர் நார்வேயிலிருந்து பிரபாகரன் முக்கியமான கட்டுரைகள் எழுதவதாகவும் பேசி முடிவு எடுத்தார்கள்.ஆனால் புலித்தடம் தேசி தொடர் வந்த பிறகு நார்வே ஈழத்தமிழரால் தமிழ் பிரபாகரனை தொடர்பு கொள்ள முடியவில்லை.ஒன்றரை லட்சத்தை எடுத்து கொண்டு இணைதளம் ஆரம்பிக்காமல் ஏமாற்றினார் பிரபாகரன். தவிர ஈழம் ஈழம் என்று அவர் பொங்கினாலும் மனதளவில் அவருக்கு சாதிப்பற்று ரொம்பவே அதிகம் (வன்னியர்). முன்பு புலித்தடம் தேடி தொடர் எழுதுவதாக அவர் கூறி இரண்டுமாதம் காலம் அவர் ஈழம் சென்ற போது சில இடங்களில் மட்டுமே சென்று பார்த்துவிட்டு தமிழகம் வந்து ஈழ இணையத்தளங்களில் இருந்து செய்திகளை சுட்டு திரித்து தான் பார்த்தது போல் தான் புலித்தடம் தேடியை எழுதினார் என்பது தனிக்கதை. அது மட்டுமில்லாமல் சீமானை ஆரம்பத்தில் நெருங்கியவர்களிடம் விமர்சனம் செய்தவர், பிறகு அவரின் மக்கள் முன்னால் நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். காரணம் கேட்ட நண்பர்களிடம் பணம் வருதுல்ல என்ன செய்ய என்றாராம்.மேலும் சில ஈழ நண்பர்களிடம் அவர் பணம் வாங்கிவிட்டு தொடர்பு கொள்ளாமல் விட்டதாக சொல்லப்படுகிறது. மக்கள் முன்னால் நிகழ்ச்சியில் சீமான் அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு தான் அவர் புதிய தரிசனத்தில் தொடர் எழுதினார். காரணம்தெரியவில்லை. இப்பேற்பட்ட மகா பிராடு தமிழ் பிரபாகரனை தூக்கி பிடிக்க அவசியமில்லை. இல்லையென்றால் இன்னொரு கருணாவை, இன்னொரு சீமானை,இன்னோரு வைகோவை உருவாக்கியது போல் ஆகிவிடும். வேண்டுமானால் தமிழ் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்த விகடன் நிருபர்ம் திருநெல்வேலி ஹெலோ பண்பலை வேலை செய்த சிலரிடம் கேட்டுப்பாருங்கள் உண்மை தெளிவாக புரியும். கடந்த சில வருடமாகவே தமிழ் பிரபாகரனுக்கு மீடியா வெளிச்சம் இல்லை கைது செய்யப்படுவோம் என்பது தெரிந்தே தான் அவர் இந்த முறை ஈழம் சென்றார். .நண்பர்களிடமே அதை கூறியிருக்கிறார். அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஈழ ஆதரவாளர்கள் தயவு செய்து போலிகளை ஊக்குவிக்க வேண்டாம்.. உண்மையை வெளிக்கொணர்ந்தால் இனத்திற்கு நல்லது.”
இதுதான் அந்த மின்னஞ்சல். இந்த மின்னஞ்சலில் உண்மைத் தன்மை குறித்து, பிரபாகரனோடு பணியாற்றியவர்கள் மற்றும் நார்வேயைச் சேர்ந்த நண்பர்களிடமும் விசாரித்தபோது, இது உண்மையே என்று தெரிய வருகிறது. ஆனால், தமிழ்ப் பிரபாகரன், நார்வே தமிழரிடம் பணம் வாங்கியது உள்ளிட்ட விவகாரங்களை முற்றிலும் மறுக்கிறார்.
தமிழ்ப் பிரபாகரன், இலங்கைக்கு உரிய கடவுச்சீட்டில், இலங்கை தூதரகத்திலிருந்து, சுற்றுலா பயணி என்ற விசாவோடு சென்றிருக்கிறார். அங்கே சென்று, ஈழ எம்பி ஸ்ரீதரனோடு, கிளிநொச்சி என்ற பகுதியில், புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கையில் மகா.தமிழ் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்ட பின், இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப் பட்டார். இலங்கையில் பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்பதை, அவரே பிபிசி தமிழோசைக்கு அளிக்கும் செவ்வியில் விபரமாக குறிப்பிடுகிறார்.இணைப்பு.
கடந்த வாரம் இந்தியா திரும்பியதும் சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார் பிரபாகரன். அப்போது “நான் விமான நிலையத்தில் விரிவாகப் பேசவில்லை. தற்போது சொல்லாமல் விட்ட விவகாரங்களை சொல்லவே உங்களை சந்திக்கிறேன். என்னைக் கைது செய்தபோது, ஆயுதங்களோடு கைது செய்தார்கள். என்னை தாக்க வருவது போல அச்சுறுத்தினார்கள். என்னுடைய கேமரா மற்றும் எம்.பி ஸ்ரீதரனின் கேமரா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டு நான் நாச்சிகுடா காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். கைது செய்து விசாரணை செய்யும்போது, என்னை நீ ரா நிறுவனத்தின் ஏஜென்டா என்று கேட்டார்கள். உங்கள் நாட்டில் காஷ்மீர், வடகிழக்கு, மற்றும் மாவோயிஸ்ட் பிரச்சினைகள் இருக்கிறதே… அதையெல்லாம் விட்டு விட்டு, எங்கள் நாட்டு பிரச்சினையை ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டனர். லட்சக்கணக்கான மக்களை கொன்று அழித்துள்ளீர்களே என்று நான் சொன்னேன். மறுநாள் என்னை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக சொன்னார்கள், ஆனால் ஆஜர்படுத்தவில்லை. என்னை வெள்ளை வேனில் ஏற்றி, தீவிரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அழைத்து சென்றார்கள். ஈழ எழுத்தாளர் வஐச ஜெயபாலனையும் அதே வேனில்தான் அழைத்துச் சென்றதாக தெரிவித்தார்கள். எங்கள் நாட்டிலிருந்து நாங்கள் எம்.ஜி.ஆர், பூஜா போன்றவர்களை அளித்துள்ளோம். ஆனால், அவர்களையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு, எங்கள் நாட்டை குறை சொல்கிறீர்களே என்று கேட்டார்கள். எனக்கு அளித்த உணவு சோதனை செய்யப்பட்ட பிறகே அளிக்கப்பட்டது. என்னை வைத்திருந்தது இரண்டாவது மாடியில். ஆறாவது மாடியில் கரும்புலிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள். உனக்கும் வைகோவுக்கும் என்ன தொடர்பு ? உனக்கும் திமுக மற்றும் அதிமுக அரசியல்வாதிகளுக்கும் என்ன தொடர்பு. இலங்கை எம்.பி ஸ்ரீதரனை உனக்கு எப்படித் தெரியும் என்று தொடர்ந் கேட்டார்கள். இந்திய அரசாங்கம்தான் எங்களுக்கு விசாரணை முறைகளையே கற்றுத் தந்தது என்று சொன்னார்கள். நீ புலிகளின் ஆதரவாளரா என்று கேட்டார்கள். இரவு 12 மணி வரை விசாரித்து விட்டு, காலையில் ஆறு மணிக்கே எழுப்பி விட்டார்கள். என்னை உளவியல் ரீதியாக சித்திரவதை செய்தார்கள். நான் எழுதிய புலித்தடம் தேடி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வைத்துக் கொண்டு, என்னை கேள்வி கேட்டனர்” என்று கூறினார். இதையடுத்து, செய்தியாளர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர்.
விமான நிலையத்தில் பேசியபோது, இலங்கையிலிருந்து சில முக்கியமான ஆதாரங்களை எடுத்து வந்திருப்பதாக சொல்லியிருந்தீர்களே… அது என்ன. அதை எப்போது வெளியிடப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, அதை ஜெனிவாவில்தான் வெளியிடுவேன் என்று கூறினார் பிரபாகரன். இப்போது வெளியிட மாட்டீர்களா என்பதற்கு ஜெனிவாவில்தான் வெளியிடுவேன் என்று கூறினார்.
ஒரு நாட்டில் சுற்றுலாப் பயணியாக சென்று, அந்த இடத்தில் பத்திரிக்கையாளாக பணியாற்றினால் உங்களை பிடித்து விசாரித்ததில் என்ன தவறு என்று கேட்டதற்கு, மற்ற சுற்றுலாப் பயணிகள் போலத்தான் நானும் சென்று புகைப்படம் எடுத்தேன். நான் சென்ற பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகள் அல்ல. அப்படி இருக்கையில் என்னை அவசியமின்றி கைது செய்தார்கள் என்றார் பிரபாகரன். ஏன் நீங்கள் பத்திரிக்கையாளர் விசா பெற்று செல்லவில்லை என்று கேட்டதற்க, நான் பத்திரிக்கையாளர் விசா கேட்டால், அது கிடைக்க மிகுந்த தாமதமாகும். மேலும், நான் செல்வது ரகசியமாக இருக்காது. என்றால் பத்திரிக்கையாளர் விசாவுக்காக ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க முடியாது என்று கூறினார்.
உங்களை பிடித்து சோதனையிட்டு, உங்களிடம் இருந்தவற்றை பறிமுதல் செய்திருப்பார்களே… பிறகு என்ன ஆதாரத்தை எடுத்து வந்தீர்கள் என்று கேட்டதற்கு.. அங்கிருந்தே நான் இணையம் வழியாக அனுப்பியிருக்கலாம் அல்லவா என்று கேட்டார். அது குறித்த உரிய நேரத்தில் கூறுகிறேன் என்றார்.
உங்களை கைது செய்த இலங்கை அதிகாரிகள், நீங்கள் இலங்கையில் தொடர்பு கொண்ட தமிழ்ப் பத்திரிக்கையாளர்களை பிடித்து விசாரித்து வருவது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டதற்கு, நான் என்னுடைய செல்போனை இந்தியாவிலேயே விட்டு விட்டு சென்று விட்டேன் என்று கூறினார். இலங்கையில் நீங்கள் செல்போனை பயன்படுத்தவில்லையா என்று கேட்டதற்கு, அங்கே நான் ஒரு எடிசலாட் சிம் வாங்கி பயன்படுத்தினேன் என்ற கூறினார். அந்த செல்போனை இலங்கை ராணுவத்தினர் பறிமுதல் செய்யவில்லையா என்று கேட்டதற்கு, பறிமுதல் செய்தார்கள்… நான் இந்தியா வந்ததும் போஸ்ட் மூலம் திருப்பி அனுப்பி விட்டார்கள் என்றார்.
மகா தமிழ்ப் பிரபாகரனின் இலங்கைப் பயணம் விளைவித்த பயன்களை விட, அது எழுப்பிய கேள்விகள் ஏராளம்.
முதலில் எதற்காக தற்போது இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார் பிரபாகரன் ? ஏற்கனவே இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு, அப்போது கிடைத்த தகவல்களை வைத்தே, புலித்தடம் தேடி என்ற தொடரை எழுதி நூலாக வெளியிட்டார். அந்த நூல் பரவலாக பேசப்பட்ட பிறகு, இலங்கைக்கு விசா கேட்டு விண்ணப்பித்தால் பிரபாகரன் யார் என்று இலங்கை அரசாங்கத்துக்கு தெரியாதா ? அவரை அழைத்து அரசுப் பதவி கொடுத்து கவுரவமா செய்வார்கள் ? 2008ம் ஆண்டு முதல், இந்தியா அளித்த பயிற்சியினாலோ என்னவோ, இலங்கையின் உளவுத்துறை சிறப்பாக வேலை செய்தது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கையாளர்களை போதுமான அளவுக்கு கவனித்தும், கண்காணிப்பிலும் வைத்திருந்தது. இலங்கை அரசு, தமிழ்ப் பத்திரிக்கைகளை கையாண்ட விதம், ஒரு வளர்ந்த நாடுகள் கையாண்டது போல இருந்தது.
போர் 2009ம் ஆண்டிலேயே முடிந்து போனாலும், இன்னமும் இலங்கை அரசு, பதட்டத்தோடுதான் இருக்கிறது. ஒரு முறை புலிகள் இயக்கத்தை வளர விட்டதன் காரணமாக 30 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது, மீண்டும் நடக்கக் கூடாது என்பதில் இலங்கை அரசு தெளிவாக இருக்கிறது. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னர், பெரும்பாலான தமிழ் மக்கள், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, சிங்களர்களோடு சமரசம் செய்து கொண்டு வாழப் பழகி விட்டார்கள். சிங்களனைப் பகைத்தால் உயிர் இருக்காது என்ற நிலையே இப்போது அங்கே நிலவுகிறது. இந்த நிலையில், பிரபாகரன் இலங்கை போய் என்ன ஆதாரத்தை எடுத்து வரப்போகிறார் ?
சமீபத்தில், பத்திரிக்கையாளராக விசா பெற்றுக் கொண்டு, இலங்கை சென்று வந்த பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன் பேசுகையில், இலங்கை அரசு ஒருவரை எந்தப் பகுதிக்கு அனுமதிக்கலாம் என்று நினைக்கிறதோ, அந்தப் பகுதியைத் தாண்டி ஒரு இன்ச் கூட நகர முடியாது என்கிறார். இவர், சர்ச்சைக்குரிய ஒரு பகுதிக்கு செல்ல முயன்றபோது, ஆயுதம் தாங்கிய 15க்கும் மேற்பட்ட ராணுவத்தினரால் தடுக்கப்பட்டதாக கூறுகிறார். இலங்கை அரசு தற்போதும் மிகுந்த பதட்டத்தோடு இருப்பதாகவும், தமிழ் பத்திரிக்கையாளர்கள் என்றாலே கூடுதல் கவனத்தோடு இருப்பார்கள் என்றும், தமிழகத்திலிருந்து இலங்கை செல்லும் பத்திரிக்கையாளரின் மொத்த ஜாதகத்தையும் கையில் வைத்திருப்பார்கள் என்றும் கூறுகிறார்.
இப்படிப்பட்ட சூழலில் பிரபாகரன் என்ன ஆதாரத்தை எடுத்து வருவதற்காக இலங்கை சென்றார் ? சரி. அப்படியே ஆதாரங்கள் கிடைத்து விடுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி வெளியிடப்படும் ஆதாரங்களால், என்ன நடந்து விடப் போகிறது ? சேனல் 4 வெளியிட்ட ஆதாரங்கள், உலகையே உலுக்கியது. அந்த ஆதாரங்களை விடவா பிரபாகரன் தனியாக சென்று ஆதாரங்கள் எடுத்து வந்து சிங்கள அரசை வீழ்த்தி விடப் போகிறார் ?
பிரபாகரன் தனது பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சொன்ன ஒரு விஷயம்.. இலங்கை அரசாங்கம் ஜெனிவா என்றால் பயப்படுகிறது என்றார். இந்தக் கருத்தை சிறுபிள்ளை கூட நம்பாது. ஒரு காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமரை அனுப்பாமல் இருப்பதற்கே, சட்டமன்றத்தில் ஏகமனதான தீர்மானம், அனைத்துக் கட்சிகளின் கோரிக்கை, திமுக தலைவரின் மிரட்டல் என்று எத்தனை பாடுபட வேண்டியதாக இருக்கிறது ? இந்தியா தனது கைப்பிடிக்குள் என்பது இலங்கை அரசுக்குத் தெரியாதா ? அவர்கள் எதற்காக ஜெனிவாவைக் கண்டு அஞ்சப் போகிறார்கள் ?
தமிழக மீனவர்களை வாரந்தோறும் சிறைப் பிடிக்கிறார்கள்…. தாக்குகிறார்கள்.. மீன்களை கடலில் கொட்டுகிறார்கள்…. வலைகளை அறுத்தெறிகிறார்கள்… இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எருமை மாடு போல இருக்கிறது இந்திய வெளியுறவுத் துறை. சொந்த நாட்டின் குடிமக்களை இப்படி அத்துமீறி கைது செய்யும் இலங்கை அரசை கண்டிக்க துப்பில்லாத இந்திய அரசு, ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக செயல்படாது என்பது சிங்களர்களுக்குத் தெரியாதா என்ன ? அவர்கள் எதற்காக பயப்படப் போகிறார்கள் ?
என்னை தூங்க விடாமல் விசாரித்தார்கள் என்கிறார் பிரபாகரன். பாய் விரித்து படுக்க வைத்து, தாலாட்டுப் பாடி தூங்க வைக்க இலங்கை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு என்ன மாமியார் வீடா ? பிரபாகரனுக்கு, காவல்துறை, ராணுவ விசாரணை என்றால் என்ன என்று தெரியவில்லை. ஒரே ஒரு முறை, தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு காவல் நிலையத்துக்கு சென்றால் பிரபாகரனுக்குத் தெரியும். எப்படி விசாரிப்பார்கள் என்று. தமிழகத்தில் உள்ள காவல்துறையிடம், பின்புலம் இல்லாத ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் சிக்கினால் எப்படியெல்லாம் விசாரிப்பார்கள் என்பதை தமிழ்ப் பிரபாகரன் அறிந்திருக்கவில்லை. அதனால்தான் காலையில் ஆறு மணிக்கு எழுப்பி விட்டதை ஒரு பெரும் குறையாக சொல்கிறார்.
தன்னுடைய போனை இலங்கை ராணுவம், தபால் மூலமாக திருப்பி அனுப்பி விட்டார்கள் என்று மகா தமிழ்ப் பிரபாகரன் சொல்வது முழுக்க முழுக்க பொய். தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களுக்குக் கூட தெரியும். பட்டாபட்டி அண்டர்வேரைக் கூட உருவி விட்டுத்தான் அனுப்புவார்கள் என்பது. இலங்கை ராணுவம், பிரபாகரனின் போனை கொரியரில் அனுப்பி வைத்தார்கள் என்று சொல்வது துளியும் நம்பும்படி இல்லை.
நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கையில், பிரபாகரனின் கைது, இந்தியா மற்றும் இலங்கை உளவுத்துறையின் கூட்டு நடவடிக்கை என்றே அனுமானிக்க வேண்டியுள்ளது. உளவுத்துறைகள் இணைந்து கைது செய்து விசாரிக்கும் அளவுக்கு பிரபாகரன் ஒரு முக்கிய புள்ளி கிடையாது. ஆனால், பிரபாகரனுக்கு, ஈழத்தில் உதவி செய்த பத்திரிக்கையாளர்கள் யார், அவரோடு தொடர்பில் இருந்து உதவும் புலம் பெயர்ந்த தமிழர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளவே இந்த கைது மற்றும் விசாரணை நடவடிக்கைகள் என்று எண்ணத் தோன்றுகிறது. இதற்கு ஏற்றார்ப்போல, பிரபாகரன் இந்தியா திரும்பிய நாள் முதலாக, ஈழத்தில் பிரபாகரனோடு தொடர்பில் இருந்த தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள். இது குறித்து, க்ளோபல் தமிழ் நியூஸ் செய்தித் தளத்தில் வெளியான தகவல். இணைப்பு “தமிழ்ப் பிரபாகரன் போய் விட்டார் – அழைப்பு விடுத்தவரும் வழமை போல் தன் வேலைகளில்- அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரனது விடுதலையின் பின், அவருடன் தொடர்புபட்டிருந்தவர்களுக்கு சங்கடமான அல்லது ஆபத்தான நிலமைகள் தோன்றக்கூடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் மகா பிரபாகரனது கைத்தொலைபேசி மற்றும் புகைப்படக்கருவிகளை இலங்கை பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பிரிவு கைப்பற்றி தம்வசம் வைத்துக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மகா பிரபாகரனுடன் தொடர்புகளைப் பேணிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை இலங்கையரசின் புலனாய்வுப்பிரிவு நெருக்கடிக்குள்ளாக்க் கூடும் என்ற அச்சம் தோன்றியுள்ளது.
தனது கைத்தொலைபேசியினை வடக்கின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருப்பதாக மகா தமிழ் பிரபாகரன் தெரிவித்திருந்த போதும் அது தம் வசமில்லையென அந்தப் பிரமுகர் மறுத்துள்ளார். எது எப்படி இருப்பினும் இலங்கையிலுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் பற்றிய விபரங்கள் பல அரச புலனாய்வாளர்களின் விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. சில காலங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் வடக்கிற்கு விஜயம் செய்த தமிழ் மகாபிரபாகரன் அப்பொழுது திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புலித்தடம் தேடி என்ற தொடரை எழுதி வெளியிட்டுப் பிரபல்யமடைந்தார். குறித்த அந்த பயணத்தின் போது அவருக்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் சிவில் சமூக பிரதிநிதிகளெனப் எனப் பலரும் ஒத்துழைத்தனர். போதிய தகவல்களை வழங்கியிருந்தனர். தமது வீடுகளில் தங்குமிடம் வழங்கினர். தமது மோட்டார் சைக்கிள்களில் அழைத்துச்சென்று பாதுகாப்பான பயணங்களிற்கும் உதவினர். அவர் தனது கட்டுரைத்தொகுதியை திரு வை.கோ அவர்களை வைத்து வெளியிட்டார். அதனைக் கூடங்குளத்திலும் வெளியீடு செய்தார். அண்மைக் காலத்தில் தமிழகத்திலிருந்து சொல்லிக் கொள்ளத்தக்கதாக ஊடகவியலாளர்கள் எவரும் இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு சென்றிருக்கவில்லை. ஈழப்பிரச்சினை தொடர்பான விடையங்கள் தமிழ் நாட்டில் இன்னும் கவன ஈர்ப்பைப் பெறுவதை உணர்ந்து கொண்ட பலருள் ஒருவரான மகாப்பிரபாகரன் மீண்டுமொருமுறை ஈழத்துக்கு சென்று செய்திகளை திரட்டவும் ஊடகவெளிப்பாடுகளைச் செய்யவும் ஆர்வம் கொண்டிருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. மகா பிரபாகரன் முன்பொருகால் ஏற்கனவே ஆனையிறவில் பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார். மேலும் அப்பொழுது தமிழ்ப் பிரபாகரன் பலதரப்பட்டவர்களோடு கொண்டிருந்த தொடர்புகள் காரணமாக இனியொருமுறை இலங்கைக்கு வரும் பட்சத்தில் இலங்கையரசால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவேண்டிய நபர்கள் பட்டியல் சேர்க்கப்பட்டவராகி இருப்பார் எனச் சில மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மகாப்பிரபாகரனை எச்சரித்திருந்ததை அடுத்து தனது பயணத்தை அவர் அப்போது கைவிட்டிருந்தார். எனினும் பின்னர் தனது நண்பர் ஒருவரை அனுப்பி தனது எழுத்திற்கு தேவையான அனைத்தினையும் ஒளிப்பதிவு செய்துகொண்டுமிருந்தார். ஆயினும் மீண்டும் வடகிழக்கிற்கு செல்வதற்கு அவர் விருப்பம் கொண்டிருந்த போதும் அவர் தொடர்பு கொண்ட பலரும் தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்ததுடன் வரவேண்டாம் என ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.
இனிமேல் வரும் போது அரசினால் கைது செய்யப்படும் சாத்தியங்கள் பற்றியும் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த்து. இந்த ஆலோசனையின் நோக்கம் பிரபாகரனுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களைப்பாதுகாப்பதாகும். ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி மகா பிரபாகரனை வடக்கு கிழக்கிற்கு வர ஊக்குவித்தவர் அவருடன் தொடர்புடைய ஒரு பிரமுகர் என்பது பின்னர் செய்தியாக வெளிவந்தது. இலங்கையின் அரசியற் சூழ்நிலைகளை நன்கு விளங்கிய ஒருவர் ஒரு ஊடகவியலாளனைத் தன்னுடனே தங்க வைத்து தனது செயற்பாடுகள் யாவற்றுக்கும் கூடவே அழைத்துச் சென்று இலங்கையரசு அவ்வூடக வியலாளனைக் கைது செய்ததும் அவர் உடகவியலாளர் என்பதே தனக்குத் தெரியாதென்று பின்வாங்கிவிட்டார். இங்கே எழுகின்ற சில முக்கியமான கேள்விகளை நாங்கள் மக்கள் முன் வைக்கக் கடைமப்பட்டிருக்கிறோம். தான் கைது செய்யப்படும் சாத்தியமிருக்கிறது என்பதை அறிந்துகொண்டும் இலங்கைக்குச் சென்ற ஒரு ஊடகவியலாளனின் துணிவைப்பாராட்டும் அதேவேளை அவர் தனது தகவல் மூலங்களைப் பாதுகாக்கும் முன் எச்சரிக்கையைக் கொண்டிருந்தாரா என்பது முதலாவது கேள்வி இலங்கையின் புலனாய்வுபிரிவின் விசாரணைகளை எப்படி எதிர்வுகொள்வது என்பது தொடர்பாக முன் தயாரிப்புகளைச்செய்திருந்தாரா என்பது இரண்டாவது கேள்வி. இலங்கைப் பாதுகாப்பு தரப்பு கடுமையான உளநெருக்கடிகளை வழங்கித் தமக்கு தேவையான தகவல்களைப் பெறக்கூடிய திறமையானவர்களைக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இத்தகைய விசாரணைப் பொறிமுறை பற்றிய எந்தவித முன்னனுபவமும் அற்ற மகா தமிழ் மகாபிரபாகரனுக்கு இலங்கைப் பாதுகாப்பு தரப்பிடம் அகப்பட்டுக்கொண்ட நிலையில் அனைத்தையும் உளறுவதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது எனக் கவலை வெளியிடப்பட்டு உள்ளது. இலங்கையில் சனநாயகம் இல்லை என்பது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் நிகழ்ந்து வரும் சம்பவங்களினால் உறுதிப்படுத்தப்பட்டு விடிருக்கிறது. இதனை வெளியுலகத்திற்கு அறிவிப்பதற்காவே நாங்கள் இங்கு வந்து கைதானோம் என்று யாரும் கூறத்தேவை இல்லை என்கிறார்கள் அங்கு தொழிற்படுவர்கள்.
உண்மையிலும் தமிழ் மக்களின் நிலமைகளை வெளியுலகிற்கு அறிவிக்க விரும்பினால் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் உண்மையான புலனாய்வுச் செய்தியாளர்களாகவே வந்து இலங்கையரசின் கண்களில் மண்ணைத் தூவி செய்திகளைச் சேகரித்துப் பின் வெளியே சென்று அவற்றை வெளியிடுங்கள் என்கிறார்கள் மக்கள். பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் இலங்கையில் தொழிற்படும் மக்களையும் செயற்பாடாளர்களையும் சன்நாயகச் சிந்தனையற்ற பாதுகாப்புச் செயலாளரின் தலைமைலயில் இயங்கும் சட்டத்துக்கு புறம்பான படைகளிடம் மாட்டி விட வேண்டாம் என்றும் மக்கள் கோருகிறார்கள். இது மகா தமிழ்ப் பிரபாகரனுக்கு மட்டுமல்ல மக்களுக்கு உதவுகிறேன் என்று இலங்கைக்கு வரும் எல்லாப்பிரமுகர்களுக்கு பொருந்தும் எனவும் கூறப்படுகிறது. மகா தமிழ்ப் பிரபாகரன் போய் விட்டார். அழைப்பு விடுத்தவரும்; வழமை போலத் தனது வேலைகளில் ஈடுபடுகிறார். ஆனால் தமது தலைகளுக்கு மேல் கத்தி தொங்கத் தொடங்கி விட்டது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்களே மற்றும் சில முக்கியஸ்த்தர்கள் கவலை வெளியிட்டு உள்ளனர்”
ஈழத்தில் பணியாற்றும் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களில் பெரும்பாலானோர், செய்திகள் வெளி வருவதற்காக ரகசியமாக தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உதவியே வருகின்றனர். தற்போது அவர்களை அம்பலப்படுத்தும் பணியைச் செய்து முடித்து வந்துள்ளார் பிரபாகரன்.
மகா தமிழ்ப் பிரபாகரன் தமிழக பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னதும், பிபிசி தமிழோசை செவ்வியில் சொன்ன விவகாரங்களில் பெரும்பாலானவையும் பொய்யென்றே கருதத் தோன்றுகிறது. தன்னுடைய தற்போதைய இலங்கைப் பயணத்துக்கு பொருளாதார உதவி செய்தது யார், யார் அவருக்கான ஏற்பாடுகளை செய்தது என்பது போன்ற விபரங்களை பிரபாகரன் வெளியிட மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
தன்னுடைய நடவடிக்கைகள் மூலமாக, ஈழத் தமிழருக்கு உதவி செய்யும் நோக்கத்தை விட, தனக்கான புகழைத் தேடிக்கொள்வதே, தமிழ்ப் பிரபாகரனின் பிரதான நோக்கமாக இருந்திருக்கிறது. இழக்கக் கூடாததையெல்லாம் இழந்து, சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக வாழ்ந்து வரும், ஈழத் தமிழர்களைப் பயன்படுத்தி விளம்பரம் தேட, தமிழ்ப் பிரபாகரன் போன்ற இளைஞர்களும் முனைவது மிகுந்த வேதனையை தருகிறது. இலங்கைக்கு சென்று, இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையைக் கண்டறிந்து உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைக்கும் பிரபாகரன் மற்றும் இங்குள்ள ஈழ வியாபாரிகள், தமிழகத்திலேயே உள்ள ஈழ ஏதிலிகளின் நிலையை மேம்படுத்த ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடுவதில்லை என்பது வேதனையளிக்கும் விஷயம்.
பிரபாகரன் தன்னை கைது செய்து அழைத்துச் சென்று உளவியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் அந்த வெள்ளை வேனின் முன்பு எப்படி போஸ் கொடுக்கிறார் பாருங்கள்.
தமிழகம் இன்னும் எத்தனை ஈழ வியாபாரிகளைத்தான் சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை.
யார் இவா்களெல்லாம்?? இன்னும் இன்னும் இப்படிப்பட்ட போ்வழிகளிடம் ஏமாறும் நிலையில் தமிழ் மடையா்கள் இருக்கின்றார்களென்றால் நமது நிலையையிட்டு என்னவென்று சொல்வது.
பிடிமானத்தை இழந்த சவுக்கின் சாட்டை !
அதிகாரப் போக்கின் அலட்சியத்தையும் ஊழல் ஊற்றையும் தனது பதிவுகளில் பதிந்த சவுக்கு நியாயமான விசாரிப்புகளை மேற்கொண்டே தனது செய்திகளை எழுதுவதாக இத்தனை நாள் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் என்னைப் பற்றிய மேம்போக்கான தகவல்களை தெரிந்துக் கொண்டு ஓர் பெரும் கற்பனை பொய் கதையை சித்தரித்த பிறகு தான் உணர்கிறேன், சவுக்கின் சாட்டை எதோ காரணத்துக்காக தனது உறுதியான பிடிமானத்தை தளர்த்திக் கொண்டே வருகிறது என்பதை…
உண்மை செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்புவதற்குள் பொய் ஊரைச் சுற்றிவந்துவிடும் என்று தோழர் ஒருவர் சின்ன வயதில் எங்கோ படித்திருந்ததாக முகநூலில் பதிவிட்டிருந்தார். எனக்கு என்னவோ இந்த வரிகளை படித்ததும் சவுக்கின் ஸ்திரத் தன்மைக்கு பொருந்துவதாகவே தெரிந்தது.பொய்யின் புனைவுகளை பல முறை பதிவு செய்வதால் அது உண்மையாகாது என்று சவுக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் உண்மையை விட எனது விடயத்தில் சவுக்கு உருவாக்கிய திட்டமிட்ட பொய்கள் வெகுசீக்கிரமாய் சென்றடைந்துவிட்டது.
இந்த அவதூறுகள் ஏற்படுத்திய மன உளைச்சல்களே சவுக்கின் இந்த பண்பற்ற அநியாயமிகு குற்றச்சாட்டின் புனைவுகளை பற்றி எழுத வைத்துள்ளது.
சவுக்காரே ! முதலில் விகடனை நிராகரித்தேன் என்றீர்கள், அடுத்து நார்வே வேலை கைக்கூடவில்லை தந்தி டிவியின் மக்கள் முன்னாலில் சில காலம் என்றீர்கள் அடுத்து தன்னிச்சையாக இலங்கை சென்று வந்தேன் என்றீர்கள் புலித்தடம் தேடி நூலை வைகோ வெளியிட்டார் அதை நான் விகடனில் சொல்லவில்லை, அதனால் எனக்கும் விகடனுக்கும் முரண் என்றீர்கள், அது மட்டுமில்லாமல் பத்திரிகையாளர் அடையாள அட்டைக்கு ‘குடித்து விட்டு வாகனம் ஓட்டலாம், காவல்துறையில் சென்று பஞ்சாயத்து பேசலாம், ஆசிரியர்களை மிரட்டலாம்’ என்ற விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள், யாரோ ஒருவர் மின்னஞ்சல் அனுப்பினார் அதன் உண்மைத் தன்மையை அவரின் நார்வே நண்பரிடமும் பத்திரிகை நண்பர்களிடமும் விசாரித்தேன் விசாரித்தபொழுது(ஆனால் நீங்கள் விசாரிக்கவில்லை என் நண்பரே தங்களை அழைத்து இது தவறான தகவல் என்ற போதும்) உண்மை என்றே தோன்றுகிறது என்றுள்ளீர்கள், இப்படி ஏராளமான புனைவுகள்…
விகடனில் பணியில் சேரவில்லை, நார்வே செல்லவில்லை,இலங்கை சென்றேன்,தந்தி டிவி மக்கள் முன்னாலில் பணியாற்றினேன் இப்படி ஒரு வெளித்தோற்ற தகவல்களை வைத்தே தங்கள் முழுக் கட்டுரையின் அமைப்பும் அமைந்துள்ளது.
முதலில் ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள் நான் எந்த நிறுவனத்திலும் ஊழியராக சேரவில்லை, சுதந்திர ஊடகவியலாளனாக தான் இருந்தேன். அப்படி இருக்கையில் சிந்தனைகளின் உரிமைகளை யாரிடமும் நான் அடகு வைக்காததால் ‘என்ன செய்ய வேண்டும்’ என்ற சொந்த எண்ணம் எனக்கு உள்ளது. ஆனால் நீங்களோ நான் மக்கள் முன்னாலில் சில காலம் பணியாற்றிய பிறகு தான் இலங்கை சென்றதாக சொல்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயமானது, தங்களையும் தங்கள் இணையதளத்தையும் விளம்பரப்படுத்திக் கொள்ளும் முகமாக அப்பட்டமான ஒரு பொய்யை உற்பத்தி செய்திருக்கிறீர்கள்.
நான் நூலில் குறிப்பிட்டப்படி தமிழருவி மணியன் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் ஈழத்துக்கு செல்ல வேண்டும் என்கிற சிந்தனை உருவாகியது. ‘புலித்தடம் தேடி’ நூலாக வெளிவரும் நேரத்தில் தான் மக்கள் முன்னால் நிகழ்ச்சி தொடங்கியது என்பதை நீங்கள் யோசிக்காமலே என்னைப்பற்றி நீங்கள் ஆராய்ந்துள்ளீர்கள்.
‘நார்வே நண்பரிடம் காசு வாங்கினேன், புலித்தடம் தேடி புத்தக்கத்தால் வெளிநாடுகளிலிருந்து பணம் கொட்டியது, ஒன்றரை லட்சத்தை எடுத்து கொண்டு இணையதளம் ஆரம்பிக்காமல் ஏமாற்றினார் பிரபாகரன். தவிர ஈழம் ஈழம் என்று அவர் பொங்கினாலும் மனதளவில் அவருக்கு சாதிப்பற்று ரொம்பவே அதிகம் (வன்னியர்)’ என்று அர்த்தமற்ற அவதூறுகளை பரப்பியுள்ளீர்கள்.
புதிய வீச்சோடு பத்திரிகை தர்மத்திற்கு அறமாக சமூகப் பிரச்னைகளையும் அடக்கப்படும் எவ்வின மக்களின் துயரையும் வெளிக்கொண்டு வருவதே எனது இலக்கே தவிர நீங்கள் குறிப்பிடும்படியான மானுட பண்பற்ற வேலைகளில் ஈடுபடுவதல்ல.
சம்பந்தப்பட்ட எனது நண்பரும் சொல்கிறார்,நானும் சொல்கிறேன் இப்படி பணத்தால் எங்களுக்குள் பிரச்னை ஏற்படவில்லை. நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள் என்று சொன்ன பிறகும், நீங்கள் எதோ ஒரு உள் எண்ணத்தோடு மீண்டும் தவறாகவே எழுதியுள்ளீர்கள்.
இதை எல்லாவற்றைவிட மேலாக என்னை சாதி வெறியன் என்று சொல்லியுள்ளதாக எழுதியுள்ளீர்கள். எனக்கு சாதி உணர்வு இருக்கா ? இல்லையா ? என்பதை எனது செயல்பாடுகளில் பார்த்தாலே நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். ஆனாலும் எனது ஊரை வைத்து நீங்கள் சாதியை கற்பனை செய்து கொண்டுள்ளதை நன்கு எனக்கு புரிகிறது. எனக்கு சாதிப்பற்று உள்ளதென வலிந்து திணித்துள்ளதாக எனக்கு அறிமுகமில்லாத சவுக்கை படித்தவரே என்னிடம் தகவல் தெரிவித்தார். (அதற்கான சான்று இணைக்கப்பட்டுள்ளது). என்னையும் எனது செயற்பாடுகள் குறித்தும் ஆழமாக உணர்ந்துள்ள தோழர்களுக்கு ‘சாதியின் மீதும் அதன் கொடூர பதிவுகளின் மீதும்’ நான் எவ்வளவு பெரிய வெறுப்பைக் கொண்டுள்ளேன் என்பது நன்றாக தெரியும்.
நீங்கள் மக்கள் முன்னாலுக்கு பிறகு இலங்கை சென்றேன் என்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு தகவல் அளித்தவர் மக்கள் முன்னாலில் சீமானோடு முரண் ஏற்பட்டு தான் புதிய தரிசனத்தில் தொடர் எழுத ஆரம்பித்தேன் என்கிறார். எப்படி தான் இப்படியெல்லாம் கற்பனை செய்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.
இப்படி இன்னும் இன்னும் உங்கள் குற்றச்சாட்டில் உள்ள அவதூறுகளை சொல்லிக் கொண்டே போகலாம். புலித்தடம் தேடி நூலை வைகோ வெளியிடவில்லை அதற்கான அறிமுகக் கூட்டத்தில் தான் வைகோ,ஓவியர் புகழேந்தி, இயக்குநர் கெளதமன், மே 17 திருமுருகன் காந்தி (http://bit.ly/1lF0mXK)ஆகியோர் கலந்துக் கொண்டனர். புத்தக வெளியீடு நடந்தது இடிந்தகரையில்(http://bit.ly/1cFO9wW). இந்த வெளிப்படையான அடிப்படை தகவல்களை கூட திரட்டாமல் வெறும் பொய்களை அடுக்கியுள்ளீர்கள்.
//2008ம் ஆண்டு முதல், இந்தியா அளித்த பயிற்சியினாலோ என்னவோ, இலங்கையின் உளவுத்துறை சிறப்பாக வேலை செய்தது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கையாளர்களை போதுமான அளவுக்கு கவனித்தும், கண்காணிப்பிலும் வைத்திருந்தது. இலங்கை அரசு, தமிழ்ப் பத்திரிக்கைகளை கையாண்ட விதம், ஒரு வளர்ந்த நாடுகள் கையாண்டது போல இருந்தது…. ஒரு முறை புலிகள் இயக்கத்தை வளர விட்டதன் காரணமாக 30 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது, மீண்டும் நடக்கக் கூடாது என்பதில் இலங்கை அரசு தெளிவாக இருக்கிறது. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னர், பெரும்பாலான தமிழ் மக்கள், உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, சிங்களர்களோடு சமரசம் செய்து கொண்டு வாழப் பழகி விட்டார்கள்.// இப்படி எதார்த்தை கூறுவது போலாக இலங்கை உளவுத்துறைக்கு புகழாரத்தை சூட்டியுள்ளதோடு ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வுகளை அவமதித்து உள்ளீர்கள்.
‘விசாரனை என்றால் தூங்க விடாமல் தான் விசாரிப்பார்கள். பாய் விரித்து படுக்க வைத்து, தாலாட்டுப் பாடி தூங்க வைக்க இலங்கை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு என்ன மாமியார் வீடா ? ‘ எனக் கேட்டுள்ளீர்கள்.
மிக அருமையான கேள்வி !
போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று நீங்கள் பெரிதும் எதிர்க்காத ஒருவர் கூறிய கொடுமைமிகு கருத்தை இது நினைவில் வரச் செய்கிறது.
தூங்கவிடாமல் தான் விசாரணை செய்வார்கள் என்று நீங்கள் குறிப்பிடுவதே இலங்கை சட்டத்தின் உள்ள அடிப்படை மனித உரிமைகளை கூட கோரக் கூடாது என்ற கருத்தை முன்நிறுத்தவதை பார்க்கிலும் அறமற்ற சிங்களப் படைகளை பல்லக்குகளில் தூக்கிச் சுமக்கும் பணியை மிக சாதுர்யமாக செய்கிறது.
சனல் 4 செய்து விடாததையா தமிழ்ப் பிரபாகரன் செய்து விட போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளமை சமூகப் பிரச்னைகளுக்காக போராடுகின்ற ஒவ்வொரு தமிழ் ஊடகவியலாளனதும் அறம் கொண்ட போராட்டக் குணத்தை சீண்டி பார்ப்பதாகும்.
ஒரு ஊடகவியலாளன் என்கிற முகமூடியை பொருத்திக் கொண்டு பரபரப்புக்காய் பிச்சைக் கேட்கும் ஆக்கப்பூர்வமற்ற உங்கள் நிலைப்பாட்டை இந்த கேள்வி வெளுக்கச் செய்திருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் மானுட விடுதலைக்காக போராடுகிறவர்களை வரலாறுகள் சரியாக பதிவிட்டுக் கொள்ளுமே தவிர காயப்பட்ட குழம்படிகள் கொண்ட குதிரைகளின் மீதேறி கனைக்கும் வெற்று போலிகளின் தடங்களில் வரலாறுகள் என்றைக்கும் சேராது.
இதெல்லாம் போக எனக்கு தகவல்கள் தரும் நண்பர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டேன் என்கிறீர்கள். பத்திரிகைத் துறையின் சரியான வரலாறுகளை வழிகாட்டிகளாக நோக்கும் என்னைப் போன்றவர்களுக்கு வீசும் போலிச் சவுக்கடிகளின் விசை காகித புலிகளாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒவ்வொருவரின் முகங்களிலும் துரோகத்தின் தழும்புகளை பதித்துச் செல்லும்.
நான் எனது முகபுத்தகத்தில் போட்ட படத்தை ‘இது தான் அவர் வெள்ளை வேனின் முன்பு போஸ் கொடுத்த படம்’ என்று எழுதும் உங்களுக்கும் பார்க்காமலேயே மூன்றாம்தர கிசுகிசு எழுதுபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றே எண்ணுகிறேன்…
ஒரு நெடும் பயணத்தின் ஆரம்பம் முதல் அடியிலிருந்து இருந்து தான் தொடங்குகிறது என்னும் லோ தட்சூவின் அனுபவமிகு வார்த்தைகளை அப்போது உணர்வீர்கள் !
என் எழுத்தில் உள்ள உண்மைத் தன்மையின் மனசாட்சியின்படி நிமிர்ந்து நிற்பேன், ஏனெனில் நான் எழுதியது சத்தியமான வார்த்தைகள் !
– Maga.Tamizh Prabhagaran in facebook…
Good response.
சாட்டைக்கு விழுந்த சாட்டையடி..
சவுக்கின் உண்மையான முகத்தை துகிலுரித்துக் காட்டியமைக்கு நன்றி. சவுக்கோ அல்லது இனியொரு இணையமோ எப்போதுமே ஈழத்தமிழர் விடுதலை பற்றி அக்கறைப்பட்டிருக்கவில்லை என்பது இன்னுமொருமுறை உங்கள்மூலம் நிரூபணமாகி இருக்கிறது.