ஒடுக்கப்படும் தேசிய இனம் தனது விடுதலையைக் கோரி நடத்துகின்ற உரிமைப் போராட்டம் அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது. அதன் மறுபக்கம் ஒன்றிருக்கிறது. அது மத்தியதர வர்க்க மேலணிகளின் அதிகாரத்திற்கான போராட்டமாக போராட்டமாக மாறுகின்ற சமூகப் பகைப்புலத்தை நாம் அழிக்கப்பட்ட ஈழப்போராட்டத்தின் சாம்பல் மேடுகளில் காண்கிறோம்.
ஈழப்போராட்டம் சார்ந்த சமூக நிறுவனங்கள் அவை சார்ந்த தனிமனிதர்கள் ஆகியோரின் அசைவியக்கங்கள் ஒவ்வொன்றிலும் இதன் விம்பங்களைக் காணமுடியும்.
சக்விக்கி ( இதன் தமிழ் அர்த்தம் மன்னாதி மன்னன் என்பதாகும்) நிதிக்கம்பனி மோசடி தொடர்பாக 12.08.2010 தினக்குரல் ஆசிரியர் குறிப்பு வாசிக்கக் கிடைத்த போது இதன் இன்னொரு நிகழ்வைப் படம் போட்டுக்காட்டியது.
‘சக்விக்தி விவகாரம் தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்வாரம் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்று எமது கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது. இலங்கைச் சமுதாயத்தின் வசதிபடைத்த பிரிவினர் எதிர்நோக்குகின்ற ஒழுக்கப்பண்பு தொடர்பிலான திரிசங்கு நிலையை அம்பலப்படுத்துவதாக ஹொங்கொங்கை மையமாகக் கொண்டியங்கும் இந்த அணைக்குழுவின் அறிக்கை அமைந்திருக்கிறது. இலங்கையின் மத்தியதர வர்க்கத்துக்கும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான நெருக்கடிக்கும் இடையிலான உறவு குறித்து பல சர்ச்சைகளை சக்வித்கி விவகாரம் கிளப்புகிறது என்பதே ஆணைக்குழவின் கருத்தாகும்.
‘வங்கிகளில் வைப்பிலிடப்படுகின்ற பணத்துக்குத் தரப்படுகின்றதையும் விட கூடுதலான வட்டி வீதத்தைத் தருவதாக சக்வித்தி ரணசிங்க உறுதிமொழி வழங்கியதையடுத்தே அவரது சட்டவிரோத வர்த்தகச் செயற்பாடுகளில் பலர் பல லட்சம் ரூபா பணத்தை முதலீடு செய்தனர். சட்டவிரோத செயற்பாடுகளில் முதலீடு செய்கின்ற விடயத்தில் தங்களது சொந்த நடவடிக்கைகள் பற்றி இந்த முதலீட்டாளர்கள் மனவுறுத்தலைக் கொண்டிருக்கவில்லை. தங்கள் பணத்தை முதலீடு செய்கின்ற வர்த்தகத்தின் தன்மை பற்றி ஆலோசனையைப் பெறுவதற்கான வழிவகைகளையும் அறிவையும் இவர்கள் தாராளமாகக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு வசதியாக இருக்குமென்றால், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து கவலைப்படாத சுபாவத்தை இலங்கையின் வசதிபடைத்த பிரிவினரிடமும் காணக்கூடியதாக இருக்கிறது. வரி ஏய்ப்புச் செய்வதும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் இந்தப் பிரிவினரின் மனச்சாட்சியில் எந்தப் பிரச்சினையையுமே தோற்றுவிப்பதில்லை.
சக்வித்தி ரணசிங்க உறுதியளித்தன் பிரகாரம் பெருந்தொகைப் பணத்தை வட்டியாக வழங்கியிருந்தால், இந்த வசதி படைத்த பிரிவினர் அவரை ஒரு கிறிமினல் என்று கருதியிருக்கமாட்டார்கள்…. வசதிபடைத்த இலங்கையர்கள் தங்களுக்கு வசதியாகவும் இலாபகரமானதாகவும் இருக்குமேயானால், சட்டவிரோதமான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்கிறார்கள். என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.’
தங்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் அமையக்கூடிய எந்தவிதமான சட்டவிரோத மற்றும் முறைகேடான செயற்பாட்டையும் ஏற்றுக்கொள்ளும் அல்லது சகித்துக்கொள்ளும் அல்லது கண்டும் காணாமல் இருக்கும் வசதிபடைத்த மற்றும் படித்த இலங்கையர்களின் இந்தப்போக்கே இலங்கையில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைவதற்குப் பிரதான காரணமாக இருக்கிறது என்பதே ஆணைக்குழு உணர்த்த முன்வந்திருக்கும் முக்கிய விடயமாகும்.’
இந்த அறிக்கை முதாளித்துவ நிதி நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகள் முன்னெழுந்த வேளையில் முன்வைக்கப்பட்டது. அயினும் இலங்கையின் மேல்தட்டு வர்க்கத்தினர் பற்றிய ஒரு விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது. இப்பின்னணியில் தமிழ் மத்திய தர வர்க்கத்தினர் – தமிழ் மேல் நடுத்தட்டுவர்க்கத்தினர் பாத்திரப்பாங்கு குறித்து நோக்கமுயல்வோம்.
உலகளாவிய ரிதியில் மத்திய தரவர்க்கம் ஒரு புரட்சிகரமான செயற்பாங்கை வகிக்கக்கூடியதாக விளங்கியது. பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் முன்னணி அமைப்புக்களிலும், பாட்டாளி வர்க்க விடுதலைக்கான சிந்தனை உருவாக்கத்திலும், தேச விடுதலைப் போராட்டங்களிலும் பெறுமதிமிக்க பாத்திரத்தினை மத்திய தரவர்க்கம் வகித்தது. மூன்றாம் உலக நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் முன்னெழுந்த காலத்தில் மேல்தட்டு வர்க்கத்தினர் முனைப்பான பாத்திரப்பாங்கை ஆற்றியிருந்திருக்கிறார்கள்.
ஆனால் முதலாளித்துவம் உலகமயமாக்கம் என்ற நிலையிலான வளர்ச்சியை அடைந்துள்ள இன்றைய நிலையில், மத்திய தரவர்க்கத்தினர் தமது கடந்த காலப்பாத்திரப்பாங்கை இழந்தள்ளதனையே அவதானிக்க முடிகிறது.
மத்தியதர வர்க்கம் என்பது ஊசலாடும் போக்கைக் கொண்ட நிரந்தரமான அடித்தளத்தைக் கொண்டிராத உழைப்புத்திறனற்ற வர்கமாகத் திகழ்கிறது.
மத்தியதர வர்க்கத்தைப் பொறுத்தவரை யார் வெற்றியடைகிறார்களோ அவர்களையே சார்ந்திருக்கும். இன்னொரு வகையில் கூறினால் எந்த வர்க்கம் வெற்றியடைகிறதோ அந்த வர்க்கத்தைச் சார்ந்திருக்கும்.
ஐரோப்பியத் தேசிய விடுதலைப் போராட்டங்களிலில் எல்லாம் இதே மத்தியதரவர்க்கம் வெற்றிபெற்ற முதலாளித்துவத்தையே சார்ந்து நின்றது.
முதலாளித்துவம் தேசிய முதலாளித்துவ வர்க்கம் என்ற நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான ஒப்பீட்டளவில் முற்போக்கான வர்க்கப்பிரிவைக் கொண்டிருந்தது.
மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை தேசிய முதலாளித்துவம் முற்றாக அற்றுப் போன நிலையில், மத்தியதர வர்க்கம் ஒன்றில் தரகு முதலாளித்துவத்தையோ அல்லது ஒடுக்கப்பட்ட மக்களையோ சார்ந்த நிலையில் தான் தனது இருப்பை நிலை நாட்டிக்கொள்ல முடியும்.
விரிவடைந்துள்ள முதலாளித்துவம் தனது விரிவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளை ஆற்றத்தக்க உழைப்பாளிகளை வேண்டி நிற்கிறது. முக்கியமாக சேவைத்துறையிலும், தொழில்நுட்பத்துறையிலும் பாரிய பணியார்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கான பணியார்கள் மத்தியதரவர்க்கத்திலிருந்து உருவாக்கப்பட்டு வருகிறார்கள். இப்பணிக்கான உழைப்பாளர்களாக மாறி அதனால் நன்மைகளை அடையலாம் என்ற பெரும் நம்பிக்கையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமைகள் முன்னேறிவரும் மூன்றாம் உலக நாடுகளில் கல்வியை ஒரு சமூக மாற்றத்திற்கான கருவியாக கருதும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.
மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் ‘சிறந்த கல்வியினால்’ சமூக முன்னேற்றத்தினை – சமூக அந்தஸ்தினை பெற்றுவிடலாம் என்ற வலுவான நம்பிக்கை உருவாகிய பின்பு, அதனைப்பெறுவதற்கான பெரும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கடந்த பல்லாண்டுகளாக மத்தியதர வர்க்கத்தினர் – மேல்தட்டு வர்க்கத்தினர் சிறந்த கல்வி வாய்ப்பைப் பெற மேற்கொண்டு வந்த அதீத முயற்சிகளை நாமறிவோம். தென்கிழக்காசிய நாடுகளில் இந்த நிலைமயானது முதலில் அவதானிக்கப்பட்டது, அதனை கல்வியிலாளர்கள் ‘டிப்ளோமா நோய்’ என வர்ணித்தனர். ஆனால் இதற்கான வாய்ப்புக்கள் வரையறைக்குட்பட்டவை எனபது துயரத்திற்குரியது.
மூன்றாம் உலக நாடுகளின் கல்வி அமைப்பு முறையும் உலகளாவிய தொழில் சந்தையும் பொருந்தியமையாத நிலையில், இருக்கிற கல்வி அமைப்பில் பலத்த தோல்வி நிலை காணப்பட்டு வருகிற நிலையில் அதற்கெதிரான எதிர்ப்புணர்வுகள் மேலெழவில்லை. கிடைக்கின்ற குறைந்த ‘நல்ல வாய்ப்புக்களை’ தமதாக்கிக் கொள்ளும் ஒரு தீவிர போட்டியில் பங்கேற்க வேண்டியாகிவிட்டது. முன்னணிப்பாடசலையில் அனுமதி பெறுதலில் இருந்து பல்கலைக்கழகம் புகுவது வரையில் தீவிர போட்டித்தன்மை நிலவிவருகிறது.
நல்ல வாய்ப்புக்களைப் பெற்று முன்னேறிவிடும் உபாயத்தில் சட்டம், ஒழுக்கம் எவையும் மதிக்கத்தக்க ஒரு விடயமாக அமையவில்லை. பின்னாளில் உயர் தொழிலையும் நல்ல வருமானத்தையும் பெற அரசியல் அதிகாரத்துடன் இணைந்திருக்கும் உபாயத்தினைக் கைக்கொள்ள வேண்டியிருந்தது. அதன்காரணமாக மத்திய தரவர்க்கத்தினரின் அரசியல், தமது தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு வழிமுறையைத் தேடும் ஒன்றாக அமைந்துவிட்டது.
வடகிழக்கில் இன ஒடுக்குமுறை அதிகரித்த – இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1980 களில் மக்கள் ஒடுக்குமுறைக்கெதிரான சக்திகள் அதற்காதரவாகச் செயற்படத்தொடங்கினர். ( இவர்கள் மத்திய தரவர்க்க – மேல்தட்டு வர்க்கப் பிரிவினர்தான்) ஆனால் அதிகாரம் மற்றும் அந்தஸ்தினைப் பெற்றிருந்த சமூகப்பிரிவனர் ஆயதப்போரட்ட வழிமுறைகளைக் கண்டு மிரண்டு போனது மட்டுமின்றி அதற்கெதிரான போக்குகளையும் கொண்டிருந்தனர். பாடசாலைகளில், பல்கலைக்கழகத்தில், சமூக மட்டத்தில் இந்த நிலைமைகளை தெளிவாகப் புலப்பட்டன.
ஆனால் ஆயுத இயக்கங்கள் ஒரு அங்கீகாரம் பெற்ற சக்தியாக மாற்றமடைந்த நிலையில் ( இது இலங்கை மற்றும் இந்திய அரசுகள் இயக்கங்களுடன் பேசத்தொடங்கிய காலத்தின் பின்னராக இருக்கலாம்) அதிகார வர்க்கத்தினரின் கவனத்தை இயக்கங்கள் பெறத்தொடங்கின. ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் – மக்கள் விடுதலை என்ற அரசியல் நோக்கற்ற இச்சக்திகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்த அல்லது தொடர்ந்தும் பேணிக்கொள்ள இயக்கங்களுடன் இணைவுபடத்தொடங்கினர்.
இச்சக்திகளுக்கு இயக்கங்கள் விடுதலைப்பாதையில் செல்ல வேண்டும் என்ற எண்ணமோ, மக்களை அணிதிரட்டி அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிற ஒரு போக்கோ அவசியமற்றது. எனவே எல்லா நிலைமைகளிலும் விமர்சனமற்ற ஒரு ஆதரவுத்தளமாக விளங்கினார்கள். இயங்கங்களுக்கிடையிலான் மோதல்கள், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் போன்றவற்றை புலிகள் மேற்கொண்ட போதொல்லாம் தங்கள் ஆதரவை விமர்சனமின்றி வழங்கினார்கள்.
2000 ங்களில் புலிகளின் பெரும் ஆதரவுத் தளமாக இச்சக்திகள் விளங்கியதுடன் மட்டுமின்றி புலிகளின் போக்குளை விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டு செயற்பட்டதுடன் அதனை நியாயப்படுத்தும் பிரிவனராகவும் விளங்கினர்.
மாறாக 1980 களில் இயங்களிற்கு – புலிகளிற்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களில் பலர் ஒதுக்கப்பட்டு – ஒதுங்கி – அழிக்கப்பட்டு இருந்தார்கள்.
இன்று புலிகள் அழிக்கப்பட்ட பின்பு, அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதியினர இலங்கை அரசின் அபிவிருத்திப் பணிகள் மீது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் தீராத ஒரு ஆசையினால் அவர்கள் இந்த தேர்வினை முன்னெடுத்திருப்பதாக கூறிவருகிறார்கள்.
மற்றொரு பிரிவினர் தொடர்ந்தும் இலங்கை அரசின் இனஒடுக்கு முறை குறித்து விழிப்பாக இருந்து வருகிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் மறந்து விட்டு மீண்டும் இணைந்து செயற்படுவதற்கான தங்களது பெரு அவாவினை முன்வைத்து வருகிறார்கள்.
கடந்த காலம் குறித்து விமர்சனமின்றி இணைந்து கொள்வதற்கு, கடந்த காலம் ஒரு சாதாரண காலமாக இருந்ததில்லை என்பது அவர்களால் உணரப்படவில்லை.
ஆக, இந்த மத்தியதர வர்க்கத்தின் மீதான முடிந்த காலத்தின் விமர்சனம் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர்கள் அரச சார்பானாலும் சரி அரச எதிர்ப்பானாலும் சரி ஒரு வர்க்க நிலையை நோக்கியே தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றனர். ஊசலாடும் போக்கைக் கொண்ட இவர்கள் இறுதியில் சென்றடையும் இடம் தரகு முதலாளித்துவ அதிகாரம் தான். கடந்த காலத்தில் புலிகளின் போக்கிடம் கூட அரச அதிகாரங்கள் தான். இவர்களுக்கும் அரசிற்கும் இடையிலான வேறுபாடு என்பது வெறும் உள்முரண்பாடுகள் தான். ஆக, தேசியப் போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் முன்னெடுக்கப்படால் மட்டுமே மத்தியதர வர்க்கத்தின் அணிகளைத் தமதாக்க்கிகொள்ள வாய்ப்புண்டு.