தேசியத்தின் பெயரால் விதேசிய அரசியல் நடத்தலாம் என்பதற்கு தெற்காசிய நாடுகளில் கடந்த கால் நூற்றாண்டுகளாக முளைவிடும் கட்சிகளும் இயக்கங்களும் உதாரணங்களாகின்றன. ஒரு புறத்தில் தேசிய ஒடுக்குமுறையைத் தூண்டும் ஏகபோக அரசுகளின் அடிவருடிகளும் மறு புறத்தில் அதற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் அதே அரசுகளின் அடிமைகள் இன்னொரு புறத்திலும் மக்களை மந்தைகளாக்கும் அரசியல் தொடர்கிறது. இலங்கை அரசியலில் உணர்ச்சிகரமான தேசிய முழக்கங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது போலி தேசியவாதத்தை முன்வைக்க அதற்கு எதிராக இலங்கை அரச பாசிஸ்டுக்கள் தமது பேரினவாத அரசியலைத் தங்கு தடையின்றி நடத்துகின்றனர்.
இலங்கை அரசுடன் இணைந்தே அபிவிருத்தி வேலைகளை முன்னெடுபோம் என்றும் அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை என ஆங்கில ஊடகங்களுக்கும், வடக்கு கிழக்கை இணைத்தே தீருவோம் என மேடைகளிலும் கூறும் விக்னேஸ்வரன் இலங்கை அரசுடன் அடிப்படையில் எந்த முரண்பாடும் அற்றவர். மகிந்த அரசிற்கு எதிரான சிங்கள மக்களும் முஸ்லிம்களும் அடிப்படையில் விக்னேஸ்வரனையும் அவரின் ஊடாக தமிழர்களைம் தமது எதிரியாகத் கருதும் ஆபத்தான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கு எதிரான அரசியலை முன்வைப்பதற்கு இதுவரரைக்கும் ஏகபோக அரசுகளின் அடியாட்படைகளாகச் செயற்பட்டுவந்த தமிழ் தேசிய அமைப்புக்களுக்கு வலுவில்லை.
இந்த நிலையில் விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தாம் எண்ணும் அனைத்தையும் சாதிக்கும் வலுவைக் கொண்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் குறித்துப் பேசுங்கள் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விக்னேஸ்வரனை இரைஞ்சும் அளவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் இலங்கை அரசுடன் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது.