இடம் பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் நிரந்தரமாக அங்கேயே தங்க வைக்கப்படலாம் என உதவிப் பணியாளர்களின் கூற்றை மேற்கோள் காட்டி டைம்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வடபகுதியில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வாழும் அப்பாவி தமிழர்கள் நிரந்தரமாக முகாம்களிலேயே தங்கியிருக்க நேரிடலாம் என தொண்டு நிறுவன பணியாளர் ஒருவரை மேற்கோள் காட்டி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மெனிக் பாம் முகாமில் நிரந்தர கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக தொண்டு நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மெனிக் பாமில் அமைக்கப்பட்டுள்ள ஆறு முகாம்களில் நான்கில் தொண்டுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட போதிலும், இரண்டு முகாம்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூச்சிய வலயங்களகாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக ரிலிப் இன்டர்நெசனல் தொண்டு நிறுவனத்தின் பணியாளர் ரஜிந்தா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் பல நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலைகள், பாடசாலைகள், வங்கிகள் என சகல விதமான கட்டிடங்களும் குறித் வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருவதனால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என தொண்டு நிறுவன பணியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தலைநகர் கொழும்பிற்கு அடுத்தபடியான பெரிய நகரமான இந்த பிரதேசம் உருவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நீண்ட காலத்திற்கு தங்கக் கூடிய அளவிலான கட்டிடங்களே இம்மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிரந்தரக் கட்டிடங்களை அமைப்பதற்காக இடம்பெயர்ந்த மக்களையே அரசாங்கம் பயன்படுத்தி வருவதாகவும், அவர்களுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஊதியம் எதுவும் கொடுக்காமல் இவர்களை பணிகளில் ஈடுபடுத்துவது ஐக்கிய நாடுகளின் சட்ட விதிகளுக்கு புறம்பானதென தெரிவிக்கப்படுகிறது.