‘பலஸ்தீன நாட்டில் நட்சத்திரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முடிந்தால் இலங்கையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் நட்சத்திரமாக மிளிர்ந்து காட்டட்டும் என மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சவால் விடுத்துள்ளார்.’ என்ற செய்தி தமிழ்வின் என்ற செய்திவியாபார இணையத்தில் வெளியாகியிருந்தது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவ்வாறான விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதை இனியொரு.. தெளிவுபடுத்தியிருந்தது. இதன் பின்பும் இனவாதச் செய்திகளை வெளியிட்டு வியாபாரம் நடத்தும் தமிழ்வின் மீண்டும் அதே செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழ்வின் இணையம் உட்பட பல செய்திவியாபாரிகள் மகிந்த ராஜபக்சவின் அரசின் நோக்கங்களுக்கு எவ்வாறு நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுகிறார்கள் என்பதற்கு இச் செய்தி சிறந்த உதாராணம்.
இனியொருவின் செய்தி…
‘இலங்கை குடும்ப அரச ஜனாதிபதியும் இனக்கொலையாளியும் ஏகாதிபத்திய முகவருமான பாசிஸ்ட் மகிந்த ராஜபக்சவிற்கு பலஸ்தீனிய நட்சத்திரம் “Star of Palestine”, என்ற விருது வழங்கப்பட்டதாக இலங்கை அரச ஆதரவு ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து ஏகாதிபத்தியங்களின் ஐந்தாம் படைகள் போன்று செயற்படும் புலம் பெயர் தமிழ் இணையங்கள் இச்செய்தியைப் பிரதானப்படுத்தி வெளியிட்டன. இச் செய்தி இலங்கை அரச உத்தியோகபூர்வ இணையங்களிலோ பலஸ்தீனிய இணையங்களிலோ வெளியாகியிருக்கவில்லை.
இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் பலஸ்தீனியப் பிரதிநிதி ஒருவரையும், பிரான்சில் பலஸ்தீனிய ஆதரவு அமைப்பையும், பிரித்தானியாவில் பலஸ்தீனிய தூதரத்தின் ஊடகத் துறையைச் சார்ந்த ரணா ஆயாஷா என்பவரையும் இனியொரு சார்பில் தொடர்புகொண்டு செய்தியின் நம்பகத் தன்மை குறித்து வினாவெழுப்பினோம்.
இவர்களின் தகவல்களின் அடிப்படையில் பலஸ்தீனிய நட்சத்திரம் என்ற விருது பலஸ்தீனத்திற்காகப் போரிடும் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருது என்றும் அது பலஸ்தீனியர்கள் அல்லாதோருக்கு வழங்கப்படுவதில்லை என்றும் கூறினர்.
அதனை ஒத்த எந்த விருதுகளும் வழங்கப்பட்டதான தகவல்கள் தமக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றும் அதற்கான சாத்தியங்கள் காணப்படவில்லை என்றும் எதற்கும் தாம் மேலதிகமாக இந்த விடையங்களை விசாரணைக்கு உட்படுத்துவதாகவும் கூறினர்.
பலஸ்தீனிய அரசின் சட்டப்பிரிவு 109 இன் அடிப்படையில் பலஸ்தீனிய நட்சத்திரம் என்ற விருது பலஸ்தீனிய இராணுவத்தினருக்கே வழங்கப்படும் என்பது மேலும் பல தகவல்கள் உறுதிப்படுத்தின.
எண்பதுகளில் எந்தவித உள் நோக்கமும் இன்று ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் பலஸ்தீனிய விடுதலை இயக்கம் இராணுவப் பயிற்சிகளை வழங்கிவந்தது. யசீர் அரபாத் பிரன்சிலுள்ள அமரிக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் போர்க்குணம் மாற்றமடைந்தது. ஹம்மாஸ் அமைப்பில் இணைந்துகொண்ட பலர் கொல்லப்பட்டனர். நீண்ட வரலாற்றைக் கொண்ட பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தை அதிகார அமைப்பாக மாற்றுவதில் ஏகாதிபத்தியங்கள் வெற்றியடைந்தன. இயக்கத்திலிருந்த பிற்போக்கு, பழமைவாத ஏகாதிபத்திய சார்பு சக்திகளின் கைகள் மேலோங்கின. இருந்த போதும் பலஸ்தீனிய விடுதலை இயக்கத்திலிருந்து வர்க்கசார்பு போராளிகளை முற்றாகத் துடைத்தெறிய முடியாத அளவிற்கு அது நீண்டவரலாற்றைக் கொண்டது.
புலம் பெயர் ஊடகங்களும் ராஜபக்ச அரசும் ஒருவருக்கு ஒருவர் தீனிபோட்டு வளர்க்கின்றனர் என்பதற்கு இது இந்தப் போலிச் செய்தி நேரடி உதாரணமாகும். உலகமே தமிழர்களுக்குச் சார்பானதாக மாறிவிட்டது என்று புலம்பெயர் அரசியல் அனாதைகள் கூற மறுபுறத்தில் உலகம் தனக்கு எதிராக சதி செய்கிறது என்று நாடகமாட அதனை ஒரு கூட்டம் வேடிக்கைபார்க்கிறது. இந்த நாடகத்க்தின் நடுவே முழு இலங்கையையும் மகிந்த அரசு விற்பனை செய்கின்றது.
பலஸ்தீனிய அரசுடன் நட்பு வைத்துக்கொள்கிறோம் என மக்களுகுக் கூறிவிட்டு இஸ்ரேலியக் கொலையாளிகளோடு இணைந்து இனப்படுகொலை நடத்தப்படுகிறது. இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேலுக்கு புலம்பெயர் தமிழ்த் தேசிய வியாபாரிகள் ஆதரவளிக்க பலஸ்தீனத்தையும் உலகின் போராடும் மக்களையும் எதிரிகளாக்கி ஈழத் தமிழர்களின் போராட்டத்தைத் தனிமைப்படுத்தி அழித்து முடிக்கிறார்கள். இந்த அழிவிற்கு பேரினவாத அரசும் புலம்பெயர் வியாபாரிகளும் சமபங்கு வகிக்கிறார்கள்.’
இதற்கு முன்பதாக லைக்கா மொபைல் நிறுவனம் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்யும் நிறுவனம் என்றவகையில் நேர்காணல் ஒன்றை வெளியிட்ட தமிழ்வின், லைக்கா நிறுவனம் இலங்கை விமானப்படையில் உலாவந்தது குறித்த செய்திகளை வெளியிடவில்லை.