காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் தர முடியாது என்று கர்நாடக தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை வழங்க கர்நாடகம் மறுத்து வருவதாக காவிரி கண்காணிப்புக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னைக்குத் தீர்வுகாண பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்து, கிருஷ்ணராஜசாகர் அணையில் தண்ணீர் கணிசமாக நிரம்பினால் தான், காவிரி நடுவர் மன்ற உத்தரவை அமல்படுத்தி, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியும் என, கர்நாடக அரசு தெளிவாகக் கூறிவிட்டது. இதனால், காவிரி நதி நீர் ஆணைய கண்காணிப்புக் குழுவின் நேற்றைய கூட்டம் தோல்வியில் முடிந்தது.இந்த நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ள, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை, உடனடியாகக் கூட்டும்படி, தமிழக அரசின் தலைமைச் செயலர் சாரங்கி, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டு ஜூன் மாதம் 10 டி.எம்.சி.,யும், ஜூலை மாதம் 42 டி.எம்.சி.,யும், காவிரி தண்ணீரை கர்நாடகா தமிழகத்திற்கு தர வேண்டும். தென்மேற்கு பருவ மழையைப் பொறுத்துத் தான் தண்ணீர் கொடுக்க முடியும் என்று கர்நாடகா கூறியதால், தமிழகத்தின் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி விட்டது. குறுவை சாகுபடி தஞ்சை, நாகை மாவட்டங்களில் கிட்டத்தட்ட 2.21 லட்சம் ஏக்கரில் ஜூன் மாதம் துவங்குவது வழக்கம்.
பங்கேற்றது யார் யார்?இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை செயலர் டி.வி.சிங் தலைமையில், காவிரி நதி நீர் ஆணைய கண்காணிப்புக் குழு கூட்டம், நேற்று காலை சரியாக 11 மணிக்கு,ஷ்ரம் தி பவனில் துவங்கியது. தமிழகத்தின் சார்பாக, தலைமைச் செயலர் சாரங்கி, பொதுப்பணித் துறை செயலர் சாய்குமார், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம், கர்நாடகா சார்பில் தலைமைச் செயலர் எஸ்.வி.ரங்கநாத், கேரள
நீர்வளத்துறை செயலர் விஜய் குரியன் மற்றும் புதுச்சேரி அரசு அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தது.கூட்டத்திலிருந்து முதலில் வெளியே வந்த கண்காணிப்புக் குழுத் தலைவர் டி.வி.சிங், நிருபர்களிடம் பேசுகையில், இந்தக் கூட்டத்தில் நடந்த விஷயங்களை நதி நீர் ஆணையத்திற்கு ஒரு அறிக்கை மூலம் தெரிவிப்பேன்,என்றார். கூட்டம் தோல்வியில் முடிந்ததா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.
Central Government and Regional Autonomy by Kalaignar Muthuvel Karunanithy.1990.