2017-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு ஆண்டு தோறும் மாணவர்களின் உயிர்களை பலி கொள்ளும் தேர்வாக மாறி விட்டது. இதுவரை 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் இப்போது வரை அந்த அவலம் தொடர்கிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக முதன் முதலாக தற்கொலை செய்தது அனிதா என்ற அரியலூர் மாணவிதான். மிகப்பெரிய அரசியல் கொந்தளிப்பை உருவாக்கிய அனிதாவின் மரணத்திர்குப் பின்னர் அடுத்தடுத்து தற்கொலைகள் நடந்த போதும் ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய முன் வரவில்லை.
இந்த ஆண்டின் முதல் தற்கொலை சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர். இவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் மூன்றாவது முறையாகவும் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள துளாரங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஒன்று அநீதியான நீட் தேர்வு இருக்கும் வரை அதை நடைமுறைப்படுத்தியாக வேண்டிய நெருக்கடியை உருவாக்கி வைத்து விட்டுச் சென்றவர்கள். இன்று நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வரும் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
இந்த நீட் தேர்வு உருவாக்கியுள்ள நெருக்கடி மருத்துவக் கனவில் மேலும் போட்டியையும் மன உளைச்சல்களையும் உருவாக்கி விட்டது.