கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால், வட தமிழகத்திலும் சென்னையை ஒட்டிய பகுதிகளிலும் மழை இல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக வட கிழக்கு பருவமழையோடு காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் உருவாகும் மழையும் சென்னையை புரட்டிப் போட்டு வருகிறது.
2015-ஆம் ஆண்டு அளவுக்கு வெள்ளச் சேதம் இல்லை என்றாலும் சென்னையில் முக்கிய சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையின் தண்ணீர் இன்னும் வடியாத நிலையில் நாளை 10-ஆம் தேதி அதி கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதி கனமழை பெய்யும் இடங்களுக்கு ரெட் அலர்ட்டும், கன மழை பெய்யும் இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புச்சேரி ஆகிய இடங்களுக்கு ரெட் அலர்ட்டும், சென்னையை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கும் வட மாவட்டங்களில் விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் 20 செ.மீ முதல் 25 செ.மீ வரையில் மழை பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கன மழை காரணமாக தமிழ்நாடு முழுக்க மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.