தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் புறக்கணித்துள்ளது.
ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் பேசிய ஆளுநர்,
“பழமையான கலாச்சாரங்களில் ஒன்றைச் சேர்ந்த மக்களிடம் பணியாற்ற வந்திருப்பதில் மகிழ்ச்சி. நான் தமிழ் கற்றுக் கொள்ள முயல்வேன் . இப்போது தமிழ்நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு ஆட்சியில் இருக்கிறது.ஆளுநர் என்பவர் அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கும் அளவுக்குள்தான் செயல்பட முடியும். அதனை மனதில் வைத்து செயல்படுவேன். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது” என்றார்.
ஆளுநர் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர், அமைச்சர்கள், வைகோ, பாஜக தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போதும் இரு கட்சிகளும் ஆளுநர் நியமனத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
உளவுத்துறை அதிகாரி ஒருவரை தமிழ்நாடு ஆளுநராக நியமிப்பது சந்தேகத்திற்குரியது என்று இரு கட்சிகளும் முன்னதாக கண்டனங்களை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.