கடந்த சில நாட்களாக குழந்தைகள் சந்தேகத்திற்கிடமாக கொல்லப்படும் நிகழ்வு அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. நேற்று முன் தினம் விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல்தெரு என்ற இடத்தில் சாலையோர தள்ளுவண்டியில் சலவைத் தொழில் செய்து வருகிறார். அவர் நேற்று முன் தினம் காலை கடையைத் திறந்த போது தனது தள்ளுவண்டியில் குழந்தையின் சடலம் ஒன்று கிடந்தது. அவர் காவல்துறைக்கு தகவல் சொல்ல விழுப்புரம் மேற்கு காவல்துறையினர் வந்து சடலத்தை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவமாக திண்டிக்கல் மாவட்டம் பாச்சலூர் அரசுப்பள்ளி வளாகத்திலேயே 9-வது சிறுமி பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். பாச்சலூர் பகுதியில் வசிக்கும் குழந்தைகள் சிலர் நேற்றும் வழக்கம் போல பள்ளிக்குச் சென்றனர். காலை 11 மணி அளவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி வகுப்பறையை விட்டு வெளியே சென்றவர் திரும்பவரவில்லை என்று கூறப்படுகிறது.
பின்னர் அதே பள்ளி மைதானத்தில் உடல் கருகிய நிலையில் சிறுமி இறந்து கிடந்ததாக தெரிகிறது. அக்குழந்தையை மருத்துவமனை கொண்டு சென்ற போது மருத்துவர்கள் சிறுமி இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் நேற்று கோவை சரவணம் பட்டி பகுதி யமுனா நகரில் 15 வயது சிறுமி காணாமல் போயுள்ளதாக சரவணம் பட்டி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்று பதிவானது. காவல்துறையினர் அந்த சிறுமியை தேடி வந்த நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் அந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த மூன்று நிகழ்வுகளுமே அடுத்தடுத்து நடந்துள்ளது. இந்த மூன்று வழக்குகளிலும் குற்றவாளிகள் யார் என்றோ ஏன் இந்த கொலைகள் நடந்துள்ளன என்றோ இதுவரை துப்பு கிடைக்கவில்லை.
அரசுப்பள்ளியிலேயே ஒரு மாணவி எரிந்த நிலையில் கிடந்துள்ளார். நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. ஒரு சிறுமியின் கை கால்களைக் கட்டி குப்பைக் கிடங்கில் வீசி விட்டுப் போகிறார்கள்.இந்த சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.