ஒடுக்குமுறையிலிருந்து விடுபட ஐ.நா அறிக்கையை தமிழ் மக்கள் வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின அறைகூவல
மே தினம் என்பது சர்வதேச தொழிலாளர்கள் தமது உரிமைகளை வென்றெடுத்த நாளாகும். ஒவ்வொரு வருடமும் அதே தினம் தொழிலாளர்கள் ஒன்று கூடி தமது உரிமைகளை சுதந்திரமாக வலியுறுத்துவதே மரபாக உள்ளது.
கடந்தகால மே தினங்களில், தமிழ் தொழிலாளர்கள் மட்டுமல்லாது தமிழ் தேசத்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும், விடுதலையை கோரியும் குரல் கொடுத்துவந்த வரலாறு எமக்குண்டு. ஆனால் 2009 மே மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் தமது உரிமைகளை இழந்து அடங்கி, ஒடுங்கி அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இறுதி யுத்தகாலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஸ்ரீலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் போர்க் குற்றங்களிலும், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளதாகவும் ஐ.நா நிபுணர்குழு கண்டறிந்துள்ளதுடன் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. பரிந்துரைகளின் அடிப்படையில் விசாரணை நடாத்தப்படல் வேண்டுமென சர்வதேச சமூகம் வலியுறுத்திவருகின்றது.
தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசினால்;, இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கான மறைக்கவோ, மறுக்கவோ முடியாத சர்வதேச சாட்சியாக ஐ.நா அறிக்கை அமைந்துள்ளது. இந்த அறிக்கை தமிழ் மக்களுக்கு ஆறுதலையும் எதிர்காலம் பற்றியதொரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஸ்ரீலங்கா அரசு அவ்வாறான ஓர் விசாரணை இடம்பெறாமல் தடுப்பதற்கான இராஐதந்திரப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு அங்கமாக அரசின் அடக்குமுறைகள்மூலம் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் தமிழ்த் தேசத்துத் தொழிலாளர்கள், தொழிலாளர் தினத்தில் அடக்குமுறையாளர்களுக்கு(அரசுக்கு) ஆதரவாகவும், ஐ.நா அறிக்கைக்கு எதிராகவும் குரல் கொடுக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாக அறிகின்றோம். பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டே, தமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென கூறவைக்கப்படும் பரிதாப நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசின் முகவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்களை நிற்பந்தப்படுத்தியும், பொய்யான வாக்குறுதிகளை வழங்கியும் பஸ்களில் ஏற்றி ஐ.நா அறிக்கைக்கு எதிராக இடம்பெறவுள்ள மேதின ஊர்வலத்தில் கலந்து கொள்ள வைப்பதற்காக கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் செயற்பாட்டைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையானது ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசத்து மக்கள் உரிமைகளை பெறுவதற்கான வாய்ப்பான சூழலை உருவாக்கியுள்ளது. இந்த வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்தி ஒடுக்கு முறையில் இருந்து விடுபட்டு உரிமைகளை வென்றெடுக்க தமிழ் மக்கள் அனைவரையும் ஒற்றுமையாக ஓரணியில் திரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது மேதின அறைகூவலை விடுக்கின்றது.
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளா