தேசிய இனப்பிரச்னை என்பது வெறுமனே தேசிய இனங்களாக அடையாளங்காணப்பட்ட சமூகக் குழுமங்களுக்கிடையிலான முரண்டுபாடுகளின் சேர்க்கை மட்டுமல்ல தேசங்களாகவோ தேசிய இனங்களாகவோ மக்கள் அடையாளப்படுத்தப்படுவதும் அவற்றினிடையிலான உறவின் தன்மையும் முரண்பாடுகள் கூர்மையடைவதும் மழுங்கிப்போவதும் தேசங்களதோ தேசிய இனங்களதோ உள்ளார்ந்த மாற்ற இயலாத இயல்புகளது வெளிப்பாடுகளல்ல.
மாறாகச் சமூகத்தின் தன்மை , உற்பத்தி, உறவுகள், வர்க்க முரண்பாடுகள், அந்நிய ஆதிக்க உறவுகள் போன்றவை வரலாற்றுப் போக்கில் தேசிய இன உறவுகளை நிர்ணயிக்கின்றன.
இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் கம்யூனிஸ் கட்சிப் பாரம்பரியத்திற்கும் சமசமாஜக்கட்சியின் ஸ்ரொட்ஸ்கியப் பாரம்பரியத்துக்கும் தேசிய இனப்பிரச்னை பற்றிய அணுகுமுறையில் முதலிலிருந்தே ஆழமான வேறுபாடு இருந்து வந்தது. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாகவும் சுயநிர்ணய உரிமையுடையோராகவும் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக அறிவித்தாலும் சமசமாஜக்கட்சி தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கத் தவறியது. எனினும் தேர்தல் அரசியலின் பின்னணியில் இக்கட்சிகளின் பாராளுமன்ற அரசியற் பாதையைத் தெரிவு செய்தோர் தேசிய இனப்பிரச்னையை தேர்தல் அரசியற் கண்ணோட்டத்திலேயே அணுக முற்பட்டனர்.
பாராளுமன்ற இடதுசாரிகளைப் பொறுத்தவரை,1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை அதாவது பாராளுமன்றத்தில் அவர்கட்கு ஒரு ஆசனங்கூடக் கிடைக்காத நிலை வரும்வரை கூட பேரினவாத அரசியலுடன் சமரசம் செய்ய அவர்கள் தயங்கவில்லை. ஒவ்வொரு சமரசமும் இடதுசாரிகட்கு இழப்பாகியது. 1963 ஆம் ஆண்டு தொடங்கிய இச்சமரசப் போக்கின் விளைவாக இடதுசாரிக்கட்சிகளின் தொழிற்சங்கத் தளத்தின் பெரும்பகுதி முதலாளிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றின் பிடிக்குள் சென்றது. 1970 கள் வரை தொழிலாள வர்க்கத்தை நிராகரித்த இடதுசாரி பேரினவாத ஜேவிபி யினிடமும் இடதுசாரித் தொழி ற்சங்க வலிமை 1980 களில் இழக்கப்பட்டது.
பாராளுமன்ற இடதுசாரிகள் தம்மளவில் பேரினவாதிகளாக இல்லாமலிருந்திருக்கலாம்.ஆனால் அவர்களது அரசியல் சந்தர்ப்பவாதம் அவர்களைச் சரியான நிலைப்பாடுகளை உரிய நேரத்தில் செய்யாமல் தடுத்துள்ளன.பேரினவாதிகளின் இனஒடுக்குமுறைக்கு உடந்தையாகச் செயற்படவும் வழி செய்துள்ளது. பேரினவாத முதலாளியத்துடனான சமரசத்தால் இன்று தென்னிலங்கையில் பாராளுமன்ற இடதுசாரிகள் அடையாளம் இழந்து அழிவுபட்டுள்ளனர். ஒரு மாற்று இடதுசாரிச் சக்தியை உருவாக்கி வளர்ப்பதற்குத் தென்னிலங்கையின் இடதுசாரிப் பாரம்பரியம் தகுதியற்றதாகிவிட்டது. அதற்கான காரணங்களில், பாராளுமன்றச் சந்தர்ப்பவாதத்தின் அளவுக்கு முக்கியமானது தென்னிலங்கை இடதுசாரி இயக்கத்தில் ட்ரொட்ஸ்கியத்தின் ஆதிக்கம் என்பேன்.
கம்யூனிஸ்ட் கட்சி தமிழரைத் தேசிய இனமெனவும் சுயநிர்ணய அடிப்படையில் சுயாட்சிக்கு உரித்துடையோரெனவும் 1950 அளவிலேய அறிவித்தபோதும்,சமசமாஜக்கட்சி என்றுமே தமிழரைத் தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. சிறுபான்மையினரின் உரிமை என்ற அடிப்படையிலேயே தமிழ் மக்களின் மொழியுரிமை முதலானவை ஆதரிக்கப்பட்டன. சமசமாஜக்கட்சி உடைவுக்குட்பட்ட நிலையிலும் இவ்விடயத்தில் கருத்து முரண்பாடு இருந்ததாகக் கூறமுடியாது. 1977 ஆம் ஆண்டு சமசமாஜக்கட்சி தேர்தலில் படுதோல்வி கண்ட பின்பே உருவான நவசமசமாஜக்கட்சி, தமிழ் மக்களின் சுயநிர்ணயம் பற்றி 1980 களில் பேசத்தலைப்பட்டாலும் அக்கட்சியோ அதிலிருந்து உடைந்த ஐக்கிய சோசலிசக் கட்சி உட்பட்ட பிற பிரிவுகளோ, 1977 வரை பேரினவாதத்திற்கு பணிந்து நடந்த தமது நடத்தையை இதுவரை விளக்கியதில்லை.
வலது கம்யூனிஸ்ட்டுக்கள் என்று கூறக்கூடிய பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசிய இனப்பிரச்னையில் தமது முன்னைய நிலைப்பாடுகட்குத் துரோகம் செய்தோராவர். அவர்களுடன் தமது சுய முன்னேற்றத்திற்காக அண்டிக்கிடந்து,1977 க்குப் பின்பு கண்விழித்த தமிழ்ப்பிரமுகர்கள், தமிழ்த்தேசியவாதத்திற்கும் திரிபுவாதிகள் எனவும் அழைக்கப்படும் வலது கம்யூனிஸ்ட் கட்சி விசுவாசத்துக்குமிடையே ஊசலாடு வேராகவே இருந்து வந்துள்ளனர்.
இன்று வரை தேசியஇனப்பிரச்னையில் தடுமாற்றமின்றி இருந்து வந்துள்ளது மார்க்சிய லெனினிய கம்யூனிஸ்ற் பாரம்பரியமே. எனினும் அதிற் பிளவுகள் நிகழ்ந்துள்ளன. பிரிந்து சென்றவர்களில் சிலர் தனித்துவமான தமிழ்த்தேசிய அமைப்பொன்றை நிறுவ முற்பட்டனர். வேறு சிலர் வௌவேறு தமிழ்த்தேசிய அமைப்புகட்குள் தம் மார்க்சிய அடையாளங்களை கரைத்துக் கொண்டனர். மேலும் சீரழிவுக்குள்ளானவர்கள், இன்று பேரினவாத இலங்கை அரசாங்கத்தின் எடுபிடிகளாக உள்ளனர்.
இது ஏன் என்ற கேள்விக்கான மறுமொழியை அறிய, எவ்வாறு புதிய ஜனநாயக்கட்சியால் தமிழ்த்தேசியவாத அலையின் எழுச்சியின் நடுவிலும் தவறாமல் இருக்கவும் தமிழீழப் போராட்டத்தை நியாயமான முறையில் விமர்சிக்கவும் தேசிய இனப்பிரச்னை பற்றிய ஒரு முன்னோடியான பார்வையை விருத்தி செய்யவும் இயலுமானது என்று விசாரிப்பது பயனுள்ளது.
புதிய ஜனநாயகக் கட்சியின் அணுகுமுறை இலங்கையின் யதார்த்தமான நிலைகட்கு தேசிய இனப்பிரச்னை பற்றிய மார்க்சிய , லெனினிய கொள்கைகளைப் பயன்படுத்துவதாக அமைந்தது. சமஸ்டி என்றோ தனிநாடு என்றோ ஒரு முடிந்த முடிவாக ஒரு தீர்வை முன் வைத்து அதை மையப்படுத்தி வாதங்களை விருத்தி செய்வது என்றுமே மார்க்சிய அணுகுமுறை ஆகாது. அது போலவே ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நோக்கப்பட்டவாறு, சிங்களவர்- தமிழர் என்ற அடிப்படையில் தேசிய இனங்களை அடையாளப்படுத்தி தீர்வுகளைத் தேடுவதன் பயனாக இலங்கை எப்போதுமே ஒரு சிங்கள தேசமாகவும் தமிழ்த்தேசமாகவும் இருந்து வந்து என்று ஒரு வரலாற்றுப் புனைவால் சிறைப்படுத்தப்படுவது நேர்மையுமாகாது, பயன்தருவதுமாகாது. எனவே, முஸ்லிம்கள் தனித்தேசிய இனமாக தம்மை நிலைநிறுத்திய சூழ்நிலைகளையும் கணிப்பிலெடுத்து அவர்களைத் தனித்தேசிய இனங்களாக ஏற்ற முதலாவது அரசியற்கட்சியாகவும் புதிய ஜனநாயகக் கட்சியே அமைந்தது. இதை, இன்று வரை முஸ்லிம்களதும் மலையகத் தமிழர்களதும் தனித்துவத்தைக் கூட ஏற்கத் தயங்கும் குறுகிய தமிழ்த்தேசியவாத நிலைப்பாடுகளுடனும் அதிரடியாக முஸ்லிம் தேசம் என்று வடக்கு கிழக்கின் முஸ்லிம்களை வரையறுத்து, தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம் பெரும்பான்மையினரிடமிருந்து தனிமைப்படுத்தும் போக்குடனும் ஒப்பிடுவது பயனுள்ளது.
தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகவே ஏற்க மறுத்த ட்ரொஸ்கிய அரசியல் மரபில் வந்த மூன்று கட்சிகள் இன்று தமிழ், சிங்கள தேசங்கள் பற்றிப் பேசுகின்றன. ஆனால் அவர்களிடம் முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் பிரச்னைகள் பற்றிய தெளிவான பார்வையோ தீர்வு ஆலோசனைகளோ இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற ஆயுத எழுச்சியின் சாடைகள் தெரிந்த பின்பே ட்ரொஸ்கியவாதிகள் தமிழ்த்தேசிய இனம் என்ற ஒன்று இருப்பதாக எண்ணத் தலைப்பட்டனர். ஆனாலும் இன்று வரை முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் இருப்பைப் பற்றிய ஒரு தீர்க்கமான பார்வை அவர்களிடம் இல்லை. அதன் விளைவாகவும் சந்தர்ப்பவாத நோக்கங்களாலுமே விடுதலைப் புலிகளை விமர்சனமின்றி ஆதரித்துப் பேசுகின்ற போக்கு ட்ரொஸ்கியவாதிகளிடம் காணப்பட்டது. அது இன்னமும் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தப்படவில்லை.
விடுதலைப் போராளி இயக்கங்களில் பெரும்பாலானவை தமிழரசுக்கட்சி , தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அரசியலின் வாரிசுகளாகவே உருவாகின. இடதுசாரி முனைப்புடையனவாக சில தோன்றினாலும் அடிப்படையில் அவை குறுகிய தமிழ்த்தேசியவாதத்தால் வழி நடத்தப்பட்டதுடன் இந்திய அரசாங்கத்தின் குறுக்கீட்டுக்கு இடமளிப்பவையாகவும் அமைந்தன. மார்க்சிய லெனினிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிய ஓரிருவர் உருவாக்கிய என்.எல்.எவ்.ரி.குறுகிய தேசியவாதிகளுடன் போட்டியிடுகிற விதமாகத் தமிழீழம் என்ற நிலைப்பாட்டிலிருந்தே தனது வேலைத்திட்டத்தை வகுத்தது. எனினும் அதனால் வலுவான சக்தியாக வளர இயலவில்லை. பொதுவாகச் சொன்னால் “தமிழீழம் தான் மறுமொழி! கேள்வி என்ன? “என்கிற விதமாகவே தமிழ்த்தேசியவாதக் கட்சிகளும் அமைப்புக்களும் பிரச்னையை அணுகின எனலாம்.
1989 க்குப் பிறகு, குறுகிய தேசியவாத அணுகுமுறையின் தவறுகள் விடுதலை இயக்கங்கள் பலவற்றினுள்ளும் உணரப்பட்டாலும் அதைத் திருத்துகின்ற ஆற்றல் இயக்கங்களின் தலைமையில் இருந்தோரிடம் இருக்கவில்லை.
அதன் பயனாகவே, அவை காலப்போக்கில் தமிழரசுக்கட்சி ௲ தமிழர் தேசிய விடுதலைக் கூட்டணி மரபிலேயே தேசிய இனப்பிரச்னையை அணுகத் தலைப்பட்டன.இன்னமும் வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு பேச்சுவார்த்தைகள், 13 வது சட்டத் திருத்தம், ஒஸ்லோ உடன்படிக்கை என்று தேசிய இனப்பிரச்னையில் குறிப்பான ஒரு தீர்வு அம்சம் சார்ந்த நிலைப்பாட்டுக்கு வெளியே பிரச்னையைக் காண இயலாதவையாகப் பல தமிழ்த்தேசிய விடுதலை அமைப்புக்களும் கட்சிகளும் உள்ளன. அவற்றைக் கூட, எவ்வாறு நடைமுறையில் முன்னெடுப்பது என்பதில் அவர்கட்குள் தெளிவில்லை. இன்னமும் இந்திய அல்லது அமெரிக்கத் தலைமையிலான ‘சர்வதேச” சமூகம் குறுக்கிட்டுப் பிரச்னையைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்களிடையே வளர்க்க முற்படுகின்றனர்.
இன்னொரு சாரார், தமிழ்த்தேசியவாதத்தின் எழுச்சியை வர்க்கங் கடந்த, வர்க்க அடையாளமற்ற ஒரு நிகழ்வாகக் காண விரும்புகின்றனர். வரலாற்றை மிகவும் அகச் சார்பாகவும் தமிழ்த்தேசியத்தை நிரந்தரமானதும் புனிதமானதுமான ஒரு பொருளாகவும் நோக்குகின்ற காரணத்தினால், மேலும் அகச்சார்பான வரலாற்று விளக்கங்களும் தீர்வுக்கான பாதைகளும் வகுக்கப்படுகின்றன. இப்போக்குப் புலம்பெயர்ந்த குறுகிய தமிழ்த்தேசியவாதிகளிடையே வலுவாய் உள்ளது. சுதந்திர தமிழ் ஈழம் என்பது முடிந்த முடிவாக ஏற்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் மத்தியிலான விவாதங்கள், கடந்த கால ஆயுதப் போராட்டத்தின் தோல்வியைப் போராட்ட முறை சார்ந்த ஒன்றாகக் குறுக்கி விடுகின்றன. தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வொன்றை முடிந்த முடிவாகக் கொண்டு யதார்த்தத்தை விளங்கிக் கொள்வது கடினம்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்னையை வெறுமனே சிங்கள தமிழ்த் தேசங்களிடையிலான அல்லது சிங்களத் தேசிய இனத்திற்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்குமிடையேயான பிரச்னையாகவே பெருவாரியானோர் இன்னமும் நோக்குகின்றனர். தேசிய இனப்பிரச்னையின் விருத்தி போக்கில், எவ்வாறு தனித்துவமான இரண்டு தமிழ் பேசும் சமூகங்கள் தம்மைத் தேசிய இனங்களாக அடையாளங் கண்டுள்ளன என்பதை அவர்களால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த இடத்திலே தான், இலங்கையின் மார்க்சிய லெனினிய மரபும் அதன் அதி முக்கியமான பிரதிநிதியாகவுள்ள புதிய ஜனநாயகக் கட்சியும், தேசிய இனப்பிரச்னையை இயங்கியல் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் நோக்கித் தங்களது நிலைப்பாட்டை வந்தடைந்ததுடன், அதை மேலும் விருத்தி செய்யவும் இயலுமானோராக உள்ளனர்.
அரசியல்வசதி கருதித் தேசங்களை வரையறுக்கும் போக்கைக் குறுகிய தமிழ்த்தேசியவாதிகள் மட்டுமன்றி குறுகிய முஸ்லிம் தேசியவாதிகளும் கடைப்பிடித்து வந்துள்ளனர். எவ்வாறு தமிழ் ஈழம் என்றால் என்று பிரதேச அடிப்படையிலும் இன அடையாள அடிப்படையிலும் யதார்த்தமான பொது முடிவு ஒன்றுக்கு வருவது தமிழ்த்தேசியவாதிகட்கு இயலாமல் இருந்து வந்துள்ளதோ, அவ்வாறே முஸ்லிம் தேசியவாதிகளிடையிலும் கிழக்கு முஸ்லிம்கள் வடக்கு முஸ்லிம்கள் வடக்கு கிழக்கின் முஸ்லிம்களாக அல்லது அனைத்து முஸ்லிம்களுமா முஸ்லிம் தேசம் என்ற விவாதம் முஸ்லிம் தேசிய இனத்தின் பிரச்னைகளை விளங்கிக் கொள்ளவும் அதன் தேசிய இன உரிமைக்கான போராட்டத்தை வழி நடத்தவும் பாதகமான முறையில் நடந்து வந்துள்ளது.
இப்பின்னணியிலேயே புதிய ஜனநாயகக் கட்சி இலங்கையில் நான்கு தேசிய இனங்களையும் பிற தேசிய சிறுபான்மை இனங்களையும் அடையாளங் கண்டு சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டை அதன் விரிவான பொருளின் பிரயோகிக்கும் அணுகுமுறையை முன் வைத்தது. தேசிய இனப்பிரச்னையை ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தின் நிலைப்பாட்டினின்று நோக்குவதற்கு மாறாக, அதன் முழுமையைப் பல்வேறு கோணங்களிலும் அதன் விருத்திப் போக்கிலும் நோக்குவதே, புதிய ஜனநாயகக் கட்சியின் அணுகுமுறையை மற்ற இடதுசாரிகளதும் தேசியவாதிகளதும் அணுகுமுறைகளினின்று வேறுபடுத்துகின்றது.
மார்க்சியம் லெனினியம் தேசியக் கண்ணோட்டத்திலிருந்து உலகை நோக்கவில்லை. நோக்கவும் இயலாது. அதேவேளை, தேசியம், இனம், நிறம், மொழி, சாதி,மதம் போன்ற பல்வேறு முரண்பாடுகள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அடிப்படையான முரண்பாடாகிய, சமூக உற்பத்தி உறவுகளின் தன்மையைக் குறிக்கின்ற வர்க்க முரண்பாட்டை மேவி விடலாம் என்பதை அது ஏற்கிறது. அவற்றை எவ்வாறு சரியாகக் கையாளுவது என்பது தான் மார்க்சிய லெனினியர்கள் முன்னால் உள்ள சவால். அவற்றின் தீர்வை, வர்க்கப் போராட்டத்தை அதன் சோசலிச இலக்கை நோக்கி முன்னெடுக்கும் பணியுடன் இணைப்பதிலேயே மார்க்சிய லெனினிஸ்டுக்களின் வெற்றி தங்கியுள்ளது. தேசியத்தை வரலாற்றில் வைத்து நோக்கினால் எந்த ஒரு தேசமும் நிலையான நிரந்தரமான ஒரு வரலாற்றுப் பொருளல்ல என விளங்கும். அதன் மூலம் தேசிய அடையாளங்கள் சமூக அரசியற் சூழல்களினாலும் வரலாற்று நிர்ப்பந்தங்களாலும் வடிவு பெறுவதை விளங்கிக் கொள்ள இயலும். அதை விடுத்துக் குறிப்பான ஒரு தீர்வையோ முன் கூட்டியே தீர்மானித்த தேசிய இன அடையாளங்களை நி;ரந்தரமானவையாகக் கொண்டோ தேசிய இன முரண்பாடுகளைத் தீர்க்க இயலாது. கொலனியத்திற்கு பிற்பட்ட மூன்றாமுலகில் கொலனியம் உருவாக்கிய சிக்கல்கள் ஒரு புறமும் நவகொலனிய உலக மயமாக்கற் சூழலில் உருவாகிள்ள “அடையாள அரசியல்“சிக்கல்கள் ஒரு புறமுமாக இழுக்கும்போது, தேசியத்தைப் புறநிலை யதார்த்தமாக நோக்குவது அவசியமாகின்றது. தேசிய விடுதலை என்கின்ற பேரிற் கூடத் தேசிய ஒடுக்கல் நிகழும் அபாயம் பற்றியும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்னையில் தேசிய அரசியலை அகச்சார்பாக நோக்கிப் பிற சமூக முரண்பாடுகளைப் புறக்கணிக்கும் போக்கிற்கெதிரான பணியில் புதிய ஜனநாயக் கட்சியின் பங்களிப்பு மிக முக்கியமானது. சுயநிர்ணயக் கோட்பாட்டை ஆக்கபுர்வமாக விரிவுபடுத்தியதிலும் அதன் பங்கு முக்கியமானது. தேசிய இனப்பிரச்னையைச் சிங்களத்- தமிழ் பகையாகப் பார்க்கும் ஒரு பார்வையிலிருந்து விடுவிப்பதில் புதிய ஜனநாயகக் கட்சி ஆக்கமான பங்களித்துள்ளதற்குக் காரணம் அதன் மார்க்சிய லெனினிய அரசியற் பாரம்பரியமே என்று என்னால் உறுதியாகக் கூற இயலும்.
தமிழ்த்தேசியவாதிகள் எனப்படுவோர் கடந்த காலக் குறுகிய தேசியவாதத்தின் சிந்தனைச் சிறையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும்போது மார்க்சிய லெனினியவாதிகளுடன் கூடிய நெருக்கங் காண இயலும் என்றும் என்னால் ஓரளவு உறுதியுடன் கூற இயலும்.
நரசிம்மா உங்களுக்கு வள்ளலார் என்றே பெயர் வைக்கலாம்,
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேனே….
“சமஸ்டி என்றோ தனிநாடு என்றோ ஒரு முடிந்த முடிவாக ஒரு தீர்வை முன் வைத்து அதை மையப்படுத்தி வாதங்களை விருத்தி செய்வது என்றுமே மார்க்சிய அணுகுமுறை ஆகாது.
லெனினியம் தேசிய இனப் பிரச்சனையை வரையரை செய்தது ஏகாதிபத்திய காலகட்டத்தில்தான் இதில் ஒளிவுமறைவு வேண்டாம். ”
அதற்கு வர்க்க உள்ளடக்கம் என்பது நிச்சயமாக இருக்கிறது உண்மைதான். அதற்காக தேசிய இனம் என்றுமே பிரிந்து போகாமல் ஒன்று சேர்ந்துதான் சாசுவதமாக இருக்கவேண்டும் என்று எந்த மார்க்சிய ஆசான்கள் கூறியிருக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த முடியுமா.
குறுந்தேசிய வெறி எந்த அளவுக்கு ஆபத்தானதோ, அதே அளவு ’கல்லானாலும் கனவன்’ என்று தேசிய இனப் பிரச்சனைக்கு கொள்கைவகுப்பதும் ஆபத்தானதே.
பிரிந்துபோவதும் சேர்ந்து இருப்பதும் குறிப்பான நாட்டின் அம்சத்திலிருந்து முடிவு செய்யவேண்டும். அதை விடுத்து எப்போதும் சாசுவதமாக இணைந்து இருக்கவேண்டும் என்று கூறும் புனிதவாதிகளே, உங்கள் புராணத்தை கொஞ்சம் நிறுத்தி வையுங்களேன். ’அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்’ என்று காத்துக் கிடந்தீர்கள் போலும்.
இன சமத்துவத்தை அங்கீகரிக்காத இலங்கை அரசு, அதை பெரும்பாண்மையாக ஆதரிக்கும் மக்கள், ’புத்தமதவாத சிங்களப் பேரினவாத இராணுவ சர்வாதிகார அரசு’ இப்படி ஒரு அரசும் அதனை அடிப்படையாக கொண்ட உற்பத்தி சக்திகளும் அதாவது நிலப்பிரபுத்துவ சக்திகளும் இருக்கிறது.
இதுமாதிரிப் பொழுதில் இன ஒடுக்குமுறையில் சுயநிர்ணய உரிமை என்று மட்டும் பேசுவது கேலிக்கூத்தானது. ஈழத்தை விட்டொழிக்காத வரையில் இலங்கையின் உழைக்கும் வர்க்கம் கூட வர்க்க உணர்வு பெறமுடியாது, அது இன வெறியில்தான் மூழ்கிக் கிடக்கும். ராஜபக்சேவையோ, பொன்சகாவையோ, இல்லை இன்னொரு நபரையோ இலங்கை வாழ் மக்கள் எதிர்ப்பதால், அது இனவெறியை கைவிட்டு ஜனநாயகத்திற்காக எதிர்ப்பதாக கொண்டீர்கள் என்றால் உங்களைப் போல ஒரு ’இளவம் காத்த கிளியை’ பார்க்க முடியாது என்றே கருதுகிறேன்.
ஒரு வேளை அது ஜனநாயகப் படுத்தப்பட்டால் அப்போது இரு தேசிய இனங்களும் இணைந்து கொள்ளலாம். அதற்காக அவர்கள் ஜனநாயகவாதிகளாக மாறமாட்டார்களா என்று வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கவேண்டாம்.
ஈழத்தில் போராடுகின்ற நபர்கள் வீழ்ந்திருக்கலாம், ஆனால் அதற்கான காரணப்பொருள் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்று இப்போதாவது உணருங்கள். இன்றைய தோல்வி என்பது சுயநிர்ணய உரிமைக்கு போராடாமல் இருந்ததால் அல்ல, சர்வதேசிய நிலைமைகளை சரியாக கணிக்காமல் இதில் யாராவது ஒருவரை நம்பி இருந்ததே. இது ஏதோ அவர்கள் மட்டுமே செய்ததாக நினைக்காதீர்கள். நேபாளும் அதைத்தான் செய்தது. அவர்கள் சரணடைந்தார். அதனால் அவர்களை விட்டுவிட்டார்கள். இவர்கள் சரணடைய மறுத்தார்கள் அதனால் அவர்களை கொன்றொழித்தார்கள். இந்த அடிப்படை உண்மைகூட உங்களுக்கு புரியவில்லை.
இன்றும் அமெரிக்காவின் பின்னால் சென்று சாதித்துவிடலாம் ஏன் என்றால் அது ஒற்றைத் துருவமாக ஆட்சி செய்கிறது, அது கடைக்கண்ணை காட்டிவிட்டால் நமக்கு விமோசனம் கிடைத்துவிடும் என்று ஏங்குகிறவர்கள் நிறையபேர். இல்லை என்றால் தேசிய இனப்பிரச்சனையை எப்படி அனுகுவது என்பதே தெரியாமல் அல்லது மறைத்து மார்க்சியத்தின் பெயரால் குட்டிமுதலாளித்துவ தீர்வுகளையோ அல்லது ஆளும் வர்க்கத்தின் தீர்வினையே பெயர் மாற்றி தருகிறார்கள். வர்க்கம் என்ற சொல் பயன்படுத்தியதாலே நீங்கள் தேசிய இனப் பிரச்சனையை மார்க்சிய ரீதியாக கூறுகிறீர்கள் என்று பொருளல்ல. பிரிந்து செல்வதா, இல்லை ஒன்று சேர்ந்து சுயநிர்ணய உரிமைக்காக போராடுவதா என்பதை பிரித்து அறிந்து செயல்படதெரியாமல் இருப்பதும் பிழையே.
மார்க்சியத்தை லெனினியத்தை தன்னடக்கமாக கற்க. அதை கற்பதற்கு முன்னேயே மேதாவியாக அருள் கூறுவதை நிறுத்துங்கள். இல்லை நீங்கள் முழுவது கற்றிருக்கிறீர்கள் என்றால் தெரிந்தே ஏமாற்றாதீர்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். இதுவே ஈழமக்களின் நலனுக்கு நீங்கள் செய்யும் பேருதவி.
புலிகளை சாடுவது ஒன்றே உங்களை நீங்கள் தூய்மைப் படுத்துவது ஆகாது. அவர்கள் தவறிழைத்திருக்கலாம் ஆனால் நீங்கள் அடிப்படையிலேயே செய்யும் தவறுக்கு இணையானது இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன். அவர்கள் செய்த தவறு என்பது சர்வதேச அரசியலை மதிப்பிட முடியாமல் போனது. நீங்கள் செய்வது தேசிய இன சிக்கலையே மதிப்பிட முடியாமல் போனதுதான்.
விசயங்க்ளை விவாதப் படுத்தலாம். ஆனால் தெரிந்தே உண்மைகளை மறைத்து விவாதம் நடத்துவது தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்பவதற்கு ஒப்பானதாகும். உங்கள் நிலைபாட்டை அதாவது இருவேறு தமிழ் பகுதிகள் என்று குறிப்பிட்டிருந்ததை விளக்கியிருக்க வேண்டும். எதுவுமே சொல்லாமல் இது தவறு, சரி என்று எப்படி விவாதப் படுத்துவது.
திருத்தம்: ”தேசியம், இனம், நிறம், மொழி, சாதி,மதம் போன்ற பல்வேறு முரண்பாடுகள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அடிப்படையான முரண்பாடாகிய”
அடிப்படை முரண்பாடாக அல்ல முதன்மை முரண்பாடாக என்பதுதான் சரியானது.
“இருவேறு தமிழ் பகுதிகள்” என்று குறிப்பிட்டிருந்ததாகக் கூறியிருந்தீர்கள்.
அச் சொற்றொடரைக் கட்டுரையின் எப்பகுதியிலும் என்னாற் காண இயல்வில்லை.
எங்கே எத் தொடர்பில் அது கூறப்பட்டது என்று சுட்டிக் காட்டின் விளக்க இயலுமாயிருக்கும்.
அடிப்படை (fundamental) என்ற பொருளிலேயே பயன்படுத்தினேன். ஆலோசனைக்கு நன்றி.
நீங்கள் என் பாட்டனாரயிருந்து என் பெற்றோருக்குச் சொல்லியிருந்தால் ஒரு வேளை வள்ளலார் என்றே பெயர் வைத்திருப்பார்கள். ஏன்ன செய்வது. காலங் கடந்துவிட்டது.
வள்ளலார் என்றீர்களே, A. நாவலர் என்று சொல்லவில்லையே நன்றி. (சபா நாவலன் கோபித்துக் கொள்ளக் கூடாது). என் சமூகப் பார்வையின் விருத்தியில் வள்ளலாருக்கும் ஒரு பங்குண்டு.
சிவப்பி அவர்களே,
“தனித்துவமான இரண்டு தமிழ் பேசும் சமூகங்கள் தம்மைத் தேசிய இனங்களாக அடையாளங் கண்டுள்ளன” என்ற சொற்றொடர் இருந்த இடத்தைக் கண்டு விட்டேன். அதையே நீங்கள் “இருவேறு தமிழ் பகுதிகள்” எனக் குறிப்பிட்டீர்களென நம்புகிறேன். (இவ் விடயம் அதற்கு முந்திய பந்திகளில் விளக்கப்பட்டிருந்தது).
இரண்டு தமிழ் பேசும் சமூகங்கள் என்பது முஸ்லிம்களையும் மலையகத் தமிழரையும் குறிக்கும். தமிழ்த் தேசியவாதிகள் அவர்களது தனித்துவத்தை ஏற்கவே தயங்கினார்கள். இன்னமும் தமக்குச் சமமான தேசிய இனங்களாக அவர்களை ஏற்க மறுக்கின்றனர்.
இதே தவற்றைத் தான் ட்ரொட்ஸ்கியர்களும் விடுகின்றனர்.
உங்கள் மேற்சொன்ன விளக்கத்தை ஏற்கிறேன்.
ட்ரோட்ஸ்கியர்களின் செல்வாக்கு இலங்கையில் மிக அதிகம் என்பதும் இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிற்கும் அவர்கள்தான் ட்ரோட்ஸ்கியர்களை இருக்குமதி செய்தார்கள் என்பதும் உண்மைதான். அவர்கள் தவறை இனம் கண்டுகொள்ளும் அதே நேரத்தில், மற்றொரு தவறாகிய தேசிய இனம் எந்த சூழ்நிலையில் பிர்நிது செல்லவேண்டும் என்பதும், எந்த சூழ்நிலையில் சுயநிர்ணய உரிமை கோரிக்கையின் அடிப்படையில் போராடவேண்டும் என்பதும் புரிந்துகொள்ளவேண்டும்.
வெறுமென தேசிய இனத்தை அடையாளம் காண்பதால் மட்டுமே தேசிய இன முரண்பாடு முடிவுக்கு வந்திடாது. அந்த முரணை எவ்வாறு தீர்க்கவேண்டும் என்பதையும் மார்க்சிய ரீதியில் தீர்வுகாணவேண்டியதும் அவசியம். அதற்கு மேற்சொன்ன விசங்கள் குறித்து மார்க்சிய அனுபவங்கள் உண்டு. அதையும் ஏற்கவேண்டும்.
மார்க்சியத்தின் அடிப்படைகள் என்ற நூலில் ஸ்டாலின் தேசிய இனப் பிரச்சனை குறித்து என்ற தலைப்பில் எழுதியுள்ளார். அதில் தேசிய இன பிரச்சனையை எவ்வாறு அனுகுவது என்றும். தேசிய இனப் பிரச்சனைக்கு போரடும் அமைப்புகளை எவ்வாறு அனுகுவது என்றும் தெளிவாக வரையறுத்துள்ளார். தேசிய இனப்பிரச்சனையில் குறிப்பான அம்சத்தை பிரிந்து போகவேண்டுமா, சுயநிர்ணய அடிப்படையில் சேர்ந்து இருக்கவேண்டுமா என்பதை முடிவுக்கு வரவேண்டும். அப்படி பிரிந்து போகும் சூழ்நிலை இருக்குமானால் அதற்காக போராடும் அமைப்பு அது எவ்வளவு பிற்போக்கானதாக இருந்தாலும் அதை நிபந்தனையுடன் (உறுதியாக அக்கோரிக்கைக்கு நின்று போராடும் வரையில்) ஆதரிக்க வேண்டும் எனவும் தெளிவாக வரையறுத்துள்ளார்.
தேசிய இனங்களை அடையாளங் காணவேண்டியது எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட அங்கு சிங்கள் பெருந்தேசிய இனவெறி மற்ற தேசியங்களை ஒடுக்குகிறது என்பதை புரிந்து கொள்வதை முக்கியமாக பார்க்கவேண்டு. இதுதான் முதன்மையான அம்சம்.
அடிப்படையான கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் கூறமல் மவுனம் சாதிக்கிறீர்கள். நீங்கள் மட்டுமில்லை, இரயகரன், அவரின் வழிமொழியும் தமிழகத்தில் உள்ள சில புரட்சிகர அமைப்புகள் ஆகியவையும் இப்படி மவுனம் சாதிப்பதும், நடைமுறையில் தேசிய இனப்பிரச்சனை குறித்து தாங்கள் கவலை கொள்வது போல் வெறும் விமர்சனம் மட்டும் செய்தும் (தீர்வினை வைக்காமல்) மவுனமாகிறார்கள். அதே நடைமுறையை உங்களிடம் பார்க்கிறேன்.
”சமஸ்டி என்றோ தனிநாடு என்றோ ஒரு முடிந்த முடிவாக ஒரு தீர்வை முன் வைத்து அதை மையப்படுத்தி வாதங்களை விருத்தி செய்வது என்றுமே மார்க்சிய அணுகுமுறை ஆகாது.”
ஈழத்திற்கு தீர்வு தனி ஈழமா இல்லையா என்பதை முன் கூட்டியே நிர்ணயிக்க கூடாது என்கிறீர்கள். அப்படி என்றால் இன்று நிலை நீடிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக ஆதரிக்கிறீர்கள். நடுநிலைமை என்ற கோட்பாடுதான் தேசிய இனச் சிக்கலில் வைக்கிறீர்கள் ஆனால் அப்படி ஒன்று யதார்த்தத்தில் இல்லை என்பதை அனைவரும் அறிவர்.
அடிப்படையிலிருந்து விவாதத்தை தொடங்குங்கள், இது அனைவரையும் கலந்துகொள்ள தூண்டும், சரியான பாதையை எட்ட உதவும். வெறும் வார்த்தையில் பரமபதம் வேண்டாம். எந்த அடிப்படையில் முன்கூட்டியே தனி ஈழமா, சுயநிர்ணய உரிமையா என்று தீர்மானிப்பது மார்க்சியம் இல்லை என்பதை தெளிவுபடுத்துங்கள். மார்க்சிய அனுபவத்தை மார்க்சிய ஆசான்கள் வழங்கியதை கோடிட்டுகாட்டி தெளிவுபடுத்துங்கள்
பதிலைத் தேடி வைக்கப்படும் கேள்விகள் மிகச் சரியாக இருக்கிறது
“வெறும் வார்த்தையில் பரமபதம் வேண்டாம்”. இம் மாதிரியான தேவையற்ற தாக்குதல்களுடன் தொடங்கிக் கொண்டு ஆரோக்கியமான கலந்துரையாடல் பற்றிப் பேசிப் பயன் இல்லை என்றே நினைக்கிறேன்.
முந்திய பின்னூட்டலிலும் இவ்வாறான தொனியே இருந்தது. ஒரு எளிய சொற் பிரயோகத்தைக் கூட விளங்கிக் கொள்ள முயலாமல் கடுந்தொனியில் எழுதினீர்கள்.
பொறுத்துக் கொண்டு பதில் எழுதினேன்.
திரும்பவும் அதே தொனியில் தொடர்கிறீர்கள்.
மிகவும் தெளிவாகவே எனது அணுகுமுறையைக் கூறியுள்ளேன். அதில் எந்த விதமான ஒளிவு மறைவுக்கும் இடமில்லை.
லெனினின் சுயநிர்ணயக் கோட்பாடே பிரிவினையைத் தவிர்க்கும் நோக்கில் முன்வைக்கப் பட்டது தான். அதற்கும் மேலாக மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டல் இங்கு தேவைப்படாதென்று நினைக்கிறேன். அதைக் கூட நாம் வாய்ப்பாடாகக் கொள்வதில்லை. கொலனிய யுகத்தின் பின்பான அனுபவங்களையும் கருத்திற் கொண்டே புதிய ஜனநாயகக் கட்சி தனது ஆலோசனைகளை முன்வைத்தது.
இலங்கையின் தேசிய இனப் பிரச்சினக்குப் பிரிவினை தான் தீர்வு என்று புறப்பட்டு வெறும் ஆயுதப் போரட்டத்தின் வழியிற் போய் வெளி நாடுகளை நம்பியதன் விளைவான இற்றைச் சூழலை மட்டும் அடிப்படையாக வைத்து நாம் தீர்வைத் தேடுவது இயலுமா?
தமிழ் ஈழம் என்பது தமிழ்ப் பேசும் மூன்று தேசிய இனங்களில் இரண்டுக்குத் தீர்வே அல்ல.
உண்மையில் ஒன்றுக்குப் பாரிய புதிய பிரச்சனைகளைக் குறிக்கும்.
எனவே தான், தனியே வட-கீழ் மாகானத் தமிழர் பார்வையிலிருந்து மட்டும் நோக்காமல் பிரச்சனையின் முழுமையைப் பார்க்க வேன்டியுள்ளது.
தவறுமிடத்து முன்பை விடத் தமிழர் மேலும் தனிமைப்பட வேண்டி வரும்.
தமிழ் மக்களுக்குப் பிரிந்து போகும் உரிமையுடனான சுயாட்சி என்பதில் என்ன தவறு என்று எவரும் சொல்லிவிட்டுப் பிரிவினை பற்றிப் பேசுவது பொருந்தும்.
சுயாட்சியின் தன்மை, அதிகாரங்கள் என்பன போராடிப் பெறுவன.
யாரை எதிர்த்துப் போராடுவது என்ற கேள்வி முக்கியமானது. இலங்கைத் தேசிய இனப் பிரச்சினை பிரதான முரண்பாடாக உள்ளதால் பிற முரண்பாடுகள் முக்கியமற்றவை அல்ல என முடியுமா?
தமிழ் ஈழம் என்ற நிலைப்பாடு எவ்வாறு வந்தடையப்பட்டது என்ற வரலாற்று அனுபவத்தையும் சமகால உலக, பிராந்திய, உள்நாட்டு நிலவரங்களையும் கணிப்பிற் கொண்டே, தனிநாடு என்பது காணத் தெரியும் எதிர்காலத்திற் சாத்தியமாகக் கூடிய ஒன்றல்ல எனக் கூறுகிறேன்.
அல்லாது அது சாத்தியமெனினும் அதற்காக என்ன விலையை யார் கொடுப்பார்கள் எனவும் சிந்திக்க வேண்டும்.
அதினும் முக்கியமாகப் பிரிவினையால் யாருக்கு என்ன நன்மை என்றும் நாம் யோசிக்க வேண்டும்.
நாலு தேசிய இனங்கட்கும் கேடான முறையில் அந்நிய ஆதிக்கங்களை ஊடுருவ வழி செய்யப் போகிறோமா?
பிரிவினையைத் தீர்வாக வைப்போர் முன்வைக்கும் போராட்ட/தீர்வுப் பாதை என்ன?
அதைப் புதிய ஜனநாயகக் கட்சி உட்பட்ட மர்க்சிய லெனினியர்கள் முன்வைக்கும் பாதையுடன் ஒப்பிட்டு எது சாத்தியமானதும் நன்மையானதும் எனப் பார்ப்பது கலந்துரையாடப் பொருத்தமானதாயிருக்கும்.
பி.கு.:
1. இந்தியாவிற்கும் இலங்கையர்கள்தான் ட்ரொட்ஸ்கியர்களை ஏற்றுமதி செய்தார்கள் என்பது சரியாகாது. கொல்வின் ஆர் டி சில்வா இந்தியாவிற்குத் தப்பி ஓடிய போது அங்கே குறிப்பிடத்தக்க ஒரு ட்ரொட்ஸ்கிய இயக்கம் இருந்தது.
2. ரயாகரனின் அரசியல் கருத்துக்களுக்கும் எனக்கும் ஒரு தொடர்புமில்லை.
3. ஸ்டாலினை முழுமையாக மேற்கோள் காட்டி எத் தொடர்பில் அது சொல்லப்பட்டது என்று கூறின் உதவியாயிருக்கும்.
வாய்ப்பாடாக மார்க்சியத்தை பின்பற்ற வேண்டாம் ஆனால் மார்க்சியம் இன ஒடுக்குதலுககு எதிரானது என்பதைக்கூட பிரதிபலிக்கவில்லை உங்களது கூற்று.
இந்திய நாடாளுமன்ற குழுவில் இடம் பெற்ற தோழர் டி.கே. ரங்கராஜன் எம்.பி அவர்களின் கருத்துக்கு நான் எழுப்பிய கேள்வியான எனது முகநூலில் வெளிவந்ததை இங்கு பதிகிறேன்:-
தேசிய இனப்பிரச்சினையில் லெனின் கூறிய “பிரிந்து போகும் உரிமை” என்பது அன்றைக்கு பொருந்தும் இன்றைக்கு பொருந்தாது என்று “மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி” என்ற நூல் வெளியீட்டு விழாவில் தோழர் டி.கே. ரங்கராஜன் எம்.பி கூறியுள்ளார்.
“..தேசிய இன ஒடுக்குமுறையை அகற்றுவதற்கு ஒரு அடிப்படை-சோஷலிச முறைப் பொருளுற்பத்தி-அவசியம், மேலும் இந்த அடிப்படையின் மீது ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட ஒரு அரசு. ஜனநாயகப் படை முதலியனவும் கூட அவசியம். முதலாளித்துவத்தைச் சோஷலிசமாக மாற்றுவதன் மூலம் தேசிய இன ஒடுக்குமுறையைப் பூரணமாக ஒழிக்கும் சாத்தியப்பாட்டைப் பாட்டாளி வர்க்கம் உருவாக்குகிறது, எல்லாத் துறைகளிலும் முழு ஜனநாயகம் நிறுவப்பட்ட”பின்னர் தான்”-“பின்னர் தான்”! மக்களின் “உணர்வுகளுக்கு” ஏற்ற வகையில் அரசின் எல்லைகள் வரையப்பட்ட பின்னர் இந்தச் சாத்திய்பபாடு யதார்த்தம் ஆகிறது. ” (சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு)
இது லெனின் அன்று கூறிய வார்த்தைகள்.
இன்றைய நிலையில் லெனின் கூறியபடியான தேசிய இன ஒடுக்குமுறையை அகற்றுவதற்கான சோஷலிச பொருளுற்பத்தி முறை இந்தியாவில், அல்லது உலகில் எந்த நாட்டில் உள்ளது?
தேசிய இனப்பிரச்சினை இருப்பிற்கான பொருளாதாரக் காரணங்கள் இன்றைய சூழலில் இருக்கும் போது, லெனின் கூறியது இன்று எவ்வாறு பொருந்தாமல் போனது?.
மார்க்சிய பொருள்முதல்வாதி புறநிலைக் காரணங்களின் அடிப்படையில் தமது கருத்தை வெளிப்படுத்துவர். லெனின் கருத்து இன்றைக்கு பொருந்தாது என்பதில் உள்ள பொருளாதாரக் கரணங்கள் என்ன?
தேசிய இன ஒடுக்குதலை அகற்றுவதற்கான சோஷலிச பொருளுற்பத்தி முறையை லெனின் சுட்டியுள்ளார் அதனை நாம் அடைந்து விட்டோமா என்ன?
தேசிய இனப்பிரச்சினை தோன்றுவதற்கான பொருளாதாரக் காரணங்களை லெனின் கூறியிருக்கிறார். அந்தப் பொருளாதாரக் காரணங்கள் இன்றைக்கும் இருக்கிறது.
சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதம் என்பது வார்த்தை விளையாட்டல்ல, ஒடுக்கப்பட்ட இனமக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது.
“தேசிய இனப்பிரச்சினைப் பற்றி மார்க்சியம்” என்ற நூலை எழுதிவருகிறேன்.. மிக விரைவில் வெளிவரும்
புதிய ஜனநாயகக் கட்சியால்> தமிழ்த் தேசியவாத அலையின் எழுச்சியின் நடுவிலும் தவறாமல் இருந்திருக்க முடிந்திருக்கிறது. தமிழீழப் போராட்டத்தை நியாயமான முறையில் விமர்சிக்கவும் முடிந்திருக்கிறது. தேசிய இனப்பிரச்சினை பற்றிய ஒரு முன்னோடியான பார்வையை விருத்தி செய்ய இயலுமாயுமைந்துள்ளது.
இதே அரசியல் போக்கினை> தற்போதைய இலங்கையின் அரசியல் சூழலில் புதிய ஜனநாயகக் கட்சியால் மேற்கொள்ளவும் முடிகிறது.
தொழிலாளர்கள் சம்பள உயர்வுப் போராட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில்> அரச சேவையாளர்கள் சம்பள உயர்வுப் போராட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில்> ஊடகத்துறையினர் ஊடக சனநாயகத்திற்கான போராட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில்> உணவு மற்றும் அத்தியவசியப் பண்டங்களின் விலையதிகரிப்பிற்கெதிராக மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில்> அரசியல் அதிகாரம் பெற்ற சிறுகுழவினரின் அதிகார துஷ்பிரயோகங்களிற்கெதிராக ( குடும்ப அரசியல் அதிகாரத்திற்கெதிராக ) போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் புதிய ஜனநாயகக் கட்சியால் மேலே கூறிவாறு இருக்க முடிந்திருகிறது.
புதிய ஜனநாயகக் கட்சி> இனவாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகி அதற்கெதிராகப் போராடிய தமிழ் மக்களின் போராட்டங்களை மட்டுமல்லாது> இலங்கை மக்களின் வாழ்வாதராப் பிரச்சினைளைதக்கெதிரான மற்றும் சனநாயக மறுப்பிற்கெதிரான போராட்டங்களையும் புற நோக்கில் நின்று நோக்கி கைகழுவி விட்டிருக்கிறது. இவையெல்லாம்> பாட்டாளி வர்க்கப் புரட்சியே அனைத்து சமூக முரண்பாடுகளையும் தீர்க்க வல்லது என்ற அடிப்படையில் நடந்திருக்கிறது.
ஆனால் இலங்கையில் பிற்போக்கான தேசியவாதிகளினதும் பாராளுமன்றவாத சந்தர்ப்பவாதிகளினதும் தலைமையில் அணிதிரண்டுள்ள மக்கள்> மேலே கூறியவாறே போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
இது ஒரு முக்கிய முரண்பாடு.
இனமுரண்பாட்டு நிகழ்வில்> சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் அரசியல் நிகழ்ச்சித்திட்டங்களிற்கு தமிழ் மக்களின் எதிர்வினையானது> சரணாகதி அரசியலுக்கெதிரான அல்லது புதிய ஜனநாக வாதிகள் எதிர்பார்ரபது போல் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் பால் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக தேசிய விடுதலையைக் கோருகிற – இனவிடுதலையைக் கோருகிற – இன உரிமைகளைக் கோருகிற எதிர்;ப்பியக்கமாகவே அமைந்திருக்கிறது.
வன்னிப் போரின் அழிவுகளை அறியமுடியாத நிலையில்> இறந்து – காணமல் போனவர்கள் குறித்த தகவல்களை குடும்பத்தினரே பெற்றுக்கொள்ள முடியாத நிலையில்> கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்காலம் குறித்து எதுவும் தெரியாத நிலையில்> மீள் குடியேற்றம் பெரும் பிரச்சினையாக மாறியிருக்கிற நிலையில்> குடியேற்றங்கள் அச்சுறுத்தலாக மாறியிருக்கிற நிலையில்> பெரும்பாண்மை இனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற அரசும் அரசாங்கமும் உருவாக்கப்பட்டு வருகிற நிலையில்> ஏற்கனவே பேசப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து “சிறிலங்கா” மெளனம் காத்து வருகிற நிலையில்> உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணசபை அதிகாரமற்ற ஒரு வெற்றுச்சபையாக செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பிற இனஒதுக்கல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்> வடகிழக்குத் தமிழர்களிடம் இன விடுதலை – தேசிய விடுதலைக்கான அவாவவே மேலெழுகிறது. தமது எதிர்கால வாழ்விற்காக தமக்கெதிரான இனஒடுக்குமுறைகளை தமிழர்கள் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.
நிலத்திலிருந்து விரட்டப்பட்டுள்ள குடி மக்கள்> பிரச்சினைக்குள்ளாக்கபட்டுள்ள விவசாயிகள்> தொழில் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்குகிற மக்கள்> மதம் – பண்பாடு – கலை – மொழி வளரச்சி தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்குகிற மக்கள்> அரசியல் ரீதியாக ஒடுக்குமுறைகளை எதிர்நோக்குகிற மக்கள்> அதற்கெதிராகப் போராடியே ஆகவேண்டிய நிலை. இதுவே நிஜம். இந்த சமூக நிலையை மாக்சிய – லெனினிய வாதிகள் எவ்வாறு புரிந்து கொள்ளப்போகிறார்கள்.
தமிழ்த்தேசிய வாதிகளும் அவர்கள் பின் அணிதிரண்டிருக்கிற பெருந்திரளான தமிழ் மக்களும்> 30 வருடகால அனுபவங்களின் பின்பும்> பேரழிவுகளின் பின்பும் தேசிய இன ஒடுக்குமுறைகளுக்கெதிராக தம்வழியில் போராடவே முற்பட்டுள்ளார்கள்.
புதிய ஜனநாயகக் கட்சியால்> தமிழ்த் தேசியவாத அலையின் எழுச்சியின் நடுவிலும் தவறாமல் இருக்க முடியும். இனவிடுதலைப்; போராட்டத்தை நியாயமான முறையில் விமர்சிக்க முடியும். தேசிய இனப்பிரச்சினை பற்றிய ஒரு முன்னோடியான பார்வையை விருத்தி செய்ய இயலுமாயுயமையும்.
விஜய்.