செவ்வியல் இசை ராகங்களைக் கொண்டு மக்கள் மனங்களில் சில உணர்வு மதிப்பீடுகளை உருவாக்குவதில் சினிமா இசை வெற்றி கண்டுள்ளது.
குறிப்பிட்ட சில ராகங்களில் ஒரு சில உணர்வுகளை வெளிப்படுத்தி , அநதச் சூழ்நிலைக்கு அல்லது உணர்வுகளுக்கு அது தான் பொருத்தம் என்பதை அழியா நிலையாக்கி மக்கள் மனங்களில் பதியவும் வைத்தவர்கள் சினிமா இசையமைப்பாளர்கள்.
தமிழ் மக்களின் தொன்ம ராகங்களாயினும் அல்லது இடையில் வந்து கலந்த ராகங்களாயினும் படத்தின் உணர்ச்சிகரமான சூழ் நிலைக்கு , உத்வேகத்துடன் இயைந்து ரசிகர்களைக் கண் கலங்க வைத்து , அதனூடே அந்த ராகத்திற்கும் கவித்துவமான நாடகீய [ Dramatic ] வரலாற்றையும் உருவாக்கித் தந்தவர்களும் சினிமா இசையமைப்பாளர்களே.
தொன்ம ராகங்களை வெகுஜனங்களிடம் கொண்டு சேர்த்த சினிமா இசை , நவீன காலத்திற்கும் அதன் நீட்சியை எடுத்து வந்திருக்கிறது.அந்த வகையில் தொன்மங்களின் நீட்சி திரையிசையில் கலந்து நவீன மனங்களிலும் ஆட்சி செலுத்துகிறது.அவை பாடல் வர்ணனைகளில் நம்மைஆட்டியும் வைக்கிறது.
தங்களது கற்பனை வளத்தாலும் , ஆழமான புரிதலாலும் ராகங்களை ஈரம் காய்ந்து போகாமல் , அதன் உள்ளடக்கக் கூறுகளின் உச்சக் கணங்களில் புதுமை ஒளி பொங்க பாடல்கள் தந்த திரை இசையமைப்பாளர்கள் போற்றுதற்குரியவர்கள்.
அந்த வகையில் திரை இசையமைப்பாளர்களால் சரளமாகப் பயன்படுத்தப்பட்ட ராகங்களில் ஒன்று. சிவரஞ்சனி.
22 ஆவது மேளகர்த்தா ராகமாகிய கரகரப்பிரியா ராகத்தின் ஜன்ய ராகமே இந்த சிவரஞ்சனி.இது ஐந்து சுரங்களைக் கொண்ட இனிமைமிக்க ராகங்களில் ஒன்றாகும்.இந்த ராகத்தை சுருதி பேதம் செய்தால் ரேவதி மற்றும் சுனாதவிநோதினி போன்றவை கிடைக்கும் என்பர். கர்நாடக இசையில் வழமை போலவே பக்தி ரசத்திற்கு மட்டும் பயன்படுகிறது.
இது ஒரு தமிழ் ராகமாக இருப்பினும் கர்நாடக் இசையுலகில் அதிகம் பயன்டாமல் இருக்கின்ற ராகமாகவுமுள்ளது.இந்த ராகத்தில்துக்கடா என்றழைக்கப்படும் சிறிய பாடல்களே கச்சேரி முடிவில் பாடப்படுகின்றன.மும்மூர்த்திகள் அதிகம் பயன் படுத்தாத ராகங்களில் ஒன்று சிவரஞ்சனி.
சிவரஞ்சனி ராகத்தின் சகோதர ராகங்களாக விஜயநகரி , நீலமணி போன்றவற்றை குறிப்பிடுவர்.
வியஜநகரி
ஆரோகணம்: ச ரி2 க2 ம2 ப த2 ச
அவரோகணம் : ச த2 ப ம2 க2 ரி2 ச
சிவரஞ்சனி :
ஆரோகணம்: ச ரி2 க2 ப த2 ச
அவரோகணம் : ச த2 ப க2 ரி2 ச
என்கிற சுரங்களைக் கொண்டது.கரகரப்ப்ரியா ராகத்தின் ஜன்ய ராகங்களான தர்மவதி , கௌரிமனோஹரி , ஹேமாவதி போன்ற ராகங்களிலும் சிவரஞ்சனியின் சாயல்கள் தென்படும்.
மேலைத்தேய இசையில் மைனர் ஸ்கேல் [ minor scale ] வகையில் சேரும்.
பாபநாசம் சிவன் எழுதிய
ஆண்டவன் அன்பே சக்தி தரும்
ஆண்டவன் அன்பே சித்தி தரும்
மதுரை சோமு அவர்கள் மனமுருகிப்பாடும்
என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் உருகவில்லை.
என்ற பாடலும்
இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிப் புகழ் பெற்ற
குறை ஒன்றுமில்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றுமில்லை கண்ணா
என்ற பாடலும் குறிப்பிட்டு சொல்லதக்கன.
இந்தியா முழுமைக்கும் பொதுவான ராகமாகவும் கருதப்படும் ராகங்களில் இதுவும் ஒன்று.அகில இந்திய வானொலியில் அதிகாலையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒலிபரப்பாகும் வயலின் வாத்திய இசை சிவரஞ்சனி ராகத்தில் அமைந்ததே.அகில இந்திய வானொலியின் அடையாள இசை [ Logo Musi ] சிவரஞ்சனி ராகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.
சினிமா இசையைப் பொறுத்த வரையில் இந்த ராகத்தில் பலவிதமான உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டாலும் “அழும் காட்சிகளா கூப்பிடு சிவரஞ்சனியை ” என்று சொல்லுமளவுக்கு சோகவண்ணம்பூசப்பட்ட சக்தி வாய்ந்த ஜனரஞ்சக ராகமும் சிவரஞ்சனி தான் என்றால் மிகையான கூற்று அல்ல.இசைச் சுவையில் சோக உணர்வில் இதன் பயன்பாட்டை நாம் எளிதாகக் காணலாம்.
சிவரஞ்சனி ராகத்தில் வெளியான திரையிசைப் பாடல்கள் சில.:
01 சொப்பன வாழ்வில் மகிழ்ந்து – படம் :சிவகவி [1943 ] – பாடியவர் : எம்.கே.தியாகராஜபாகவதர் – இசை :ஜி.ராமநாதன்
1940 களின் பிரசித்திபெற்ற வெற்றிக் கூட்டணியின் வெற்றிப்பாடல் இது.வாத்திய சேர்க்கைகள் குறைந்த குரல் வளத்தின் இனிமைப்பெருக்கில் நிலை நிற்கும் பாடல்.
02 வா கலாப மயிலே – படம்: காத்தவராயன் [1958 ] – பாடியவர்: T .M .சௌந்தரராஜன் – இசை: ஜி.ராமநாதன்
சிவரஞ்சனியில் அற்புத உலகைக் காட்டி அதில் நம்மை சஞ்சரிக்க வைக்கும் தாளலயமிக்க பாடல்.ஆழ்மனத்தின் காதல் இன்பமாகவும் அதே வேளை துன்பமாகவும் வெளிப்படுத்தும் பாடல்.சிவரஞ்சனியில் சில பாடல்களே இசையமைத்தாலும் இசையின் உன்னதத்தை வெளிப்படுத்தியவர் இசைமேதை ஜி.ராமநாதன்.
03 பாட்டுப்பாட வாய் எடுத்தேன் ஏலேலோ – படம்: தெய்வத்தின் தெய்வம் [1962 ] – பாடியவர்: பி.சுசீலா – இசை: ஜி.ராமநாதன்
ஜி.ராமநாதன் இசையமைத்த இறுதிப் படத்தில் அவரது இசைப் பாணி மாறியிருப்பதை அவதானிக்கலாம்.மெல்லிசை வடிவத்தின் அந்தக் கால போக்கில் அவர் அமைத்த பாடல்களும் சோடை போனதில்லை.நெஞ்சை உருக்கும் இந்த சிவரஞ்சினி ராகப்பாடல் அவரது உச்ச மனநிலையைக் காட்டும் பாடல் இது.
04 மனிதா நீ செய்த – படம்: வேலைக்காரன் [1952 ] – பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன் – இசை: R.சுதர்சனம்
முற்பிறப்பில் நீ செய்த பாவங்களே இன்று நீ அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணம் என்று விளக்கம் கூறும் பாடல்.இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் பாடிய சோகப்பாடல் இது.சிவரஞ்சனி நம் இதயத்தை வருடிச் செல்லும்.
05 காலமெல்லாம் வெள்ளமத்தில் – படம்: என் வீடு [1952 ] – பாடியவர்: வீ.ஜே.வர்மா –
தமிழ் படங்களில் மிக அரிதாக பாடிய வீ.ஜே.வர்மா என்ற பாடகர் பாடிய சோகப் பாடல் இது. “துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ ” என்ற பாரதிதாசன் பாடலை ஓர் இரவு படத்தில் எம்.எஸ்.ராஜேஸ்வரியுடன் இணைந்து பாடிய பாடகர் இவரே.
06 போதும் போதும் இந்த ஜென்மம் – படம்: பூம்பாவை [1944 ] – பாடியவர்: யூ.ஆர்.ஜீவரத்தினம் – இசை:
அந்தக்கால புகழ்பெற்ற பாடகியான் ஜீவரத்தினம் உச்சஸ்தாயியில் பாடிய பாடல். சிவரஞ்சனியின் சோக ரசம் போங்க பாடியிருக்கின்றார் ஜீவரத்தினம்
07 காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன் – படம்:கல்யாணப்பரிசு [1959] – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜ. + பி.சுசீலா – இசை: ஏ.எம்.ராஜா
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்திய இயக்குனர் ஸ்ரீதரின் காவியப்படைப்பான கல்யாணப் பரிசு படத்தில் இடம் பெற்ற உணர்ச்சி மிகுந்த பாடல்.பாடல் வரிகளை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , இசையமைத்துப் பாடிய ராஜா , சுசீலாவுடன் இணைந்து தந்த அற்புதமான பாடல்.ரயில் நிலையத்தில் பிரிவின் போது பின்னணியாக ஒலிக்கும் பாடலில் பிரிவின் உக்கிரத்தை இசையாக வடித்த மாபெரும் கலைஞன் ஏ.எம்.ராஜா , தன்னை இசைமேதையாக நிலைநிறுத்திய பாடல்.படத்தின் முடிவிலும் இடம் பெறும் பாடல் இது.பட்டுப்போன்ற ராஜாவின் குரலில் சோகம் மேலெழும்பி பட ரசிகர்களை கலங்க வைத்த பாடல்.
07 நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் – படம் : பாலும் பழமும் [1961] – பாடியவர்கள்: சௌந்தரராஜன் + பி.சுசீலா – இசை: மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.
தம்பதிகளின் அன்னியோன்னியத்தை விளக்க மென்மையாக சிவரஞ்சனியை வருடி உறவின் மேன்மையை ராகத்தின் நுண்மையில் காட்டும் பாடல்.ஹம்மிங் என்பதை மீள , மீள தந்து நம்மை ராக சுகத்தில் தாலாட்டும் பாடல்.இசைவழியே வழிந்தோடும் வரிகளும் நெஞ்சங்களை வசீகரிப்பவை.
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் ,
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்
என்ற வரிகள் மனவேர்களில் உரம் சேர்ப்பவை.இன்பமாகவும் , துன்பமாகவும் வரும் பாடல் இது. துன்பப்பாடலில் சிவாஜியின் மிகை நடிப்பிற்க்காக நாடகத் தன்மை இழைக்கபட்ட பாடல்.அதிலும் உருக்கம் பெருகத்தான் செய்கிறது.
திரையிசைத்திலகம் என்று போற்றப்படும் கே.வீ.மகாதேவன் சிவரஞ்சனி ராகத்தில் அனேக பாடலகளைத் தந்திருக்கின்றார்.
08 இதய வீணை தூங்கும் போது – படம்: இருவர் உள்ளம் [1963 ] – பாடியவர்: பி.சுசீலா – இசை: கே.வீ .மகாதேவன்
கதாநாயகியின் மன நிலையை பல்லவியே பறைசாற்றி விடுகிறது.பாடல் வரிகளை உணர்ச்சி பூர்வமாகஇசையமைத்து நம்மை நெகிழ வைத்திருக்கின்றார் இசைமேதை கே.வீ. மகாதேவன்.பொருளுணர்ந்து பாடுவதும் அதில் உணருவுகளின் நுண்மைகளை தனது குரலில் அழகாக வெளிப்படுத்தி பாடலை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார் பி.சுசீலா அவர்கள்.
09 கலைமகள் கைப்பொருளே – படம்: வசந்த மாளிகை [ 1972 ] – பாடியவர்: பி.சுசீலா – இசை: கே.வீ .மகாதேவன்
சோகத்திற்குக் கிடைத்த கச்சாப் ,பொருள் போல மீண்டும் சிவரஞ்சனி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.ஆயினும் புதிதாய் மலர்ந்த மலர் போல மனதை ஈர்க்கும் பாடல்.காலத்தால் கரைந்து போகாமல் நினைவில் நிற்கும் பாடல்.
10 ஆயிரம் நிலவே வா – படம்: அடிமைப்பெண் [1969 ] – பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் +பி.சுசீலா – இசை: கே.வீ .மகாதேவன்
பலவிதமாக ராகங்களை வியாக்கியானம் செய்யும் திரை இசைத் திலகம் புதிய பாய்ச்சலை சிவரஞ்சனிக்கு வழங்கிய பாடல் இது.பாடலுக்கு எழுச்சியான பல்லவியை அமைத்து ராகத்தை புது திசையில் நகர்த்தியிருப்பது புத்துணர்ச்சியை தருவதாய் அமைந்திருக்கிறது.வித்தியாசமான பாடல்.
11 ஆண்டவனே உன் பாதங்களை நான் – படம்: ஒளிவிளக்கு [ 1968 ] – பாடியவர்: பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
ஆதரவற்ற பெண் தன்னை ஆதரித்த ஒருவனுக்காக ஆண்டவனிடம் வேண்டும் பாடல்.சிவரஞ்சனி பாடினால் ஆண்டவன் இரங்குவான் என்ற தன்மையில் இசையைக்கப்பட்ட பாடல்.திரை காட்சியை தாண்டி நிஜத்திலும் மக்களின் உள்ளுணர்வில் மிகத் தாக்கம் விளைவித்த பாடல்.இசைபேராற்றலை , அதன் முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆர் தனது வெற்றிக்கு சாதுர்யமாக பயன் படுத்தியிருக்கின்றார்.
12 ஆனந்தம் விளையாடு வீடு – படம்: சந்திப்பு [1983] – பாடியவர்: T .M .சௌந்தரராஜன் +பி.சுசீலா – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
மிகையுனர்ச்சியும் , ஈர்ப்பும் குறைந்த வகையில் பாடப்பட்ட பாடல் என்ற எண்ணம் இந்தப்பாடலைக் கேட்கும் கணம் தோறும் என்னுள் எழுகிற பாடல்.மெல்லிசைமன்னரின் ” நான் பேச நினைப்பதெல்லாம் ” பாடலின் தாக்கம் இருப்பது போல ஒரு உணர்வு.படத்தில் நடித்த சிவாஜியும் காலம் கடந்த , அல்லது காலாவதியாகி விட்ட நடிப்பு போல மெல்லிசைமன்னரின் இசையும் , குறிப்பாக TMS இன் பாடும் முறையும் ,அவர்கள் தொய்ந்து போன காலத்தில் வெளிவந்த பாடல்.சிவரஞ்சனி துல்லியமாகத் தெரியும் பாடல் என்பதில் சந்தேகமில்லை.
13 வேண்டும் வேண்டும் உந்தன் உறவு – படம்: வசந்தத்தில் ஒரு நாள் [1982] – பாடியவர்: S.P .பாலசுப்ரமணியம் +வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
அப்பட்டமாக , சிக்கலற்ற வகையில் சிவரஞ்சனி வெளிப்படும் அழகிய பாடல். இளங் குரல்களில் பாடல் இறுக்கமில்லாமல் மிக இயல்பாக ஒலிக்கும் பாடல்.
14 சோதனை மேல் சோதனை – படம்: தங்கப்பதக்கம் [1974] – பாடியவர்: T .M .சௌந்தரராஜன் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
சிவரஞ்சனியின் பொதிந்திருக்கும் சோகத்தை நாடகதன்மையுடன் தருகின்ற பாடல்.சிவாஜிக்கு என இசையமைக்கப்பட்ட பாடல்.
15 நலம் தானாநலம் தானா – படம்: தில்லானா மோகனாம்பாள் [1968] – பாடியவர்: பி.சுசீலா – இசை: கே.வீ. மகாதேவன்
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்புத் தட்டாத , தமிழ் சினிமாவின் அற்ப்புதமான நடிகர்கள் நடிப்பில் நுட்பங்கள் , நுண்மைகள் காட்டிய தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் உருக்கமும் , கனிவும் நிறைந்த பாடல்.சிலர் இந்தப் பாடலை சிவரஞ்சனிக்கு மிக மிக நெருக்கமான ராகமான நீலாமணி ராகத்தில் அமைந்ததென்பர்.எனினும் இசைமேதை கே.வீ. மகாதேவன் அவர்கள் தந்த சிறந்த பாடல்களில் ஒன்று.
கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
புண்பட்ட சேதியை கேட்டவுடன் – இந்த
பெண்பட்ட பாட்டை யாரறிவார்..
இந்தவரிகளைப் பாடும் போது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கியிருந்த பெருஞ் சோகம் நம்மையறியாமலே பீறிட்டுப் பாய்கிறது.இதயத்தோடு ஒன்றிவிட்ட இசையமைப்பில் இதனை சாதித்து விட்டார் திரையிசைத்திலகம் கே.வீ.மகாதேவன் அவர்கள்.
16 கடலோரம் வீடு கட்டி – படம்: கஸ்தூரி திலகம் [1970 ] – பாடியவர்: T .M .சௌந்தரராஜன் + சூலமங்கலம் – இசை: ஜி.தேவராஜன்
நிராசைகளின் வெளிப்பாட்டைக் காண்பிக்க மிக அற்ப்புதமாக சிவரஞ்சனியை பயன்படுத்திய பாடல்.
16 இது மாலை நேரத்து மயக்கம் – படம்: தரிசனம் [1975 ] – பாடியவர்: T .M .சௌந்தரராஜன் + எல்.ஆர் .ஈஸ்வரி – இசை: சூலமங்கலம் ராஜலட்சுமி – இசை உதவி : ஆர்.கே.சேகர்
இரண்டு வேறுபட்ட மனிதர்களின் உணர்வு நிலையை வெளிப்படுத்தும் பாடலின் ஊடுபாவமாக சிவரஞ்சனியின் சோகம் ததும்பும் மெல்லிசை இழையோடி செல்லும் பாடல்.பாடுவதில் மட்டுமல்ல ஒரு சில படங்களுக்கும் இசை வழங்கிய சூலமங்கலம் ராஜலட்சுமியின் இனிமையான இசையமைப்பு.அந்த படத்தில் இசையமைப்பில் ராஜலக்ஷிக்கு உதவியாளராக விளங்கியவர் ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகர்.
17 பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த – படம்: நினைத்ததை முடிப்பவன் [1975 ] – பாடியவர்: T .M .சௌந்தரராஜன் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
விசித்திரமான சூழ்நிலையில் பாடப்படும் பாடல்.கல்யாண ஊர்வலம் ஒன்றில் பாண்ட் வாத்திய கலைஞன் யாரோ ஒரு பெண்ணினை வாழ்த்தி பாடும் பாடல்.ஊர்வலத்தின் கடைசியில் நடந்து வரும் அந்தக் கலைஞனின் ஊனமுற்ற தங்கை ,தனது சகோதரனை சந்திக்கத் துடிக்கிறாள் முடியவில்லை.கைக்கு கிட்ட இருந்தும் காணமுடியவில்லை.
அருமையாக சூழ்நிலையை பயன்படுத்தி மெல்லிசைமன்னர் தந்த பாடல். குறிப்பாக பாண்ட் வாத்தியங்களின் இணைப்பு அபாரம்.உணர்வு வெளிப்பாடும் , வாத்திய பிரயோகங்களும் அசாத்தியமானவை.
18 முத்துக்கு முத்தாக – படம்: அன்பு சகோதரர்கள் [1974] – பாடியவர்: கண்டசாலா – இசை: கே.வீ. மகாதேவன்
இந்தப்பாடல் பழம் பெரும் பாடகர் கண்டசாலா பாடிய கடைசி தமிழ் பாடல் என்று நினைக்கின்றேன்.பாசத்தின் நெகிழ்சியை மிக அழகாக வெளிப்படுத்தும் இந்தப் பாடலை மனம் உருகும் வண்ணம் கண்டசாலா பாடியிருக்கின்றார்.பாசத்தின் உன்னதத்தையும் , வேட்கையையும் ஒருங்கே பிணைக்கும் பாடல்வரிகளில் இசை பின்னிப்பிணைந்து நம்மையும் அதன் வசமாக்குகிறது.காலம் தாண்டியும் கேட்க இதமளிக்கும் பாடல்.
19 என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன் – படம்: – பாடியவர் :ஏ.எம்.ராஜா. + பி.சுசீலா – இசை: ஏ.எம்.ராஜா
நீண்ட இடை வெளிக்கு பின் ஏ.எம்.ராஜா மீண்டும் பாடத் தொடங்கிய சமயத்தில் பாடிய இனிமையான சோகப்பாடல்.
20 பூ வண்ணம் போல மின்னும் – படம்: அழியாத கோலங்கள் [ 1979 ] – பாடியவர் :எஸ் .பி .பாலசுப்ரமணியம் – இசை: சலீல் சௌத்ரி.
இளமைப்பருவ நினைவுகளை மீட்டிப் பார்க்கும் திரைப்படத்தில் அமைந்த , நெஞ்சை அள்ளும் இனிய மெட்டமைப்பைக் கொண்ட பாடல்.நெஞ்சில் பசுமையாய் பசை போல ஒட்டியிருக்கும் கழிந்த காலத்தின் நினைவுகளை மீட்டும் போது , நெஞ்சத்தில் எழும் இதமான சோகத்தை நீக்க இதமாக வருடியும் கொடுக்கும் இசை.இசைமேதை சலீல் சௌத்ரி தந்த மறக்கமுடியாத மெல்லிசை கீதம்.
21 அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை – படம்: நட்சத்திரம் [1979] – பாடியவர்: பாடியவர்: S.P .பாலசுப்ரமணியம் – இசை: சங்கர் கணேஷ்
சிவரஞ்சனிராகத்தில் அமைந்த இந்த பாடல் ஓர் செவ்வியல் பாணியில் அமர மிக முயன்று இருக்கிறது .சங்கர் கணேஷ் இரட்டைர்களின் இனிய பாடல்.பாடலின் பின்பகுதி ராகமாலிகையாக செல்கிறது.
22 ஒரு ஜீவன் தான் – படம்: நான் அடிமையில்லை [1984] – பாடியவர்: பாடியவர்: S.P .பாலசுப்ரமணியம் – இசை: விஜய் ஆனந்த்
புதிய ஒரு இசையமைப்பாளரும் சிவரஞ்சனியை பயன்படுத்தியிருக்கின்றார்.பாடலில் நடிப்பு தேவைக்கதிகமாகப் போனதால் பாடலின் சுவையை முழுதாக அனுபவிக்க முடியாத கொடுமை நிகழ்ந்துள்ளது.
23 நாளும் உந்தன் உறவை நாடி வந்த பறவை – படம்: உறவை காத்த கிளி [1984] – பாடியவர்: பாடியவர்: S.P .பாலசுப்ரமணியம் – இசை: T .ராஜேந்தர்
பல திறமை கொண்ட T .ராஜேந்தர் இசையமைத்த இந்தப்பாடலிலும் நாடகத்தன்மை மிகுந்து ஒலிக்கும்.அது சிவரஞ்சனியின் சுவையை ,சுகத்தை அடையமுடியவில்லை.
24 கண்மணி நில்லு காரணம் சொல்லு – படம்: ஊமை விழிகள் [1986] – பாடியவர்கள்: S.N .சுரேந்தர் + சசிரேகா – இசை: மனோஜ் கியான் + ஆபாவாணன்
புதிய அலையாக எழுந்த புதியவர்களின் உற்சாகம் மிக்க படைப்பான ஊமை விழிகள் படத்தின் இந்தப்பாடல் விரகதாபப்பாடல். தனித்துவமான இசையயும் அதன் வெற்றிக்கு காரணமானது.மனதில் மீண்டும் , மீண்டும் ஒரு இசைமீட்டல் உணர்வை தருகின்ற பாடல்.
25 மாமரத்து குயில் எடுத்து – படம்: ஊமை விழிகள் [1986] – பாடியவர்கள்: S.N .சுரேந்தர் + சசிரேகா – இசை: மனோஜ் கியான் + ஆபாவாணன்
அதே படத்தில் மீண்டும் அதே ராகத்தில் இன்னுமொரு இனிமையான காதல் பாடல் தந்த மனோஜ் கியானின் துணிச்சலையும் எண்ணி வியக்கலாம்.நல்ல பல பாடல்களை தந்தவர் மனோஜ் கியான்.
26 தோல்வி நிலை என நினைத்தால் – படம்: ஊமை விழிகள் [1986] – பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீநிவாஸ் – இசை: மனோஜ் கியான்.
விடியலுக்கான ஒளியை , மனத்தாழ்ச்சியை நீக்கி வலிமை தந்து ஆற்றுப்படுத்தும் பாடல். ஈழ விடுதலைப் போராளிகள் ,ஆதரவாளர்கள் மத்தியில் எல்லையற்ற வகையில் உணர்வுகளை மேலோங்க செய்த பாடல்.சில சமயங்களில் இது ஒரு இயக்கப்பாடலோ என்று எண்ண வைத்த பாடல்.பி.பி.ஸ்ரீனிவாஸ் குரல் கன கச்சிதமாக பயன்படுத்தப்பட்ட பாடல்.
27 எனைத் தேடும் மேகம் – படம்: கண்ணோடு கண் [1981] – பாடியவர்: பாடியவர்: S.P .பாலசுப்ரமணியம் + வாணி ஜெயராம் – இசை: சங்கர் கணேஷ்.
மிக இனிமையான பாடல்.சங்கர் கணேஷ் இரட்டையர்களின் ஆஸ்தான பாடகியும் ,பாலுவும் இணைந்து பாடிய பாடல்.சிவரஞ்சனியின் மேனமையான சோகம் நம்மையும் ஆரத் தழுவிச் செல்லும் பாடல்.
28 ஓடோடி விளையாடு – படம்: உயிரே உனக்காக [1986] – பாடியவர்கள்: S.ஜானகி – இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்
ஹிந்தியில் மிகவும் புகழ் பெற்ற இரட்டையர்கள் லக்ஷ்மிகாந்த் பியாரிலால்இசையமைத்த இனிமையான பாடல்.ஏக் துஜே கேலியே என்ற படத்தில் இவர்களது அற்ப்புதமான இசையில் வந்த பாடல் தான் ” தேரே மேரே பீச் ” என்ற புகழ் பெற்ற சிவரஞ்சனி ராகப்பாடல்.
“ஓடோடி விளையாடு “பாடலில் வரும் ” தங்கக்கட்டி காஞ்சனா கைமாறு கட்டு வாங்கினா ” என்ற பாடல் வரிகளின் இசையை அடிப்படையாக வைத்துக் கொண்டு பல பாடல்கள் வெளிவந்துள்ளன.
29 ஆனந்தம் ஆனந்தம் பாடும் – படம்: பூவே உனக்காக [2000] – பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன் + சித்ரா – இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்
ஆனந்த வாழ்த்தொலி பொங்கும் பாடல்.சிவரஞ்சனி ராகத்தை பரவலாக பயன்படுத்தியவரில் எஸ்.ஏ. ராஜ்குமார் குறிப்பிடத்தக்கவர்.
30 பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா – படம்: புது வசந்தம் [2000] – பாடியவர்கள்: ஜேசுதாஸ் + சுசீலா – இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்
31 ஞாபகம் வருதே ஞாபகம் வருதே – படம்: ஆட்டோ கிராப் [2004] – பாடியவர்கள்: பரத்வாஜ் + ஹரிகரன் – இசை: பரத்வாஜ்
32 கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – படம்: திருடா திருடா [1994] – பாடியவர்கள்: மனோ + குழுவினர் – இசை: ஏ.ஆர்.ரகுமான்
சோக ரசத்தில் அதிகம் மின்னி ஜொலித்த சிவரஞ்சனி ராகத்தில் துள்ளிசையும் தரலாம் எற்று காட்டிய ஏ.ஆர்.ரகுமானின் வியக்க வைக்கும் விறுவிறுப்பான பாடல்.
33 தண்ணீரைக் காதலிக்கும் – படம்: MR .ரோமியோ [1994] – பாடியவர்கள்: மனோ + குழுவினர் – இசை: ஏ.ஆர்.ரகுமான்
34 உனக்கென்ன நானிருப்பேன் – படம்: காதல் [2007 ] – பாடியவர்கள்: மனோ + குழுவினர் – இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
இந்த பாடலிலும் சிவரஞ்சனியின் இரக்கத்தை கையாண்டு வெற்றி பெற்றிருக்கின்றார் புதிய இசையமைப்பாளர் ஜோஷுவா ஸ்ரீதர்.சாதி வேறுபாட்டு சுவர்களைக் கடக்கத் துணிந்த இளங்காதலர்களின் சோகத்தை மனதை வருடும் படியாக வெளிப்படுத்தும் அழகிய பாடல்.
தனக்கு முன் எத்தனை இசைமேதைகள் சிவரஞ்சனியில் பாடல்களைத் தந்தாலும் அந்த ராகத்தின் மையத்திலிருந்து கிளம்பும் ஒலியலைகளிலிருந்து வற்றாத ஜீவனுடன் சிரஞ்சீவித்துவமிக்க பாடல்களை தந்து தனது ஆளுமையை காட்டி நம்மை வியப்புக்குள்ளாக்கியவர் இசைஞானி இளையராஜா.
ஒவ்வொரு ராகத்திலும் என்னென்ன வகையில் பாடல்கள் உண்டோ அவற்றை எல்லாம் மக்களின் உணர்வு பேற்றுடன் ஒன்றிக் கலக்கும் பாடல்களாக்கிய வல்லமை இசைஞானியின் அசைக்க முடியாத சாதனை ஆகும். இளையராஜா தந்த இசைநயமிக்க சிவரஞ்சனி ராகப்பாடல்கள்.
01 வாழ்வே மாயமா வெறுங் கதையா – படம்: காயத்ரி [ 1977 ] – பாடியவர்கள்: பி.எஸ்.சசிரேகா – இசை : இசைஞானி இளையராஜா
கோபமும் விரக்தியும் கலந்த பாடல்.படத்தின் கதையோட்டத்தில் மர்மமாக அவ்வப்போது ஒலிக்கும் இந்த பாடல் கதையை நகர்த்தி செல்லவும் பயன்பட்டுள்ளது.சோகம் கலந்த சிவரஞ்சனியை இதில் கேட்கும் அதேவேளை மர்மத்தின் எதிரொலியையும் தரிசிக்கலாம்.
02 உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி – படம்: நல்லவனுக்கு நல்லவன் [ 1983 ] – பாடியவர்கள்: கே.ஜ.ஜேசுதாஸ் + சுனந்தா – இசை : இசைஞானி இளையராஜா
பெரும்பாலான சிவரஞ்சனி ராக பாடல்களில் அமைந்த சோக படிமத்தை வெளிப்படையாகப் புலப்படடுத்தாமல் இதயத்தை வருடும் மெல்லிசைத் தென்றலான மெட்டமைப்பில் மிதக்க வைக்கும் பாடல்.
விபரீதமான உலகின் வாழ்வதாக எண்ணும் ஒருவனை நேசிக்கும் பெண்ணொருத்தியின் ஆசையும் , அந்த ஆசையை பலவீனத்துடன் நிராகரிக்க முனையும் அவனின் குரலையும் இந்த பாடலில் நாம் தரிசிக்கின்றோம்.அது நம்மையும் சேர்த்து தேற்றுகிறது.
உயரிய கற்பனை வடிவமும் , உறுத்தாத பின்னணி இசையும் இசைப் பெறுபேற்றைத் தருகிறது.
03 சோலைப் புஷ்பங்களே என் சோகம் – படம்: இங்கேயும் ஒரு கங்கை [ 1989 ] – பாடியவர்கள்: கங்கை அமரன் + சுசீலா – இசை : இசைஞானி இளையராஜா
அத்தி பூத்தாற் போல் கங்கைஅமரன் + சுசீலா இணைந்து சிறப்பாகப் பாடியபாடல்.சிவரஞ்சனியில் ஆழ்ந்த அன்பையும் , கட்டுமீறிய இதயதாபத்தையும் எல்லையில்லாத வகையில் விரித்துச் செல்லும் பாடல்.
04 வா வா அன்பே அன்பே – படம்: அக்னிநட்சத்திரம் [ 1989 ] – பாடியவர்கள்: கே.ஜ.ஜேசுதாஸ் + சித்ரா – இசை : இசைஞானி இளையராஜா
காற்று மண்டலத்தை சுத்திகரிக்கும் சுகத்தை மேலைத்தேய இசையுடன் பிணைத்து , அதை சிவரஞ்சனியில் ஏற்றி இசையின்பங்களை நிறைவின்பமாய் தந்த இசைஞானியின் எல்லையற்ற படைப்பாற்றலின் ஒரு சிறு துளி.கேட்க கேட்க புதுமையாய் ஒளிரும் பாடல்.சுகமாகப் பாடுவது எப்படி என்பதை கற்றுத் தரும் ஜேசுதாஸ் பாடல்.
05 குயில் பாட்டு ஒ வந்ததென்ன இளமானே – படம்: என் ராசாவின் மனசிலே [ 1991 ] – பாடியவர்: சுவர்ணலாதா – இசை : இசைஞானி இளையராஜா
துள்ளி குதித்தோடும் பேரின்பம் அருவியாய் பொங்கி விழும் பாடல்.பொங்கி பிரவகிக்கும் பேரின்பத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு சோகம் புதைந்திருப்பதை சிருஷ்டியின் ரகசியம் போல மறைத்து தரும் மகாசிற்பி இளையராஜாவின் கைவண்ணப்பாடல்.இந்தப் பாடலை மிகச் சிறப்பாகப் பாடி தன்னை ஓர் சிறந்த பாடகி என நிரூபித்தவர் சுவர்ணலதா என்ற அற்புத பாடகி.
06 பெண் மனசு ஆழமுன்னு – படம்: என் ராசாவின் மனசிலே [ 1991 ] – பாடியவர்: இளையராஜா – இசை : இசைஞானி இளையராஜா
பாசாங்கற்ற , நாடகத் தன்மையற்ற , நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து கிளம்பும் சோகப்பாடல்.ராகத்தின் ஒப்பற்ற ஆன்மாவை பேச்சு வழக்கின் இசையோசையுடன் தேனைக் கலந்து காண்பித்து தன்னை படைப்புலகின் பிதாமகன் என நிரூபித்த பாடல்.இந்த விதமான இசை ஒப்புவமைகள் முன்னெப்போதும் நிகழ்ந்ததில்லை.
07 அடி ஆத்தாடி இள மனசொன்னு ரக்கை கட்டி பறக்குது சரிதானா – படம்: கடலோரக் கவிதைகள் [ 1987 ] – பாடியவர்கள்: இளையராஜா + எஸ்.ஜானகி – இசை : இசைஞானி இளையராஜா
காற்றில் மிதக்கும் பூ போல மனதை இளக வைத்து காற்று வெளியில் நம்மை ஏகாந்தமாக தூக்கிச் செல்லும் பாடல்.நம்மை வானவர்களாக்கும் பாடல்.இந்த பாடலை எப்போது கேட்டாலும் குதூகலிக்க வைக்கின்ற பாடல்.ராக வளங்களை பயன்படுத்தி மரபிசை ராகங்களுக்கு மகுடம் சூட்டுவது என்பது இது தான் போலும்.
08 மஞ்சள்பூசும் மஞ்சள் பூசும் – படம்: சக்கரைத் தேவன் [ 1993 ] – பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் + எஸ்.ஜானகி – இசை : இசைஞானி இளையராஜா
சிவரஞ்சனி ராகத்தில் நமக்கு சலிப்புத் தராமல் அழகிய பாடல்களை ஆற்றொழுக்காக , ராகத்தின் அழகில் பூரணமாக தரும் இசைஞானியின் இன்னுமொரு மனம் தளராத படைப்பு.
09 நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா – படம்: இதயக்கோயில் [ 1987 ] – பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை : இசைஞானி இளையராஜா
இசையின் உயிர் பண்பை மிகுதியாக்கும் மெல்லிசை வடிவத்தில் , வலிமை மிகுந்த சிவரஞ்சனியில் கறந்தெடுத்த சோகப்பாடல்.நம் நெஞ்சத்தை இரக்கத்தில் அமிழ்த்தி மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்.
இசைஞானியின் பாடைப்பாற்றலின் வேகச் சுழலில் பிறந்த , கால வெள்ளத்தை கடந்து நிற்கின்ற வானினும் நனி சிறந்த பாடல்.இசையும் பாடல் உணர்த்தும் பொருளும் ஒன்று கலந்த தேனமுதாய் ஒலிக்கும் பாடல்.நம்மை ஆசுவாசப்படுத்தும் பாடல்.
10 சங்கீத ஜாதி முல்லை – படம்: காதல் ஓவியம் [ 1987 ] – பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இசை : இசைஞானி இளையராஜா
பொதுவாக தோல்வி படத்தின் பாடல்கள் வெற்றி பெறுவதில்லை.ஆனால் இளையராஜாவில் விடயத்தில் அது தலை கீழ் விகிதம் தான்.சிறந்த பல பாடல்களைக் கொண்ட தோல்விப்படம் காதல் ஓவியம்.அந்த படத்தில் அமைந்த சிறந்த பாடல்களில் ஒன்று இந்த சிவரஞ்சனி ராகப் பாடல்.
11 அதிகாலை நேர கனவில் உன்னை பார்த்தேன் – படம்: நான் சொன்னதே சட்டம் [ 1987 ] – பாடியவர்கள்::எஸ்.பி.பாலசுப்ரமணியம் + ஆஷா போஸ்லே – இசை : இசைஞானி இளையராஜா
இதயம் கசிந்த இரக்கஉணர்வை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு காதல் கீதமாக வெளிப்படும் இனியபாடல்.
இசையில் இழயோடியுள்ள மென்மையான சோக உணர்வு நாம் எதையோ பறி கொடுத்து விட்டோம் என்பதை இசை தனது மொழியில் பேசிச் செல்கிறது.ஆயினும் சுழித்து பாயும் அருவி போல துள்ளி வரும் தாளம் குதூகலிக்க வைக்கிறது.இசைஞானியின் படைப்பாற்றல் சிகரத்திலிருந்து விழுந்த அருவியின் மதுரத் துளி இது.
12 பொன் மானே கோபம் ஏனோ – படம்: ஒரு கைதியின் டையரி [ 1987 ] – பாடியவர்: உன்னிமேனன் + உமா ரமணன் – இசை : இசைஞானி இளையராஜா
வாத்திய இசையின் அமர்களத்துடன் விறுவிறுப்பாகச் செல்லும் பாடல்.சிவரஞ்சனியை தன மனம் போன போக்கில் லாவகமாக தரும் இசைஞானியின் ஆற்றல் ஒளிரும் பாடல்.
11 குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா – படம்: கரகாட்டக்காரன் [ 1989 ] – பாடியவர்கள்:: மனோ + சித்ரா – இசை : இசைஞானி இளையராஜா
மேற்கு மலைத் தொடர்ச்சி மலையில் பிறந்து வந்த இனிய கீதம்.துன்பம் தரும் கீதத்தில் மனதை வருடிச் செல்லும் வாத்திய இசை சிறப்பு சேர்க்கும் பாடல்.
13 பாட்டு சொல்லி பாட சொல்லி – படம்: அழகி [ 12002 ] – பாடியவர்: சாதனா சர்க்கம் – இசை : இசைஞானி இளையராஜா
வாழ்வின் துயர அலையில் அடித்துச் செல்லப்பட்ட இனிமைகளை கனவினில் கண்ட பெண்ணின் உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து கிளம்பும் மகிழ்ச்சிப்பாடல்.
இருள் தொடங்கும் இடம் மேற்கு
அங்கு இன்னும் இருப்பது எதற்கு
ஒளி தொடங்கிடும் கிழக்கு
கொண்ட பொதுவினில் ஒரு விளக்கு
ஒளி இருக்குமிடம்
கிழக்குமில்ல மேற்குமில்லை.
என்ற புதுமையான வரிகளைக் கொண்ட பாடல்.இந்த பாடலை எழுதியவர் இளையராஜா. இந்த பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசியா விருதை பெற்றார் சாதனா சர்க்கம்.
வர்ணிக்க முடியாத இன்பத்தையும் அதற்குள் மறை பொருளாய் மெல்லிய சோகமும் இழைக்கப்பட்டுள்ளமை இந்த பாடலின் சிறப்பாகும்.அதன் மூலம் நாயகியின் மீது நம்மை அனுதாபம் கொள்ள வைக்கப்படுகிறது.
14 வள்ளி வள்ளி என வந்தான் – படம்: தெய்வ வாக்கு [ 1991] – பாடியவர்கள்:பி.ஜெயச்சந்திரன் + எஸ்.ஜானகி – இசை : இசைஞானி இளையராஜா
ஒரே ராகத்தில் எத்தனை எத்தனை பார்வைகள் ! , என்று எண்ண வைத்து நம்மை ஆச்சரயப்படுத்தும் வகையில் பாடல்களை தருகின்ற இசைஞானியை வியக்காமல் இருக்க முடியவில்லை.இளையராஜாவும் எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடிய பாடலை திரையில் காணலாம்.
15 வண்ண நிலவே வைகை நதியே – படம் : பாடாத தேனீக்கள் – பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் + சித்ரா – இசை இசைஞானி இளையராஜா
சிவரஞ்சனியில் வடித்த இசைச் சிற்பம் இந்தபாடல்.மனத்தில் பதுங்கியிருக்கும் ஆழ்ந்த துக்கம் இந்தப் பாடலில் வெளிப்படும்.செவ்வியல் ராகங்களில் மெல்லிய உணர்ச்சித் திறன்களை நெகிழ்ச்சிப்ட சம்பிரதாய வேலிக்குள்ளே நிற்பாட்டி வைப்பதில் வல்லவர் இசைஞானி.
16 ஜம்மா ஜம்மா தள்ளிச் செல்லு – படம் : தொடரும் – பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் + சித்ரா – இசை இசைஞானி இளையராஜா
சிவரஞ்சனி ராகத்தில் வேற்று மொழி படங்களிலும் பல இனிமையான பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.குறிப்பாக ஹிந்தியில் ஏக் து ஜே கேலியே படத்தில் இடம் பெற்ற தேறி மேரே பீச் என்ற பாடலும், மேக சந்தேசம் என்ற தெலுங்கு படத்தில் ஜேசுதாஸ் பாடிய “ஆகாச தேசானா ” என்ற பாடலும் மிக புகழ் பெற்ற சோகப் பாடல்களாகும்.
Bees Saal Baad (1962) என்ற படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய ” kahin deep jale- ” என்று தொடங்கும் பாடல் சிவரஞ்சனியில் அமைக்கப்பட்ட சிறந்த , இனிமையான மெல்லிசைப்பாடல்களில் ஒன்றாகும் . இந்தப் பாடலை இசையமைத்தவர் இசைமேதை ஹேமந்த் குமார்.
[ தொடரும் ]
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 17 ] : T.சௌந்தர்
அகில இந்திய வானொலியின் அடையாள இசை [ signature Music ] சிவரஞ்சனி ராகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.
http://youtu.be/97bpv2qdvu0
சிவரஞ்சனி ராகம் பற்றிய விரிவான பாடல்பட்டியல். மிக அருமை சௌந்தர் அவர்களே.வழமை போல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
sir please check before publish salilchoudry music singer is jesudas and vallve maayam music gangai amaran lot of mistakes but good work nice work thanku
வீரா என்ன சொல்ல வருகிறீர்கள்? நான் எழுதியதில் தவறில்லை.
20 பூ வண்ணம் போல மின்னும் – படம்: அழியாத கோலங்கள் [ 1979 ] – பாடியவர் :எஸ் .பி .பாலசுப்ரமணியம் – இசை: சலீல் சௌத்ரி. பாடல் எழுதியவர் : கங்கை அமரன்
Excellent write up……….keep going…… kudos.
valthkkal ..souder.
GOOD COMPILATION AND VERY INFORMATIVE TO ALL TAMILIANS.