காதலும் , வாஞ்சையும் ,சக்தியும் , பேருவகையும் , களிப்பும் தரும் ராகமாக விளங்கும் கானடா , நினைவில் எளிதாகத் தங்கும் ராகமுமாகும்.
எந்த மொழியில் என்னென்ன வகைகளில் பாடினாலும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள வைக்கும் தனித் தன்மையும் மிகுந்த ராகம் கானடா.
மென்மையும் , அழகும் , இயல்பிலேயே சோகம் கவிந்த நுண்மையும் கொண்ட இந்த ராகம் , கருணை ,சாந்தம் ,சிருங்காரம் போன்ற சித்தரிப்புகளையும் படிமமாக தரும் வல்லமை கொண்டது.
சினிமா இசை ரசிகர்கள் கண்களை மூடி ரசிக்கவும் , அவர்களைக் கரைந்துருக வைக்கவும் , ராகங்களின் உயிர்த்துடிப்புகளில் பாடல்களைத் தந்து கதையின் பிரிக்க முடியாத பகுதியாக்கி , கதைக்களனையும் ரசிகர்கள் மனதில் கட்டி வைத்தவர்கள் சினிமா இசையமைப்பாளர்கள்.
எழிலும் , ஈர்ப்பும் கொண்ட இந்த ராகம் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியா சென்ற ராகங்களில் முக்கியமான ராகம். இந்தியா முழுவதும் பிரபலமான இந்த ராகம் இந்துஸ்தானி இசையிலும் விரிவாக்கப் பாடப்படுகின்ற ராகமுமாகும்.
13 ம் நூற்றாண்டில் தஞ்சையைச் சேர்ந்த முன்னூறு கர்னாடக இசைக்கலைஞர்கள் கோபால் நாயக் என்ற இசைக்கலைஞர் தலைமையில் தமிழ்நாட்டிலிருந்து இசை கற்பிக்கவென டில்லி அழைத்து செல்லப்பட்டனர் என்ற குறிப்பை ஏப்ரகம் பண்டிதர் தனது கர்ணாமிர்த சாகரம் என்ற நூலில் பின்பருமாறு பதிவு செய்கிறார்.
” கோபால் நாயக். 1310 இல் டில்லிச்சக்கிரவர்த்தி அலாவுடீன் சேனாதிபதியான மாலிக்காபரால் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துப்போன சங்கீத வித்வான்களில் இவர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.”
ஹிந்துஸ்தானி சங்கீதத்தை விருத்தி செய்தவர்களில் முக்கியமானவர் எனக் கருதப்படும் அமீர்குருசு [ இயற்பெயர்:Amir Khusrow [1253–1325 CE] பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் கோபால நாயக் பற்றிய குறிப்புகளையும் காண்கின்றோம். கோபால் நாயக்கின் இசையை மறைந்திருந்து கேட்டு விட்டு அனைவரும் பிரமிக்கும் படி மறுபடி அதை அமீர்குருசு பாடிக்காட்டினார்என்கிற செய்தி மூலம் கோபால் நாயக்கின் இசை வல்லமையை நாம் அறியலாம்.
இனிமை மிகுந்த கானடா ராகம் மேற்கத்தேய இசையில் மைக்ரோ டோனல் [ Micro Tonal ] வகையைச் சேர்க்கிறது.கிரேக்க இசையிலும் ஆபிரிக்க இசையின் பாதிப்பில் உருவான ஜாஸ் புளூஸ் போன்ற இசை இசையிலும் வரக்கூடியதே.
வட இந்திய செவ்வியல் இசையான ஹிந்துஸ்தானி இசையில், தமிழ் செவ்வியல் இசை ராகமான இந்த கானடா ராகத்திற்கு இணையான ராகமாக தர்பாரிகானடா என்கிற ராகம் திகழ்கிறது.அது மட்டுமல்ல கௌசிக் கானடா , நாயகி கனடா , காபிகானடா,பாகஸ்ரீகானடா , குசைனீகானடா போன்ற ராகங்கள் கானடா குடும்பம் என்று சொல்லக்கூடிய அளவில் நெருக்கமான ராகங்கள் எனலாம்.
அக்பரின் அரசவைப்பாடகராக விளங்கிய தான்சேன் [1493 – 1585] என்ற இசைக்கலைஞரால் இந்த ராகம் புகழ் பெற்றது என்பர்.அக்பரின் தர்பாரில் [ அரசவை ] புகழ் பெற்றதால இதை “தர்பாரி ” கானடா என்றழைக்கின்றனர்.
கண்ணன், கிருஷ்ணன் பற்றிய மனசித்தரிப்புக்களைத் தரும் வகையில் நம் அமனத்தில் ஆழமாகப் பதியப்பட்டிருக்கும் ராகங்களில் கானடாவும் ஒன்று.
எனது பதின்ம வயதுகளில் நான் ரசித்த , பாடித்திரிந்த சில பாடல்கள் வெகுஜனப் பரப்பில் மிகுந்த ரசனைக்குரிய இந்த கானடா இராகத்திலும் இருந்தன.” அலைபாயுதே கண்ணா ” , பாரதி பாடலான ” வருவாய் வருவாய் வருவாய் கண்ணா ” போன்ற பாடல்கள் ஆழ்மனத்தில் பதிந்த பாடல்கள் என்பேன்.
தமிழ் செவ்வியல் இசையில் கருணை ரசத்திற்கு பயன்படும் ராகங்களில் இதுவும் ஒன்று 22 வது மேளகர்த்தா ராகமான கரகரப்ப்ரியா ராகத்தின் ஜன்ய ராகம் இது.இந்த ராகத்தின் சுரநிலைகள் வருமாறு.
ஆரோகணம்: ச ரி2 ப க2 ம1 த2 நி2 ச
அவரோகணம்: ச நி2 ப ம1 க2 ம1 ரி 2 ச
தமிழ் செவ்வியல் இசை அரங்குகளில் பயன்பாட்டில் உள்ள இந்த ராகத்தில் கீழ் வரும் பாடல்கள் பிரபலமானவையாகும்.
01 அலை பாயுதே கண்ணா என் மனம் – ஊத்தக்காடு வெங்கட சுப்பய்யர்
02 ஹரி சம் மகேசம் – தியாகய்யர்
03 என்ன சொல்லி அழைத்தால் – பாபநாசம் சிவன்
சினிமாவில் இசை இலக்கணங்களுக்கு இசைந்தும்,மரபு மீறியும் கதை காட்சிகளுக்கிசைந்து கையாண்டுள்ளதைக் கண்டிருக்கிறோம். பழமையை புறம் தள்ளாமலும் , புதுமையை அணைத்தும் பாடல்களைத் தந்து வெற்று சக்கைகளாக போக வேண்டிய தமிழ் சினிமா படங்கள் இனிய இசையால் நினைவு கொள்ளப்படுகின்றன.
01 மோகனாங்க வதனி – படம் : மனோன்மணி [ 1942] பாடியவர்கள் : பி.யூ.சின்னப்பா+ ராஜகுமாரி இசை : கே.வீ.மகாதேவன் + டி.ஏ.கல்யாணம்
இசைமேதை கே.வீ.மகாதேவன் இசையமைத்த ஆரம்ப காலப்படங்களில் வெளிவந்த பாடல்களில் ஒன்று.பின்னாளில் பல பாடல்களை கானடா ராகத்தில் இசையமைத்ததிலிருந்து மகாதேவனுக்கு பிடித்த ராகங்களில் ஒன்று என நம்மை எண்ண வைக்கின்ற பாடல்.ஒன்றுக்கு மேற்ப்பட்ட இசையமைப்பாளர்கள் இசையமைத்த களத்தில் வெளிவந்த திரைப்படம் மனோன்மணி.அதில் டி.ஏ.கல்யாணம் என்றொரு சிறந்த இசையமைப்பாளரும் இசையமைத்திருந்தார்.
1940 களில் புகழ் பெற்ற சின்னப்பா அனாயாசமாகப் பாடிய பாடல்.தமிழ் செவ்வியல் பாங்கும் , அந்தக் கால நாடகத்திற்கமைந்த பாங்கும் ஒருங்கமைந்த பாடல்.
02 மீளாத் துயரமோ தாயே – படம்: என் தங்கை [1952] – பாடியவர்: என்.லலிதா – இசை:சி.என்.பாண்டுரங்கன்
அபலைப்பெண் மீளாத துன்பத்தில் துவண்டு பாடும் பாடல்.கானடா ராகத்தில இழையோடும் சோகம் நம்மையும் கவ்விக்கொள்கிறது.
03 வானபாடிகள் போலே – படம்: அபூர்வ சகோதரர்கள் [ 1949 ] – பாடியவர்கள்: – இசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
மெல்லிசைப்பாங்கின் முன்னோடிப்பாடல் என்று சொல்லத்தக்க இனிமையான ஜோடிப்பாடல்.
04 பகவானே மௌனம் ஏனோ – படம்: ரம்பையின் காதல் [1956] – பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் – இசை:டி.ஆர்.பாப்பா
வார்த்தையில் வர்ணிக்க முடியாத சோகத்தை வெளிப்படுத்தும் சீர்காழியாரின் இனிய பாடல்.பாடலின் சரணத்தில் கானடா ராகத்தின் மேன்மையை நாம் கேட்கலாம்.ராகத்தின் செறிவையும்,அலாதியான சிலிர்ப்பையும் தருகின்ற பாடல் என்றால் மிகையல்ல.
05 பெண்ணின் பெருமையே பெருமை – படம்: பதியே தெய்வம் [1957] – பாடியவர்: ஏ.எம்.ராஜா – இசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
மகிழ்வுடன் பெண்ணின் பெருமை கூறும் இனிய பாடல்.கானடா ராகத்தின் துல்லியமும் ஏ.எம்.ராஜாவின் இனிமையான குரலிலும் இனிக்கும் பாடல்.
06 நீ வரவில்லையெனில் ஆதரவேது – படம் : மங்கையர் திலகம் [1955] பாடியவர் : எம்.சத்யன் – இசை : எஸ்.தட்சிணாமூர்த்தி
சிவாஜியின் அண்ணியாக பத்மினி நடித்த மிக அருமையான படம் மங்கையர் திலகம்.சிவாஜி இயல்பாக ,சிறப்பாக நடித்த ஒரு சில படங்களில் ஒன்று மங்கையர் திலகம்.
கானடா ராகத்தில் நம்மை கரைத்து , உயிரை உலுக்கும் பாடல்.நெஞ்சைப்பிழியும் இந்தப் பாடலைப் பாடியவர் மாதவம்பட்டி சத்யன்.
மலரிதழ்கள் மென்மையாக விரிவது போல ஆரம்பிக்கும் இந்தப்பாடல் மிக எளிதில் சோகத்தின் ஆழத்திற்கு நம்மை இட்டு செல்கிறது.ஆழமான பாசத்தில் உருவாகி மானசீக அன்பில் திளைத்த உறவின் பிரிவைத் தாங்க முடியாத மகன் போல் வளர்ந்த மைத்துனன் பாடும் அருமையான பாடல்.
07 உன்னால் நானே உலகை மறந்தேன் – படம் : அனார்க்கலி [1956] – பாடியவர் : ஜிக்கி – இசை : ஆதி நாராயணராவ்
காதலின் முனைப்பை கைவிடாத நாயகியின் துயரப்பாடல்.வானொலியில் நெஞ்சில் நிறைந்தவை
08 மறையாப் புயலாய் மோதும் – படம் : ஸ்ரீராம பக்த ஹனுமான் [ 1957] பாடியவர்கள் :ஏ.எம் ராஜா இசை : பெண்டலாயா நாகேஸ்வரராவ்
அவன் படப்பாடல்கள் போல ஒருவிதமான இசைக் காவிய உணர்வுகளைக் கிளர்த்தும் இந்தப்பாடல் காதலின் வெம்மையையும் , பிரிவுத்துயரையும் வெளிப்படுத்தி நிற்பதுடன் ” கானடா ” ராகத்தை மனதிலும் பதிய வைத்திருக்கிறது.இலங்கை வானொலியில் நெஞ்சில் நிறைந்தவை என்ற நிகழ்ச்சியில் அடிக்கடி ஒலித்த பாடல்களில் ஒன்று.கேட்கும் போதெல்லாம் நெஞ்சைக் கலங்க வைக்கின்ற பாடல்.
09 கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு – படம் : கொஞ்சும் சலங்கை [1962] பாடியவர் : பி.லீலா இசை : எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு
செவ்வியல் இசை கலந்த மெல்லிசைப்பாடல்களைப் பாடுவதிலும் அனாசாயம் காட்டும் பாடகி பி.லீலா மேல் சுருதியில் பாடும் இனிய பாடல்.பொதுவாக நாட்டிய காட்சிகளில் செவ்வியல் இசை சார்ந்து வந்த பாடல்களில் குறிப்பிடத் தகுந்த பாடல்.
10 பெண்ணின் பெருமையே பெருமை – படம்: பதியே தெய்வம் [1957] – பாடியவர்: ஏ.எம்.ராஜா – இசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
மகிழ்வுடன் பெண்ணின் பெருமை கூறும் இனிய பாடல்.கானடா ராகத்தின் துல்லியமும் ஏ.எம்.ராஜாவின் குரல் இனிமையிலும் இனிக்கும் பாடல்.
11 முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே – படம்: உத்தமபுத்திரன் [1958] – பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் – இசை : ஜி.ராமநாதன்
இசைமேதை ஜி.ராமநாதன் தந்த அற்புதமான பாடல்.கானடா ராகத்தை முன்னர் பல பாடல்களில் ராகமாலிகையாக வரும் ராகங்களில் ஒன்றாக அவர் பயன்படுத்திருந்தாலும் தனியே இந்தப்பாடலில் அமைத்து இந்த ராகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கானடா ராகத்தில் வெளிவந்த மிகவும் புகழ் அடைந்த பாடல்களில் இதுவும் ஒன்று.என்ன அருமையான சங்கதிகள் , ஹம்மிங் என்று கேட்டு அசந்து போகும் பாடல்.
12 கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே – படம் : அக்பர் [1960] பாடியவர் : பி.லீலா இசை : நௌசாட்
ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களால் விளைந்த நன்மைகளில் முக்கியமான அம்சம் என நான் கருதுவது அந்தப்படங்களின் பாடல்களை அதே இசையமைப்பாளர்களே இசையமைத்துத் தந்ததே.மொழிமாற்றம் செய்யப்படும் படங்களில் பல வேறொரு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்படுவதும் வழக்கத்தில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஹிந்தியில் நௌசாட் இசையமைத்து பெரும் புகழ் பெற்ற ” முக்ஹல் ஏ ஆசம் ” என்ற படத்தை தமிழில் அக்பர் என்று மொழிமாற்றம் செய்தார்கள்.அந்தப்படத்தில் இடம் பெற்ற சிறப்பான பாடல்களில் இந்தப்பாடலுக்கு முதலிடம் உண்டு.
காதல் வேதனையின் உணர்ச்சிக்கொந்தளிப்பு இந்தப்பாடல். நுண்ணுணர்வுடன் நௌசத் இசையமைத்த இந்தப்பாடல்.அனார்க்கலி அனுபவித்த துயரத்தை நம்மையும் உணரவைக்கிறார்.
எத்தனை சோகம் , எத்தனை கனிவு ,எத்தனை எழுச்சி ! இசைப்பிரவாஹம் என்ற பதத்திற்கு எடுத்துக்காட்டு இந்தப்பாடல் என்றால் மிகையில்லை என்பேன். இந்தப்பாடலின் வரிகளை எழுதியவர் அற்புதமான கவிஞன் கம்பதாசன்.
இந்தப்பாடல் தந்த தாக்கத்தில் தான் பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற ” காதல் சிறகை காற்றினில் விரித்து ” என்ற பாடல் பிறந்தது என்று மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் கூறியிருந்தார்.அது மட்டுமல்ல மூன்று தெய்வங்கள் படத்தில் இடம்பெற்ற ” வசந்தத்தில் ஓர் நாள் மணவறையோரம் ” என்ற பாடலிலும் அதன் தெறிப்புக்களை நாம் கேட்கலாம்.
ஹிந்தியில் லதா மங்கேஸ்கர் நிகரில்லாமல் பாடியதை தமிழில் உன்னதமாகப் பாடி நமக்கு நேர்ந்த விபரீதம் போல உணர வைத்தவர் சுசீலா.சாகாவரம் பெற்ற இந்தப்பாடல் நூறாண்டுகளுக்கு மேல் வாழும் என்பதில் சந்தேகமில்லை.
13 அன்று ஓடோடி வந்து உயிர் கொடுத்தாய் – படம் : மனம் போல மாங்கல்யம் [1954] பாடியவர் : ராதா ஜெயலட்சுமி – இசை :A.ராமராவ்
கானடா ராகத்தில் எளிமையும் , உயிர்ப்பும் நிறைந்த இந்தப்பாடல் சோகத்தை கிளறிவிடும் அருமையான பாடல்.மனவெழுச்சி தரும் பின்னணி இசை நம் இதயங்களை வருடிச் செல்லும் பாடல்.
14 தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் – படம்: – பாடியவர் : சிதம்பரம் ஜெயராமன் – இசை :ஆர்.சுதர்சனம்
ராகமாலிகையில் அமைந்த இந்தப்பாடலின் பல்லவி மட்டும் கானடா ராகத்தில் அமைந்த பாடல்.சந்தேகத்தால் விளையும் தீமைகளை விளக்கும் கருத்துள்ள பாடல்.
15 பூந் தென்றல் இசை பாட – படம்: தாயின் கருணை [1965] – பாடியவர் : பி.பி.ஸ்ரீநிவாஸ் – இசை :ஜி.கே.வெங்கடேஷ்
தழுவிச்செல்லும் இதமான தென்றல் போல வருடிக் கொடுக்கும் பாடல். வேய்ங்குழலின் இனிமையும் ,கானடா ராகத்தின் உயிரோட்டத்தின் உள்ளலைகளில் நீந்தி முத்தெடுத்தது போன்ற இசையமைப்பில் தமிழ் மொழியின் சிறப்பை விவரிக்கும் இனிய பாடல்.
நல்லிசையில் அமுதம் கடைந்து ஸ்ரீநிவாஸ் என்ற அற்புத பாடகனின் குரலில் நமக்களித்த ஜி.கே.வெங்கடேசின் அழியாத இசை ஓவியம் இது.
16 சின்னஞ் சிறிய வண்ணப்பறவை – படம் : குங்குமம் [1962] பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன் + பி.சுசீலா இசை : கே.வீ.மகாதேவன்
கதையின் போக்குக்கு ஏற்ப செவ்வியல் இசை சார்ந்து வரும் இனிய பாடல்.ராகங்களில் இழையோடும் கலை நயமும். இனிமையுயுடன் கனதியுமிக்க பாடல்.
17 பொன் என்பேன் சிறு பூ என்பேன் – படம் : போலீஸ்காரன் மகள் [1962] – பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் + எஸ். ஜானகி -இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
காதலர்கள் தனிமையில் பாடும் குழைவான பாடல்.மெல்லிசையில் அபரிதமான கற்பனைகளைக் காட்டிய மெல்லிசைமன்னர்கள் தந்த மன எழுச்சி தரும் பாடல்.இயல்பாய் , ஆற்றொளுக்காய் மிதந்து வரும் புல்லாங்குழல் போல நம்மை தன்னுள் இழுத்து வசப்படுத்தும் மெட்டமைப்பைக் கொண்ட பாடல்.
படத்தின் இயக்குனர் இந்தப் பாடல் தம்புரா மீடுவது போல இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டதாகச் செய்தி.பாடல் ஆரம்பிப்பது தம்புரா போன்ற மென்மையானதாக அமைந்தாலும் , கானடா ராகத்தின் இனிமையை பாடலின் சரணத்தில் ,அதன் உச்சஸ்தாயியிலேயே நம் நெஞ்சை அள்ளும் விதத்தில் அமைத்த மெல்லிசைமன்னர்களின் அபார கற்பனை நம்மை வியக்க வைக்கும்.
“இறக்கும் மனிதர்கள் , இறவாப்பாடல்கள் ” என்று மெல்லிசைமன்னர் விஸ்வநாதனின் கூற்றை நிரூபிக்கும் பாடல் இது.
18 நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் – படம் : கர்ணன் [1964] – பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் -இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
மகாபாரத கதையில் வஞ்சிக்கப்பட்ட கதாபாத்திரமான கர்ணனின் கொடையை வர்ணிக்கும் உருக்கமான பாடலை தன்னிகரில்லாமல் பாடி நம்மை கனிய வைத்திருக்கிறார் திருச்சி லோகநாதன்.
” மழை கொடுக்கும் கொடையும் ” என்று தொடங்கும் பாடலின் இடையே வரும் அற்புத கானம்.
19 சிவ சங்கரி சிவானந்த லகரி – படம்: ஜகதலப்பிரதாபன் [1962] – பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் – இசை : பெண்டலாயா நாகேஸ்வரராவ்
தெலுங்கில் கண்டசாலா பாடிய பாடலின் அற்புதமான தமிழ் வடிவம்.கானடா ராகத்தில் கூர்மையும் கலா நேர்த்தியும் மிக்க பாடலாக்கி , தான் ராகத்தில் ஊறித் திளைத்த இன்பத்தை நமக்கு தந்தவர் இசை மேதை பெண்டலாயா நாகேஸ்வரராவ்.ராகச் சாறிலிருந்து எத்தனை , எத்தனை விதமான லாவண்யங்கள் , நெகிழ்ச்சிகள் என்று வியக்க வைக்கும் பாடல்.
20 ஏன் இப்படி தண்டு கொண்டு இங்குற்றோர் – படம் : திருவிளையாடல் [1967] – பாடியவர் : கே.பி.சுந்தராம்பாள் – இசை: கே.வீ. மகாதேவன்
பாடுவதில் தனிப்பாங்கும் ,குரலில் ராக அதிர்வும் , குழைவும் , நெகிழ்ச்சியும் தரும் வல்லமை பெற்ற பாடகி சுந்தராம்பாள் பாடிய மிக சிறிய பாடலாயினும் இசைக்கொழுந்து சுடர் விட்டு பிரகாசிக்கும் பாடல்.நெகிழவைக்கும் இசை தந்த இசைமேதை கே.வீ.மகாதேவனின் இசை அற்புதம்.
21 அழகு தெய்வம் மெல்ல மெல்ல – படம்: பேசும் தெய்வம் [1967] – பாடியவர்கள் : டி.எம் . சௌந்தரராஜன் – இசை: கே.வீ. மகாதேவன்
ராக நுண்கூறுகளிலிருந்து இதமான இசைப்பிழிவுகளால் நம் உணர்வுகளைப் பீறிட்டு எழ வைக்கும் உன்னதமான பாடல்.கானடா ராகத்தை நம் நெஞ்சின் அடியாழத்தில் புதைத்து உயிரின் உள்ளுணர்வுகளை சிலிர்க்க வைத்த திரை இசைத்திலகம் மகாதேவன் வார்த்தெடுத்த இசைச் சிற்பம்.
22 வசந்தத்தில்ஓர் நாள் மாணவரை ஓரம் – படம் : மூன்று தெய்வங்கள் [1973] – பாடியவர்கள் :பி.சுசீலா – இசை : விஸ்வநாதன்
ராக ஊற்றுக்களிருந்து உணர்வு நிலைகளில் கிளர்ச்சி தரும் இனிய பாடல்.இந்த பாடலில் வரும் நாதஸ்வர இசை ஆழ்மனத்தில் புதைந்த இன்பங்களை விழித்தெழ வைத்து மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
அனாசயமான சங்கதிகளை மெல்லிசையில் வைத்து , மிதக்க வைக்கும் பின்னணி இசையால் புத்துணர்ச்சி தந்த மெல்லிசைமன்னரின் நூதனப்பாடல்.கேட்கும் கணங்களில் நெஞ்சை நிறைப்பதுடன் , கண்களில் கண்ணீரையும் என்னுள் வரவழைக்கும் இந்தப்பாடலை எத்தனை தரம் கேட்டாலும் திகட்டுவதில்லை.
23 அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது – படம் : மூன்று தெய்வங்கள் [1973] – பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன்- இசை : விஸ்வநாதன்
24 மருதமலை மாமணியே முருகைய்யா – படம் :தெய்வம் [1973] – பாடியவர்கள் : மதுரை சோமு – இசை : குன்னக்குடி வைத்தியநாதன்
பொதுவாக குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் ஓங்கி ரீங்காரமிடும் இசைப்பாங்கை நாம் இந்தப்பாடலிலும் தரிசிக்கின்றோம்.இசைமேதை மதுரை சோமு உள்ளக் கணுக்கள் நெகிழ்வுரபாடிய பாடல்.
25 இந்தப் பச்சைக்கிளிக்கொரு – படம் : நீதிக்குத் தலை வணங்கு [1975] – பாடியவர் :எஸ்.வர லட்சுமி – இசை : விஸ்வநாதன்
குரலில் மதுரமும் இனிமையும் , தனித்துவமான அதிர்வும் கொண்ட எஸ்.வரலட்சுமி பாடிய இனிமையான பாடல்.இவருக்கென்றே புதிய சங்கதிகளைப் போட்டு மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் செய்த அற்புதமான , இயல்பான ஆற்றொழுக்கு மிக்க பாடல்.தாய்மையும் ,மென்னதிர்வையும் தந்து பரவசப்படுத்தும் இன்பமான பாடல்.
பல்லவியைத் தொடரும் இனிய புல்லாங்குழல் இசை நம்மை வருடும் வகையிலும் , இனிய சூழலையும் மனக்கண் முன் நிறுத்துகிறது.அதுதான் மெல்லிசைமன்னர் !
26 இந்தப் பச்சைக்கிளிக்கொரு – படம் : நீதிக்குத் தலை வணங்கு [1975] -பாடியவர்:கே.ஜே.ஜேசுதாஸ் இசை : விஸ்வநாதன்
சோகம் இழையோடும் இந்தப் பாடலின் அமைப்பும் அதற்கேற்ற வாத்திய அமைப்பும் மெல்லிசைமன்னரின் தன்னெழுச்சியும் , இயல்பூக்கமும்மிக்க திறமையை வெளிக்காட்டும் அற்புதத்தைக் காட்டி நிற்கிறது.
ஜேசுதாசின் குரலில் இயல்பாய் இழையும் சோக உணர்வும் , பாடும் பாங்கும் நம்மை கானடா ராகத்தில் மெய்மறக்க வைக்கிறது.
27 கேள்வியின் நாயகனே – படம் : அபூர்வ ராகங்கள் [ 1975 ] – பாடியவர் :வாணி ஜெயராம் + சசிரேகா – இசை : விஸ்வநாதன்
உணர்ச்சிக் குழப்பம் நிறைந்த சூழ்நிலையில் பாடப்படும் ஒரு பாடலுக்கு உணர்ச்சிப்பெருக்குடன் மெல்லிசைமன்னர் இசையமைத்த , செவ்வியல் இசைசார்ந்த அற்புதமான பாடல்.மெய்சிலிர்க்க வைக்கும் கானடா ராகப் பாடல் இது.
28 அலைபாயுதே கண்ணா என் மனம் – படம் : எத்தனை கோணம் எத்தனை பார்வை [1981]- பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
செவ்வியல் இசை மேடைகளில் புகழ்பெற்ற ஊத்தக்காடு வெங்கட சுப்பய்யர் எழுதிய புகழ் பெற்ற இந்த பாடலை புகழ் பெற வைத்தவர்களில் முதன்மையானவர் குரலில் கம்பீரமும் கொண்ட பாடகர் பித்துக்குளி முருகதாஸ்.
கானடா ராகத்தின் குழைவையும் , பாடகர்களின் குரலில் ஒன்றோடோன்றாகி குழையும் இன்பத்தையும் ,தனக்கேயுரிய ராக உள்ளோட்டத்தின் உயிர்களை வருடும் வாத்திய இசைக்கலவையால் புதுப்பாடலாக்கி தருகிறார் இசைஞானி இளையராஜா.
ராக இனிய வேணுகானத்தைக் குழைத்து நெகிழ வைக்கிறார்கள் பாடிய ஜேசுதாசும் , ஜானகியும்.
29 இசை மேடையில் இந்த வேளையில் – படம் :இளமைக்காலங்கள் [1983] – பாடியவர்கள்: எஸ்.பி .பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை :இளையராஜா
ராகங்களின் நுண்கூறுகளிலிருந்து புதிய அவதானிப்புக்களை தான் ரசித்து ,அதில் புதிய ஒளி பாய்ச்சி,புதிய இசை ஒலிகளால் நம்மை பரவசப்படுத்தியவர் இசைஞானியார்.
பாடலின் ஆரம்பமும் ,அதன் பல்லவியும் அதைத் தொடர்ந்து வரும் பின்னணி இசையும் இசைஞானியின் விரிந்து செல்லும் கற்பனையின் அலை வீச்சுக்களைக் காட்டும்.
பெண் குரலில் இசையும் இன்பம் ஆண் குரலில் இல்லை என தோன்றுகிறது.
30 கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா – படம் : மௌனம் சம்மதம் [1991]- பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் + சித்ரா – இசை :இளையராஜா
இதயத்தை வருடும் பாடல்கள் என்பதற்கு உதாரணம் சொல்லத்தகுந்த பாடல்.ராகத்தில் மிதந்து வரும் வாஞ்சையை ,அன்பின் கசிவை மென் இசையுடன் குழைத்து அற்புத வண்ண ஓவியம் தீட்டியிருக்கிறார் இசைஞானி.நம்மை இசையால் புதிதாக மலர்த்திய பாடல் இது.
பாடகர்களின் குரலும் ,இசையும் , பாடலும் மென்மையாக நகர்ந்து , நம்மை மெய்மறக்க வைக்கின்ற பாடல்.
31 ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ – படம் : அரங்கேற்ற வேளை [1991]- பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் + உமா ரமணன் – இசை :இளையராஜா
ராகங்களின் உட்தடங்களில் பொதிந்த தேன் துளிகளை பிழிந்தெடுத்து ,அடிமனத்தில் புதைந்து கிடக்கும் இன்பங்களைக் கிளறி உள்ளுணர்வுகளை சாந்தப்படுத்தும் பாடல்.
32 மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா – படம் : வோல்ட்டர் வெற்றிவேல் [1993]- பாடியவர்: சுனந்தா – இசை :இளையராஜா
ஆன்மாவை வருடும் இனிய தாயின் தாலாட்டில் இனம் புரியாத வலியையும் , வேதனையையும் நமக்குத் தருகின்ற பாடல்.கானடா ராகத்தில் கனிந்த மேன்மையில் நம்மைக் கரைய வைத்திருக்கிறார் இசைஞானியார். சுனந்தா ஒரு சில பாடல்களைப் பாடிய பாடகி.அவரின் குரலில் தாய்மை நிறைந்துள்ளமையையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
33 விதைத்த விதை தளிராய் – படம் : எத்தனை கோணம் எத்தனை பார்வை [1981]- பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி + பி.எஸ்.சசிரேகா – இசை :இளையராஜா
வற்றாத கற்பனை வளம் காட்டும் இன்னுமொரு இசைஞானியாரின் துள்ளும் அழகுப்பாடல்.அலைபாயுதே என்ற பாடல் இதே திரைப்படத்தில் இடம் பெற்றாலும் கானடா ராகத்தில் அமுதம் கடைந்தது போலமைந்த மெல்லிசை கானம்.
34 பூமாலை வாங்கி வந்தான் – படம் : சிந்துபைரவி [1984]- பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் – இசை :இளையராஜா
இன்பத்தை துறந்து ,தவிக்கும் ஒரு இசைக்கலைஞனின் இசைக்குமுறல் இந்தப்பாடல்.பாடலின் கம்பீரமும் இழையும் சோகமும் இசைஞானியின் ஞான ஆழத்தை புதிதாய் மலர்த்திக்காட்டும் பாடல். பொருத்தமான பாடகர் தெரிவும் , பாடிய முறையும் பிரமிப்பூட்டும்.
35 மாருகோ மாருகோ மாருகையே – படம் : சதிலீலாவதி [1995]- பாடியவர்கள்: கமலஹாசன் + சித்ரா – இசை :இளையராஜா
கானடா ராகத்தில் ஒரு நகைச்சுவைபாடல்
36 புது வெள்ளை மழை பொழிகின்றது – படம்: ரோஜா [1992 ] – பாடியவர்கள் : உன்னிமேனன் + சுஜாதா – இசை :ஏ.ஆர்.ரகுமான்
மேற்கு நாடுகளில் நாம் கேட்ட சிந்தசைசர் வாத்திய இசையின் இணைப்பில் உருவான இனிய பாடல்.ரகுமான் இசையமைத்த பாடல்களில் நான் ரசித்த பாடல்களில் ஒன்று.கனடா ராகத்தின் மென்மையை மிக அருமையாகக் காண்பித்த பாடல் என்று துணிந்து கூறலாம்.
37 மலரே மௌனமா ..மௌனமே வேதமா – படம் : கர்ணா [1995] பாடியவர்கள்: எஸ். பி.பாலசுரமணியம் + எஸ். ஜானகி – இசை : வித்யாசாகர்
இதயத்தை வருடும் மென்மையை கானடா ராகத்தில் அரிதாரம் பூசாமல் மிக அழகாக வெளிப்படுத்தும் இனிய பாடல்.
38 தென்னை மரச் சோலையிலே குயிலே குயிலே – படம் : சதிலீலாவதி [1995]- பாடியவர்கள்: எஸ்.பி பாலசுப்ரமணியம் + எஸ்.ஜானகி – இசை :தேவா
39 நீ காற்று நான் மரம் – படம் : நிலாவே வா [1995]- பாடியவர் : ஹரிகரன் – இசை :தேவா
40 ஒரே மனம் – படம் : வில்லன் [1999]- பாடியவர்கள்: ஹரிகரன் – இசை :வித்யாசாகர்
41 ஒரு தெய்வம் தந்த பூவே – படம் : கன்னத்தில் முத்தமிட்டால் [2002] – பாடியவர்கள் : பி.ஜெயச்சந்திரன் – இசை : ஏ.ஆர்.ரகுமான்
42 ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் -படம்: வல்லவனுக்கு வல்லவன் [1968 ] – பாடியவர் : டி.எம் சௌந்தரராஜன் – இசை : வேதா
கானடா ராகத்தின் சாயலைக் கொண்ட கௌசிக்கானடா என்ற ராகத்தில் அமைக்கப்பட்டது.
தமிழ் மட்டுமல்ல கானடா றாகத்தில் மிகச்சக் சிறப்பான பாடல்களை நாம் பிற மொழிகளிலும் கேட்கலாம்
ஆயிரம் பாத சரங்கள் கிலுங்கி – படம் :நதி [1969] – பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ் – இசை : ஜி.தேவராஜன்
உருக்கமும் , வேதனையும் தரும் இந்தப்பாடல், இனம்புரியாத ஆன்ம சுகத்தையும் தரும் இந்தப் பாடல் ஜேசுதாஸ் பாடிய சிறந்த பாடல்களில் ஒன்று.
** “ஏ துனியா ஹே ரக்கு வாலே ” என்று தொடங்கும் நௌசாத் இசையில் முகம்மது ரபி பாடிய ஹிந்திப் பாடல் மிகப்பெரிய தாக்கம் விளைவித்த பாடல்களில் ஒன்று.**
தொடரும்…
அருமையான விவரிப்பு. ” பகவானே மௌனம் ஏனோ” என்ற ரம்பையின் காதல் படப்பாடல் சோகரசத்தை பிழியும் பாடல். ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாவில் வரும் ” நாதரூபிணி” பாடலை கேளுங்கள். முற்றிலும் வேறுபட்ட அனுபவம் கிடைக்கும். M . G ஸ்ரீகுமாருக்கு இதற்கு நேஷனல் அவார்ட் கிடைத்தது.