இனியொருவின் அடிப்படைக் கருத்துக்களோடு முரண்பாடுகளைக் கொண்ட கட்டுரைகள் ஆவணப்படுத்தும் நோக்கோடும் விவாத நோக்கோடும் ‘முரண்’ பகுதியில் வெளியிடப்படும். இப் பகுதியில் வெளியாகும் செய்திகள் அவற்றின் முழுமையான பின்புலத்தோடு கூடியவை அல்ல.
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ உறவுகளே! உங்கள் அனைவருக்கும் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
புலம்பெயர்ந்து சுவிஸ் மண்ணில் வாழ்ந்த பொழுதும் தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்து தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு தமிழீழ விடிவிற்காய் போராடிய இரத்தினசிங்கம் செந்தில்குமரன் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர் தமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக தீக்குளித்து இறந்துள்ளார். இந்த செய்தியை கேட்டு தமிழ் உறவுகளுடன் இணைந்து யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பும் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் இழப்பால் துயருடன் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.
மனித உரிமை கூட்டத் தொடர் சுவிஸில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை வளாகத்தில் இடம்பெறவுள்ளது. ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கையின் நிலமை குறித்து ஐ.நாவிற்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார் என்பது பலரும் அறிந்த விடையமே. ஆனால் நவநீதம்பிள்ளை அவர்கள் சமர்பிக்கும் அறிக்கையால் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்துக்கு சிறிது நன்மை வரலாம் அல்லது பாதிப்பும் உண்டாகலாம். ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட எமது போராட்டத்துக்கு பாதிப்பு வருகையில் அதை தகர்க்க கூடிய சக்தியாக திகழ்வது தமிழர்களின் ஒற்றுமையே. ஆகையால் எமது இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பிற்கு நீதி கேட்பதற்காக எதிர் வரும் 16.09.2013 அன்று சுவிஸில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை வளாகத்தின் முன்பாக மாபெரும் எழுச்சிப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
எமது அன்பான தமிழ் உறவுகளே! ஆயிரமாயிரம் மாவீரர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்க ஐரோப்பாவில் எங்கு வாழ்ந்தாலும் தமிழன் என்ற உணர்வுடன் இம் மாபெரும் எழுச்சிப்போராட்டத்தில் அலையலையாய் அணிதிரளுமாறு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு உரிமையுடன் வேண்டுகின்றது. மேலும் சுவிஸ் மண்ணில் தீக்குளித்து இறந்த தமிழ்த் தேசிய உணர்வாளரான இரத்தினசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் தியாகம் வீண் போகாமல் ஓர் உன்னத நிலையை அடைய நாம் அனைவரும் கைகொடுக்க வேண்டும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி