வடகிழக்குப் பருவமழை அதற்கேயுரிய இயல்போடு பெய்யாமல் ..பேய்கிறது. ஊரெங்கும் குளங்கள் நிரம்பி வழிகிறது. அது உருவாக்கும் சங்கடங்களை மக்கள் சந்திப்பதற்கு மத்தியில் அன்றாடம் சர்வசாதரணமாக நாம் கடந்து செல்லும் செய்தி. குளத்தில் ஏரியில் மூழ்கி சிறுவர்கள் பலி என்பது.நீச்சல் தெரியாத ஒரு தலைமுறை வளர்ந்து உருவாகி நிற்கிறது என்பதையே இது காட்டுகிறது. தண்ணீர் மனிதனுக்கு புதிய விஷயம் அல்ல அது புதிய விஷயமாக ஆச்சரியமான விஷயமாக இருந்தால் நாம் தண்ணிரீடம் இருந்து அந்நியப்பட்டிருக்கிறோம் என்று பொருள்.
தண்ணீர் பற்றிய நமது கற்பனைகள், பொய்மைகள், நம்பிக்கைகள்,அ றிவியல் என முழுமையான தண்ணீர் பற்றிய ஆவணமாக வெளிவந்திருக்கிறது எழுத்தாளர் நக்கீரன் எழுதி வெளியாகி உள்ள ‘நீர் எழுத்து’ நூல்.குட்டிக் குட்டி கதைகள், உதாரணங்கள், மேற்கோள்கள், புள்ளிவிபரங்கள்,பாடல்கள்,பழமொழிகள் என நம் வாழ்க்கைப் போக்கில் அறிந்தவைகளையும் அறியாதவைகளையும் அருமையாக தொகுத்து இந்த ஆவணத்தை உருவாக்கியிருக்கிறார் நக்கீரன்.நேபாளத்தில் துவங்கி சட்டீஸ்கருக்கு வருகிறது நூல் “ 1996-ல் சட்டீஸ்கர் மாநிலத்தில் சியோநாத் மகாநதியின் துணை ஆறுகளில் ஒன்றுதான் இந்த சியோநாத் ஆறு. 365 கி.மீட்டர் ஓடும் இந்த ஆற்றில் 23.6 கி.மீ நீளமுள்ள ஒரு ஒரு பகுதியை ரேடியஸ் வாட்டர் என்ற நிறுவனம் 39 கோடி அளவுக்கு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் வாங்கிக் கொள்கிறது. தான் வாங்கிய அந்த ஆற்றின் குறுக்கே 39 கோடி செலவில் அணையைக் கட்டி அந்த தண்ணீரை தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பதுதான் திட்டம்.
வெறும் 39 கோடி அளவில் அணையைக் கட்டிய தனியார் நிறுவனம் 600 கோடி அளவுக்கு லாபம் பார்த்தது. அந்த ஆற்றை பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த மக்கள் அந்த ஆற்றில் மீன்பிடிக்கவும், பாசனத்திற்கு தண்ணீர் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. படித்துறையைச் சுற்றி கம்பிவேலி அமைத்து நீண்ட போராட்டத்தின் பின்னரே இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அந்த ஆற்றை மக்கள் மீண்டும் மீட்டெடுட்தார்கள்.#ஆசியாவில் தண்ணீர் தனியார் மயமாக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான் திருப்பூரில் பெக்டெல் என்ற நிறுவனத்திற்கு 2006-ஆம் ஆண்டு தண்ணீர் உரிமையை வழங்கிய ஜெயலலிதா “இது இந்தியாவின் முன்னோடித்திட்டம்” என்றார். இந்த வழக்கு நீதிமன்றம் சென்ற போது, வீராணத்திலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது அது 228 கிலோ மீட்டர் ஆனால் திருப்பூரில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பவானிக்கு தண்ணீர் கொண்டு வரத் தெரியாதா என்று நீதிமன்றம் கேட்டது.
மக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கும் பெக்டெலின் திட்டம் தோல்வியில் முடிந்தது எப்படி தெரியுமா?பெக்டெலை விட மலிவு விலைக்கு விவசாயிகளே தண்ணீரை சப்ளை செய்ததால் பெக்டெல் தோற்றது. ஆனால், விவசாயிகளும் தண்ணீரை ஒரு வணிகமாகவே செய்தனர். என்று போகும் இந்நூலில் சூயெஸ் நிறுவனத்திடம் கோவை ஒப்படைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிடுகிறது.கட்டுரையாளர் நக்கீரன் வடகிழக்குப் பருவமழை பற்றி தரும் தகவல் ஆர்வமாக இருக்கிறது.“தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் பாகமே வடகிழக்குப் பருவமழை.தென் மேற்குப் பருவமழை இந்திய துணைக்கண்டத்தின் மேற்குப் பகுதி முழுவதும் பெய்து வடக்கே சீனம் வரை செல்கிறது.மிச்ச மீதியுள்ள நீர்ச் சுமையெல்லாம் அங்கு உதறிவிட்டு,பின்னர் தெற்கு நோக்கித் திரும்பி வங்கக்கடலின் நீரள்ளிக் குடிக்கும்.நீருண்ட முகிலினங்கள் இப்போது வட கிழக்குப் பருவக்காற்று எனும் புதிய பெயரைச் சூட்டிக் கொண்டு, கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வந்து மழையாகக் கொட்டும். ஆனால், இந்த வடகிழக்குப் பருவமழை தேதி குறிப்பிட்டு வராது”- நீர் எழுத்து நூலில், எழுத்தாளர் நக்கீரன்என்று தண்ணீரை நீள அகலமாக ஆழமாக உள்வாங்கி எழுதப்பட்டிருக்கும் இந்நூல் குடிமராமத்து என்ற சொல் எப்படி பொதுப்பணித்துறையின் புழக்கத்தில் வந்தது என்பது போன்று ஏராளமான தகவல்களையும் சொல்கிறார்.#பிரம்மதேயங்கள்- குழிசி ஓலைநில நீர் உரிமைகள் பண்டைக்காலத்தில் தனியுடமையாக இருந்ததில்லை.
ஆனால் எல்லா சீர்கேடுகளுக்கும் முதல் புள்ளியாக அமைந்தது வடக்கில் இருந்து வந்த பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயங்கள் என்னும் பெயரில் கிபி 5-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் மன்னர்களால் வழங்கப்பட்ட ஊர்களே காரணம். தண்ணீர், நிலம் மீதான மக்களின் உரிமை பறிபோக இந்நிகழ்வும் ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிடுகிறார்.#காவிரியில் கல்லணை கட்டினான் கரிகாலன் என்கிறோம் நாம்.தொழில்நுட்ப முறையில் சொல்வதென்றால் கரிகாலன் கட்டியது அணையல்ல, அது கரை அல்லது கற்சிறை எனும் கலிங்கு போன்ற அமைப்பு.இதற்கு செப்பேடு ஒன்றையும் ஆதாரமாகத் தருகிறார்.இப்படி தண்ணீர் பற்றிய நமது எண்ணங்களையும், தேவைகளையும், இருப்பவை, இல்லாமல் போனவை, காணாமல் ஆக்கப்பட்டவை என உருப்படியான ஆவணமாக இது உருவாகியிருக்கிறது. நிச்சயம் தண்ணீர் பற்றிய தமிழில் முதல் தலை சிறந்த நூல் என்று இதைச் சொல்ல முடியும்.கட்டுரையாளர் கருத்துக்களில் குதித்து அட்வைஸ் செய்யாமல் விலகியிருந்து ஒரு தேர்ந்த பத்திரிகையாளர் போல இதுதான் இப்படித்தான் இருந்தது. அல்லது இருந்திருக்கலாம் என விலகி இருந்து தமிழர்களுக்கும் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றுக்கும் இடையிலான தண்ணீர் வரலாற்றைப் பேசியிருக்கிறார்.அவர் எங்கும் இதைச் செய்தே ஆகவேண்டும் என கட்டளைகளையோ உத்தரவுகளையோ பிறப்பிக்கவில்லை. அதை நம்மிடம் விட்டு விடுகிறார். அந்த வகையில் இந்நூலை அவசியம் ஒவ்வொருவரும் வாங்கிப் படியுங்கள்.
நூலின் பெயர் – நீர் எழுத்துஎழுத்தாளர் – நக்கீரன்வெளியீடு – ; ’காடோடி’6, வி.கே. என் நகர்நன்னிலம்- 610105திருவாரூர் மாவட்டம்தொடர்புக்கு – 8072730977