நாட்டின் 13 பொலிஸ் பிரிவுகளில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின்போது சந்தேகத்தின்பேரில் சுமார் 692 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். |
நேற்றுமுன்தினம் அதிகாலை முதல் இரவு வரை இச் சுற்றிவளைப்புத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சுற்றிவளைப்பின் போது சுமார் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். போலி அடையாள அட்டைகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் 72 பேர் கைதுசெய்யப்பட்டனர். கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு போக்குவரத்து பொலிஸ் பிரிவு, நீர்கொழும்பு, களனி, கம்பஹா நுகேகொட, கல்கிசை, பாணந்துறை, களுத்துறை, புத்தளம், சிலாபம் ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின்போது தேசிய அடையாள அட்டையில் உள்ள முகவரி, கொழும்பில் தங்கியுள்ள முகவரி மற்றும் கைத்தொலைபேசி இலக்கங்கள் என்பன பொலிஸாரினால் பதிவுசெய்யப்பட்டன. பொலிஸார் தாம் ஏற்கனவே வைத்திருந்த சில தொலைபேசி இலக்கங்களைக் காண்பித்து குறிப்பிட்ட இலக்கங்களுடன் ஏதாவது தொடர்பு உண்டா என்றும் விசாரித்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. |