வட-கிழக்கிலும், கொழும்பிலும் வாழ்ந்த தமிழர்களை தேடி அழித்த அரச பயங்கரவாதம் இன்று தென்னிலங்கையையும் பதம் பார்க்கின்றது. இதன் அடையாளமே கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள இளைஞனின் மரணமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க சம்பம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பொலிஸாரின் தாக்குதலினால் படுகாயத்திற்கு உள்ளாகி மருத்துவமனையில் மரணமடைந்துள்ள ரொஷhன் சானக்க என்ற இளைஞனின் படுகொலையை ஜனநாயக மக்கள் முன்னணி மிக கடுமையாக கண்டிக்கின்றது. சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிற்சங்க உரிமைகளுக்காக போராட்டங்களை முன்னெடுத்த தொழிலாளர்களை, தொழிற்சாலைக்குள் அத்துமீறி புகுந்து பொலிஸார் தாக்கியுள்ளனர். பொலிஸாரை தாக்கும்படி ஏவிவிட்டது எவர் என்பது முழு நாடும் அறிந்த சங்கதியாகும். மிக விரைவில் ஓய்வு பெற இருந்த பொலிஸ் மாஅதிபரை கட்டாய ஓய்வுபெறச் செய்து, இந்த உண்மையை அரசாங்கத்தினால் மூடி மறைத்துவிட முடியாது. அதேபோல் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசி உண்மையை திசைத்திருப்பி விடுவதற்கும் இடமளிக்க முடியாது. உழைக்கும் வர்க்கத்தின் ஓய்வூதியத்தை கொள்ளையடிக்கும் கபட திட்டத்தை எதிர்த்தே தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கினார்கள் என்பதை புத்தியுள்ள எவரும் அறிவார்கள்.
கட்டுநாயக்கவில் மரணமடைந்த மற்றும் காயமடைந்த பெருந்தொகையான சிங்கள இளைஞர்கள் தமிழர்களுக்கு படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுப்படுத்துகின்றது. வடகிழக்கிலும், இன்று தெற்கிலும் நடைபெறும் படுகொலைகளை நாங்கள் கண்டிக்கின்றோம். ஆனால் அன்று வடகிழக்கிலே தமிழ் மக்கள் அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட பொழுது தென்னிலங்கையின் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் அவற்றை கண்டிக்கவில்லை. பல கட்சிகள் ஒருபடி மேலே போய் தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தினார்கள். அதிகபட்ச போர் நடவடிக்கைகளுக்கு கைத்தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினார்கள். கொல்லப்பட்ட அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டி மகிழ்ந்தார்கள். கொழும்பிலே தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட பொழுது, காணாமல் போகடிக்கப்பட்ட பொழுது, பெருந்தொகையில் கைது செய்யப்பட்ட பொழுது, தமிழ்-முஸ்லிம் வர்த்தகர்களிடம் அச்சுறுத்தி கப்பம் வசூலிக்கப்பட்ட பொழுது அவற்றுக்கு எதிராக ஜனநாயக மக்கள் முன்னணியும், மக்கள் கண்காணிப்புக்குழுவும் ஆர்ப்பாட்டம் செய்தப்பொழுது, ஒட்டு மொத்தமான பெரும்பான்மை கட்சிகள் எங்கள் போராட்டங்களை புரிந்துகொள்ள மறுத்தார்கள். என்னை தனிப்பட்ட முறையிலே புலி என்று முத்திரை குத்தி பாராளுமன்றத்திலேயும், நாடு முழுக்க மேடைகளிலும் பிரசாரம் செய்தார்கள். இன்று தமிழர்கள் அனுபவித்த அந்த வலி தெற்கிலே ஆரம்பமாகிவிட்டது. பொலிஸாரினதும், பாதுகாப்பு படையினரதும் அத்துமீறிய செயற்பாடுகள் தென்னிலங்கையிலே கடந்த சிலவாரங்களுக்குள் பல நடந்தேறிவிட்டன.
இவை அரசாங்கத்தின் இராணுவ முனைப்பை படம்பிடித்து காட்டுகின்றது. இதன் மூலம் தமிழ் மக்கள் அனுபவித்த வலி தென்னிலங்கைக்கு தெரியவருகின்றது. இந்த செய்தியையே இச்சந்தர்ப்பத்தில் சிங்கள மொழி மூலமாக, சிங்கள ஊடகங்களுக்கும் நாம் தெரிவித்துக்கொள்கின்றோம்.